Tuesday, September 1, 2020

கேசவ சந்த்ர சேனரும் ஸ்ரீராமகிருஷ்ணரும்

 நேரேஷன்ஸ் என்பது கோவையாகத் தொகுத்துச் சொல்லித் தொடர்ச்சியைக் காட்டிப் புரிய வைக்கிறது. ஆயினும் பல கோணங்களில் பார்க்கும் சாத்யதையைக் கிளிப் போட்டுச் சுருக்கி விடுகிறது என்பதும் உண்மையே. ஸ்ரீராமகிருஷ்ண விவேகாநந்த இலக்கியங்களில் ஆர்வம் உடையோருக்கு கேசவ் சந்திர சேன் என்னும் பெயர் மிகவும் பழக்கமானதுதான் என்றாலும் கேசவ் இன் ஒரு கோணத்தை, பார்வையில் ஒரு கோணத்தால் மட்டுமே பார்க்க அனுமதிக்கிறது. கேசவ் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என்ன? தம்மைப் பற்றி அவர் என்ன மாதிரியான மொழிவுகளைக் கொண்டிருந்தார் என்பதையெல்லாம் கூடப் பிரதான ஆர்வமான ஸ்ரீராமகிருஷ்ணரின் மொழிகளைப் பதிந்தவர்கள் தங்களுடைய ஆர்வத்திற்கு அனுகுணமாகவே அணுகுவதும், அதை ஆர்வம் கொண்டு படிக்கும் நமக்கும் அந்த விதம் ஒன்றே ஈடுபாடு கொள்ளத் தக்கதாகவும் ஆகிவிடுகிறது. இது சரியா தவறா என்பதன்று பிரச்சனை. நாமாகப் புரிந்து கொள்வதும், பார்ப்பதும் மாறிக் கடன் வாங்கிய பார்வையும் புரிந்து கொள்வதுமாக ஆகிவிடுகிறது. யாரும் நாமாகப் பார்ப்பதையோ புரிந்து கொள்வதையோ தடுத்து விடவில்லை. ஆனாலும் ஆர்வத்தின் இலக்காக ஒரு நேரேஷன் ஆகிவிடும் பொழுது அதன் இயல்பிலேயே இந்தச் சிக்கல் வந்துவிடுகிறது. நேரேஷன் என்பதன் இத்தகைய இயல்பை வரலாற்றில் பயன் கொள்ளாத சித்தாந்தங்களோ, ஐடியாலஜிகளோ, இயக்கங்களோ, நிறுவன அமைப்புகளோ இல்லை எனலாம். ’படிக்காதவர்களுக்கு’ (புத்தகப் படிப்பு என்ற பழக்கம் அவ்வளவாக இல்லாதவர்களுக்கு) பேச்சினால் மயங்குதல் சிக்கல் என்றால், ‘படித்தவர்களுக்கு’ (புத்தகப் படிப்புப் பழக்கம் கொண்டோர்) நேரேஷனில் குருடு ஆகும் சிக்கல். கேசவ் சந்த்ர சேன் அவர்களின் சொற்பொழிவுகளைப் படிக்கும் போது, 1868லேயே அவர் பேசுகின்ற பல கருத்துகள் பிரமிக்க வைக்கின்றன. யங் பெங்காலை மட்டுமின்றி, பாம்பே போன்ற இன்னும் பல மாநகரங்களிலும் யூத் என்னும் கவனப் பரப்பிற்கு ஒரு பெரும் ஆகர்ஷணமாக இருந்திருக்கிறார் கேசவ். கேசவ் சேனை நன்கு புரிந்து கொள்வது ஸ்ரீராமகிருஷ்ணரிடம் வந்த ‘கல்கத்தாவின் படித்த இளைஞர் சமூகம்’ எத்தகைய மனநிலையில் இருந்தது, ஸ்ரீராமகிருஷ்ணர் அவர்களை எப்படிப் புரிந்து கொண்டார் என்பதையெல்லாம் ஆழமாக உணர முடிகிறது. ‘அறிதொறும் அறியாமை கண்டற்றாஅல்’

***

No comments:

Post a Comment