Tuesday, September 1, 2020

தேனீரும் திருமூலரும்

 சரியாகத் தேனீர் குடிக்கும் போதுதானா இந்தப் பாட்டு கண்ணில் படவேண்டும்! நானே வெகுநாளாகத் தேடிக்கொண்டிருந்தேன். சாயா காலத்திற்கு ஒரு பாட்டு வேண்டுமே என்று.

‘ஊனீர் வழியாக உண்ணாவை ஏறிட்டுத்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே.’
(திருமந்திரம்)

திருமூலர் திருமந்திரத்தே அருள் பொதிந்த பாக்கள்:
‘அறிவு ஐம்புலனுடனே நான்றதாகி
நெறியறியாதுற்ற நீராழம் போல
அறிவு அறிவுள்ளே அழிந்தது போல
குறியறிவிப்பான் குருபரன் ஆமே.
வெளியின் வெளிபோய் விரவிய வாறும்
அளியின் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியின் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே.
எவ்வாறு காண்பான் அறிவுதனக் கெல்லை
அவ்வாறு அருட்செய்வன் ஆதியான் தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடும்
செவ்வானில் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம்.
சத்தமுதல் ஐந்தும் தன்வழித் தான் சாரில்
சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ
சுத்தவெளியில் சுடரில் சுடர்சேரும்
அத்தம் இதுகுறித்து ஆண்டுகொள் அப்பிலே.
விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கி ஒர்ஒப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.’
அருள்நூல்களைத் தியானிப்பதே ஒருதனி அனுபவம்.
*
தெய்வத்தின் திருநாமத்தை ஓதினால் நெஞ்சில் நிறைவது பராபரம். என்ன கருணை ஞானிகளுக்கு! மிக உன்னத உண்மைகளை மிக எளிமையாகப் பாடல்களாக்கி நமக்குக் குழந்தைக்கு ஊட்டுவது போல் ஊட்டும் தாய்க்கருணை மிகவும் வியப்பு!
‘அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்
நெஞ்சகத் துள்ளே நிறையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே.’
(திருமந்திரம்)

சத் சித் ஆனந்த ஸ்வரூபிணியான அம்மாவை திருமூலர் பாடும் அழகு ஆஹா!
‘அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பார்
அறிவார் அறிவுரு வாமவள் என்பார்
அறிவார் கருமம் அவளிச்சை என்பார்
அறிவார் பரனும் அவளிடம் தானே.’
*
அருமை! அன்னையே நின் அருள்!
‘நின்றாள் அவன்தன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுள் புகுந்துஉணர் வாகியே
நின்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.’
(திருமந்திரம்)
*
’அருள்பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர்’ என்று அறைகூவி அழைத்துத் திருமூலர் உபதேசிக்கும் அருள் வாழி!
‘தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயிர்வித்தாய்த் தந்த பதினாலும்
வானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதித் தன்மையும் ஆமே.’
அனைத்தும் அன்னை. பந்தம் மோக்ஷம், இகம் பரம் என்று அனைத்தும் ஆகி நின்றாள் அன்னை. ‘யாதுமாகி நின்றாய் காளீ! யாதிலும் நீ நிறைந்தாய்!’
*

No comments:

Post a Comment