Tuesday, September 8, 2020

மாவலிகதைப் பாடல்

 நாம் அறியாமலே போன வேதாந்தத் தமிழ் நூல் ஞானவாசிட்டம். அதில் மாவலிகதை. அதில் ஓரிரு பாடல் -

‘தெரிக்கும் பொருளும் தரிசனமும்
தீர்ந்து வெறுநின் மலவடிவாய்ப்
புரிக்கும் உதயம் விடாதென்றும்
பொலியும் பரமப் பொருளானேன்
வரிக்கும் காட்சி இலாவறிவே
வடிவாய் ஒருகா லேயெங்கும்
விரிக்கும் நிறைவாய் உபசாந்த
வெளியாய் அறிவாம் மிகுபொருள்நான்.’
’எங்கே எங்கே மனமோடி
இளையோ ரென்ன வீழ்ந்தழுந்தும்
அங்கே அங்கே நின்றெழுப்பி
அகண்ட அறிவில் அடைவிப்பாய்
சங்கே தமதாய் இவ்வாறு
சாதித் துளமா மதகரியை
வெங்கே தமறத் தளைத்தெல்லா
விசாரத் தாலும் வீடணைவாம்.’
நேரடியாகப் பாடல்கள் புரியாதோருக்கு உதவியாக: -
த்ருச்யம் என்பது புறத்தில் காணப்படுவது. காணும் அறிவு த்ருக் என்றும், காணப்படும் பொருள் த்ருச்யம் என்றும் இருகூறுபட்டு நிற்பது. இன்னும் சொல்லப் போனால் காண்பவன், காணப்படும் பொருள், காட்சி என்று முக்கூறு படுதலால் திரிபுடி என்று பெயர் பெறுவது. திரிபுடி அற்ற நிலைக்கு திரிபுடி ரஹிதம் என்று பெயர். அதையே நின்மல வடிவு என்று குறிப்பது. இதை மாவலி கதை கூறுகிறது ‘தெரிக்கும் பொருளும் தரிசனமும் தீர்ந்து, வெறுமனே, நின்மல வடிவாய், கேவல நிர்மலமாய் என்று. அந்த நிர்மல நிலையில் சதா ஒன்று நிகழ்ந்தவண்ணம் இருக்கும். அஃது என்ன? ஒன்று ஸ்புரித்துக் கொண்டே இருக்கும். அந்த ஸ்புரணமும் எப்பொழுதும் நடக்கும் உதயம் என்று சொல்லலாம்படி இருக்கும். அவ்வண்ணம் ஸ்புரிப்பது எது என்னில் அதுவே பரம்பொருள். சாதாரணப் பொருளின் காட்சி திரிபுடியில் நடப்பது. திரிபுடி அற்ற நிர்மல நிலையில் ஒரே பொருள் மட்டுமே ஸ்புரித்தலின் உதயமாக விடாமல் நடந்த வண்ணம் இருக்கும். அதனாலேயே அதற்கு பரம்பொருள் என்று அறியப்படும். ’நின்மல வடிவாய்ப் புரிக்கும் உதயம் விடாதென்றும் பொலியும் பரமப் பொருள் ஆனேன்’ என்று மாவலி கதை இந்த ஆன்மிக அனுபவத்தைக் கூறுகிறது.
மனம் வெளியில் ஓடியவாறு இருக்கும். எங்கு எங்கு ஓடுகிறதோ அங்கிருந்து மீட்டு அகண்ட அறிவில் அடைவித்தலே அப்யாசம் என்று அறியப்படும். இஃது உண்மையில் மதம் கொண்ட யானையை அடக்கும் சாகசத்தோடு ஒக்கும் என்பதால் மாவலி கதை ‘சங்கேதமதாய் இவ்வாறு சாதித்து, உள மா மதகரியை வெங்கேதம் அறத் தளைத்து எல்லா விசாரத்தாலும் வீடு அணைவாம்.’ என்று கூறுகிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment