அறிவது என்பது நமக்குப் புரியும். கண்டு அறிவது, கேட்டு அறிவது அதுவும் புரிகிறது. ஆனால் இதயத்தால் அறிவது என்றால் என்ன? ‘இதயத்தால் அறிவது’ என்ற கருத்தைக் கூறுகிறார் ஸ்ரீதாயுமானவர்.
சித் என்பது அறியும் மெய்ப்பொருள். அஃது உயிர். எல்லையற்றது. உணர்வின் உயிர்ப்பே எண்ணங்கள். மூன்று முக்கியம். பிறப்பால் மனிதரில் உயர்வு தாழ்வு இல்லை. பெண்ணும் ஆணும் சமமான மனித உயிர். கடவுளை அடைய அன்பே வழி. மனித குலத்தை நேசிப்பவர் சிறந்தவர். உயிர்க்குலத்தை நேசிப்பவர் உத்தமர். மதம், சாதி, மொழி, இனம் எதனாலும் மனிதரில் பிரிவினைப் பகையும், வெறுப்புப் பிளவும் ஏற்படாவண்ணம் ஒழுகுதல் நல்லொழுக்கம்.
Thursday, September 17, 2020
காலைத் தேநீரின் அதிசயங்கள்
சுருங்கச் சொல்!
சும்மா வளவளன்னு எழுதாஅத. சுருக்கமா நாலு வார்த்தையில எழுது.
Tuesday, September 8, 2020
மாவலிகதைப் பாடல்
நாம் அறியாமலே போன வேதாந்தத் தமிழ் நூல் ஞானவாசிட்டம். அதில் மாவலிகதை. அதில் ஓரிரு பாடல் -
அக்கினிக் குஞ்சு
எந்தக் கலைகளும், அறிவுகளும் ஒருவருக்கு மீண்டும் மீண்டும் பயிற்சியில் இருந்தால்தான் கெடாமல் இருக்கும். அப்யாஸம் இல்லை என்றால் எந்த வித்யையும் மறைந்துவிடும். ஆனால் ஞானக்கலை என்னும் பிரம்மவித்யையோ அப்படியன்று. ஆர்வம் தோன்றிவிட்டால், ஒருமுறை மனத்தில் விசாரம் எழுந்துவிட்டால் பிறகு அதற்கு மறைவு என்பதே கிடையாது. சிறுகச் சிறுக அனைத்தையும் உண்டு தானே மிக்கதாய் வளர்ந்து நிற்கும். மகாகவி பாரதி சும்மாவா பாடினார்: ‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன். அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன். வெந்து தணிந்தது காடு. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’ ஒரு சுலோகம் சொல்கிறது : ‘ஸர்வைவ ஹி கலாஜந்தோரநப்யாஸேந நச்யதி| இயம் ஜ்நாநகலா த்வந்த: ஸக்ருத்ஜாதா விவர்த்ததே||’ - உயிர்களுக்கு ஸர்வகலைகளும் அப்யாஸம் இல்லையெனில் நாசம் அடையும். ஆனால் இந்த ஞானக்கலையானதோ என்றால் ஒரு முறை தோன்றிடின் பின் வளர்ந்துகொண்டே இருக்கும்.’
ஜீவன் சித் பிரத்யகாத்மன்
ஒரு சமயம் ஜீவன் என்கிறோம். ஒரு சமயம் ஆத்மன் என்கிறோம். ஒரு சமயம் சித் என்கிறோம். ஒரு சமயம் ப்ரத்யகாத்மா என்கிறோம். ஒரு சமயம் சேதநன் என்கிறோம். இந்தச் சொற்களுக்குப் பொருள் என்ன? மாற்றி மாற்றி உபயோகிக்கலாமா? அல்லது காரணம், அர்த்தம் என்பது சொற்களுக்குத் தனிப்பட இருக்கின்றதா?
வேதங்கள் காட்டும் ஏழு யோகபூமிகள்
யோகத்தில் ஏழு பூமிகளைக் குறிப்பிடுவதுண்டு. அந்த ஏழு பூமிகள் என்ன என்ன என்பதை மனுவானவர் வரிசைப் படுத்திக் கூறுகிறார். யோக பூமி, பூமிகை என்றால் மனப்பக்குவத்தின் ஸ்தானம் என்று பொருள் கொள்ளலாம். நன்கு முதிர்ந்த உள இயல் படிப்புகள் பழங்காலம் முதற்கொண்டே வளர்ந்திருப்பதுவே நெடிய பாரம்பரிய உத்வேகத்தைக் குறிப்பதாகும். நாம் நம் காலத்தில் சிறுசிறு கருத்துகளாகவாவது இவற்றைத் தெரிந்து கொண்டால் பின்னர் ஆர்வம் கிளரும் பொழுது நன்கு தெரிந்து கொள்ள ஏதுவாகுமே என்று தருகிறேன். முதலில் தமிழில். பிறகு சம்ஸ்க்ருத மூலம் ஆர்வம் உடையோருக்காக. ஸ்ரீராமகிருஷ்ண கதாம்ருதத்தில் குருதேவர் சொல்வதாக வரும். வேதங்கள் ரீதியிலான சப்த பூமிகள் என்று. யோக சாஸ்திரத்தில் ஆறு சக்கரங்கள், ஏழு என்று கூறுவதுண்டு. மூலாதாரம், மணிபூரகம், ஸ்வாதிஷ்டானம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம் என்று. யோக சக்கரங்களைச் சொல்லும் தருணத்தில் வேதம் சொல்லும் சப்த பூமிகள் என்று குருதேவர் சொல்லும் பொழுது சப்த பூமிகள் என்னவாக இருக்கும் என்ற எண்ணம் எழுந்ததுண்டு. மனுவின் சுலோகங்களில் அந்த சப்த பூமிகளுக்கான வரிசையும் விளக்கமும் கிடைத்தன. காயத்ரிமாதா அருள் செய்வாளாக! ‘ஆயாது வரதா தேவீ அக்ஷரம் ப்ரஹ்மஸம்ஹிதம்’.
விழிப்பு என்னும் நுழைவாயில்
நல்ல மனிதர்கள்தாம். ஆனால் பாவம். நாசகர சக்திகளின் பிடியில் மாட்டிக்கொண்டு அவை ஆட்டிவைக்கும் விதத்தில் ஆடவேண்டிய துர்க்கதி. - இவ்வாறு பரிதாபப் படுவதைக் கேட்டிருப்போம். இப்படிப் பட்ட நிலைதான் இந்த ஜீவனுக்கு. உடல் என்னும் யந்திரத்தில் அதனைத் தன் பயணத்திற்கு, தன் இலட்சியத்திற்கு இயக்க வேண்டிய நிலைமை மாறி ஐம்புலன் ஆட்சிக்கு அடிமையாகி இயந்திரம் என்பது அதுவே இயக்குவோனாகவும், இயக்க வேண்டியவன் இயக்கப்படும் இழிநிலை ஆகவும் - இது எப்படி மாறும்? ‘ஆத்மாநம் ரதிநம் வித்தி’ என்று சொன்னதை எப்பொழுது புரிந்து கொள்வோம்?
விநோதமான ஒரு தொலைபேசிக் கேள்வி
காலையில் எழுப்பி மங்களமாக ‘திகில்’ கொடுத்த இது போன்ற நிகழ்வுகள் மட்டுமே இல்லை. வேறு மாதிரியான நிகழ்வுகளும் உண்டு. ஒரு நாள் ஒரு போன் கால். நீங்கள் இன்னார்தானே என்று கச்சிதமான வெரிஃபிகேஷன்.
விடியற் காலையில் எழுப்பி இப்படி ஒரு கேள்வி!
பல வருஷங்களுக்கு முன்னர் காலை ஐந்து மணி இருக்கும். காலிங் பெல். இந்த நேரத்தில் யார் நம்மைப் பார்க்க வருவது... வாரிச் சுருட்டி எழுந்து கண்கள் துயில்கொஞ்ச, பார்த்தால் கீழ் வீட்டுப் பெரியவரும், அம்மாளும் ‘ ‘அபரோக்ஷானுபூதி’ இருக்கா?’ என்று கேட்டார்கள். ஒருகணம் கதி கலங்கிவிட்டது. எங்கோ வெம்மாயக் காட்டில் அலைந்து உலையும் ஜீவனை, காரணமற்ற பகவத் கிருபையின் காரணமாக திடீரெனா ஒரு கணத்தில் நிறுத்திக் கேட்கும் கேள்வி போல் அந்த விடிவுக்கு முன் இருட்டில், தூங்கி வழியும் என்னை நோக்கி முகத்தில் அறைந்து விழுந்த கேள்வியாக... என்னது... என்று நிலை குலைந்து... ஒரு மாதிரி சுதாரிக்கும் முன்னர் அவர்களே பாவம்... இல்லை... சுவாமி ஒருவர் இங்க பக்கத்துல இருக்கற கோயிலில் காலையில் அபரோக்ஷானுபூதி வகுப்பு எடுக்கிறார். அதுக்குப் போய்க்கொண்டு இருக்கிறோம். அதான் உங்க கிட்ட ஸ்ரீராமகிருஷ்ண மடம் போட்ட தமிழ் அல்லது ஆங்கில அபரோக்ஷானுபூதி புஸ்தகம் இருக்கான்னு... கேட்டோம். நீங்க வைத்திருப்பீர்கள் என்று எங்காத்து பாட்டி சொன்னார்.
இம்மையும் மறுமையும் புத்தரும்
இம்மை, மறுமை; இகம், பரம்; அப்யுதயம், நிச்ரேயஸம்; - இவை இரட்டை இலட்சியங்களாக ஹிந்துமதம் முன்னிறுத்துகிறது. ஆன்மிகச் சிறப்பை மட்டும் ஒருவர் அடைந்தால் போதும் என்று விரக்தியில் மிக்கவர்கள் நினைத்தாலும் பொதுவான இலட்சியம் என்பது வாழ்வின் வளம், ஆன்மிக உணர்வின் சிறப்பு இரண்டுமே இணைந்துதான் வாழ்வின் முழுமையான இலட்சியம் என்பதை அப்யுதயம், நிச்ரேயஸம் என்பது குறிக்கிறது. இஹம், பரம் என்பது இங்கு என்னும் இவ்வுலகில், இவ்வுலக வாழ்வைக் கடந்த அவ்வுலகில் என்று இம்மை, மறுமை என்ற செயல், செயலின் விளைவின் தொடர்ச்சி என்பதை வலியுறுத்தி சீரிய அற உணர்வுக்கு வழிவகுக்கிறது. ஒருவர் இங்கு செய்யும் செயல் இங்கோடு போய்விடும் என்பது இல்லை; மறுமையிலும் அவரை நலியும் என்ற கருத்து அறவழியைச் சமுதாயத்தில் நன்கு நிலைநிறுத்தும் கருத்தாகும். ஏதோ அந்த நேரத்தில் மனம் போனபடி, உணர்ச்சிகளின் வழி என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அதன் விளைவுகள் என்று ஒன்றும் கிடையாது; தப்பித்துக் கொள்ளாலாம் என்ற தற்குறியான கருத்து பாரத மண்ணில் எழுந்த எந்த நெறிகளிலும் இல்லை. ஹிந்து சமுதாயத்தில் எழுந்த எந்த மார்க்கத்திலும் இத்தகைய கண்மூடித் தனத்தை நாம் பார்க்க இயலாது.
ஸ்ரீராமகிருஷ்ணரும் நானும் ஸம்ப்ரதாயங்களும்
*
நூல்களைப் படிப்பவர் என்னும் விதத்தில் எனக்கு விவேகம் வைராக்கியம் நிறைந்தவர்கள் அருளிய ஞானம் தூய பக்தி மிக்க நூல்கள் எதுவாயினும் அதில் தோய்வதற்கும், பயன் பெறுவதற்கும் எந்த மனத்தடையையும் நான் உணரவில்லை. ஆனால் நான் எந்த நெறியிலும் என்னை அர்ப்பணித்துக் கொண்டவன் இல்லை. ஆழ்ந்து, கருத்துடன் கற்பது என்பதைத் தவிர நான் செய்யும் அனுஷ்டானங்களும் எதுவும் இல்லை. ஆன்மிக முதிர்ச்சி இருக்கிறதா தெரியாது. ஸ்ரீராமகிருஷ்ணர்பால் பக்தி கொண்ட ஒரு ஹிந்து என்பதுதான் என்னைப் பற்றி நான் சொல்ல முடிந்தது. எனவே அனுஷ்டானங்களில் ஆழ்ந்து எந்த சம்ப்ரதாயத்தையாவது சார்ந்து இருக்கும் மனநிலையைப் பற்றி எனக்குத் தெரியாது. ஸ்ரீராமகிருஷ்ணர் கிறித்தவம் போன்ற மற்ற நெறிகளைப் பற்றிக் கூறிய கருத்துகளை ஆரம்ப காலங்களில் விவாதமே இல்லாமல் என்னால் ஏற்க முடிந்தது. ஆனால் பிறகு அந்தந்த மதநூல்களையும், அது சம்பந்தமான ஆய்வு நூல்களையும் படித்துப் பார்த்த பின்பு, இப்பொழுது ஸ்ரீராமகிருஷ்ணரின் சரித நூல்களில் அவரின் மற்ற மத சாதனைகள், அதன் வழி அவர் அவற்றைப் பற்றிக் கூறும் கருத்துகள் ஆகியவற்றோடு உடன்பட முடியவில்லை. ஏன் அவ்வாறு சொன்னார் என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. (காரணம் அந்தந்த மத நூல்களிலும் அவற்றைக் கைக்கொள்ளும் வல்லுநர்களின் விளக்கங்களின் படியும் பார்த்தால் வித்யாசமாக இருக்கிறது) ‘வெறுமனே நூல்களைப் படிப்பவர்தாமே. நீர் ஆன்மிக சாதனைகளில் முன்னேறியவர் இல்லையே!’ என்று நீங்கள் என்னை மடக்கினால், ’ஆம். நான் நூல்களின் வழியே தெரிந்து கொள்பவனே அன்றி ஆன்மிக சாதனைகளில் தேர்ச்சி என்பது அற்றவன்’ என்றுதான் என்னால் சொல்ல முடியும்.
*
ஸ்ரீராமகிருஷ்ணர் நூல்களைப் படித்து ஆய்வு செய்து அவ்வாறு தம் கருத்துகளைப் பெறவில்லை. அவருடைய யோகக் காட்சிகளில் அவர் பெற்ற வழிதான் அவருடைய கருத்துகள். எனவே நான் படிப்பை வைத்துக் கொண்டு அவருடைய கருத்துகளை ஏற்பது மறுப்பது என்பதை எப்படிச் செய்ய முடியும்? பொதுவாகச் சொன்னால் படிப்பின் மூலம் பெறும் அறிவு ரீதியான விளக்கத்தை ஏற்பதா? அல்லது யோகக் காட்சிகள் மூலம் மஹான்கள் சொல்வதை நம்புவதா?
கஷ்டமான கேள்விதான். இப்படியா அப்படியா என்று சிலசமயம் அதீந்த்ரியமான விஷயங்கள் புரிவதில்லை. ஆனால் நமக்கும் கிடைத்திருப்பதோ ஒரு சின்ன விளக்குதான்.
*
மனிதர் என்றுமே அறிவுடைமையோடு அடக்கமுடைமையையும் பேண வேண்டியவர்களாகத்தான் விதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அறிவுடைமை மட்டுமன்று. அருளுலகில் ஈடுபாடு கொண்டோருக்கும் அடக்கமுடைமை இன்றியமையாதது என்பதை இயற்கையும், சரித்திரமும் உணர்த்தியவண்ணம் இருக்கின்றன. ஆனால் அறிவுடைமையே போதும் ஏன் அருள், அப்பாலைய நிலை, கடந்த உணர்வு நிலை என்றெல்லாம் கவலைப்பட வேண்டும்? தம் விதியைத் தீர்மானிப்பவர் மனிதர்தாமே அன்றோ! என்று மும்முரமாகக் கிளம்பிய முனைப்புகள் எல்லாம் காலத்தில், தம் அறிவின் கர்வத்தால் தாமே அழிவின் காரணமாகும் பொழுது, போதாமை வெளுத்த புன்மையும் வெட்கமும் மிஞ்ச நிதர்சனமே எஞ்சுகிறது. அருள் உலகின் ஆகப்பெரிய நெறி இதுவே என்று அறுதியிட்டு கிளர்ந்த ஊக்கங்கள் எல்லாம் கடைசியில் இப்படியாக என்று வரலாற்றுப் பாடங்கள் ஆகிவிடுகின்றன. எப்பொழுதும் அடக்கமுடைமையை மனிதர் கடக்கும் வல்லமை பெற்றவர் அல்லர் என்பதுதான் ஒட்டுமொத்த நிதர்சனமாக நிற்கிறது. இந்தக் கணத்தில் நாவில் நயக்கும் தேநீருக்கு நன்றி என்னும் உணர்வு என்றும் நிலைத்தால் போதாதோ? எங்கு போனாலும் வண்டிகள் மீண்டும் இங்குதான் வந்து சேர வேண்டும் என்னும் பொழுது....
*
சில சமயம் சிலருடன் பேசுவது சுவாரஸியமாகத்தான் இருக்கிறது. என்ன கொஞ்சம் பொறுமையும் தேவை. ரசனையாகப் பார்த்தால் பிரச்சனையே இல்லை.
என்ன சார்! ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்கீங்க...
ஏதோ போய்க்கொண்டு இருக்கு சார்.
இன்னும் ராமகிருஷ்ணா மடத்துல எல்லாம் கனெக்ஷன் இருக்கா?
அது எப்பவுமே இருக்கும் சார். ஸ்ரீராமகிருஷ்ண பரமாஹம்ஸரை விட்டால் எங்களைப் போன்றவர்களுக்கு ஏது கதி?
அதெல்லாம் நம்ப பழைய சம்ப்ரதாயங்கள் மாதிரி வராது சார். .. என்ன சொல்றீங்க...
உங்களுக்கு அப்படித் தோன்றினால் ஃபாலோ பண்ணிக்குங்க..
எனக்குன்னு சொல்லலை... உங்களுக்குமே... வழிவழியா வர சம்ப்ரதாயம் என்பது....
ஆத்ம விசாரம் என்பது ஒவ்வொருத்தரின் ப்ரத்யேகமான பாதை சார். அவரவர் பக்குவம், புரிந்துகொள்ளுதல் அடிப்படையில்...
ஏன் என்ன கஷ்டம் சொல்லுங்கோ... சம்ப்ரதாயம் என்று எடுத்துக்கொண்டால் அதில் சொல்லியிருப்பதற்கு மேலயா யாரும் சொல்லிவிடப் போகிறார்கள்... ஓல்ட் ஈஸ் ஆல்வேஸ் கோல்ட்... என்ன
(நான் கொஞ்சம் இப்பொழுது எல்லாம் தேறிவிட்டேன். தேவையற்ற நேரங்களில் விவாதங்களைத் தவிர்த்து விடுதல். ஆனாலும் விடாமல் கேட்கும் பொழுது..)
ஐயா... நான் சில விஷயங்களைச் சரி என்றும், சிலவற்றைத் தவறு என்றும் நிச்சயமாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். அந்த விஷயங்களுக்கு விரோதம் இல்லாத வகையில்தான் என்னுடைய நம்பிக்கைகள், பிறப்பதற்கு முன், இறந்த பின் என்னும் கேள்விகளுக்கான அபிப்ராயங்கள் ஆகியவற்றைக் கொள்ளுவதோ, விடுவதோ செய்கிறேன். மனிதருக்கிடையில் பிறப்பின் காரணமாக உயர்வு தாழ்வு என்பது எனக்கு ஒவ்வாத ஒன்று. அடுத்தது பெண்களுக்கான சம அந்தஸ்து என்பதை மறுப்பது என்பது எனக்கு ஒவ்வாத ஒன்று. மேலும் பரம்பொருள் ஒன்று, அதை வணங்கும் வழிகளும், அதைக் கருதி வணங்கப்படும் வடிவங்களும் பலவாக இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பது எனக்கு ஏற்கும் கருத்து. மற்றபடி மறந்தும் புறந்தொழாமை, மானோதீயிஸம், சிறுதெய்வ வழிபாடு என்ற பேதப் பார்வை இதுவும் எனக்கு ஒவ்வாத ஒன்று. இன்னும் சில... இப்படி இருப்பதால்... எனக்கு ஈடுபாடு என்பது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரிடத்தில் இயல்பாக ஏற்படுகிறது. எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.
இல்ல... அதுல மட்டும் குறைகளே இல்லையா... ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னதுல... கிறித்தவம் போன்ற பிறமதங்களையெல்லாம் சாதனை செய்தார் என்று சொல்கிறார்களே....
ஆமாம். அது எனக்கும் நெருடுகிறது. ஏன் எனில் அந்தந்த மதநூல்களையும், அதற்குரிய விளக்கங்கள், ஆய்வுகள் முதலியவற்றையும் தனிப்பட ப்ரத்யேகமாகப் படித்துப் பார்க்கும் பொழுது மிகவும் வித்யாசமாக இருக்கின்றன. இவர் சொல்வது போல் இல்லை. அந்த விஷயத்தில் ஏன் சொன்னார் என்பது எனக்கும் கேள்வியாகவே இருக்கிறது. நானும் அதைத் திறந்த கேள்வியாகவே வைத்திருக்கிறேன். பூசிமெழுகுவது எதையும் நானும் ஏற்பதில்லை. ஆனால் இவ்வாறு அவர் சொன்னதை நான் ஏற்கவில்லை என்பதை அவர் இருந்த காலத்திலேயே அவரிடமே வெளிப்படையாகச் சொல்லிவிட்டு அவரிடம் நான் அமர்ந்திருக்க முடியும். தூய பக்தி, ஞானம், விவேகம், வைராக்கியம் என்பதைத்தான் அவர் விடாப்பிடியாக வற்புறுத்தினார்.
இல்ல... ஆயிரம் பேசலாம். ஆனால் மரணத்திற்குப் பின்னர் நற்கதி அடைய வேண்டும் என்றால்....
ஐயா... அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டாம். இப்படி இருந்தால், நான் சரியென்று உணர்ந்ததற்கேற்ப, ஸ்ரீராமகிருஷ்ணரிடம் ஈடுபாடு கொள்வதால் என்ன கதி வருகிறதோ அது எனக்குப் போதும். அந்த விஷயத்தில் திருப்தி உடையவனாக இருக்கிறேன். கவலையே படாதீங்க.
சரி.. ஏதோ சொன்னேன்... நமக்குத் தெரிந்தவர் ஆயிற்றே என்று. பார்ப்போம்..
வணக்கம் ஐயா. ஸ்டே ஹோம் ஸ்டே ஸேஃப்.
*
ஏம்ப்பா... இப்படி சுயநலமியாக இருக்கியேப்பா.. என்றார்.
சார். அது கஷ்டம் சார். என்னால முடியாது. எனக்கு என்ன புரிந்தது. எது சரி. எது தவறு என்பதைக் கொண்டு நான் எனக்கு முடிவு பண்ணிக்கலாமே அன்றி மற்றவர்களுக்குச் சொல்லும் தகுதியோ உரிமையோ எனக்கு இல்லை. அப்படியே ஒரு பேச்சுக்குச் சொன்னாலும் ஏகப்பட்ட கேள்வி வரும். பெரியோர்கள் எழுதிய நூல்களில் எல்லாம் இருக்கின்ற வரிக்கு வரி ரீஇண்டர்ப்ரட் செய்யணும். நீ யாரு அதைச் செய்ய என்று கேள்வி அடுத்து வரும். ஒன்று தவறு என்று எடுத்துக் காட்டினால், ஏன் தவறுகளைப் பார்க்கிறாய்? எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றனவே. அதையெல்லாம் பார்த்துக்கொண்டு போயேன் என்று ஒரு வாதம் வரும். சரி. இன்னது நல்லது. சிறப்பாக இருக்கு என்று எடுத்துக் காட்டிக்கொண்டு போனால் மறுபடியும் ஒரு வாதம் கிளம்பும். நீ எதைச் சிறந்தது என்று எந்த நூலில் எடுத்துக் காட்டுகிறாயோ அதே நூலில் அதே மஹானால்தான் இந்தக் கருத்தும் சொல்லப்பட்டு இருக்கிறது. இதில் நீ யார் இது சிறந்தது, இது சரியில்லை என்பது. நீதான் முத்திரை குத்தும் அதிகாரமா என்று கேள்வி வரும்.
அப்ப நீ ஸ்ரீராமகிருஷ்ணர் இயக்கத்து நூல்களை மட்டும்தான் படிப்பியா?
இல்லை சார். எல்லா சம்ரதாயத்து நூல்களையும் அவ்வப்பொழுது ஆர்வம் தேவை பொறுத்துப் படிப்பேனே.
என்னது... சம்ப்ரதாயத்து நூல்களில் நீ குறிப்பிட்ட கருத்துகள் வந்தால் என்ன பண்ணுவ...
இது என்ன சார் பெரிய... அந்தக் கருத்துகளை ஒதுக்கிவிட்டு சிறப்பானவை, ரசிக்கச் சிறந்தவை ஆகிய இடங்களை எடுத்துக்கொண்டு போய்விடுவேன்.
என்னப்பா குழப்பமா இருக்க நீ...
இதுல என்ன சார். மஹான்கள், அவதார புருஷர்கள் எல்லோருமே மனித குல நன்மையைத்தான் சார் சொல்லியிருப்பாங்க. இப்ப பகவானுக்கே என்னன்னு சொல்றோம்.. சகல கல்யாண குண சம்பூர்ணன் என்றுதானே? அனைத்து நன்மை மங்களம் நிறைந்த உயர்ந்த குணங்கள் அனைத்தும் குறைவற நிறைந்தவன் என்றுதானெ கூறுகிறோம். ஏதோ கலந்துகட்டி இருக்கும் என்றா சொல்கிறோம்? அப்ப என்ன அர்த்தம்? எதிலும் எப்பொழுதும் சிறந்தவற்றையே, நல்லவற்றையே காணவும், ரசிக்கவும் பழக்குவதுதானே மதங்கள், சம்ப்ரதாயங்கள் என்று அத்தனையின் நோக்கமுமே. என்ன மனிதர்கள் கையில் வழிவழியாக வரும்போது எது ஏன் எப்படி மாறிப்போகிறது என்பது உலகளாவிய பிரச்சனை சார். ஒரு இடத்துல மட்டும் என்று இல்லை. இப்ப நீங்களே சொன்னீங்க. ஸ்ரீராமகிருஷ்ணர் பிறமதங்களைச் சாதனை புரிந்தார் என்று சொல்றாங்களே என்று. அதுலயே பாருங்க. அந்த இலக்கியங்களில் அப்படித்தான் போட்டிருக்கு. அவர் சொன்னதைப் புரிந்துகொண்டவர் தாம் என்ன புரிந்துகொண்டாரோ அதைத்தான் எழுதுவார். ஸ்ரீராமகிருஷ்ணர் என்ன பொருளில் சொன்னார் யாருக்குத் தெரியும்? நம் வரையில் ஒன்று பொருந்தவில்லை என்று தெரிகிறதா அதை விட்டுவிட்டுச் சாரம் ஆனதை, எடுத்துக்கொண்டு போக வேண்டியதுதான்.
சரி பொறுமையா உட்காரணும். உன்னை நல்வழிக்குக் கொண்டு வந்துவிடலாம்.
இது எப்படி இருக்கு !
*
நண்பர் என்னை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார்போல் இருக்கிறது.
என்னப்பா.. அன்னிக்கு ஒரு விஷயம் சொன்னியே.. அதாவது ஸ்ரீராமகிருஷ்ணர் பிறமதங்களைச் சாதனை புரிந்தார் என்று சொல்கிறார்களே என்று நான் கேட்டதற்கு அது உனக்கும் நெருடுகிறது. ஏனெனில் அந்தந்த மத நூல்களை, அதற்கான விளக்கங்களை, ஆய்வுகளையெல்லாம் படித்துப் பார்த்தால் அங்கு சொல்வது வித்யாசமாக இருக்கிறது; எனவே ஏன் அவர் அப்படிச் சொன்னார் என்பது கேள்வியாகத்தான் இருக்கிறது என்று பதில் சொன்னாய் அல்லவா?
(இது என்னடா இது... சொன்னதையெல்லாம் அப்படியே நினைவு வைத்துகொண்டு மடக்குகிறாரே...)
ஆமாம் சார்.
அப்படியென்றால் அவர் ஹிந்துமதத்திலுள்ள பல நெறிகளான உதாரணத்திற்கு எடுத்துக்கொள், சைவ சித்தாந்த ரீதியாக தீக்ஷை பெற்று அதே கிரமப்படி சாதனைகள் புரிந்து பார்த்து சித்தி பெற்றார் என்றோ அல்லது ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்த நெறிப்படி பஞ்ச ஸம்ஸ்காரம், திருவாராதனம் என்று செய்து பரம புருஷார்த்த சித்தியை அடைந்தார் என்றோ படித்துப் பார்த்துவிட்டுத்தான் நீ ஒப்புக் கொண்டாயா? அவற்றிலும் அந்த ப்ரச்சனைகள் எழத்தானே செய்யும்? இல்லை. அவர் பொதுவான தியானம், ஜபம், பிரார்த்தனை, தவம் என்ற ஆன்மசாதன வழிகளின் மூலமாக பக்தி நெறிகள், யோக நெறிகள், ஞான மார்க்கங்கள் என்று சாகார, நிராகார இலட்சியங்கள், அதாவது உருவமுடைய இலட்சியம், உருவம் ஒன்றில்லாத இலட்சியம் என்று பல வழிகளிலும் பரம்பொருளின் சாக்ஷாத்காரம் அடைந்து தமது சர்வமத சமரஸக் கொள்கைக்கு வந்து சேர்ந்தார் என்று ஒப்புக் கொள்வாயானால் அதே முறையில் பிற மதங்கள் காட்டும் இலட்சியங்களையும் பயின்று பார்த்தார் என்றுதானே நீ எடுத்துக் கொள்ள முடியும்?
ஐயா, நீங்கள் சொல்வது சரியே. பொதுவாக ஓர் ஆன்ம சாதகர் என்பவர் ஏதோ ஒரு இலட்சியம், அது பக்தி இலட்சியமோ, ஞான ரீதியான இலட்சியமோ, உருவம் உடையதோ, உருவம் ஏதும் அற்றதோ, ஏதேனும் ஒன்றைத் தீவிரமாகப் பயின்று பெருநிலை அடைவதுதான் பொதுவான காட்சி. ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தி மார்க்கம், யோக மார்க்கம், ஞான மார்க்கம், ஸாகாரம் நிராகாரம் என்று பலவழிகளிலும் ஒன்றன் பின் ஒன்றாக அனுஷ்டித்துப் பார்த்து அனைத்தும் ஒரே நிலையில்தான் போய் முடிகிறது என்று கண்டார். இதை அவர் படிப்பு, ஒப்பீட்டியல் ரீதியான மதக்கருத்துகளை ஆய்தல் என்னும் வழியால் அடையாமல், அவ்வவற்றில் முற்றிலும் தோய்ந்து உள்முகமான சாட்சியாக அனுபவத்தில் அடைந்தார் என்பது ஸாராம்சம். இதை பாரதப் பண்பாடு என்ற பொது அடிப்படையில் இயங்கும் மார்க்கங்களைப் பொறுத்தவரையில் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இதே போல்தான் அவர் பிறமதங்கள் காட்டும் கடவுள் இலட்சியங்களையும் பொதுவான தம் ஆன்ம சாதனைகள் என்னும் தீவிர நாட்டம், தவம் முதலியவற்றால் அணுகித் தமக்கான ஒரு தெளிவுக்கு வந்தார் என்று சொல்வதும் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது அவருடைய அணுகுமுறை, பலவிதமான கடவுள் இலட்சியங்களைத் தமது இதய பூர்வமான பக்தி, தியானம், நாட்டம், தவம் ஆகியவற்றுக்கு இலக்காக ஆக்கினால் என்ன நிலை ஏற்படுகிறது என்று ஓர் ஒப்பியல் சாதனை முறை என்ற ரீதியில் செய்து பார்த்துத் தம் அளவில் ஒரு நிறைவான கருத்துக்கு வந்தார் என்பது பொதுவாக நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் அவரைப் பற்றிய இலக்கியங்கள் அவ்வாறு நிறுத்தாமல், அவர் பிறமதங்களைப் பயிலும் போது சிறு விவரம் கூட விட்டுப் போகாமல் அந்தந்த மதத்தினர் போன்றே நடை உடை பாவனை ஆகியவைகளையும் மாற்றிக்கொண்டு கடுமையாகப் பிறழாமல் அனுஷ்டானம் செய்து பார்த்தார் எனும் பொழுதுதான் நாம் அப்படியென்றால் அந்த மதங்களின் நூல்களில் சொல்லப்பட்டவை என்ன, என்றெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. இது உண்மையில் அவரைப் பற்றிப் பதிவுகள் ஏற்படுத்தியவர்களின் மொழியாடல் பிரச்சனை. அதாவது பக்தி, யோகம், ஞானம் என்னும் பல மார்க்கங்களின் மூலமாகவும் ஆர்வம் கொண்டு கடவுள் வேட்கையால் அனுபவித்துப் பார்த்தார். அதன் மூலம் தமது சமரஸக் கொள்கைக்கு வந்தார் என்றாலே போதுமானது. ஆனால் இதையே மிக விவரமாகவும், துல்லியமாகவும் சித்திரிக்க வேண்டும் என்று விரும்பிய சீடர்களின் வர்ணனைகள். இதன் காரணமாகத்தான் படிப்பவர்களுக்கு வியப்பு ஏற்படுவதைப் போன்றே கூடவே அப்படியென்றால் ஒவ்வொரு நெறியின் விவரங்களுக்கும், இவர் செய்த சாதனைகளுக்கும் முழுக்கவும் ஒத்துப் போகிறதா என்ற ஒப்பீடுகளும் ஏற்படவே செய்யும்.
என்னப்பா... ஸ்ரீராமகிருஷ்ணர் நம் காலத்திற்கு அண்மையில் இருந்தவர். பல வசதிகளும் ஏற்பட்ட நம் காலத்திலேயே பதிந்தவர்களின் மொழியாடல் பிரச்சனை என்று சொல்கிறாயே...
ஐயா. அவர் என்று இல்லை. பொதுவாகவே ஞானிகள், கடவுள் அவதாரங்கள் ஆகியோரின் சொற்களும், வாழ்க்கை நிகழ்ச்சிகளும் பிறரால் புரிந்துகொள்வது கடினம். எத்தனை ஜாக்கிரதையாகப் பதிந்தாலும் இந்தப் பிரச்சனைகள் எழத்தான் செய்யும். எனவேதான் பிற்காலத்தில் படிக்கும் நம் போன்றவர்கள் அல்லது என் போன்றவர்கள் பொருத்தமானவை, சிறந்தவை, ஆக்க பூர்வமானவை என்ற நோக்கில் தேர்ந்தெடுத்துக் கொண்டு செல்கிறோம்.
அப்படிப் பார்த்தால் நீ ஏதோ உனக்குச் சம்மதம் இல்லாத விஷயங்கள் என்று சொல்கிறாயே அவை கூட, பதிந்தவர்களின் காரணமாக ஏற்பட்டவை என்று ஏன் சொல்ல முடியாது?
தாராளமாக. நீங்கள் அவ்வாறு சொல்வீர்கள் என்றால் எனக்கு மறுப்பு எதுவும் கிடையாது. உண்மையில் அவ்வாறு எடுத்துக்கொண்டுதான் பொதுவாக மத விஷயங்களை அணுகுவதே, அது ஸ்ரீராமகிருஷ்ணர் சம்பந்தமாக இருக்கட்டும் அல்லது மற்ற நெறிகள் சம்பந்தமாக இருக்கட்டும்.
*
சர்வமத சமரஸம் என்பதுதான் உன் மதமா? ஸ்ரீராமகிருஷ்ணர் அதைத்தானே சொல்கிறார்? இல்ல.. ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம் என்ன? அவர் என்ன சொல்லவந்தார்?
சர்வமத சமரஸம் என்பது ஒரு மதம் இல்லை சார். ஸ்ரீராமகிருஷ்ணர் மதம் என்று எதையும் ஆரம்பிக்கவில்லை. அவர் தந்தது ஒரு பார்வை மாற்றம். இன்னும் சொல்லப் போனால் ரிஷிகளின் பண்டையத் தெளிவைத்தான் புதிதாகப் பொலிவுபடுத்தினார். அவருடைய உபதேசம் என்பது... என்ன சொல்றது... இப்ப நீங்க உங்க வாழ்க்கையில் சில நினைவுகளைச் சொல்லுங்கள் எனக்கு.
என் வாழ்க்கையின் சில நினைவுகளா?
ஏதாவது மிகவும் தவிப்பு நிறைந்த உக்கிரமான கணங்கள், உங்கள் கையில் எதுவும் இல்லை என்று எல்லாம் கைமீறிப் போய், உங்கள் பரிதவிக்கும் இதயம் தன்னைப் போல் ஏதோ சக்தியை நோக்கி உக்கிரமாகப் பிரார்த்தித்தவாறே தவித்த நேரங்கள்... குழந்தை உடம்பு முடியாமல் கிரிட்டிகல் நிலையில் கிடக்க என்ன ஆகும் என்ற அவஸ்தை, .. ஏதோ.. ஒரு...
ஆம். அப்படிச் சில நினைவுகள் உண்டுதான்.
அதை எதையேனும் மிகத் துல்லியமாக நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அப்பொழுது எல்லாம் உங்கள் இதயம் தன்னைப் போல் ஒரு இயற்கை கடந்த சக்தியை நோக்கிப் பராவியெழும். அதற்கு என்று எந்தக் கோட்பாடுகளும் நியதிகளும் அங்கு நீங்கள் முறைப்படி கற்று, பல தகுதிப்பாடுகள் அடைந்து... கிரமமாக அனுஷ்டானம், நியதம் என்று எதையுமே தோன்றாத நேரம். உங்கள் உலக வாழ்க்கையின் கடும் சூழல்தான். ஆனாலும் உங்கள் உள்ளம் பரிதவிக்கும் அந்த நிலையோ முற்றிலும் லோகாதீதம். அங்கு உங்களைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல எந்த புக் ஆஃப் இன்ஸ்ட்ரக்ஷன்ஸும் கிடையாது. அப்பொழுது இதயத்திற்கென்று ஒரு கண் திறக்கிறது. அதற்கென்று சுயமான நகர்வு, பாய்ச்சல் ஏற்படுகிறது. உங்கள் மொத்த உலக ரீதியான வாழ்க்கையுமே அந்த லோகாதீதத்தை நோக்கி உங்கள் இதயத்தின் எல்லா புத்திசாலித் தனத்தையும் மீறிய சுயம் வியக்தமான வேகம் - இப்படி உணர்ந்திருப்பீர்கள்தானே...
என்னப்பா... அப்படியே சொல்ற... ஆமாம்
நியதிகளைத் தாண்டி, கிரந்தங்களைத் தாண்டி, கோட்பாடுகளைத் தாண்டி, அனுஷ்டான பத்ததிகளைத் தாண்டிக் கடவுளின்பால் இதய பூர்வமாக மண்டியெழும் தவிப்பு என்ற உக்கிர கணத்தை மீட்டெடுத்தவர் ஸ்ரீராமகிருஷ்ணர் தமது வாழ்வால். அதைத்தான் சுவாமி விவேகாநந்தர் ஸ்தாபகாயச தர்மஸ்ச என்று குறிப்பிடுகிறார். நம் ஒவ்வொருவரிலுமே பூரணமான தபஸ் என்பது இருக்கிறது. ஆனால் அது கடவுள் விஷயமாக இல்லை என்பதுதான் வித்யாசம். அந்தத் தாபம் கடவுளை நோக்கித் திரும்புமானால் விடை கிடைக்காமல் போகாது என்பதுதான் ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்வும், வாக்கும் உணர்த்தும் உன்னதச் செய்தி.
*
இதய தாபத்தின் உக்கிரமான கணம்... இந்த ஐடியா நன்றாக இருக்கிறது. ஆனாலும் பார்... அப்படிப்பட்ட உக்கிர கணங்களிலுமே கூட, பொதுவாக உலகக் கவலைகளுக்காக என்றாலும், நாம் நமக்குப் பிடித்த ஒரு கடவுள் வடிவம் அல்லது மூர்த்தம், அதை நோக்கித்தானே குறிப்பாக வேண்டுதல் செய்கிறோம். சர்வமத சமரஸம் சொல்கிற அனைத்து கடவுள் வடிவங்களும் ஒரே பரம்பொருளின் வடிவங்களே என்ற பொதுமைப்பாடு உணர்வு அப்பொழுது இருப்பதில்லையே! ஒரு குறிப்பிட்ட கடவுள் வடிவத்தின்பால் பிரத்யேகமான ஈடுபாடு என்பதுதானே அல்லது பிரார்த்தித்தல் என்பதுதானே நடக்கிறது?
சரியாகச் சொன்னீங்க சார். தன் இஷ்டமானது எங்கு நிலைக்கிறதோ அந்த ப்ரத்யேகமான கடவுள் வடிவத்தின்பால் எழுகின்ற இயல்பான தனிப்பட்ட ஈடுபாடு, உள்ள நெகிழ்ச்சி என்பதுதான் பக்தி என்பதே. சர்வமத சமரஸம் என்ற பார்வை மாற்றம் இந்த அடிப்படை உண்மையைத்தான் கவனப் படுத்துகிறது. இந்த உண்மையைப் புறக்கணிப்பதால் உள்ளம் அந்நியப்பட்டுச் செயற்கைத்தன்மை கூடிப்போகும். அது ஆன்மிக வழியில் இயல்பான வளர்ச்சிக்கு அடிகோலாது என்பதை வலியுறுத்துகிறது. அதேநேரம், புத்திசாலித்தனம் உள்ளே புகுந்து தனக்கு இஷ்டமான வழியே அனைவருக்குமான வழியாக இருக்க வேண்டும் என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ மற்ற ஜீவர்களின் வேறுபட்ட இயல்புகளுக்கு விரோதமாக ஒற்றைவழியாக்கும் அதிகப்ரசங்கித்தனம் செய்வதைக் கவனப்படுத்தி எச்சரிக்கிறது சர்வமத சமரஸம். இந்த எச்சரிக்கை என்பது அதிகப்படியாக நடக்கும் புத்திசாலித்தனம் தன்னைத் திருத்திக் கொண்டு எல்லை மீறாதிருக்கவும் பயன்படுகிறது. அதேநேரம் இந்த புத்திசாலித்தனத்தின் ஜாலத்தினால் மதிமயங்கி மற்ற தற்காப்பு சக்தி குறைந்த ஜீவர்கள் தம் இயல்பிற்குப் புறம்பான முடிவுகளில் சிக்கி முன்னேற்றம் தடைப்பட்டு விடாமலும் இருக்க வழிசெய்கிறது. இப்பொழுது என் விஷயத்தையே எடுத்துக் கொண்டால், நான் என்னை அறியாமலேயே என் ஆன்மிக ரஸானுபவத்தில் எல்லாம் இயல்பாக வைஷ்ணவத் தன்மை கொண்டவனாகவே இருக்கிறேன் என்பதையே போகப் போகத்தான் உணர்ந்தேன். அது நான் எதை அனுபவித்தாலும் சரி, ஆழ்வார்களின் பாசுரங்களை அனுபவித்தாலும் சரி அல்லது ஸ்ரீதாயுமானவரின் பாடல்களை அனுபவித்தாலும் சரி அல்லது தேவார முதலிகளின் பதிகங்களை அனுபவிக்கும் போதும் சரி, திருவாசகம், திருக்கோவையார், சாக்தபரமான சுலோகங்கள், கணபதி வணக்கமான ஸ்தோத்திரங்கள், முருகன் புகழ்மாலை, ஏன் அத்வைத ரீதியிலான செய்யுட்கள், அது மட்டுமன்று, பொதுவாகவே கவிதைகள், ஆங்கிலக் கவிதை, பிறமொழிக் கவிதைகள் என்று வேறுபாடின்றி என் ரஸானுபவம் என்பதன் அடிப்படை இயல்பைப் பார்த்தால் வைஷ்ணவத் தன்மையே நிறைந்து காணப்படுகிறது.
என்னப்பா இது! சர்வமத சமரஸம் என்று சொல்லிக் கொண்டிருந்தாய், திடுதிப்பென வைஷ்ணவம் என்று..
எனக்கு எப்படி என் ரஸானுபவத்தில் அடிப்படையாக வைஷ்ணவத் தன்மை இருக்கிறதோ அதைப் போன்றே இன்னொருவருக்கு அடிப்படையாக சைவத் தன்மை, அல்லது சாக்தத் தன்மை அல்லது மற்ற தன்மை என்பது இருக்கக் கூடும். அவர்கள் ஆழ்வார்களின் பாடல்களிலேயே ஆழ்ந்து தோய்ந்தாலும் கூட அந்த அடிப்படைத் தன்மையின் ரீதியாகவே அவர்களின் ரஸானுபவம் அமைந்திருக்கும். அதற்கு அவர்கள் வெளிப்படையாக வைஷ்ணவர்களாகவோ, சைவர்களாகவோ, சாக்தர்களாகவோ கூட இல்லாமல் இருக்கலாம். உள இயல் ரீதியான இயல்பின் பன்மைகள் அமைவதை இஃது சுட்டுகிறது. அந்த நம்முடைய அடிப்படையான இயல்பை நாம் மதிக்க வேண்டும். என் ரஸானுபவத்தின் அடிப்படையாக வைஷ்ணவத் தன்மை இருக்கிறது என்றால் அதை நான் போற்றி மகிழ வேண்டும். தன் இயல்பை அவமதிப்பதும் கெடுத்துக் கொள்வதும்தான் சர்வமத சமரஸம் என்பது தவறான அபிப்ராயம். தன் இயல்பை ஒருவர் எப்படி மதித்துப் போற்றிக் கொள்கிறாரோ அதைப் போன்றே மற்றவருடைய இயல்பையும் மதிக்கக் கற்றுத் தருகிறது சர்வமத சமரஸம். மதிக்க மட்டுமின்றி, அந்த ரஸானுபவத்தின் பன்மைகளை ரசிக்கவும் ஊக்கப்படுத்துகிறது ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம். ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம் ஒரு வைஷ்ணவரை மேலும் ஆழ்ந்த, உள்ளார்ந்த வைஷ்ணவராக ஆக்குகிறது. ஒரு சைவரை இன்னும் மிக்க சைவராக ஆக்குகிறது. சாக்தரை இன்னும் நெருக்கமான சக்தி பக்தராக ஆக்குகிறது. அது மட்டுமின்றி ஒரு தன்மையாளர்கள் மற்ற ஒரு தன்மையாளரின் ஈடுபாட்டையும் பக்தியையும் ரசிக்கவும் கற்றுக் கொடுக்கிறது தம்முடைய இயல்பு கெடாமலேயே. ஒரே பரம்பொருள் பல வடிவங்களின் மூலமாகவும் பலவகைப் பட்ட இயல்புடைய பக்திகளுக்கு முகம் கொடுக்கும் உன்னதமான விச்வரூப தரிசனத்தைக் காண விரும்புவோருக்குக் காட்டும் பரம திருஷ்டியாகச் செயல்படுகிறது ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்.
*
சர்வமத சமரஸம்.. ஒரு ப்ராட் மைண்டட்னஸ்.. பரந்த மனப்பான்மை என்று சொல்லலாமா...
ஒரு விதத்தில் பார்த்தால் ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம் என்பது மிகவும் கறாரான தன்மை கொண்டது சார். அதாவது நோ காம்ப்ரொமைஸ்.. என்றபடி. வணங்கும் கடவுள் வடிவங்கள், வழிபாட்டு நெறிகள், இவையெல்லாவற்றிலும் தாரதம்மியம் பார்க்காத, ஒரே பரம்பொருளை நோக்கி அழைத்துச் செல்லும் பல மார்க்கங்கள் என்ற விதத்தில் அனைத்தையும் சமமாக ரஸிக்கும் மனோபாவத்தை ஊக்கப்படுத்தும் அவருடைய உபதேசம் ஒரு விஷயத்தில் மிகுந்த கறார்த்தன்மை கொண்டது. அதாவது ஒருவர் உலகியல் நாட்டம் உடையவராக இருக்கலாம். ஆசைகளைப் பற்றி அவருக்கு எந்தக் கூடாது என்ற எண்ணம் எதுவும் இல்லை என்று இருக்கலாம். அத்தகையோரைப் பற்றி அவருடைய உபதேசம் கருதுவது எல்லாம் என்னவெனில் அரிய சந்தர்ப்பம் வாழ்க்கை என்பது. அதனை ஈசுவர லாபம் என்னும் கடவுளை அடைதல் என்பதை நோக்கிய முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தாமல் வீணடிக்கின்றனர் என்ற பச்சாதாப உணர்ச்சி என்பதுதான்.
ஆனால் ஆன்மிக நாட்டம் என்று சொல்லிவிட்டு ஆசைகளை, அவருடைய சுருக்கமான மொழிதலின்படி காமத்தில் பற்று, செல்வத்தில் பற்று என்ற பற்றுகளை ஒருவர் உள்ளத் தூய்மையுடன் துறக்கவேண்டும். அவர் மனம் அப்யாச நிலையில் அலைபாயலாம்; ஊன்றிய நிலைக்கு வருவதற்கு முன் கஷ்டப்படலாம்; அஃது வேறு. ஆனால் ஒரு கையால் போகத்தையும் விடாமல், ஒரு கையால் யோகத்தையும் பயில்கிறேன் என்பது தன்னையும், பிறரையும் ஏமாற்றிக் கொள்ளும் ஒளிவுமறைவுத்தனம். உலகியல் நாட்டத்தை விடாமல் பகவத் சாக்ஷாத்காரம் என்னும் பாதையில் ஒரு நாளும் முன்னேற முடியாது என்பது தயவுதாட்சண்யம் அற்ற, கறாரான கருத்து அவருடைய உபதேசம் கூறும் முதன்முன்னம் முக்கியமான நிபந்தனை.
நிலைத்தது எது, நிலையற்றது எது என்னும் பகுத்து அறியும் விவேகம், நிலையற்ற உலகியல் பொருட்களின் மீதான ஆசையை விடுவது என்னும் வைராக்கியம் - இவற்றில் நிலைபெறும்வரை தொடர்ந்த அப்யாசம் - இவைதான் ஆன்மிக வழியில் ஒருவருக்கு இன்றியமையாது அமைய வேண்டிய தகுதி. இதில் இப்படியிருக்கலாம், அப்படியிருக்கலாம் என்றவிதமான விட்டுக்கொடுக்கும் விளக்கங்களுக்கு இடமே இல்லை. விவேகம், வைராக்கியம் என்பதில் நிலைநின்றவர் தாம் நாடிப் பெற வேண்டியவை தூய பக்தியும், ஞானமும். இதை நீங்கள் எந்த மார்க்கத்தின் மூலமாக சம்பாதித்துக் கொண்டாலும் சரி, அல்லது இதை அடைந்தவர்கள் எந்த மார்க்கத்தைக் கைக்கொண்டாலும் சரி, பரம்பொருள் என்பதையே, பகவத் சாக்ஷாத்காரம் என்பதையே இலட்சியமாக அடைவிக்கும். எல்லாவற்றிற்கும் ஆழ்ந்த அடிப்படையாக இருக்க வேண்டியது தாபம், உள்ளத்தின் ஒரே உருவாகப் பொங்கியெழும் நாட்டம்; ஒரு குழந்தை தன் தாய்க்காக எப்படி ஏங்கி அழுமோ, ஒரு காதலன் அல்லது காதலி தன் காதலுக்காக ஏங்கி நிற்குமோ, ஒரு கஞ்சன் தன்னுடைய பொருளில் எவ்வாறு கண்முன் தெரியாத ஈடுபாடு கொள்வானோ அப்படிப்பட்ட ஈடுபாடு, அந்த ஈடுபாடுகளையெல்லாம் ஒன்றாக்கினால் வரும் தீவிரமான ஈடுபாடு அதுதான் ஆழ்ந்த அடிப்படையாக இருக்க வேண்டும். இதுதான் கடவுளை ஒருவர் தம்பால் ஈர்த்துக்கொள்ளும் மார்க்கமே அன்றி, இவ்வளவு கற்றிருக்கிறோம், இவ்வளவு பிரவசனம் செய்யும் வல்லமையுள்ளோம், இவ்வளவு மேதைமையுடையோம், இவ்வளவு பரந்த கல்விவாய்ந்தோம் என்னும் இவையெல்லாம் அன்று.
யோக நிலையில் காட்சிகள் உண்டாவது பற்றி வியந்து தமக்கும் அந்நிலை ஏதேனும் வாய்க்க வேண்டும் என்று விழைந்த ஒருவருக்கு ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம்: யோகக் காட்சிகள் வெறுமனே ஒருவர் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அடையாளங்களே அன்றி வேறெந்த முக்கியத்துவமும் கொண்டவை அல்ல. ஆனால் அத்தகைய காட்சிகள் வந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி, ஒருவருக்கு மிக முக்கியமானது விவேகம் வைராக்கியம், பக்தி ஞானம் ஆகியவை ஏற்படுவதாகும். அதனையே என்றும் இலட்சியமாகக் கருது. மற்றவற்றில் கருத்தைச் செலுத்தாதே என்பதாகும்.
*
உண்மையில் சர்வமத சமரஸம் என்பது ஹிந்து சமுதாயம் காலம் காலமாகத் தான் ஈடுபட்டு வந்துள்ள பாரமார்த்திக மார்க்கங்களினூடே ஊடும் பாவுமாய்க் கலந்து, உட்கருத்தாய் ஒளிரும் தத்வார்த்த ஒருங்கிணைப்பை ஸிம்ஹாவலோகனமாக, அரிமாநோக்காக, தனக்குத் தானே ஓர்மைப் படுத்திக் கொள்ளும் ஒரு நெடிய தொடர்ந்த சநாதனமான சைதன்ய கார்யம்.
இரு இரு.. சைதன்ய கார்யம் என்றால்?
ஆக்ட் ஆஃப் கான்ஷியஸ்னஸ் அல்லது ஆக்ட் ஆஃப் அண்டர்ஸ்டேண்டிங் என்று புரிந்து கொள்ளுங்கள். ஸ்ரீவைஷ்ணவ ஆசிரியர்கள் பிரபத்தி என்பதையே உண்மையில் சைதன்ய கார்யம் என்கிறார்கள். அதாவது பிரபத்தி என்பதில் செயல் அம்சம், சொல் அம்சம் என்பதையெல்லாம் விட மிக முக்கியமானது உணர்த்தி என்னும் அவேர்னஸ் என்பதில் உண்டாகும் தெளிவு. அந்த உணர்த்தியின் தெளிவே வடிவாயதுதான் அடிப்படையில் பிரபத்தி என்பது. அந்தத் தெளிவு செயலில் வடிவு பெறுங்கால் அஃது கைங்கரியம் என்று பெயர் பெறும்.
நெடிய தொடர்ந்த என்றால் இதற்கு முன்னர் இத்தகைய முயற்சிகள் நடந்தது உண்டா?
ஸ்ரீஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனம் செய்தார் என்று சொல்லப்படுவது என்ன? அவருக்கு முன்னால் வைஷ்ணவமோ, சைவமோ, சாக்தமோ, காணாபத்யமோ, கௌமாரமோ இல்லை என்று அர்த்தமா? ஒரு பரம்பொருளைப் பலவழிகளிலும் மக்கள் தம் இயல்பிற்கேற்ப அணுகப் பயில்வதற்கு வேண்டி ஞானிகள் பல பெயர்களாலும், பல வடிவங்களாலும் பல நெறிகளாக விவரப்படுத்தித் தந்த மார்க்கங்களினூடே ஒருங்குற ஊடு திகழும் பொது தத்வார்த்தத்தை அத்வைத சித்தாந்த அடிப்படையில் விளக்க முயன்ற முயற்சிதானே அது?. ஸ்ரீராமாநுஜரைக் கேட்டால் விசிஷ்டாத்வைத சித்தாந்த அடிப்படையில் பல மார்க்கங்களை ஒருங்குற விளக்க முயன்ற முயற்சிதான் பாஞ்சராத்ரம் என்று கூறுவார். வேத வியாசரின் ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரம் என்னும் வேதாந்த சாத்திரமே நெடுங்காலம் பயிலப்பட்டு வரும் மார்க்கங்கள் எதையுமே கண்டிப்பதற்காக ஏற்பட்ட நூல் அன்று, அனைத்தையும் ஒருங்குற விளக்க வந்த நூலே என்பது ஸ்ரீராமாநுஜர் காட்டும் தாத்பர்யம்.
*
ஆனால் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக சர்வமத சமரஸம் என்பதைச் சொல்கின்றதைப் பார்க்கிறோம் இல்லையா. நீ சொல்றது...
ஆமாம் சார். இன்னும் சொல்லப் போனால் எது எதெல்லாம் ஸ்ரீராமகிருஷ்ணர் உபதேசம் என்பது உணர்த்தவில்லையோ அதெல்லாம் சர்வமத சமரஸம் என்னும் பெயரில் மக்களுடைய சுபாவக் கோளாறுகளாய்க் கூட இருப்பதைப் பார்க்கலாம். அதாவது தாங்கள் இஷ்டப்பட்டு வணங்கும் மூர்த்தியே உயர்ந்த பரம்பொருள், மற்ற எல்லாம் அதற்கு அடங்கியதே என்று சிலர் சர்வமத சமரஸக் கருத்துடையோரே சொல்லும் போது அது பக்தியைக் காட்டுகிறது என்று சொல்வதும், ஆனால் வைணவர்கள் ஸ்ரீமந் நாராயணனே உயர்வற உயர்ந்த பரம்பொருள் என்றால் மட்டும் அது குறுகிய மனப்பான்மை, சர்வமத சமரஸம் என்பதற்கு ஒவ்வாதது என்று பரவலாக அபிப்ராயம் ஏற்படுத்துவதும் மக்களிடம் அங்கங்கே சிலரிடம் காணும் எண்ணப் பழக்கமே அன்றி அஃது ஸ்ரீராமகிருஷ்ண உபதேசம் ஆகாது. அதேபோல், சிலரிடம் பார்க்கலாம், சர்வமத சமரஸம் என்ற பெயரில், ஏதாவது ஒரு பக்தி நூலை எடுத்துக் கொண்டால், உடனே அதை நன்கு ஆழ்ந்து ஈடுபட்டு ரசிப்பதோ விளக்குவதோ செய்யாமல் உடனே பல நெறிகளின் பக்தி நூல்களிலும் வரும் ஒப்புமைப் பகுதிகளாக ஒரு பெரும் பட்டியல் இடாமல் திருப்தி ஏற்படாது. அதாவது தாம் எந்த ஒரு நெறிக்கும் முற்றிலும் சார்பு மனநிலை கொண்டவர் அன்று என்பதை யாருக்கோ அவர்கள் நிரூபிக்க முயல்வதைக் காணலாம். அதாவது தாம் எந்த நெறியின் அடையாளத்திலும் ஒதுக்கப்பட்டு விடக் கூடாது என்ற கவனமோ ஜாக்கிரதையோ ஒரு நாளும் ஸ்ரீராமகிருஷ்ணர் உபதேசம் கருதாதது.
அது நீ என்ன சொன்னாலும்ப்பா, வழிவழியாக வரும் ஒரு நெடிய சம்ப்ரதாயம் என்பதில் இருக்கும் தெளிவு, குழப்பமின்மை அது தனிதான். இன்னதுதான் சித்தாந்தம், அதற்குத்தக இன்னதுதான் அனுஷ்டானம், இதுதான் அடைய வேண்டிய பெரும் பேறு, இதற்கெல்லாம் ஆதாரமாக பண்டைய காலம் தொட்டுப் பெரும் ஆசிரியர்கள் அருளிய நூல்களும் வழிமுறைகளும். இது எவ்வளவு க்ளியராக இருக்கிறது! இல்ல. என்ன சொல்வாய்...
இல்லை நான் அவ்வாறு சொல்லவில்லை....
இல்ல நீயோ இல்லன்னா வேறு யாருமேனும்... என்ன சொல்ல வருகிறேன் என்றால்... இப்ப இஸ்கான் என்பதை எடுத்துக் கொள். அவர்கள் முழு கிருஷ்ண பக்தி என்பதையே சொல்லித்தான் உலகம் எங்கணும் இவ்வளவு பரவி, பார்... எத்தனை நாடுகளில் படித்த இளைஞர்களை எவ்வளவு ஈர்த்திருக்கிறது அந்த இயக்கம்! வெறுமனே நூல்களையும், கருத்துகளையும் மட்டும் படித்துவிட்டு ஓ வெரி நைஸ் என்று ரசிப்பதோடு நில்லாமல், நடை உடை பாவனை தோற்றம் வாழ்முறை என்று அனைத்தும் அடியோடு மாறி,... ஆச்சு,.. அடுத்தடுத்து தலைமுறைகளுக்கும் தொடர்கிற ஓர் இயக்கமாகப் பார்க்கிறோமே.
ஆம் நீங்கள் சொல்வது சரிதான். இஸ்கான் பெருமளவில் உலக மக்களை ஈர்த்துத் தன்பால் அணைத்துக் கொள்வதைப் பார்க்கிறோம்.
ஆங் அதைத்தான் சொல்றேன். என்ன காரணம்? அந்த ஒருவருடைய கிருஷ்ண சரணாகதியான திட நம்பிக்கை. அவ்வளவு வயதில் துணிந்து அமெரிக்கா சென்று ஒன்றுமற்ற நிலயிலிருந்து ஆரம்பித்து... எல்லாவற்றிற்கும் அடிப்படை ... தாம் ஈடுபட்ட நெறியில் வெறும் அறிவு ஆர்வம் என்று நின்றுவிடாமல் அதைத் தம் வாழ்விலும், நடையிலும், உடையிலும், தோற்றத்திலும் கடைப்பிடித்த அனுஷ்டானம். அது எவ்வளாவு முக்கியம்! அப்படி இருப்பதுதான் மக்களை அவர்பால் ஈர்க்கிறது இல்லையா..
ஆம் ஐயா. சொல்லும் செயலும் கருத்தும் ஒன்று போல அமையும் போது மக்கள் தாமாகவே அதன் மரியாதையை உணர்கின்றனர். இஸ்கான்... அது மட்டுமில்லை, உலகில் பல தேர்ந்தெடுத்த ஒன்று சேர்ந்து வாழ்முறை என்பது போல் மாற்றான புதிய வாழ்வியலையே மக்களிடம் அனுபவத்தில் கொண்டு வந்து கொடுத்திருக்கிறது.
இல்ல நான் ஸ்ரீராமகிருஷ்ணர் உபதேசத்தைக் குறைவாகச் சொல்லவில்லை. அதாவது வழிவழியான நெறிகள் என்பவை....
இல்லை ஐயா. ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம் என்பது எந்த நெறியிலும் யாரும் ஆழ்ந்து பயில்வதற்கு எதிர்ப்பானது அன்று. இன்னும் சொல்லப் போனால் அவரவர்க்கு ஈடுபாடு உள்ள மார்க்கத்தில் ஆழ்ந்து ஈடுபடவே சொல்கிறது ஸ்ரீராமகிருஷ்ண உபதேசம். ஆனால் எந்த நெறியிலும் உள்ள ஈடுபாடானது அவ்வாறு ஈடுபாடு கொண்டோரின் பல நெறிகளும் புழங்கும் உலகில் எப்படிச் சிறந்த முறையில் அமைய இயலும் என்பதைக் கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு நெறியைச் சார்ந்தோருக்கான புழங்குவெளி மற்றவர்களின் புழங்குவெளியைப் பிணக்கங்களால் அடையாளப்படுத்தல் என்பது இன்றி இணக்கங்களால் எப்படி அடையாளம் காண்பது என்னும் ஸமஷ்டி த்ருஷ்டியைச் சொல்ல வருவது அவருடைய உபதேசம்.
*
வளரும் தலைமுறைகள் இன்று எவ்வளவோ அறிவுத் துறைகளில் நுண்ணறிவு பெற்று, உலகைப் பற்றிய விசாரமும், உட்கருத்துகள் குறித்த தேட்டமும் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய நவீன உலகு சார்ந்த அறிவும், அனுபவமும் மீண்டும் சம்ப்ரதாயங்களில் உள்ளீடாக ஆகுமேயானால் அது சம்ப்ரதாயங்களுக்கும் புத்துணர்வை ஏற்படுத்தாதா என்ற எண்ணம் எனக்கு இருக்கிறதப்பா. அதனால்தான் உன்னை மாதிரி ஆட்கள் சம்ப்ரதாயபரமாகவே இயங்கினால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று கேட்டேன்.
உங்கள் ஆசை புரிகிறது சார். ஆனால் சில தெளிவுகளை நீங்கள் ஓர்மையில் கொண்டிருக்கிறீர்களா என்பது எனக்குத் தெரியவில்லை. சம்ப்ரதாயம் என்பதே வழிவழியாக ’நன்கு வழங்கப்பட்டும், பெறப்பட்டும் வந்து சேர்ந்தது’ என்னும் பொருளதாகும். ஸ்ரீஸ்ரீமணவாளமாமுனிகள் இந்த சம்ப்ரதாயம் என்ற சொல்லுக்கு நேர் தமிழ்ச் சொல்லாக ‘வரவு +ஆறு’ வரவாறு என்ற சொல்லைப் பயன்படுத்திக் காட்டுகிறார். எனவே சம்ப்ரதாயத்தை நன்கு புரிந்து கொள்ளுதல் என்பது மட்டும்தான் எதிர்பார்க்கப் படுகிறதே அன்றி புதிய அறிவுகளின் உள்ளீடுகள் அகப்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறதா தெரியவில்லை. அப்படியே சில சம்ப்ரதாயங்கள், இங்கு மட்டுமின்றி உலக அளவிலும் பார்த்தாலும் கூட, புதிய உள்ளீடுகளை வரவு ஏற்கும் பான்மை கொண்டதாய் இருந்தாலும், அதனால் ஏற்படும் மாற்றம், வளர்ச்சி, புதிய திறப்பு ஆகியனவற்றைச் சகித்துக் கொள்ளும் தன்மை சம்ப்ரதாயங்களுக்கு இருக்குமா என்பது ஒரு கேள்வி. அப்படிச் சகிப்புத்தன்மை இருக்கும் பட்சத்திலும், மாற்றமும், புதிய திறப்பும் ஆக்க பூர்வமானதுதான் என்பதை அறுதியிடுவதற்கு எந்த விதமான வாத நிர்ணய அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் என்பதெல்லாம் கூடுதல் சுமையாகத்தான் கருதப்படும். எதிர்காலத்தை நோக்கிய வளர்ச்சி என்பதில் இந்த அம்சங்கள் எல்லாம் ஏதோவிதத்தில் அமையவே செய்யும் தவிர்க்க முடியாத விதத்தில் என்றாலும், தெரிந்தே நிர்ணய ரூபமாக இந்த அப்யாசத்தை எந்த சம்ப்ரதாயமும் மேற்கொள்ளுமா என்பதும் ஐயமே. அனைத்திற்கும் மேல் இந்த விதமாக நடைபெற்றாலும் என்ன முடிவை நோக்கிப் பயணிக்கப் போகிறது. ஏதோ ஒரு விதத்தில் வழிவழியாக வரும் வரவாறு ஒன்று மிகச்சரியானதே என்று நிரூபித்துக் காட்டும் இலட்சியத்தை நோக்கிப் பயணிக்கும் முயற்சியாகத்தான் இருக்கும். அதற்குத் தங்கள் வாழ்க்கையையும், அறிவையும், முயற்சி, முன்னேற்றம் ஆகியவற்றை முதலீடு செய்ய வளரும் தலைமுறைகள் மனம் ஒருப்படுமா என்பதும் கேள்வியே. சம்ரதாயத்தில் பிடிப்பு மிக்க நிலை, சம்ப்ரதாயங்களையே கண்டு அறவே வெறுத்து ஒதுக்கும் நிலை, சம்ப்ரதாயங்களில் இருந்துகொண்டே புதிய வடிவங்களை ஏற்படுத்த விழையும் நிலை, சம்ப்ரதாயங்களில் எந்த மாற்றமும் கூடாது என்ற பற்றுநிலை என்று பலவிதமான நிலைப்பாடுகள் மக்கள் எடுக்கக் கூடும். என்னுடைய நிலைப்பாடு என்பது இது எதுவும் இல்லை. மனிதர். மனித வாழ்வு, உலகில் மனித வாழ்வில் கால வரவில் மனிதர் அடையும் எந்த அறிவுகளும், பாடங்களும், பிரச்சனைகளைத் தீர்க்க கையாண்ட உத்திகளும், எந்தத் துறையிலும் இருந்தாலும் அனைத்தையும் பின்வரும் தலைமுறைகள் ஓர்மை கொண்டு வளர்த்துக் கொண்டு போவது என்னும் இயல்பான எண்ணமே எனக்குப் பிடித்த நிலையாக இருக்கிறது. இதில் எதன்பாலும் வெறுப்பு என்பது இல்லையானாலும், காலத்திற்குக் காலம் சூழ்நிலை, எதிர்காலம், நடப்பில் உணர்த்தப்படும் நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் சீர்தூக்கி நிதானம் கொள்ளும் மனத்தின் இயக்கம் மனிதரிடையே பண்பாடாகவே அமைய வேண்டும் என்ற கருத்தும் உண்டு. அதனால்தான் எனக்கு சுவாமி விவேகாநந்தரின் பொன்மொழியான - ‘நல்லவராக இருப்பது; நல்லதையே செய்வது. இதுதான் மதம் என்பதன் மொத்த சாராம்சமும் ஆகும்’ - என்பது மிகவும் பயனுள்ள எப்பொழுதும் உதவும் கருத்தாக இருக்கிறது. எத்தனை அலைபாய்ச்சல்கள் வந்தாலும் ஸ்திரமாகப் போய்க்கொண்டிருக்க உதவும் கருத்து என்று இதைக் கருதுவேன்.
*
நீ சொல்வது ஒரு ஐடியலிஸம், இலட்சியவாதம் என்னும் விதத்தில் சரியாக இருக்கலாம். ஆனால் நடைமுறைக் கணக்கில் பார்த்தால் சுய அடையாளம் என்பது பொதுமையில் நம்மைக் கரைத்துக் கொள்வது என்பதை விட மேலும் மேலும் நம்மைச் சிறப்புற நெருக்கமான வரையறையில் அடையாளப்படுத்திக் கொள்வதில்தான் சென்று முடிகிறது. நாம் முனையாது போனாலும் மற்ற சிலபேர் அவ்வாறு தம்தம் அடையாளத்தைச் சிறப்புற முன்னிறுத்தும் போது நாமும் செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் வந்துவிடுகிறது. இப்பொழுது நீயே சொன்னாய், சர்வமத சமரஸம் என்னும் பெயரில் சிலர் தாம் ஈடுபாடு கொண்ட கடவுளே மிக உயர்ந்தவர் என்று சொல்வதை இயல்பான பக்தியாகவும், அதே நேரத்தில், வைணவர்கள் ஸ்ரீமந்நாராயணனே உயர்வற உயர்ந்தவர் என்று பேசினால் அதைக் குறுகிய பார்வை, பரந்த மனப்பான்மையின்மை என்றெல்லாம் அபிப்ராயப் பூச்சு செய்வது என்பது ஸ்ரீராமகிருஷ்ண உபதேசம் காட்டும் வழியன்று என்று சொன்னாய். நீயோ ஸ்ரீராமகிருஷ்ண உபதேசம் என்ற ஈடுபாடு கொண்ட நபர். அப்படி இருக்கும் பொழுது வைணவத்தைக் குறித்துச் சிலருடைய சொல், செயல்பாடுகள் பொருந்தாமல் இருக்கிறது என்பதை ஏன் ப்ரத்யேகமாகக் கவனம் கொண்டு சொல்கிறாய்? உனக்கு உள்ளில் வைணவத்தில் ஈடுபாடு தோய்ந்திருப்பதால் ஏதோ ஒரு விதத்தில் சொல்லாடல்களில் உன்னுடைய வைணவ அடையாளம் போதிய நியாயத்துடன் அணுகப்படவில்லை என்று உணர நேர்ந்ததன் விளைவுதானே அப்படி உன்னைக் கருத வைக்கிறது.?
ஓ நீங்கள் அப்படிச் சொல்கிறீர்களா... அதிலும் ஒரு கருத்து இருக்கிறது போல்தான் தெரிகிறது. ஆனாலும்.. ஒரு விஷயம். ஒன்றில் நமக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால்தான், அது சம்பந்தமாக மட்டுமே நியாய அநியாயங்களைக் கவனத்தில் கொள்வோம் என்பது சரியில்லையே. நமக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத விஷயங்களிலேயே கூடப் பொதுவெளியில் இன்னது நியாயம், இன்னது அநியாயம் என்ற அபிப்ராயம் நமக்குத் தொடர்ந்து எழுந்தவண்ணம்தானே உள்ளது. அப்பொழுது எதுஎதனுடைய நியாயத்தைக் கவனிக்கிறோமோ அதுஅதற்கெல்லாம் நாம் ஏதோ ஒரு விதத்தில் ஆழ்ந்து ஈடுபாடு கொண்டவர்கள் என்று முடிவுக்கு வருவது பொருந்தாதே. நீங்கள் சொன்னதில் வைணவத்தில் ஈடுபாடு என்பது என் விஷயத்தில் உண்மை, வைணவத்தில் மட்டும்தான் ஈடுபாடு என்பது உண்மையில்லையானாலும் கூட. ஆனால் அதன் காரணமாகத்தான் எனக்கு வைணவம் சம்பந்தமான பிரச்சனைகள் ஓர்மைக்கு வருகிறது என்பது பொருந்தாத ஒன்று. ஸ்ரீமாதவ சிவஞான யோகிகளின் மாபாடியத்தில் உள்ள சில கருத்துகளுக்காக நெடும் பொழுதுகளை நான் பல்வேறு ஆகம நூல்களில் தேடிச் செலவழித்தது உண்டு. சாக்தம், இன்னும் பல நெறிகள், ஏன் கிழக்கு ஐரோப்பாவில் இருக்கும் ஒரு பாகனிய வழிபாட்டுக் கூறுபாடுகள் எங்கிருந்து வந்திருக்கும் என்று செலவழித்த பொழுதுகள் நெடுங்கணக்கு. எதற்குச் சொல்கிறேன் என்றால் நம் ஓர்மைகள் ஈடுபாட்டால் மட்டுமே வருகிறது என்பது பொருந்தவில்லை.
இல்லை. நான் சொன்னதன் நோக்கம் ஈடுபாடுதான் காரணமாக அமைகிறது என்பதன்று. என்னவெனில் பொதுவெளியில் சமரஸம் என்ற பார்வையில், யாரோ என்னவோ சொல்கிறார்கள் என்று போக முடியவில்லை, ஒன்றிற்கான உரிய பொது அணுகுமுறையில் ஓரம்சாரும் போக்கு தென்படும் போது சொல்லாடல்களில் நியாயம் மறுக்கப்படும் ஒன்றிற்கான சிறப்பை முன்னிறுத்த வேண்டிய கட்டாயம் எழத்தானே செய்கிறது?
ஆமாம் ஐயா. அதன் விளைவாக அப்படித்தான் ஆகிறது.
ஹாங்.. அதற்குத்தான் சொல்கிறேன். பேசாமல் தனிப்பட்ட சம்ப்ரதாயத்தில் அவரவர் ஊன்றி நின்றாலே போதுமே, மற்றவர்களின் நியாயங்களில் குறுக்கிடுவதோ, கோணல்களோ செய்யாமல்?
நான் எனக்குச் சொல்லவில்லை. உன்விஷயமாகச் சொல்கிறேன். ... ஏனெனில்..
என் விஷயம் என்பது... ஹிந்துமதத்தின் - ‘பல்வழிகளும் சம்மதமான ஒரே பாரமார்த்திக நிஷ்டை’ - என்னும் தன்மையான விசேஷம்தான் என்னை மிகவும் ஈர்க்கின்ற விஷயம் சார். ’வழிகளில் பன்மை, இலட்சியத்தில் ஒருமை’ என்பது எனக்கு இயல்பானதாகப் படுகிறது. மேலும் உலகம் என்ற பன்மைகள் செறிந்த பரப்பை புரிந்துகொள்ளும் முயற்சியில் உலகத்தின் உட்பொருளாய் விளங்கும் பாரமார்த்திக நிலை என்பதைத் தியானம் கொள்ள எனக்கு ஒரு வடிவம் மட்டும் என்பது இயல்பாகப் படவில்லை. ஒரு சமயம் சிவபரமாக, ஒரு சமயம் சக்திபரமாக, ஒரு சமயம் வைணவமாக என்று பல விதங்களிலும் அந்த ஒரே பரம்பொருளை ஓர்மை கொள்வது என்பது எனக்குப் பிடித்த மன இயக்கமாக இருக்கிறது. .... என்ன சொல்வீர்கள்... ஒரு வேளை... உன்னை எல்லாரும் கைவிட்டு விடுவார்கள். நீ ஏன் அவரிடம் ஈடுபட்டாய் என்று இவரும், இவரிடம் ஏன் ஈடுபட்டாய் என்று அவரும், இவர்களில் ஈடுபட்டாயா என்று உவரும்...
ஆனால் சம்ப்ரதாயங்களில் ஆசிரியர்கள் அத்தகைய மனப்பான்மையை ஆதரிக்கவில்லையே. மறந்தும் புறம் தொழாத பக்தி அன்றோ சிறப்பு!
அதனால்தான் சார் எனக்கு இயல்பாக ஸ்ரீராமகிருஷ்ணர் மீது ஈடுபாடும், அவரது உபதேசங்களில் மிக்க கவனமும் ஏற்படுகிறது என்று சொன்னேன். அவருடைய உபதேசங்கள் என்னும் விளக்கத்தில் எனக்கு வேத வேதாந்தங்களின் உட்பொருளும், பலவழிகளின் சிறப்புகளும், பாரமார்த்திக நிலைக்கு எது மிகவும் இன்றியமையாதது என்பதன் ஓர்மையும், அறிவுக்கான இடம் என்ன, நம்பிக்கைக்கான இடம் என்ன என்ற தெளிவும், மனித வாழ்க்கை ஆன்மிக ஜீவிதமாக அமைய வேண்டிய கட்டாயமும் ஒருங்கே புரியவருவது அவருடைய உபதேசத்தில். எனவேதான் சொன்னேன் அவரிடம் ஈடுபடுவதால் எனக்கு எந்நிலை ஏற்படினும் அது எனக்குப் போதும். திருப்தியுள்ளவனாக இருக்கிறேன். இந்தக் கதவு எனக்குத் திறக்குமோ, அந்தக் கதவு எனக்கு மூடுமோ என்ற அலைச்சல் எனக்கு இல்லை.
*
தனிப்பட்ட அளவில் நீ உனக்கு முடிவு செய்துகொள்வது என்பது வேறு. அது உன்னளவோடு நின்றுவிடுகிறது. ஆனால் ஹிந்து சமுதாயம் என்பது ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றம் என்ற அளவில் வளர்ச்சியடைவது எப்படி என்று யோசிக்க வேண்டாமா? ஒவ்வொரு சம்ப்ரதாயமும் தன்னைச் சார்ந்த சமுதாயத்தினரைத் தெளிவுபடுத்திக் கட்டுக்கோப்பாக ஆக்க முடியுமெனில் பல சம்ப்ரதாயங்கள், அவற்றைச் சார்ந்த சமுதாயங்கள் ஆகியவை உள்வலிவு பெற்று ஒட்டு மொத்த சமுதாயத் தெளிவும் வளர்ச்சியும் உண்டாகாதா? அதற்கு அடிப்படையாகத்தான் அந்தந்த சம்ப்ரதாயத்தவர்கள் தாம் பெற்ற வளர்ச்சியையும், கருத்துத் தெளிவையும் அந்தந்த சம்ப்ரதாயத்தினரிடையே உள்ளீடாய் ஆக்கினால் மேலும் மேலும் சிறக்குமே என்று நினைத்தேன். ஆனால் நீ கேட்ட கேள்வி - சம்ப்ரதாயங்கள் அத்தகைய உள்ளீட்டையும், அதன் விளைவாக ஏற்படும் பார்வையின் பன்மைப்பாட்டையும் சகிக்குமா? சம்மதிக்குமா? செரிக்குமா? என்ற கேள்வியும் உண்மைதான்.
ஐயா! ஹிந்து சமுதாயம் மேன்மையுற வேண்டும், வளர்ச்சி பெற வேண்டும் என்ற தங்கள் அக்கறைக்குத் தலைவணங்குகிறேன். ஆனால் தங்களுடைய மனப்பான்மையில் ஒரு விஷயத்தை கவனிக்கிறேன். அதாவது கருத்து நிலைகள் என்று பார்த்தால் வழிவழியான சம்ப்ரதாயங்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாமல், புதிய அறிவுகளாலும், புதிய தெளிவுகளாலும் அவை மேலும் மேலும் பொலிவு ஊட்டப் பெற்று, மக்களுக்கும் தீதான வழக்கங்களின் அம்சங்களைக் கைவிட்டு, அவரவர்கள் தம்தம் சம்ப்ரதாயத்தினராகச் சீர்மையுற்று மொத்தத்தில் சமுதாய மேம்பாடும் வந்துற வேண்டும் என்ற கருத்து உங்களுக்கு இருப்பது போல் படுகிறது. நான் இதைப் பற்றி விமரிசனம் என்ற ரீதியில் கருத்து சொல்ல முடியுமா தெரியவில்லை. ஏனெனில் என்னளவில் எனக்குப் பெரும் சமுதாயப் பிரச்சனைகளில் போதிய பரிச்சயமும், தேர்ச்சியும் கிடையாது. ஆனால் சோசிஷியாலஜி படித்தவன் என்ற முறையில் சில ஓர்மைகள் எனக்கு உண்டு. அது அனுபவத்தின் அறுதிப்படாய் வரும் முடிவுகள் (அபோஸ்டீரியோரிக்) என்ற விதத்தில் அல்லாமல், பிரச்சனைக்களுக்கே அடிப்படையான முதன்முன்னம் கருத்துத் தெளிவுகள் (அப்ரையோரிக்) என்ற விதத்தில்தான் இருக்கும். எனவேதான் நான் ஏதாவாது சொன்னால் ‘புரட்சி பேசுகிறான்’ என்று கோபப்படாமல் மாற்றி யோசித்துப் பார்க்க ஒரு வாய்ப்பாகப் பயன்படும் என்றால் சொல்லுகிறேன்.
இதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கிறதப்பா. எல்லோருக்குமே ஹிந்து சமுதாயம் வளர்ச்சியும் மேன்மையும் உறவேண்டும் என்ற அக்கறையில்தானே பேசுகிறோம்.
சமுதாய இயல் என்பதற்கு அடிப்படையே மனிதர் தமக்குள் என்ன நினைக்கின்றனர் எப்படி இயங்குகின்றனர் என்பதன்றி, சமுதாயமாக இருக்கும் நிலையில் எப்படி இயங்குகின்றனர் என்பதை கவனம் கொள்வதுதான். மனிதர் சமுதாயப் பிராணி என்பது ஒரு பக்கம் என்றால் சமுதாயமே ஒரு பிராணியின் இயக்கத்தோடு ஒப்பிடலாம் அளவிற்குத் தனக்கென்று தன்மைகளையும், இயங்கு நெறிகளையும் கொண்டிருக்கிறது என்ற அடிப்படையில் சமுதாய இயல் படிக்கிறது. என் கருத்துகள் எனவே அந்த இயல் சார்ந்தே அமைந்திருக்கும். பொதுவாகச் சொல்லுமிடத்து எந்த இயல்பான வளர்ச்சிக்கும் செயற்கையான தடைகள் இல்லாமல் ஊக்கப்படுத்தும் சுதந்திரமான சூழ்நிலைகள் அமையப் பெறுவது மிகவும் இன்றியமையாதது. அந்த விதத்தில்தான் பிறவி சார்ந்தோ, வழிவழி அந்தஸ்துகள் சார்ந்தோ அல்லது வழிவழியான நெறுகிய கட்டங்கள் (ஸ்லாட்ஸ்) சார்ந்தோ சமுதாய வாழ்க்கையை அணுகக் கூடாது. அதேபோல் சமுதாய வாழ்க்கையில் ஆண்பெண் ஏற்றத்தாழ்வு பொருந்தாதது என்பதும் சொல்லத் தேவையில்லை. இதில் ஏற்படும் தெளிவே கூட அனைத்து சம்ப்ரதாயங்களின் சமுதாயப் பார்வையிலும் பெரும் மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடும் அவை தம்மளவில் இத்தகைய கருத்து மாற்றங்களை ஏற்கக் கூடுமானால். இந்த அடிப்படை அமையாமல் எப்படிச் சமுதாய முன்னேற்றம், வளர்ச்சி ஏற்படும் என்பது எனக்குப் புரியவில்லை. இப்பொழுது ஏற்பட்டிருக்கும் முன்னேற்றமே இந்த அடிப்படை ஒரு விதத்தில் அமையப் பெற்று வருகிறது என்பதால்தான். கருத்துத் தெளிவு என்ற ரீதியில் இந்த அடிப்படையை முன்னெடுத்துச் செல்லவில்லை என்றாலும், தெளிவற்ற ஊக்கங்களாலும் திசையற்ற உற்சாகங்களாலும் இந்த அடிப்படையைத் தொலைத்துவிடாமல் இருந்தாலே போதும் தன்னைப் போல் கால முன்னேற்றத்தில் சமுதாயமே நன்கு முன்னேறும் என்றுதான் தோன்றுகிறது.
*
சோஷியாலஜி என்ற அடிப்படையில் பார்க்கிறாய் என்று சொன்னாய். அதெல்லாம் மேற்கத்திய அணுகுமுறைகள் இல்லையா... ஆங்கிலம் என்று வந்த பின்பு ஆங்கிலத்தில் தரப்படும் எல்லா விஷயங்களும் தன்னைப் போல் சான்றுடையதாக ஆகிவிடுமா? எனக்கென்னமோ இங்கிலீஷ் படிப்பு வந்த பிறகுதான் நம் சம்ப்ரதாயத்து மக்களுக்கே தங்கள் பாரம்பரியத்தையும், சாத்திரங்களையுமே அந்நியப்படுத்தி விமரிசித்துப் பார்க்கும் போக்கு ஏற்பட்டு விட்டது என்று தோன்றுகிறது.
அப்படீங்களா சார்?..
என்ன பதில் ஒன்றும் காணோம்... இல்லை படிப்பு தேவைதான். ஆனால்... நமது பாரம்பரியம் என்பது...
நோ கமெண்ட்ஸ் சார்.
என்னது! இல்லப்பா நான் ஒன்றும் குத்தமா சொல்லலை... எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால்...
நீங்க முதலிலேயே இந்தக் கருத்தைக் கூறியிருந்தால் என் வேலை சுலபமாக ஆகியிருக்கும். நேரமும் சேமிப்பு ஆகியிருக்கும்.
ஏன் நான் சொன்னதில் என்ன தப்பு...
ஒன்றும் பிரச்சனை இல்லை சார். யூ கேரி ஆன். இந்த விஷயங்களை விவாதித்து என் மனத்தையும், நேரத்தையும் நான் வீணடிப்பதில்லை.
இது வந்து.. சும்மா எஸ்கேப் பண்ணுகிற வழி.... கருத்து என்றால் அனைத்தையும்தான் பார்க்கணும்....
.... ஓ ..
பதில் சொல்ல முடியவில்லையென்றால் உடனே நோ விவாதம் என்றால் என்ன செய்வது...
நோ கமெண்ட்ஸ். நீங்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவ்வளவே.
உன் கருத்து என்னன்னு சொல்லுப்பா... யூ ஸீ...
இல்லை. இதுல என்ன தப்பு இருக்கு... எனக்கு ஒன்றும்...
ஒன்றும் பிரச்சனை இல்லை சார். நீங்களே யோசித்துப் பாருங்கள். ஓகே என்றால் நீங்களே தொடர்ந்து அந்த அபிப்ராயங்களைக் கைக்கொள்ளுங்கள். நான் இதில் தலையிடவே முடியாது சார். ஆனால் இந்தக் கருத்துகளோடு லவலேசமும் சம்பந்தம் கொள்ள நான் விரும்புவதில்லை. அதில் தெளிவாக இருக்கிறேன்.
*
அப்பொழுது என்னதான் கருத்து ரீதியாகப் பேசினாலும் உனக்கும் சில அபிப்ராயங்கள் பிடிக்கும் பிடிக்காது என்ற சார்புகள் இருக்கு என்றுதானே ஆகிறது? ஒரு சார்பும் கிடையாது, எதை வேண்டுமானாலும் பேச எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லமுடியவில்லையே உன்னால்? அப்படியென்றால் ஒரு மதம் சார்ந்து, ஒரு சம்ப்ரதாயம் சார்ந்து, இன்னதுதான், இதற்கு மேல் ஆராயத் தேவையில்லை என்று நிலைப்பாடு எடுப்போரை எப்படி நீ குறை காண முடியும்?
இதை நீங்கள் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன் சார். இதையே கொஞ்சம் வேறுவிதமாகவும் சொல்வார்கள். அதையும் கேட்டிருக்கிறேன். என்னவெனில் தம் மதமே சரி, தாம் வணங்கும் கடவுளே சரி என்று சொல்வோர் மற்ற அனைத்தையும் விலக்கி ஒரு வழியே சரி என்பதில் அதீதப் பற்று கொண்டவர்கள் என்றால், அனைத்து வழிகளும் ஒரே பரம்பொருளை நோக்கிச் செல்லும் வழிகள் என்ற கருத்தே சரியான கருத்து என்ற எண்ணம் உடையோரும் தாம் கருதியதே சரி மற்ற கருத்தெல்லாம் தவறு என்ற எண்ணம் கொண்டு, தம் கருத்தின் மீது பற்றாளர்கள் தாமே என்று ஒரு எதிர்வாதம் சொல்வார்கள். இதை எப்படிச் சொன்னாலும் அடிப்படை ஒன்றுதான். ஒரு பக்கத்தில், வழிவழியான அருள்நூல் ஒன்றைச் சார்ந்து அந்நூல் சொல்வதெல்லாம் சரி, வழிவழியாக அதைச் சார்ந்து ஆசிரியர்கள் சொன்னதெல்லாம் சரி, சரியாக இல்லையென்றால் நாம் தவறாகப் புரிந்துகொண்டு விட்டோம் என்று அர்த்தம், அது தவறு என்பது இல்லை - இது ஒரு வாதம். இல்லையெனில் வாழ்க்கை, மனிதரின் மாண்பு, அறிவுக்குகந்த செயல்கள், யாருக்கும் தீது பயக்காத வளர்ச்சிகள், இந்த மனிதருக்கான பொது அடிப்படையான அறிவு ரீதியான புரிதலில் எதையும் காலத்திற்குக் காலம் கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளி, வளர்க்கத் தக்கனவற்றை வளர்த்துக் கொண்டு செல்லுதல் - இது ஒரு வாதம். இரண்டாவதையே நான் விரும்புகிறேன். ஏனெனில் அதன் அடிப்படைப் பொதுவான மனித நன்மை, அறிவுக்குகந்த அபிப்ராயங்கள், செயல்கள் என்பது. இதில் நீங்கள் கூற வருவது எப்படியென்றால் ‘நீயும் எதையோ விரும்பத்தானே செய்கிறாய்? உன் விருப்பம் என்பது இருக்கும்வரையில் அதுவும் ஒரு சார்பு வழிதானே?’ - என்று கேட்கிறீர்கள். நிச்சயம் சார்பு உடையதுதான். ஆனால் சார்புக்கான ஆதாரம் எது என்றால் பொதுவான மனித நன்மை, அறிவுக்குகந்த வழிகளும் செயல்களும், தவறு என்று அறிவுக்குத் தெரியும் போது திருத்திக் கொண்டு முன்னேறி வளர்வதும் என்பது ஆகும். பழைய நூல்கள், பழைய கருத்துகள் என்றால் அலட்சியத்தோடு அணுகாமல் அதில் நமது மனித வாழ்வுக்கும், அறிவுக்கும், இன்றைய வாழ்க்கைக்கும் உகந்த நன்மைகளை இழக்காமல் பயன்கொண்டு, நன்மை அம்சங்களை மேலும் வளர்த்துக்கொண்டு போவது என்பது எனக்குப் பிடித்த செயல்பாடு ஆகும். உங்களுடைய வாதம் என்னவென்றால், நான் புரிந்துகொண்ட வரையில், ‘பழைய வழிவழியான சம்ப்ரதாயங்களும், ஆசிரியர்களும் சொன்னது நன்மைக்குத்தானே இருக்க முடியும்! தீதுக்கு யாரேனும் வழி சொல்வார்களா? அதுவும் அத்துணை முழுமையான மெய்யறிவு வாய்க்கப் பெற்றவர்கள் சொன்னது எதுவும் பொய்யாய் இருக்க முடியுமா? நாம்தான் இன்றைக்கு அடைகின்ற புதிய அறிவுகளைக் கொண்டு அந்த ஆசிரியர்கள் சொன்ன வழிவழியான சம்ப்ரதாயங்களை இன்றைக்கு உகந்த வழியில் விளக்கி, கூடிய மட்டும் சம்ப்ரதாய நெறிகளிலிருந்து விலகாமல் வளர்த்துக் கொண்டு போக வேண்டும்.’ - என்பது உங்கள் வாதம் என்று படுகிறது. இதில் என் வழிக்கு எப்படியேனும் உங்களை இழுக்க வேண்டும் என்று நான் எண்ணியிருந்தால் இத்தனை நேரம் உங்களை எப்படியாவது மாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பேன். ஆனால் நான் சொல்வதோ என்னுடைய விருப்பும், தேர்வும் மட்டுமே. நீங்கள் என்ன முடிவு செய்கிறீர்கள், எதைத் தேர்ந்து எடுக்கிறீர்கள், எதை விரும்புகிறீர்கள் என்பதெல்லாம் முற்றிலும் உங்கள் பிரச்சனை மட்டுமே. அதில் எனக்கு எந்த தாத்பர்யமும் இல்லை.
*
உன் வரையில் நீ புரிந்துகொண்டதைச் சொல்கிறாய். தனி மனித அளவில் உனக்கு அது நல்ல முடிவாகவும் இருக்கலாம். நான் அதை மறுக்கவில்லை. ஆனால் மனிதர் என்பவர் ஒரு சூழல், ஒரு பண்பாடு, ஒரு குழு என்பதில்தான் பிறந்து வளர்கின்றனர். எனவே தாம் பிறந்த சூழலையும், குழுவையும் வளர்ச்சியும், முன்னேற்றமும் கொண்ட பாதையில் செல்லும்வண்ணம் தனி மனிதர்கள் தாம் பெற்ற தெளிவைப் பயன்படுமாறு செய்வது, கடமை என்று சொன்னால் நீ மறுக்கலாம், சிறப்பு என்ற வகையில் நல்லதுதானே? எந்தச் சூழல், எந்த வழிவழியான குழு அமைப்புகள் உலகு எங்கணுமே எடுத்துக்கொண்டாலும் சரி, காலவட்டத்தில் அப்படியே சரியான விதத்திலேயே இயங்கிவந்துள்ளது சொல். எல்லா இடத்திலும் காலத்தினால், மாற்றத்தினால் பல வேண்டாத விஷயங்களும் போக்கும் ஏற்படத்தானே செய்யும்? மனிதரின் ஆரோக்கியமான போக்கு என்பது தாம் தோன்றிய சூழலையும், குழுக்களையும் மேம்படுமாறு செயல்படுவதுதானே?. என்வரையில் நான் தெளிவாக்கிக் கொண்டு போகிறேன் என்று போவது எப்படிச் சிறப்பாக இருக்கும்? அதற்கென்று நீ பொதுநலத்தில் அக்கறை இல்லாதவன் என்று சொல்லவரவில்லை. இப்பொழுது பிராம்மணர் என்பதை எடுத்துக் கொள். ஒரு காலத்தில் நல்ல நிலையில், உலக நன்மைக்காக என்று இயங்கியது. இன்றும் நல்ல அம்சங்களும் இருக்கின்றன என்றாலும் காலவட்டத்தில் கெடுதியான அம்சங்கள் ஏற்பட்டுவிட்டன என்றுதானே சொல்ல முடியும்? அதுவும் இன்று பிராம்மணர் சாத்திரங்கள் சொன்ன அந்த தூய நிலையில் இல்லை என்பதுதானே முக்கியமான குறைபாடே அல்லவா...
இல்லை சார். பொதுவாக இந்த விஷயங்களில் நான் உள்புகுவதே கிடையாது. நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டாலும் சரி, அவரவர் தம்முடைய அறிவைப் பயன்படுத்திச் சிறந்த வழியைத் தேர்ந்து கொண்டு போக வேண்டுமே அன்றி, யாரோ ஒருவர் சொல்லி, அவரைப் பிறர் பின்பற்றி, அப்படித்தான் முன்னேற முடியும் என்பது பொதுக்கல்வி நலம் வாய்க்கப் பெற்ற நம் காலத்தில் சொல்ல முடியாது. எனவே ஒருவர் தம்முடைய முடிவுகளுக்குப் பொறுப்பைப் பிறர் மீது சுமத்துவதோ, தாம்தான் பிறருக்கு வழிகாட்டி என்று மயங்கிப் பிறர் விஷயத்தில் தலையிடுவதோ சரியான போக்கு அன்று என்ற எண்ணம் எனக்குண்டு. ஆனால் நீங்கள் சொன்ன சில விஷயங்களைக் குறித்து என் எண்ணங்களைச் சொல்கிறேன். ஏதோ குறிப்பாக பிராம்மணர்கள் காலவட்டத்தில் தூய நிலையிலிருந்து பிறழ்ந்து, கெடுதியான அம்சங்கள்.. என்றெல்லாம் சொன்னீர்கள். இதுவே முற்றிலும் பிழையான கருத்து. ஏனெனில் பழைய சாத்திரங்கள் ரீதியாக சமுதாய அமைப்பு என்று பேசினால், அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூன்று வகையினருக்கும் வேதம் கற்கவும், யாகம் செய்யவும் ஆன வாழ்க்கை முறைதான். எனவே வைதிகர் என்று சொன்னால் அது பிராம்மணரை மட்டும் குறிக்கும் என்பது சாத்திர ரீதியாகப் பார்த்தால் அதுவே பிழை. சாத்திரங்களில் எங்கும் நீங்கள் ’மூன்று வர்ணத்தார்’ த்ரைவர்ணிகர் என்ற குறிப்பைத்தான் பார்க்க இயலும். எனவே காலவட்டத்தில் கெட்டு விட்டது என்று ஒரு குறிப்பிட்ட வகையினரைக் குறித்து மட்டும் சொல்வது பொருந்தாது. மேலும் ஆன்மிக நெறியில் செல்வதற்கான புற அடையாளமாக இருக்கும் பிராம்மணர் என்பதைத் தேவையில்லாமல் சமுதாய அடையாளமாக ஆக்கி, அதனால் தேவையற்ற பளு பிராம்மணரின் தலையில் வைக்கப்பட்டது என்றுதான் நான் கருதுகிறேன். ஆன்மிக நெறியில் செல்பவர் என்பதற்கான பெயர்தான் பிராம்மணர் என்பது என்ற தெளிவைத்தான் புத்தர் தமது சுத்தம் ஒன்றில் விளக்குகிறார். திருவள்ளுவரும் ‘அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்’ என்னும் குறளில் காட்டுகிறார். ஆனால் அன்று ஆன்மிக நெறி என்பதும் சமுதாய அமைப்பு என்பதும் ஒன்றோடொன்று கலந்துவிடும் அவலம் தீர்க்க முடியாத நிலை இருந்திருக்கலாம். காரணம், என்னதான் ஆன்மிக நெறி என்றாலும் வயிற்றுப்பாடு என்று வரும்போது படைபலம், பணபலம் கொண்டோரின் சௌகரிய அசௌகரியங்களைப் பொறுத்துதான் சமுதாய அமைப்புகள் தொடர இயலும். எனவே வயிற்றுப்பாடு என்பதற்கு, என்னதான் வேதம் கற்று ஆத்மிக நெறியில் பயின்றாலும், அந்தணர் என்போர் படைபல, பணபல சக்திகளுக்கு அடங்கித்தான் போக வேண்டும். அவ்வாறு அடங்காமல் தம் கருத்தின்படி நிற்போரை நிர்க்கதியாக்கி நடுத்தெருவில் நிறுத்தும் வல்லமை அந்தச் சக்திகளுக்கு இருந்தது. இதை நாம் ஸ்ரீராமகிருஷ்ணரின் தந்தை க்ஷுதிராம் சட்டர்ஜி அவர்களின் வாழ்க்கையிலேயே பார்க்கலாம். அங்கு இருந்த ஜமீந்தார் சொல்படி பொய்சாட்சி சொல்ல மறுத்த க்ஷுதிராம் சட்டர்ஜி தயவுதாட்சண்யமின்றி, தமது உடமைகள், நிலம் முதலிய அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு குடும்பத்தோடு கிராமத்தை விட்டே விரட்டப் பட்டார். ஒருவருக்கு நடந்தது பலருக்கு எச்சரிக்கை என்றுதான் அன்றைய வழக்கம். ஆனால் காலம் மாறி, தற்காலம், பிரிட்டிஷ் அரசு என்றெல்லாம் வந்ததும் அரசாங்க உத்யோகம் என்று முடிவு செய்து தம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்ட அந்தணர்கள் உண்மையிலேயே தம் குழுவிற்கு மிகுந்த நன்மையைச் செய்தவர்கள் என்பது என் கருத்து. நாம் நன்றியுடன் நோக்க வேண்டியவர்கள் அவர்கள். காரணம் வயிற்றுப்பாட்டிற்காக பிறர் கைகளை எதிர்பார்த்து நிற்பதும், படைபல பணபல சக்திகளின் ஆதிக்கத்திற்கு அடங்கிப் போக வேண்டிய துர்கதியும் இன்றி, சமுதாயத்தில் சமத்துவமும், சுதந்திரமும் மலர்வதற்கான பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, தாம் ஈடுபடும் ஆன்மிக நெறி முற்றிலும் தமக்கு ஆத்மார்த்தமான வாழ்க்கை முறை என்று அர்த்தம் நிறைந்த ஆன்மிக வாழ்க்கை நடைமுறையில் சாத்தியம் ஆனது பிரிட்டிஷ் அரசில் அரசாங்க வேலைகளுக்குப் போகத் தொடங்கியதும் என்றுதான் நான் கருதுகிறேன். மேலும் ஓர் அதிர்ஷ்டம். நவீன காலத்தில் வந்துதித்த ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர், ஸ்ரீஅரவிந்தர், ஸ்ரீரமணர் முதலிய பல முனிவர்கள் ஆன்மிக நெறியை முற்றிலும் ஆத்மார்த்தமாக சமுதாயப் பிரச்சனைகள் கலவாத செந்நெறியாக விளக்கித்தந்த பேருபகாரம் என்பதையும் சொல்ல வேண்டும். எனவே நான் இன்றைய நிலையை மிகவும் நன்மை நிறைந்த ஆக்க பூர்வமான நிலையாகவே பார்க்கிறேன். சமுதாய சமத்துவம், சுதந்திரம், ஆன்மிக நெறியில் உள்ளம் கலந்த ஈடுபாடு என்பதை ஒருங்கே அடையும் வாய்ப்பை நம் காலத்தவர்களே இயற்றியிருக்கின்றனர் என்றால் அது மிகையாகாது.
*
நீ ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம் என்ற பார்வையில் அனைத்து நெறிகளும் சென்றடையும் ஒரே இலக்கு பரம்பொருள்; அந்தப் பரம்பொருளை, பரமாத்மாவை, பரம தெய்வத்தைப் பலவிதங்களிலும், பல வடிவங்களிலும், பல மார்க்கங்கள் ஊடாகவும் ஈடுபட்டு ரசித்துத் தோய்வதில் ஓர் அலாதியான அனுபவம் இருக்கிறது என்று சொல்வதெல்லாம் நன்றாக இருக்கிறது ஒரு விதத்தில். ஆனால் நீயும் அனைத்து மார்க்கங்கள் என்று சொல்லும் போது விவேகம், வைராக்கியம் என்பதன் பூர்த்தியை முன் நிபந்தனையாக உடைய வழிகளை மட்டும்தான் சொல்கிறாய் அல்லவா? எனவே நன்றுதான். ஆனாலும் என்னதான் நீ சொன்னாலும், நமக்குப் பிடித்தது பிடிக்காதது என்று வேண்டாம், யாரைச் சார்ந்தும் இல்லாத பரம பிரமாணமான, தோஷம் எதுவுமில்லாத சான்றான வேதங்கள் ரீதியாக யாரைப் பரந்தெய்வம் என்று அறுதியிட்டு உரைக்கிறதோ அதையே பக்திக்கு இலக்காக ஆக்கி, அதற்கே வாழ்க்கை என்று அர்ப்பணிக்கும் வழி என்னவோ தனிச் சிறப்புடையது என்றுதான் தோன்றுகிறது. நீ ஒப்புக்கொள்ள மாட்டாய் என்று தெரியும்.
இல்லை ஐயா. அப்படியில்லை. இதில் ஒப்புக்கொள்வது என்ற பிரச்சனை இல்லை. அதாவது ஹிந்துமதத்தில் பார்த்தீர்கள் என்றால் இந்த இருவேறு விதமான பார்வைகளையும் பக்கத்தில் பக்கமாக வைத்தே பார்க்கப் பழக்குகிறார்கள். உபநிஷதம் என்னும் வேதாந்தம், அதன் அர்த்த நிர்ணயம் என்னும் ப்ரஹ்ம ஸூத்ரம், அதன் விரிவுரைகள் என்னும் பார்வையில் தத்துவ விசாரம் என்று யுக்தி ப்ரஸ்தானமாகப் பார்க்கப் பழக்குகின்றார்கள். ஆனால் அதனோடு நின்றுவிடாமல் ஒரு சித்தாந்தம் என்பதை அடிப்படையாக்கி, அதன் அடிப்படையில் முதன்முன்னமே பரதெய்வ நிர்ணயம் என்றே தொடங்கி, வழிபடு நெறி என்பதையே கவனமாகப் பார்க்கும் நோக்கையும் ஆகமம் என்ற ரீதியில் வளர்க்கிறார்கள். உபநிஷதங்கள் ரீதியான அர்த்த விசாரம் தத்துவவாதம் என்ற வேதாந்தம் என்றால், ஆகமங்கள் அடிப்படையிலான ரீதியில் சாதன மார்க்கத்தை அனுஷ்டானத்திற்குத் தெளிவாக்குவது சித்தாந்தம் என்று பெயர் பெறுகிறது. ஹிந்துமதத்தில் இந்த இரண்டும் இணைந்தேதான் இருக்கின்றன. வேதாந்தம், சித்தாந்தம் என்ற இரண்டின் இணைப்பும் சமரஸமும்தான் ஹிந்துமதம் என்பதே என்ற தெளிவு மிகப்பழங்காலம் தொட்டே முனிவர்களின் அணுகுமுறையாக இருந்துவருகிறது. வேதாந்தம் என்ற தத்துவவாதம் பொதுவாகவும், ஆகமங்கள் அவரவர்கள் விரும்பி மேற்கொள்வது சிறப்பாகவும் அமைகிறது. இந்த வேதாந்த சித்தாந்த சமரஸம் என்ற தெளிவின் அடிப்படையில், அனைத்து வழிகளும் ஒரே பரம்பொருளை நோக்கிச் செல்வன என்னும் பொதுமைப் பார்வை எவ்வளவு சிறப்புடையதோ, அவ்வளவு சிறப்புடையதே ஒவ்வொரு ஆகம ரீதியாகப் பார்க்கும் ஸ்ரீமந்நாராயணனே பரம்பொருள், பரமசிவனே பரம்பொருள், சக்தியே பரம்பொருள், கணபதியே பரம்பொருள் என்றெல்லாம் பார்க்கும் சிறப்புப் பார்வையும் ஆகும். இது மேம்போக்காகப் பார்ப்பவர்களுக்கு என்னது இது, ஒன்று இந்தப் பார்வை சரியென்றால் அந்தவிதமான பார்வை தவறு என்று இருக்க வேண்டும். அது எப்படி? அனைத்து மார்க்கங்களும் ஒரே பரம்பொருளை நோக்கிப் போகும் வழிகள் என்னும் பொதுமையும் சரியே, ஆகம சித்தாந்தங்களைக் கைக்கொண்டு அதன் அடிப்படையில் எழும் சிறப்புப் பார்வைகளான இந்த தெய்வமே பரதெய்வம், இதற்கே பிரிகதிர்ப்படாத பக்தி உரியது என்று அணுகும் ப்ரத்யேக பக்தி நெறியும் சரியே என்று ஒரே நேரத்தில் சொல்ல முடியும்? என்ற கேள்வி மேலைநாட்டு மதங்கள் சார்ந்த பார்வைகளில் பழகியவர்களுக்கு பொதுவாக ஏற்படுவது சகஜம். ஆனால் வேதங்களிலும், சநாதன தர்மத்தின் உள்ளார்ந்த த்ருஷ்டியும் வாய்க்கப் பெற்ற பாரத நாட்டினர்க்கு இந்தப் பொதுமையும் சிறப்பும் ஒருங்கே சிறக்கும் மார்க்கமான ஹிந்துமதம் தொன்மையானது மட்டுமன்று, ஆன்மிகத் தெளிவில் மிகவும் முன்னேறிய ஆழமும், விரிவும் ஒருங்கே திகழும் பார்வையைக் கொண்டது என்பது புரியும்.
*
பொதுமையும், சிறப்பும் ஒருங்கே அமைந்து வேதாந்த சித்தாந்த சமரஸம் என்பதெல்லாம் பேசுவதற்கு நல்ல தியரி என்று இருந்தாலும் ஒரு சம்ப்ரதாயம், அதைச் சார்ந்த அனுஷ்டானம், அந்தச் சம்ப்ரதாயம் காட்டும் தெய்வத்தினிடத்தில் அசஞ்சல பக்தி, அந்த ஆசிரியர்களிடத்தில் விச்வாசம் - இதுதான் எனக்குப் பிடித்த பார்வையப்பா. நீ என்ன விரும்பினாலும் சரி, உன் கருத்துப்படியே பார்த்தாலும் கூட பக்தி என்பது ஓர் இஷ்ட தெய்வம் என்ற ஒன்றிடம்தானே ஏற்பட முடியும்? பொதுமையில் பக்தி என்பது எவ்வளவு தூரம் பொருந்தும்? பக்தி என்பது இல்லாமல் கடவுள், மதம், நற்கதி என்றெல்லாம் எப்படிப் பேச முடியும்? பொதுமையைப் பற்றிய விசாரங்களும், ஓர்மைகளும் அறிவுத்தெளிவு என்பதற்கு வேண்டுமானால் சம்பந்தப்பட்டதாய் இருக்கலாம். ஆனால் மதம் என்பதற்கு அடிப்படையே பக்தி, நம்பிக்கை, விச்வாசம் என்பதுதானே? சம்ப்ரதாயம் என்று வரும்போது அவரவர்களுக்கு இஷ்டப்படி மாறிக் கொண்டிருக்காமல் வழிவழியாகத் தம்தமக்கு அமைந்த வழியே சிறந்தது என்று கொள்ள வேண்டியதுதான். அந்த விதத்தில் நீ சொல்கிற ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசமான ‘அனைத்து மார்க்கங்களும் ஒரே பரம்பொருளிடம் போகின்றவை’ என்ற கருத்து தெளிவைத்தரலாம். அனைத்து மார்க்கங்களும் ஒரே பரம்பொருளிடம் போகின்றன என்னும் பொழுது, இந்த மார்க்கம் சிறந்ததா, அந்த மார்க்கம் சிறந்ததா என்ற வீண் கவலைகளை விடுத்து அவரவர்களுக்கு அமைந்த மார்க்கத்தில் நம்பிக்கை. விச்வாசம் கொண்டு அனுஷ்டானத்தில் பக்தியுடன் கைக்கொள்வதும், பிறருடைய மார்க்கங்களில் தாம் தலையிடாமல் அனைவரும் அனைவரின் சுதந்திரத்தை மதித்து நடத்தலுமே கூடிவாழ்தல் என்பதின் முக்கியத்துவம் ஆகும் என்றுதான் நினைக்கிறேன்.
இருக்கலாம் சார். ஏதேனும் ஒரு சம்ப்ரதாயத்தைச் சார்ந்து, அதன் ஆசிரியர்கள் எழுத்து ரீதியாக என்ன சொல்லியிருக்கிறார்களோ அதை மட்டுமே அடிப்படையாக வைத்து நம்பிக்கையை முன்னிறுத்தும் மார்க்கமாய்ப் பேசுவது என்பதை நீங்கள் பேசியதில் புரிந்து கொள்கிறேன். அதைத் தாண்டி மதம் என்பதற்கான பேச்சு என்று வந்தால் அது அறிவின் ஆர்வம் என்ற வழியில்தான் இருக்கும் என்றும் நீங்கள் நினைக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. யாரேனும் ஒருவர் மதம் என்ற அக்கறையில் ஒரு சம்ப்ரதாயம் என்று கைக்கொண்டு, அதைத் தாண்டி எந்த விதமான விசாரமும் தேவையில்லை, அப்படியிருந்தாலும் அது அந்தத் தாம் கைக்கொண்ட சம்ப்ரதாயத்தை மிகச்சிறந்தது என்று நிறுவ வேண்டி மாத்திரம் மற்ற வழிகளைப் பற்றியும், அவற்றின் கோட்பாடுகளைப் பற்றியும் கருத்து செலுத்தலாம்; மற்றபடி தன் நம்பிக்கை வழியே ஒழுகுவதற்கு அதெல்லாம் தேவையே இல்லை என்று கருதினால் அவரிடம் வாதம் செய்வதற்கு எனக்கு எதுவும் இல்லை. நீங்கள் என்னைக் கேட்டதால், ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசம் ஏதோ அவர் தாமாகப் புதிதாக உண்டாக்கிய கருத்துகள் அல்ல. பண்டைக் காலம் முதற்கொண்டே முனிவர்கள் பலவிதத்திலும் வேதங்கள், புராணங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றில் உட்கிடையாகவும், வெளிப்படையாகவும் கூறியுள்ள அர்த்தங்களை மிகவும் தெளிவான வடிவில் நம் காலத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் உபதேசித்தார் என்று எனக்குப் படுகிறது என்பதைத்தான் கொஞ்சம் விரிவாகச் சொன்னேன். இந்த விஷயம் ஒரு சம்ப்ரதாயம் என்பதைத் தாண்டி, பல சம்ப்ரதாயங்களையும், பல சம்ப்ரதாயங்களும் பொதுப் பிரமாணமாக ஏற்கும் வேத வேதாந்த புராணப் பகுதிகளையும், அவற்றைக் குறித்து நெடுங்காலமாகப் பல யோகிகளும் உபதேசித்து வந்துள்ள ஞானோபதேசங்களையும் ஒருங்கே கருத்தில் கொண்டு நோக்கினால் இந்த விஷயம் புலப்படும் என்றே தோன்றுகிறது. அவ்வாறு பலபட ஆய்ந்து விசாரித்து ஒப்புநோக்கிக் காண ஒருவருக்கு ஆர்வம் இருக்கலாம் அல்லது இல்லாது போகலாம். அது வேறு விஷயம். ஆனால் தாம் கருதுவது மட்டுமே சநாதனம், மற்றபடி எல்லாம் நவீனம், யாரோ தமக்குத் தோன்றியவாறு உரைத்து விட்டார்கள் என்று நினைப்பது பிழையான பார்வை. மேலும் ஒரு விஷயம். எந்த சம்ப்ரதாயத்திலும் பார்த்தால் ஆத்மாவையே சித் என்றுதான் முக்கியமாகக் குறிக்கிறோம். ஆன்மிகம் என்பதே சித்ரூபம் என்பதைக் குறித்த ஈடுபாடுதான் ஆகும். எந்த தெய்வம் என்று ஒருவர் முடிவு செய்து கொண்டாலும் சரி, அந்தத் தெய்வத்தைக் குறித்து முதன்முன்னம் முக்கியமாகச் சொல்வதே என்னவென்றால் அது பரம சைதன்ய மயமானது என்றுதான். சித் என்றாலே ஞானம், அறிவு, அறிதல் என்றுதான் அடிப்படை வேர்ச்சொல் பொருளிலேயே பொருள்படும். சைதன்யம் என்பது சித் ஆம் தன்மை. எனவே தெய்வம், ஆன்மா, கடைசியில் அடையும் பேறு என்று எல்லாவற்றையுமே அறிவுமயம் என்று சொல்லிவிட்டு, ஆனால் அதை அடையும் வழி அனுஷ்டானம் என்று வந்தால் மட்டும் அங்கு அறிவுக்கு முக்கியத்துவம் இல்லை, நம்பிக்கைதான் பிரதானம் என்று சொல்வது பொருத்தமாக எனக்குப் படவில்லை.
*
நீ நம்பிக்கை என்பதைக் குறித்த குழப்பத்தில் இருக்கிறாய் என்று தோன்றுகிறது. சிதாத்மகமான ஒன்றை, சித் என்பது அறிவு என்றால், அறிவுபூர்வமான வழிகளில்தானே எய்த முடியும் என்பது நல்ல கேள்விதான். ஆனால் அறிவு என்றால் புத்தகங்களைப் படிப்பது, ஆய்வு, சிந்தனை, அலசி ஒரு முடிவுக்கு வருவது, இன்னும் விஞ்ஞான ரீதியான பரிசோதனை, நிரூபணம் என்ற ரீதியில் பகவத் சாக்ஷாத்காரத்திற்கும் வழியானது அமைய வேண்டும் என்று சொல்வாயா?
இல்லை ஐயா. அவ்வாறு நான் கருதவில்லை. நம்பிக்கை என்பதைக் குறித்த குழப்பம் என்னிடம் உள்ளது என்பது உண்மையே. ஏனெனில் நம்பிக்கைக்கு அத்யாத்மிக பாதையில் ஒரு முக்கியமான இடம் உண்டு என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. ஆயினும் எத்தகைய இடம், எதுவரையில் என்பதெல்லாம் எனக்கு இன்னும் தெளிவுபடவில்லை. காரணம் யோக ரீதியான அனுபவங்கள் எனக்கு ஏற்படாததும் காரணமாக இருக்கலாம். மேலும் மேற்கத்திய மதங்கள் ரீதியிலான ஃபெய்த், பிலீஃப், என்ற வார்த்தைகள் ஹிந்துமத சாத்திர உலகத்தில் அர்த்தம் பெறுபவை அல்ல என்பதையும் உணர்கிறேன். ஹிந்துமத சாத்திரங்களில் கூறப்படும் சிரத்தை என்பது அநேகமாக உலக மொழிகள் எதிலுமே மொழிபெயர்க்க முடியாத சொல் என்றுதான் எனக்குப் படுகிறது. ஏனெனில் கட உபநிஷதம் கூறும்பொழுது சிரத்தையின் ஆவேசம் ஒருவருக்கு ஏற்பட்டபின்னர்தான் அவருக்கு அத்யாத்மிகப் பாதை திறக்கிறது என்று சொல்கிறது. எனவே ஒன்று புரிகிறது. எதனால் அத்யாத்மிகப் பாதையானது திறந்து கொள்ளுமோ அதுதான் சிரத்தை என்பதற்கான பொருள் என்பது புரிகிறது. நாம் அவசரப்பட்டு சிரத்தை என்பதை நம்பிக்கை, பிலீஃப் என்றெல்லாம் மொழிபெயர்த்துக் கொண்டால் பொறுப்பு நம்முடையதுதானே தவிர சாத்திரங்கள் அல்ல என்பது எனக்குத் தெளிவு. எனவே நான் சைதன்யாகாரமான அனுஷ்டானம் என்று நினைக்கும் பொழுது சிரத்தை என்பதைக் கருத்தில் கொண்டிருக்கிறேன். ஞப்தி வடிவமான, விசாரமயமான தேட்டம் என்பது என் எண்ணம். ஆனால் அதைத்தான் சில இடங்களில் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்து ஆசிரியர்கள் பதிலடி கொடுப்பது போல் ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். என்னவெனில், பெரும் அறிவுக் கடலாக, வித்வத்தின் மொத்த உருவாக இருந்தாலும் கூட பகவத் சாக்ஷாத்காரம் என்று வரும் பொழுது இழந்து போகவும் கூடும். ஆனால் அதே நேரத்தில் இடக்கை வலக்கை அறியாத ஆய்ச்சியர் போன்றோருக்கு அடங்கிய சரக்காய் அதே பரமாத்மா விளையாடவும் கூடும் என்று ஒரு காண்ட்ராஸ்ட் சித்திரம் போட்டுக் காட்டுகிறார்கள். அது நேரே உபநிஷதக் கருத்தை உள்கொண்டதுதான் என்றாலும் உண்மையில் எனக்குப் புரியவில்லை. ’இந்த ஆத்மா பிரவசனத்தால் அடையமுடியாதது; மேதையினாலும் அன்று, பலபடியான கல்வியினாலும் அன்று. யாரால் இந்த ஆத்மா இதய பூர்வமாக விரும்பப் படுகிறதோ அவர்களுக்கே இந்த ஆத்மா தன்னைத் தானே காட்டிக் கொடுக்கிறது’ என்னும் அர்த்தம் கொண்ட மந்திரமான ‘நாயமாத்மா ப்ரவசநேன லப்யோ ந மேதயா ந பஹுனா ச்ருதேந, யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய: தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்’. என்ற கருத்தைத்தான் சொல்கிறார்கள் என்பது புரிகிறது. ஆயினும் அங்கு என் அறிவு அதைப் புரிந்து கொள்ள இயலாது அனுபவம் இருந்தாலன்றி என்பது புரிகிறது. ஆயினும் நம்பிக்கை என்பதன் சாதாரணமான புழங்கு பொருளில்தான் மதம் என்பதையே பெரும்பான்மையான அறிஞர்களே கூட அணுகுகின்றார்களோ என்றுதான் தோன்றுகிறது.
***