Monday, June 27, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 46

4வந்தம் ஏவ அநுசரந் நிரந்தரம்

ப்ரசாந்த நிச்சேஷ மநோரதா2ந்தர: |

கதா3Sஹம் ஐகாந்திக நித்யகிங்கர:

ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாத2ஜீவித: || 

உம்மையே இடைவிடாமல் பின்தொடர்பவனாய், மனத்தின் மற்றைக் காமங்கள் அனைத்தும் மிச்சமின்றி நீங்கி உள்ளம் அமைதியுற்றவனாய், ஒரே இலட்சியத்துடன் வழிபடும் ஐகாந்திகம் என்பதுடன் உமக்கு உற்ற தொண்டெல்லாம் புரிந்து அதன் காரணமாக என் ஜீவிதம் பயனடைந்ததுவாய் ஆகி அதன் மூலம் எப்பொழுது நான் உம்மை உகப்பிக்கப் போகிறேன்? 

சுலோகம் 32 தொடங்கி இந்தச் சுலோகம் வரையில் ஒரே பிரார்த்தனையாகப் படிக்க வேண்டும். ஒரே பிரார்த்தனையாகத் தொகுத்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதைக் கீழே காட்டுகிறேன் -- 

சுலோகம் 32 --- 46 

நிறங்கலந்து பிரகாசமாய் விளங்கும் பீதாம்பர ஆடையும், மலர்ந்த காயாம் பூவையொத்துத் திகழும் காந்தியும், உள்ளடங்கிய நாபியும், இடைசிறுத்து மேலெழும் அழகும், அகன்ற திருமார்பில் விளங்கும் திருமறுவும் 

சுபமான தோள்கள், வில்லின் நாண் தழும்பு ஏறியிருக்கும் தோள்கள், ஒன்றுக்கு நான்காகக் காப்பதற்கு விளங்கும் தோள்கள், முழங்கால்வரை நீண்ட கைகளை உடைத்தான தோள்கள், பிராட்டியின் திருச்செவி மலரான நீலோத்பலமும், காதின் அணிகுழை என்ன, அலையும் திருக்குழல் சுருளென்ன இவை அழுந்தியிருக்கும் அடையாளங்களை தெரிவிக்கும் விதமாகப் பிரகாசிக்கும் சதுர்புஜங்கள் 

உயர்ந்து பருத்த திருத்தோள்கள்வரை தாழ்ந்து தொங்கும் குண்டலங்கள், திருக்குழல் சுருள்கள் இவற்றால் அழகுடன் மூன்று கோடுகள் படிந்த திருக்கழுத்து விளங்க, முகத்தின் ஒளியோ அன்றலர்ந்த தாமரைப் பூவின் அழகொளியையும், முழுமதியின், களங்கமற்ற ஒளியையும் வென்று விளங்க 

அன்றலர்ந்து மலராநிற்கும் தாமரை போல் அழகிய கண்கள், நெறிப்பினால் கொடிபோன்று வளைந்ததான திருப்புருவங்கள், மனத்தைக் கவரும் இதழ்கள், தூய புன்சிரிப்பு, அழகிய கன்னக் கதுப்புகள், உயர்ந்து விளங்கும் நாசி, நெற்றிவரையில் அலையும் திருக்குழல் கற்றைகள் 

ஒளிவிடும் கிரீடம், தோள்வளைகள், ஹாரம், திருக்கழுத்தில் அணியும் அணி, ஸ்ரீகௌஸ்துப மணி, திருஅரைநாண், திருச்சிலம்பு முதலிய ஆபரணங்களும், சக்கரம், சங்கம், கத்தி, கதை, வில் முதலிய ஆயுதங்களும், அழகொளி மிக்க துளஸியுடன் பிரகாசிக்கும் வநமாலையுடனும் சுடர்மிக ஒளிர 

’அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா’ என்று யார் விரும்பி உறையும் பவநமாக நின் திருமார்வம் திகழ்கிறதோ, யார் தோன்றிய திருப்பாற்கடலை உனக்குப் பிடித்த உறைவிடமாக நீ ஏற்று மகிழ்கிறாயோ, யாருடைய திருக்கடைக்கண் நோக்கின் கிருபையால் ஜகமெல்லாம் இயங்குகிறதோ, யாருக்காகவென்று கடலைக் கடைந்தாயோ, யாருக்காகவென்று கடலை அடைத்து அணையிட்டாயோ இந்த விச்வம் அனைத்தும் உன் உருவமே என்னும் நிலையில் எப்பொழுதும் உன்னோடு பிரிவின்றி அநுபவிக்கப்படுகின்றவளாயிருந்தும், தம் குணங்களாலும், உருவத்தாலும், எழில்மிகு செயல்களாலும் என்றும் புதுமையாய் உமக்கு ஆச்சர்யத்தை விளைவிப்பவளும், எப்பொழுதும் எந்நிலையிலும், (பரம், விபவம், வியூஹம், அர்ச்சை முதலிய எல்லா நிலைகளிலும்) உமக்கு உசிதமானவளாய், உம்முடைய ஸ்ரீதேவியான  

பிராட்டியுடன் கூட உமக்கு அந்தரங்கமாக விளங்குபவனும், மிகவும் விளங்கும் விஜ்ஞானமும், பலமும் ஒருசேரத் திகழும் நிலையமாகத் திகழ்பவனும், விரிந்து திகழும் படங்களில் ஒலிக்கும் மணிக்கூட்டங்களால் ஒளிதிகழும் உட்பகுதியைக் கொண்டு திவ்ய தேசமாகத் திகழ்பவனும் ஆன திருவநந்தாழ்வானில் எழுந்தருளித் திகழ்ந்திருக்க, திருவநந்தாழ்வானின் கைங்கரியம் எப்படிப்பட்டது! இருக்கும் இடமாகவும், பள்ளிகொள்ளும் படுக்கையாகவும், அமரும் ஆஸநமாகவும், நடக்கும் போது அணியும் பாதுகையாகவும், தலையில் திருப்பரியட்டமாகவும், அணையாகவும், மழை வெயில் தாங்கும் குடையாகவும் நினக்குற்ற சேஷத்வம் நிறம்பெற வேண்டிப் பலப்பல சரீரங்கள் எடுத்து, உரிய தொண்டுகள் அனைத்தும் இயற்றுவதால் அனைவராலும் சேஷன் என்றே அழைக்கப்படும் திருவநந்தாழ்வான் மீது நீ அமர்ந்திருப்ப 

உமக்கு அடியவனாயும், நண்பனாயும், அமர்ந்து செல்லும் வாஹநமாயும், வீற்றிருக்கும் ஆசனமாயும், உமக்கு வெயிலுக்கும் மழைக்கும் மேல்விரிப்பாகவும், உமக்கு வீசப்படும் சாமரமாகவும், நெருக்கும் உம்முடைய திருவடிகளின் தழும்பேறியவனாகவும் விளங்கும் அந்தக் கருடாழ்வான் தேவரீர் திருமுன்பு சேவித்து நிற்க 

நீர் உண்டு மிகுந்த சேஷத்தையே போக்கியமாகக் கொள்பவரும், நீர் அவர் மேல் வைத்த நிர்வாஹம் ஆகிய பாரத்தைச் சுமப்பவரும், அனைவருக்கும் பிரியமானவருமான விஷ்வக்ஸேநராலே எந்தக் காரியம் எவ்வண்ணம் விண்ணப்பிக்கப் படுகிறதோ அந்தக் காரியத்தை அவ்வண்ணமே நிரம்பிய கருணைப் பார்வையால் நியமித்தவாறு நீர் எழுந்தருளியிருக்க 

அவித்யை, அஹங்காரம், மிகுந்த ஈடுபாடு, விருப்பு, வெறுப்பு என்னும் ஐந்தும் கிலேசங்கள் என்று சொல்லப்படும். இவ்விதக் கிலேசங்களும், பிரகிருதியுடன் தொடர்பால் விளையும் மலங்களாகிய குற்றங்களும் எதுவும் அற்றவர்களாயும், இயல்பாகவே நின் கைங்கர்யம் என்னும் ஒன்றிலேயே ஊன்றிய ரஸவடிவாய் இருப்பவர்களும், உனக்கு உவப்பானவர்களும், உன் கைங்கரியத்திற்கு ஏற்ற அந்தந்தத் துணைச் சாதனங்களைக் கைக்கொண்டு, முறையுணர்ந்து உசிதமாகச் சேவை செய்வதிலேயே நிலைத்தவர்களுமான நித்யசூரிகளால் சேவிக்கப்படும் இருப்பில் 

முன்னெப்பொழுதும் இல்லாத புதுப்புதுப் பலவித சுவைகளாலும், உள்ளபா4வங்களாலும் நிறைந்ததும் நெருங்கியமைந்ததும், கணத்தின் ஒரு கூறான நேரத்தில் பிரம்மனின் ஆயுட்காலமான பரமே கழிந்துபோனது போன்ற அழகியதும், விதவிதமான ஸாமர்த்யத்துடன் கூடிய லீலைகளால் பெரிய பிராட்டியாரை மகிழ்விப்பவனாகவும், பெருத்த தோளுடையவனாகவும் 

சிந்தனைக்கெட்டாததாய், தெய்விகமாய், என்றும் வியப்பே விளைப்பதாய், நித்யமாய் இருக்கும் இளமையின் இயல்பான எழில்மயமான அமுதக் கடலாக இருப்பவனும், திருவுக்கும் திருவாகிய செல்வனும், பக்தஜநங்களின் ஒரே ஜீவிதமாக இருப்பவனும், தன்னை அனுபவிக்க நினைப்பார்க்கு உரிய பக்குவம் தந்து அநுபவிக்க வைக்கும் ஸாமர்த்தியம் உடையவனும், ஆபத்து அனைத்தையும் அக்கணமே நீக்கும் உயரிய நண்பனாயும், குறையிரந்து வருவோர்க்கு வேண்டுவன அளிக்கும் கல்பகமரம் போன்றவனுமான 

உம்மையே இடைவிடாமல் பின்தொடர்பவனாய், மனத்தின் மற்றைக் காமங்கள் அனைத்தும் மிச்சமின்றி நீங்கி உள்ளம் அமைதியுற்றவனாய், ஒரே இலட்சியத்துடன் வழிபடும் ஐகாந்திகம் என்பதுடன் உமக்கு உற்ற தொண்டெல்லாம் புரிந்து அதன் காரணமாக என் ஜீவிதம் பயனடைந்ததுவாய் ஆகி அதன் மூலம் எப்பொழுது நான் உம்மை உகப்பிக்கப் போகிறேன்? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***



No comments:

Post a Comment