மகத்தான மேதை மற்றொரு மகத்தான மேதையைத் தன் இதயம் பொங்கப் புறம்பொசிந்து பாராட்டும் நிகழ்ச்சி சரித்திரத்தில், இலக்கிய உலகில் மிகவும் அபூர்வமாகவே நிகழக் கூடியது. அப்படி ஓர் அற்புதம்தான் ப்ரெஞ்சு இலக்கிய மாமேதையான விக்டர் ஹ்யூகோ ஆங்கில இலக்கிய மாமேதையான வில்லியம் ஷேக்ஸ்பியரை வியந்து போற்றிய நிகழ்ச்சி. தமது குமாரர் ஃப்ரான்ஸ்வா மொழிபெயர்த்த ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு, ப்ரெஞ்சு மொழியில், தந்தை விக்டர் ஹ்யூகோ எழுதிய நீண்ட முன்னுரையே ஒரு தனிப் புத்தகம் என்ற அளவிற்கு அமைந்திருப்பது. ஷேக்ஸ்பியரைப் பற்றி உரைநடைக் காவியமே இயற்றியிருப்பார் அந்த முன்னுரையில் ப்ரெஞ்சு மேதை.
ப்ரெஞ்ச் தேசத்தின் மகத்தான கலைஞன், புதுயுகக் கனலும், புத்துயிர்ப் புனலுமாய் எழுதிய புலரிப் புலவன் விக்டர் ஹ்யூகோ 1851ல் நாடு கடத்தப்பட்டார். அவருக்குப் புகலாகியது பெல்ஜியம் தேசம், ப்ரஸ்ஸல்ஸ். ஆயினும் எழுத்தின் வெளிப்பாடு அக்கினியாய் வெடித்தது. விளைவு எழுத்துச் சுதந்திரத்தை மிகவும் மதிக்கும் புகல் நாடும் கூட ஹ்யூகோ தம் நாட்டை விட்டு வெளியேறினால் நல்லது என்று யோசிக்கத் தொடங்கியது. வேறு வழி!. பிரிட்டிஷ் தீவான ஜெர்சிக்குக் குடிபெயர்ந்தார் எழுத்தின் கோமகன் தமது மகன் ஃப்ரான்ஸ்வாவுடன். ஜெர்ஸியில் வாழ்க்கை சுதந்திரமும், வளமும், நல்ல ஜனக் கூட்டுறவுமாக இருந்தது என்று விதந்த மகிழ்வாய்த் திருமதி ஹ்யூகோ எழுதும் விதத்தில் இருந்தது. தந்தையும், மகனுமாய் மழை பெய்யும் காலைப் பொழுதொன்றில், நாடு கடந்த வாழ்க்கையின் தொடக்கத்தில், கடலை எதிர்நோக்கி அமர்ந்தவண்ணம் அமைதியில் ஆழ்ந்தனர். நெடுநேரம் பேச்சில்லை. மகன் வினவினார்:
‘அப்பா! நாடு கடத்தப்பட்ட வாழ்க்கை இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நெடுங்காலம் இருக்கும்.
என்ன இந்தக் காலத்தில் செய்வதாக உத்தேசம்?
கடலை உற்று நோக்குவதே என் வேலையாக இருப்பேன்.
மீண்டும் அமைதி. இப்பொழுது தந்தை வினவினார்:
நீ என்ன செய்வதாக உத்தேசம்?
ஷேக்ஸ்பியரை ப்ரெஞ்சு மொழியில் மொழிபெயர்ப்பேன்.
ஒரு கடலை மொழிபெயர்ப்பதும், மொழியற்று ஒரு கடலை நோக்கி தியானிப்பதுமாகத் தொடங்கியது அவர்கள் வாழ்க்கை. மகனின் மொழிபெயர்ப்பிற்குத் தந்தை அளித்த முன்னுரைதான் கிட்டத்தட்ட 500 பக்கங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வரும் நூல் ஷேக்ஸ்பியர், விக்டர் ஹ்யூகோவால் எழுதப்பட்டது. அதில் ஒரு பகுதியைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருகிறேன்:
“மனிதரிலும் கடல்கள் உண்டு, உண்மையிலேயே. இந்த அலைகள்; இந்த உயர்ந்து பொங்கியும், தணிந்து ஓடியும்; இந்த வெருவுற்றச் செல்கையும், மீள்வதும்; சுழித்தடிக்கும் ஒவ்வொரு காற்றின் ஓசையும்; இந்த வெளிச்சமும் விம்ப நிழலும்; கரைக் குழிவை ஒட்டி வளர்ந்த பச்சைகளும்; மொத்தச் சூறையில் திரிதரு மேகங்களின் இந்த சனநாயகமும்;
நுரைத்தெழு குவைகளில் கிளர்ந்தெழு கழுகுகளும்; உடுக்கணங்களின் வியத்தகு குழாமிட்ட பிரதிபலிப்பாய்ப் பேதுறும் மர்மக் கூட்டாய் ஒளிர்தரு கோடி சுடர்ப் புள்ளிகள், கணக்கற்ற சிரப்பரப்பாய் உற்ற மயக்கு; வந்து செல்லும் உன்னத விளிச்சிதறலாய் மின்னல் நோக்கி நிற்பது போல் இமைக்கும்;
ஓங்கிப் பெருத்த விம்மல்கள்; கண்டு மறையக் காட்சியுறும் பூதாகாரம்; இந்த உறுமியெழும், உலைத்தெடுக்கும் இருட்டு நிசிகள்; இந்த ஆக்ரோஷங்கள், இந்த ஆவேசங்கள்; இந்தச் சூறாவளிகள், இந்தப் பாறைகள், இந்த மோதுறும் கப்பல் அழிவுகள், ஒன்றில் ஒன்று ஏறிப் பாய்ந்து நாவாய்கள் உறும் நாசம்; இந்த மானிட இடிமோதல் தெய்விக இடிமுழக்குடன் கலப்பு; பேழ்வாய் புக்க பைங்குருதி; பின்பு இந்த அருளுதயங்கள்;
இந்த இனியவைகள்; இந்த விழாக்கள்; இந்தக் கிளர்களிப்புற்ற வெண்சலாகைகள்; இந்த மீன்பிடி படகுகள்; ஒலித்த பெருங் கிளர்வில் ஓங்கு கீதங்கள்; இந்த அட்டகாசமான துறைமுகங்கள்; இந்தப் புவிபடர் புகைகள்; இந்தக் காட்சிவான் விளிம்பில் வடிவெழும் நகரங்கள்; பெருநீர் ஆழத்தும் பரந்த வானத்துமாய்ப் பிறங்கிய இந்த நீலம்;
இந்தப் பயனுறு கூர்த்த தெளிவு; பிரபஞ்சத்தைப் பேரியல் இடமாய் மாற்றும் இந்தக் கடுமை; தானற்றவிடத்து அனைத்தும் பொன்றும் இந்த உவர்த்த உப்பு; இந்தக் கோபங்கள், ஆதுரங்கள்; இந்த அனைத்துமாய்த் தன்னில் ஆன ஒன்று; மாறுதலற்ற ஒன்றில் மிளிரும் எதிர்பாராத தருணம்; ஒன்றுபோல் என்றுமே சென்று விரியும் இந்த அதிசயம்; எனினும் முடிவற்ற வேறுபாடுற்ற தோற்றம்;
இந்த நிதானம் அந்த பூகம்பத்தின் பின்னர்; இந்த நரகங்கள், இந்தச் சொர்க்கங்கள் பிரம்மாண்டமாய் என்றும் கலக்குண்டவண்ணம்; இந்த முடிவற்றது, இந்த அளப்பற்றது - இவையனைத்தும் ஓர் ஆத்மாவில் வதியக் கூடும். அங்ஙனம் ஆயின் அவ்வாத்மாவை மேதை என்று அழைக்கிறோம்; அப்பொழுதுதான் உங்களுக்கு ஏக்கிலீஸ் தோன்றுகிறார், இசையா தோன்றுகிறார், ஜ்ழுவினால் தோன்றுகிறார், தாந்தே தோன்றுகிறார், மைக்கேல் ஆன்ஜலோ தோன்றுகிறார், ஏன் ஷேக்ஸ்பியர் தோன்றுகிறார். இந்த மனங்களைத் தரிசிப்பதும் ஒன்றுதான், மாபெரும் கடலைத் தரிசிப்பதும் ஒன்றுதான்.”
வில்லியம் ஷேக்ஸ்பியரைப் பற்றி, அவரது அத்விதீயமான மேதைமை பற்றிச் சொல்லவந்த விக்டர் ஹ்யூகோ முதலில் திருஷ்டிப் பூசணிக்காய் உடைப்பது போன்று ஒரு காரியம் செய்கிறார். ‘இதைத் தானே ரகசியமாக உங்களுக்குள் குசுகுசு என்று பேசி மகிழ்ந்து போகிறீர்கள்? இந்தா நீயே பார்.’ என்று அங்கங்கே பெரும் கல்விமான்கள் என்று பெயர்படைத்தோர் மிகவும் மேட்டிமைத்தனத்தோடு சொல்லியும் சொல்லாத மாதிரியும், பச்சையாக உமிழ்ந்தும் வந்துள்ள வசைகளையும், உள்குத்தான வசனங்களையும் ஒரு பெரும் வரிசையே ஆக்கி உரைத்து விடுகிறார். ஃபோர்ப்ஸ் என்பவர் சொல்லிவிட்டாராம். ‘ஷேக்ஸ்பியருக்குக் கடும் சோகநாடகத் திறமையும் இல்லை; இனிய ஹாஸ்ய நாடகத் திறமையும் இல்லை. அவருடைய சோகநாடகம் செயற்கையானது; அவருடைய இனிய நாடகமோ யதேச்சை உணர்ச்சியால் அமைந்தது.’ மகாமேதாவி ஜான்ஸனோ அதையே வழிமொழிந்து விட்டாராம். ‘அவருடைய சோக நாடகம் மிகுந்த உழைப்பால் மட்டுமே ஆகியது; அவருடைய இனிய நாடகமோ தன்னிச்சையான உணர்ச்சியால் ஏற்பட்டுவிட்ட ஒன்று.’ இரண்டு பேரும் சொல்லிவிட்டால் பிறகு என்ன? போதுமே. கிரீன் அடுத்தபடி போய் அவருடைய எழுத்தே அவருடையதுதானா? என்று சந்தேகம் மூட்டும் அளவிற்கே போய்விட்டார். அவ்வளவுதானே... ஷேக்ஸ்பியர் பிறருடையதைத் தம்முடையதாய்க் காட்டிக்கொள்பவர்... ஷேக்ஸ்பியர் காப்பியடிப்பவர்... ஷேக்ஸ்பியர் என்ன சொந்தமாய்க் கண்டுபிடித்தார் சொல்லுங்கள் பார்ப்போம்... ஷேக்ஸ்பியர் ஒரு காக்காய்... மற்றவர்களின் இறக்கைகளை எடுத்து ஒட்டவைத்துக் கொண்டு ஆட்டம் காட்டும் ஒரு காகம்... பிரபு சாலிஸ்பரியோ ஒரு படி மேலே போய், ‘ஷேக்ஸ்பியர் ஒரு வறட்சி மனம்; காட்டு மிராண்டித் தனமானது’. ஐயா ட்ரைடனோ கேட்கவே வேண்டாம்: ‘ஷேக்ஸ்பியருடையது எதுவும் ஒன்றும் புரியவே இல்லை’ சீமாட்டி லென்னோக்ஸ் கூறுகிறாராம்: ‘ஷேக்ஸ்பியர் சரித்திர உண்மையையே மாற்றி விட்டார்.’ இப்படி இப்படியாகப் பெருப்பெருத்த அறிஞர்கள் வரிசையில் வந்து சேர்ந்தார் போப். 1725 ல் ஐயா கண்டு பிடித்துச் சொல்கிறார் ஏன் ஷேக்ஸ்பியர் நாடகங்களை எழுதினார் என்று: ‘அன்றாடம் சாப்பிட வேண்டும் இல்லையா!’. அடடா!
எதிர்மறை எண்ணங்களையெல்லாம் எடுத்துக் கழித்த பின் அமைதியான வாசகர் மனத்தில் வில்லியின் மேதைமை, ஷேக்ஸ்பியரின் பெருமையை விதைக்கின்றார். வெறுமனே எழுத விக்டர் ஹ்யூகோவின் பேனா மறுக்கிறது. எழுத்து பரவசம் ஆகிவிடுகிறது.
‘’கவிஞன் அதே சமயம் சரித்திரக்காரனாகவும் இருக்க வேண்டும், தத்துவ அறிஞனாகவும் இருக்க வேண்டும். இந்த மூன்றாகவும் இருக்கின்றவர் ஷேக்ஸ்பியர். அது மட்டுமன்று. தேர்ந்த ஓவியக்காரனாகவும் இருக்கிறார். அதுவும் என்ன ஓவியம்! மகத்தான சித்திரம்! மெய்ம்மையில் கவிஞன் என்பவன் வெறுமனே சொல்லத் தெரிந்தவன் மட்டுமன்று. இதோ என்று அதீத உண்மைகளைக் காட்டத் தெரிந்தவன். கவிஞர்களிடம் ஒரு பிரதிபலிப்பான் ஒன்று இருக்கிறது. அதற்குப் பெயர் கூர்த்த கவனம். அவர்களிடம் ஒரு சாரமாய்ச் சுருக்கும் தந்திரம் இருக்கிறது. அதற்குப் பெயர் உணர்ச்சி. அவர்களிடமிருந்து வெளிப்படும் அகாத சாதனைகள் சுடர் கொண்டெழுந்து காலத்திற்கும் மனிதாயச் சுவர்களில் பேரொளி கொண்டு திகழ்கிறது... ஷேக்ஸ்பியரிடம் கடும்சோகம் இருக்கிறது. இனிய நாடகம் இருக்கிறது. தேவதைகளின் பூமி இருக்கிறது, சங்கீதம் இருக்கிறது, இளிவரலாம் ஏச்சு இருக்கிறது, அதிசாகச தெய்விகச் சிரிப்பு இருக்கிறது, பயங்கர பீதியும் கொடுமையும் இருக்கிறது; ஏன் ஒற்றை வார்த்தையில் சொன்னால் நாடகம் இருக்கிறது. இரு துருவங்களையும் தொட்டுக் கொண்டு நிற்பவர் ஷேக்ஸ்பியர். ஒலிம்பஸும் அவருக்கு உரிமை. தெரு ஓரத்து டென்டும் அவருக்கு உரிமை. சாத்தியமானது எதுவும் அவரிடமிருந்து கழன்று போக முடியாது.
”உங்களை அவர் எட்டிப் பிடித்து விட்டால் நீங்கள் அடங்க வேண்டியதுதான். எந்த தயவு தாட்சண்யத்தையும் அவரிடம் நீங்கள் எதிர்பார்க்க இயலாது. கண்டு கழிவிரக்கம் மட்டுமே கொள்ள முடிந்த கொடூரம் அவருடையது.’
‘’ஷேக்ஸ்பியர், அனைத்தினும் நோக்க, அடங்காத கற்பனை. இதைத்தான் முன்னமே சொன்னோம். சிந்தனையாளர்க்கு இது தெரிந்திருக்கும். அதாவது கற்பனை என்பதுதான் அகாத ஆழம். மனத்தின் எந்தத் திறனும் கற்பனையைப் போல் அத்தனை ஆழத்திற்குப் போகும் வல்லமை வாய்ந்ததன்று. மிக மிக ஆழத்திற்குப் போன பின்னரே விஞ்ஞானம் கற்பனையைச் சந்திக்கிறது.... கணக்கு கவிதையாக உருமாற்றம் ஆகிறது. மூளையற்ற படிப்பாளிகளின் அறிவியலில் எனக்கு நம்பிக்கை இல்லை. கவிஞன் தத்துவம் பேசுகிறான் கற்பனையில் ஆழ்ந்துபோய். அதனால்தான் ஷேக்ஸ்பியரிடம் அந்த மகோன்னத மேலாண்மை இருக்கிறது நிஜத்தின் மீது, அவர் இஷடப்படியெல்லாம் ஆடுகின்ற வித்தை, ஆட்டுவிக்கும் கலை; அவரது மனோரதங்களே கூட மெய்ம்மையின் வகைபாடுகளாய் வடிவெடுத்து நம் தியானத்தில் நிலைக்கின்றன.’
‘’ஷேக்ஸ்பியரின் எழுத்துகளை அணுகுங்கால் ஏதோ ஒரு புதிய முழு உலகமே திறந்தது போல் பெருங்காற்று வீசுவதைக் காணலாம். மேதை என்ற திக்குத் திகந்தமுற்ற பேரொளி, அதுவே ஷேக்ஸ்பியர். “எதிர்கோடிகளின் மொத்தம்” என்கிறார் ஜொனாதன் ஃபோர்ப்ஸ்.’’
***
No comments:
Post a Comment