Sunday, June 12, 2022

ஸ்தோத்ர ரத்நம் - ஸ்ரீஆளவந்தார் - 31

கதா3புந: ங்க2 ரதா2ங்க3 கல்பக 

த்4வஜ அரவிந்தா3ங்கு வஜ்ர லாஞ்ச2நம்

த்ரிவிக்ரம த்வச்சரணாம்பு3ஜத்3வயம் 

மதீ3யமூர்த்தா4நம் அலங்கரிஷ்யதி || 



மீண்டும் எப்பொழுது திரிவிக்ரமாவதாரம் என்கிறார்? பலியை மூன்றடி யாசித்து உலகளந்தது பெரிய செயல்தான். ஆனால் ’நீ என்னுடையவன்’ என்றால் ’இல்லை நீ நீதான் நான் நான் தான்’ த்வம் மே என்றால் அஹம் மே என்று சொன்ன ஜீவன் உன் திருவடிகளையே யாசித்து வந்து நிற்கும் இதுவன்றோ தருணம்! யாரும் பிரார்த்திக்காத அன்று, நீ யாசித்துச் சென்று, அனைத்துப் பொருட்களின் மீதும் உன் பாத இலச்சினை பதித்தது பெரும் செயல்தான். ஆனால் ’தான் தனக்குரியன், தன்னைத் தானே காக்க வேண்டும்’ என்று திரிந்த ஜீவன் ‘நானும் எனக்குரியன் அன்று. என்னைக் காப்பதும் பகவானே’ என்று நன்கு உணர்ந்து வந்து நின்று பிரார்த்திக்கும் இன்று அன்றோ அந்தத் திரிவிக்ரமாவதாரம் பூர்த்தியாவது! எப்பொழுது உன் திருவடிகளை என் சென்னிக்கணியாய்ச் சூட்டப் போகின்றாய்? சங்கம், ரதாங்கம், கல்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ரம் முதலிய அடையாளங்கள் அமைந்த உன் பத கமலங்கள், த்ரிவிக்ரமா! எனது தலைக்கணியாய் எப்பொழுது திகழப் போகின்றன? 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

No comments:

Post a Comment