Tuesday, September 8, 2020

விநோதமான ஒரு தொலைபேசிக் கேள்வி

 காலையில் எழுப்பி மங்களமாக ‘திகில்’ கொடுத்த இது போன்ற நிகழ்வுகள் மட்டுமே இல்லை. வேறு மாதிரியான நிகழ்வுகளும் உண்டு. ஒரு நாள் ஒரு போன் கால். நீங்கள் இன்னார்தானே என்று கச்சிதமான வெரிஃபிகேஷன்.

அடுத்து தான் யார் என்று சொல்லாமல் திடீரெனெ ‘உங்களுக்கு ’சட்டவிடாபட்டி’ தெரியுமா? என்று என்க்வயரி. நீங்க... என்று நான் இழுத்ததும் வேண்டாஅ வெறுப்பாக ஒரு க்விக் சுய அடையாளம் பிறகு மீண்டும்
‘உங்களுக்கு சட்டவிடாபட்டி தெரியுமா?
இல்ல நான் கேதாண்டப்பட்டின்னு கேள்விப் பட்டிருக்கேன். ஜோலார்பேட்டை பக்கம் இருக்குன்னு... இது என்ன கிராமம், எந்தப் பக்கத்து ஊரு...
சார் தமாஷ் பண்ண உங்களுக்குப் போன் போடவில்லை.
இல்லை சார்... திடீரென்று ஏதோ பட்டின்னு கேட்டா எனக்கு ஊர்சுற்றுகிற பழக்கம் இல்லை. அதனால் எனக்குத் தெரிந்த ஊர்ப்பெயர்கள் கம்மிதான்...
சார்.. உங்களுக்கு நிச்ச்சயம் தெரிஞ்சிருக்கும்னு அவரு ...நண்பர் சொன்னாரேன்னுதான் பண்ணேன். நீங்க என்னடான்னா... நான் எவ்வளவு அவசரத்துல இருக்கேன்னு....
சரி சார்.. ஆனால் ...
உங்களுக்கு சட்டவிடாபட்டி பற்றித் தெரியுமா?...
கொஞ்சம் அது என்னன்னு டீடெயில்ஸ் கொடுங்களேன். சட்டுனு புரியலை...
என்ன சார்... உங்களை அவார் ஆப்படி புகழ்கிறாஅர்.. வைஷ்ணவத்துல நன்கு படித்தவர்... ந்னு...
சரிதான்... அதல்லாம் நம்பாதீங்க ச்சார்... ஏதோ சில புத்தகம் படிச்சுட்டா உடனே ஆ ஊன்னு சொல்லிவிட வேண்டியது.. இந்த நண்பர்கள் பண்ணும் அனுகூல இம்சை இருக்கே...
சார் உங்க தன்னடக்கத்த கேக்க நான் போன் பண்ணலை... சட்டவிடாபட்டி தெரியுமா...
இது என்னடா இம்சையா போச்சு... சார் அதுக்குத்தான் கொஞ்சம் விவரம் சொல்லுங்க...
என்ன சார் இது தெரியாதாஅ? ... வைணவம் படிச்சதா சொல்ராரு.....ராமானுஜம் அத்வைதத்தை எதிரா ஏழு ஆர்க்யுமண்ட் சொல்றாருன்னு ஒரு குழுமத்து விவாதத்துல ஒருவர் சொன்னாரு. அவாருக்கு பதிலடி கொடுத்து ஏழுக்கும் பதில் ஆர்க்யுமண்ட் எழுதி இன்னிக்குள்ள போஸ்ட் பண்ணனும்.
சட்டவிடாபட்டி...
ஆமாம் அதுக்குத்தான் சட்டவிடாபட்டின்னு அவர்தான் பேர் போட்டிருந்தார்...அந்த ஏழுக்கு...
ஓ... ஓ... அப்பொழுதுதான் லேசா விசயம் எனக்கு வெளாங்கிச்சு.... அடடாஅ... ஸ்ரீராமானுஜர் அத்வைத வாதத்திற்கு மறுப்பாக அத்வைதத்தில் ஏழு பொருந்தாமைகள் உள்ளன என்று எடுத்துக்காட்டி எழுதிய பகுதியை சப்த வித அநுபபத்தி என்று சொல்வார்கள். அதைச் சேர்த்து எழுதினால் சப்தவிதாநுபபத்தி. அதை எங்கோ ஆங்கிலத்தில் எழுதிய வடிவத்தைப் படித்திருக்கிறார் இந்த ’போனார்’. Saptavidhanupapatthi என்று இருக்கும் போலும்! அது நவீனக் கண்களுக்கு ஒரு மாதிரி குத்து மதிப்பா சட்டவிடாபட்டின்னு ஆகியிருக்கு என்று... யப்பாடி.... பெரிய புலனாய்வேன்னா நடத்த வேண்டியிருந்தது. பார்த்தேன். சரி மாட்டிக்கக் கூடாதுன்னு ‘எனக்குத் தெரியால்லியே சார் என்று சொல்லிவிட்டேன். யப்பா [பொழைச்சேன். இதுக்கூட தெரியால்லியா... உங்களை அவர் சொன்னாரே அது இதுன்னு சிலுப்பினாரு... நான் ஸ்டடியா நின்னுட்டேன்ல.. கொஞ்சம் நகர்ந்தா ஆபத்து....
சிறிது நாள் கழித்து நண்பரோடு நேரிலும் தரிசனம் தந்தார் ‘போன்’ புண்ணியர். என் வாயில் வாஸ்து... என்ன செய்வது... என்ன சார் அந்த சட்டாவிடாபட்டி அப்பறம் தெரிஞ்சுதா?
நீங்க தப்பா உச்சரிக்கிறீங்க..... அது சட்டவிடாபட்டி இல்லை... சட்டவிடனுபட்டி என்றாரே பார்க்கலாஅம்....
அடடா...
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

1 comment: