நமோ நமோ வாங்மநஸாதி பூ4மயே
நமோ நமோ வாங்மனஸைக பூ4மயே |
நமோ நமோSநந்த மஹாவிபூ4தயே
நமோ நமோSநந்த த3யைக ஸிந்த4வே ||
*
ஒரு விஷயம் வாக்கிற்கும், மனத்திற்கும் எட்ட வேண்டும். அன்றேல் வாக்கிற்கும், மனத்திற்கும் எட்டாமல் இருக்க வேண்டும். அது எப்படி ஒரே விஷயம் எட்டியும் எட்டாமலும் இருக்கும்? நம்மாழ்வார் இதற்கு ஒரு விளக்கம் தருகிறார். ‘பத்துடை அடியவர்க்கு எளியவன், பிறர்களுக்கு அரிய வித்தகன்’ என்கிறார். பத்து என்றால் பக்தி. பக்தி மனத்தில் இருந்தால், உள்ளம் காதலாகிக் கசிந்தால் ஒரு விஷயம் தெரிகிறது. உள்ளே பக்தி இல்லையென்றால் அந்தக் காட்சி கிடைப்பதில்லை. காரணம் என்ன?
அப்படிப் பார்த்தால் பக்தியுள்ளவர் தாம் காண விரும்புவதையே காண்கிறார். பக்தியில்லாதவர் எதிர்பார்ப்பு மனநிலை இல்லாததால் காணவில்லை. அப்படியென்றால் காணப்படும் பொருள் மனநிலை சாராது பொதுவாக இருக்கும் பொருள் இல்லையா? இங்கே சொல்லப்படுவது காலத்தாலும், இடத்தாலும், பொருள் தன்மை வகை முதலியவற்றாலும் எல்லைப்படுத்தப்படாத பொருளான பரம்பொருள். எனவே மனநிலை சார்ந்த பொருள் அன்று. பின் ஏன் பக்திக்கு மட்டும் கண்ணுக்குத் தெரியவேண்டும்?
இந்தப் பரம்பொருள் உலகம், நம் அனுபவம் அனைத்திற்கும் அடிப்படையாகவும், உயிருக்கு உள் உயிராகவும் இருப்பது. புறத்தில் காலம், இடம், பொருள் இயல்பு என்பதற்கு வயப்பட்ட பொருள் அன்று. இதைக் காண்பதுவும் கண்ணால் அன்று. இந்த உடம்பின் கண்ணிற்கு ஒரு நாளும் எட்டாதது. உள்ளத்தின் கண்ணிற்கே எட்டும் என்று சொல்வதும் நம்மாழ்வார்தான். ‘என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து’.
உட்கண் காணும். எப்படிக் காணும்? உணர்ந்து காணும். எனவே உள்ளத்தின் கண் எனப்படும் உணர்வின் மிகுதியே பக்தி எனப்படுவது. அது வெறுமனே உணர்ச்சிகளின் விஷயம் அன்று. அந்த உள்ளத்தின் கண் திறக்காமல் எப்படி இந்தக் காட்சியைக் காண முடியும்? எனவே கண் திறந்தவர் காண்பார். கண்மூடியிருப்பவர் காணார் என்பதைத்தான் நம்மாழ்வார் ‘பத்துடை அடியவர்க்கு எளியவன். பிறர்களுக்கு அரிய வித்தகன்’ என்றார்.
கண்ணைத் திற! காட்சி தெரியும். ஸஞ்ஜயனும், திருதராஷ்டிரனும் ஒன்றாகக் குருகுலத்தில் படித்தவர்கள். ஒரு சமயம் ஸஞ்ஜயனைக் கேட்கிறான் திருதராஷ்டிரன்: ‘ஸஞ்ஜயா! நீயும் நானும் ஒன்றாகத்தான் சாத்திரங்கள் படித்தோம். உனக்குத் தெரிகிறது. ஏன் எனக்குத் தெரியவில்லை.?’ அதற்கு ஸஞ்ஜயனின் பதில்: ‘மன்னா! நான் பக்தியின் துணையோடு சாத்திரம் படித்தேன், அதனால்.’ இதையெல்லாம் வைத்துக்கொண்டு இந்தச் சுலோகத்திற்குப் போவோம்.
வாக்கிற்கும் மனத்திற்கும் எட்டாநிலமாக இருக்கும் உனக்கு நமஸ்காரம் நமஸ்காரம்.
வாக்கும் மனமும் விலகாமல் தோயும் ஒரே நிலமாக இருக்கும் உனக்கு நமஸ்காரம் நமஸ்காரம்.
‘என் கண்களால் நோக்கிக் காணீர்‘ என்கிறார் நம்மாழ்வார்.
முடிவே அற்ற மகத்தான ஐஸ்வரியம் விபூதிகள் உடைய உனக்கு நமஸ்காரம் நமஸ்காரம்.
இப்படி இருக்கும் நீ உலகின் அநந்த கோடி உயிர்களில் ஒவ்வோர் உயிர்க்கும் உள்நின்று உலவும் உயிராய் இருப்பதும், உன்னை நினைப்பார்க்கு, உள்ளம் விம்மித் துதிப்பார்க்கு உன்னைப் புரிய வைப்பதுவும் உன் எல்லையற்ற தயை மாத்திரமே காரணம் என்பதில் என்ன சந்தேகம்?
எல்லையற்ற தயையாகிய பெருங்கடலான உனக்கு நமஸ்காரம் நமஸ்காரம் !
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
simple lucid urai.even beginners can understand.pranams for ur good kainkaryam.
ReplyDelete