Tuesday, September 8, 2020

ஜீவன் சித் பிரத்யகாத்மன்

 ஒரு சமயம் ஜீவன் என்கிறோம். ஒரு சமயம் ஆத்மன் என்கிறோம். ஒரு சமயம் சித் என்கிறோம். ஒரு சமயம் ப்ரத்யகாத்மா என்கிறோம். ஒரு சமயம் சேதநன் என்கிறோம். இந்தச் சொற்களுக்குப் பொருள் என்ன? மாற்றி மாற்றி உபயோகிக்கலாமா? அல்லது காரணம், அர்த்தம் என்பது சொற்களுக்குத் தனிப்பட இருக்கின்றதா?

ஜீவ என்னும் போது உயிர்வாழ்க்கை என்பது அங்கு அடிப்படைப் பொருளாக இருக்கிறது. ஆனால் விஷய இச்சைகளோடு சேர்ந்த நிலையில் ஜீவன் என்ற பெயர் அமைகிறது. ஒரு சுலோகம் சொல்கிறது: ‘யாவத் விஷய போகாசா ஜீவாக்யா தாவத் ஆத்மந:’ - எதுவரையில் விஷய சுகங்களில் இச்சையானது உண்டோ அதுவரையில்தான் ஜீவன் என்ற நாமதேயம்.’ விஷயசுகங்களில் இச்சை என்பது எதுவரையில் இருக்கும்? அவிவேகம் இருக்கும்வரையில் இருக்கும். எது நித்தியமானது, நிலைத்த தத்வம், எது நிலையற்றது, எது தன்னுடைய உண்மையான இயல்பு, எது தானாக பிரமையால் தனக்கே ஏறிட்டுக் கொண்ட தன்மை என்றபடியான உண்மையும் பொய்யும் பிரித்து அறியும்படியான விவேகம் என்பது ஒருவருக்கு மனத்தில் உதித்துவிட்டால் பின்னர் அவரிடம் ஆத்மா என்பதன் பிரகாசம் வெளிப்படத் தொடங்கிவிடுகிறது. விவேகம் முற்றி, வைராக்கியம் பூர்ணமாகும் பொழுது அதுவே பிரம்ம நிலையாக ஒளிவிடுகிறது. - ’விவேக வசதோ யாதா க்ஷயமாசா யதா ததா| ஆத்மா ஜீவத்வம் உத்ஸ்ருஜ்ய ப்ரஹ்மதாம் ஏதி அநாமாய:’
சித் மாத்ரமாய் ஒருவர் இருப்பாரேயாகில், மரணத்தைக் கடந்து, விஷய நினைவு உண்டாகும் மனமே நசித்த ஒருவரது நிலை எப்படிப் பட்டது? அந்த பரமாநந்த பெருநிலைக்கு எதை உவமையாக கூற இயலும்? - ‘சிந்மாத்ரத்வம் ப்ரயாதஸ்ய தீர்ண ம்ருத்யோரசேதஸ:| யோ பவேத் பரமாநந்த: கேநாஸாவுபமீயதே’ .
அறிவுமயமாகவே இருக்கும் நிலையை சித் என்னும் பெயர் சுட்டுகிறது. இத்தகைய சித் மயமாக இருக்கும் தன்மையை உடையது என்பதால் சேதநன் என்று பெயர். ஹிந்துமத சாஸ்திரங்கள் உலகிலுள்ள பொருட்களையே இரு பிரிவாகப் பிரிக்கின்றன. ஒரு விதமான பொருட்கள் தங்களுடைய இருப்பைத் தங்களுக்கே உணர முடியாத, தமக்கே தாம் பிரகாசிக்காத தன்மை உடையன. அந்த வகைப் பொருட்களுக்கு ‘பராக்’ என்னும் பெயர். மற்றொரு வகை பொருட்களோ தமக்குத் தாமே ஒளிரும் தன்மை கொண்டன. அந்தவகைக்கு ப்ரத்யக் என்னும் பெயர். இந்த வகையில் இரண்டு பொருட்கள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று உயிர்ப்பொருள் என்னும் ஜீவன் அல்லது சித். மற்றொன்று பரம்பொருள் என்னும் பிரம்மன். இவ்வாறு தனக்குத் தானே ஒளிதரும் இயல்பு கொண்டது என்னும் பிரத்யக் தன்மை கொண்ட ஆத்மன் என்பதையே ப்ரத்யகாத்மன் என்னும் பதம் சுட்டுகிறது. எனவே ஜீவன், ஆத்மன், சித், ப்ரத்யகாத்மன் என்பதெல்லாம் ஒன்றையே குறித்தாலும் சொல்லின் காரணங்கள் தத்துவத்தின் பல அம்சங்களை உணர்த்துகின்றன. காயத்ரி தேவி நம் அறிவை நன்கு தூண்டி நடத்தட்டும். எது நிலைத்த தத்வமோ அதிலேயே நம்முடைய ஆர்வம் ஓங்கட்டும். ஆயாது வரதா தேவீ!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்.
***

No comments:

Post a Comment