Tuesday, June 7, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 26

நிராஸகஸ்யாபி தாவது3த்ஸஹே 

மஹே ஹாதும் தவ பாத3 பங்கஜம்

ருஷா நிரஸ்தோSபி சிசு: ஸ்தநந்த4யோ 

ஜாது மாதுச் சரணௌ ஜிஹாஸதி || 



சில உறவுகள் ஒப்பந்த அடிப்படையில் அமைவன. அத்தகைய உறவுகளிலே கூட உள்ளம் கலந்துபடின் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்திருக்க இயலாத அளவிற்குப் பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. ஒரு தாய்க்குக் குழந்தையுடன் ஏற்படும் உறவு ஒப்பந்தம் அடிப்படையாக அன்று. உயிரின் தொடர்பு அடிப்படையாக அமைவது. அத்தகைய உறவில் கனிந்த சொல்லும், கொஞ்சு செயலும் மட்டுமேதான் உறவு என்று சொல்ல முடியாது. கடிந்த சொல்லும், கடுமையான செயலும் கூட அந்த உறவின் பகுதிதான். இந்த உயிருக்கு மாதாவாய், பிதாவாய், மற்றும் அனைத்து வித உறவுமாய் இயற்கையில் அமைந்தவன் நாராயணன். நாராயணன் என்ற பெயரே இதைக் குறிப்பதுவாய் அமைகிறது. நரர்களாகிய ஜீவர்களுக்குப் புகலாகவும், நரர்களாகிய ஜீவர்களைத் தான் இருக்கும் ஆலயமாகவும் கொண்டு விளங்குபவன் ஆகையாலே நாராயணன் என்ற நாமம் பொருளுடன் திகழ்கிறது. 

அத்தகைய நாராயணனாகிய நீ எந்த நேரத்தும் என் விஷயத்தில் நிராஸனாய், பற்று அற்றவனாய் ஆவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு வேளை நீயே ஆனாலும் உனது பாத கமலங்களை விட்டு விலக என்னால் ஒரு போதும் இயலாது மஹேசா! கோபத்தால் ஒரு தாய் தன் குழந்தையை, அதுவும் பால்மணம் மாறாத குழந்தையைக் கோபத்தால் விட்டது போல் இருப்பினும் அந்தக் குழந்தைக்குத் தன் தாயின் காலடிகளை விட்டு விலக முடியாதன்றோ! 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

1 comment: