சூத சம்ஹிதையில் பிரும்ம கீதை என்றொரு பகுதி. அதை பல நூற்றாண்டுகள் முன்னம் வந்துதித்த தத்துவராயர் சுவாமிகள் என்பார் தமிழ்ச் செய்யுள் வடிவமாக இயற்றி வைத்தார். அந்தத் தமிழுக்கு அரிய உரை ஒன்றைப் பின்னர் வந்த காலத்தில் வந்துதித்த கோடகநல்லூர் சுந்தரஸ்வாமிகள் என்பார் செய்து வைத்தார். இவையெல்லாவற்றையும் சேர்த்து 1936ல் இ மா கோபாலகிருஷ்ண கோனாரால் நல்திருத்தங்களுடன் நூல் கொண்டு வரப் பட்டது. அதற்குப் பலர் பாயிர உரைகளும் செய்யுட்களும் தந்துள்ளனர். அதில் வையை ராமசந்திர ஐயர் என்பார் இயற்றிய செய்யுள்களில் ஓரிடம் சிந்தை கவர்ந்தது.
மான்காட்டி மான்பிடித்தன் மானவே
நம்போலோர் வடிவம் தன்னைத்
தான்காட்டிக் காண்பவெலாந் தனிற்பிறிதன்று
என எவர்க்கும் தகவால் காட்டி
ஊன் காட்டும் உடல் பொய் என்று உணர்விலேன்
உணரும்வகை உணர்த்த வந்து
தேன்காட்டு மொழிகாட்டும் சுந்தரதே
சிகன் என அத் திருப்பேர் தாங்கி
என்று போகிறது வையையாரின் பாடல்கள். இந்த இடம்தான் என்ன அற்புதம்! - ‘மான்காட்டி மான்பிடித்தல் மானவே நம் போல் ஓர் வடிவம் தன்னைத் தான் காட்டிக் காண்ப எலாம் தனில் பிறிதன்று என எவர்க்கும் தகவால் காட்டி’
அதனோடு விடவில்லை - ‘ஊன்காட்டும் உடல் பொய் என்று உணர்விலேன் உணரும் வகை உணர்த்த வந்து தேன் காட்டு மொழி காட்டும் சுந்தரத் தேசிகன்’
கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளை வார்த்தையால் வடித்து விட்டார் வையைக்காரர்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment