Tuesday, September 1, 2020

ஆப்த வசனம் என்றால் என்ன?

 ஹிந்துமத சாத்திரங்கள், அவற்றைச் சூழ்ந்தும், சார்ந்தும் வளரும் சம்ப்ரதாயங்கள், சமுதாயம் என்பவற்றிற்கெல்லாம் எவ்வளவு ஆழமான அறிவுத் தெளிவு மிக்க புரிந்துணர்வு அமைந்திருக்கிறது என்பதை நாம் உணரவேண்டும். வேத ப்ரமாணம் என்பதை ஏற்கும் தர்சனங்களில் ஒன்று நியாய தர்சனம். அக்ஷபாத கௌதமரின் சூத்ரங்கள் அடிப்படையாக அவற்றுக்கு வாத்ஸ்யாயனரின் பாஷ்யம் அமைந்து விளங்குவது நியாய தர்சனம். வேதாந்த சம்ப்ரதாயங்கள் பொதுவான அம்சங்களில் உதவி கொள்ளும் தர்சனங்களில் ஒன்றாக விளங்குவதும் இந்த நியாய தர்சனம் ஆகும். இதில் முதல் அத்யாயத்தில் ஏழாவது சூத்ரத்தில் ஆப்த வசனம் என்னும் பிரமாணம் பற்றிக் குறிப்பிடுகிறார் அக்ஷபாதர். ஆப்தர்களால் சொல்லப்படும் வார்த்தை ஆப்த வசனம். ஒருவர் சொல்வது எப்படிப் பிரமாணம் ஆகும்? யாரோ ஒருவர் சொல்வதெல்லாம் பிரமாணமாகாது. சொல்பவருக்கு ஒரு தன்மை இருக்க வேண்டும். அதுதான் அவருக்கு தகுதியைத் தரும். என்ன தன்மை? முதலில் அவருக்குத் தாம் சொல்கிற விஷயம் நன்கு ஐயம் திரிபறத் தெரிந்திருக்க வேண்டும். பின்பு அவரிடத்தில் கள்ளமோ, கபடமோ இருத்தல் கூடாது. அதாவது விஷயம் தெரிந்தாலும், அதைச் சொல்லாமல் மறைப்பது, திரித்துச் சொல்வது, மற்றவர்கள் தெளிவடைவதற்குப் பதில் மயங்கும்படி சொல்லிவிடுவது போன்ற தன்மைகள் இருக்கக் கூடாது. பின்னர் உள்நோக்கம், ஏமாற்றும் தன்மை, கியாதி, லாப பூஜையில் கருத்து இவை இருக்கக் கூடாது. அப்படி ஒருவர் நன்கு ஐயம் திரிபறக் கற்று உணர்ந்தவராகவும், கள்ளம் கபடம் அற்றவராகவும், உள்நோக்கம், ஏமாற்றும் எண்ணம், புகழ், லாபம், துதிச்சொல் ஆகியவற்றுக்கு மயங்காதவராகவும் இருந்தால் அவரிடம் ஆப்தி என்னும் நிறைகுணம் இருக்கிறது என்று சொல்லலாம். அவ்வாறு ஆப்தி இருப்பவர் யாரோ அவர் ஆப்தர். அத்தகைய ஆப்தர்கள் கூறுவதைப் பிரமாணமாகக் கருதலாம். அத்தகைய ஆப்தர்கள் யாரும் எக்காலத்தும் உண்மையை உள்ளவாறு கபடம் இன்றி உரைப்பவர்கள் ஆகையாலே பொதுவாக முன்சென்ற, இன்னும் பல ஆப்தர்களுடைய வார்த்தைகளுக்கும், எந்த ஆப்தர்களின் வார்த்தைகளுள் முரண்பாடுகள் ஏற்படுவது இயலாத ஒன்றாம். இதற்கான சூத்ரமும், அதற்கு வாத்ஸ்யாயனரின் பாஷ்ய வரிகளும் மிக அருமை.

ஆப்தோபதேச: சப்த: (1.1.7)
ஆப்த: கலு ஸாக்ஷாத்க்ருத தர்மா யதாத்ருஷ்டஸ்யார்த்தஸ்ய சிக்யாபயிஷயா ப்ரயுக்த உபதேஷ்டா | ஸாக்ஷாத்கரணமர்த்தஸ்யாப்தி: | தயா ப்ரவர்த்தத இத்யாப்த: | ருஷ்யார்யம்லேச்சாநாம் ஸமாநம் லக்ஷணம் | ததா ச ஸர்வேஷாம் வ்யவஹாரா: ப்ரவர்த்தந்த இதி |
*

No comments:

Post a Comment