Tuesday, September 1, 2020

யாரை ஏமாற்ற முடியும்?

 படிக்கிறோம். ஏதோ எண்ணுகிறோம். பேசுகிறோம். ஆனால் நின்றவா நில்லா சிந்தை ஒன்றின் திறத்ததல்லாது என்பது போல் ஒரு சமயம் ஒரு மூட். இன்னொரு சமயம் மாறிப் போகிறது. இந்த மாதிரியான சிந்தையை வைத்துக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள முடியவில்லையே, பகவானையா ஏமாற்ற முடியும்? நாமே கூட நம் மீது சான்று தருவதாய் இருந்தால் ‘இது தேராது’ என்றுதான் தருவோம். அப்படி இருக்கும் போது நிமலன் நின்மலன் நீதிவானவன், அமலன் அவன் நம்மை ஏன் மதிக்க வேண்டும்? அருள் செய்ய அவனுக்கு என்ன நிர்பந்தம் இருக்க முடியும்? ஆனாலும் வெட்டிக் கொண்டு போகும் உறவு இல்லையே. உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது. நாமே முயன்றாலும் அவன் விடுவதாக இல்லை. உடலில் ஏதோ குறு குறு என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. மீண்டும். சரி என்று டார்ச் அடித்துப் பார்த்தால் மிகச் சின்ன பூச்சி கையில் மயிற்காடுகளினூடு தத்தித் தடவிப் போய்க் கொண்டிருக்கிறது, பாவம். இன்னொரு சமயம் என்றால் ஒரு தட்டு, அல்லது தண்ணீர் விட்டு வாஷ் போய்க் கொண்டிருப்போம். பார்த்து விட்டோம். அதனால் யோசனை. இது நம் கணக்கிலேயே இல்லை. வாயால் ஊதினால் எங்கோ போய் விழுந்துவிடும். அதற்கும் எனக்கும் என்ன? அதைப் பார்த்தால் நான் பன்மடங்கு பன்மடங்கு பெரிய ஆள். இப்படித் தானே பெரும் ஆள் என்ற அனைத்துக்கும் பெரும் ஆள் என்னும் பெருமாளிடம் முன்னால் நான் என்று போய் நிற்க நான் யார்? கோணிலும் சதகூறிட்ட கோணின் சதகூறிட்ட கோணிலும் மிகச்சிறு உயிர் என்று சொன்னால் அதுவே வைட் ஆஃப் த மார்க் என்னும் படி மிகைப் பிழை. அவ்வளவு நுண் உயிரி நான் பகவான் என்னும் முழுமைக்கு முன். என்னை அவன் கவனிக்கக் கூட வேண்டும் என்ற என்ன அவசியம் என்பதை ஊரும் சிறு பூச்சி எனக்கே காட்டிவிடுகிறது. ஆனாலும் எனக்கு என் எக்ஸிஸ்டென்ஷியல் ப்ரெடிகமெண்ட். என்னையும் அனைத்தையும் உள்ளடக்கிய மகாமுழுமையின் முன் கதறுகிறேன். அடுத்த கணம் நானா அது என்பது போல் அல்பத்தில் மனம் செலுத்தி அத்தனையும் மறந்து வேறு வேறு சித்தம். தூங்கினால் எல்லாம் தலைகீழ். எழுந்தால் வேறு புது கவலை. நிச்சயம் நானாய் இருந்தால் என்னைச் சற்றும் பொருட்படுத்தவே மாட்டேன். ஆனால்...

‘நெஞ்சினால் நினைந்தும்
வாயினால் மொழிந்தும்
நீதியில்லாதன
செய்தும்
துஞ்சினார் செல்லும் தொன்னெறி
கேட்டே துளங்கினேன்;
விளங்கனி முனிந்தாய்;
வஞ்சனேன் அடியேன் நெஞ்சினில்
பிரியா வானவா;
தானவர்க்கென்றும் நஞ்சனே;
வந்துன் திருவடி அடைந்தேன்;
நைமிசாரணியத்துள் எந்தாய் !’
(பெரிய திருமொழி)
*

No comments:

Post a Comment