Tuesday, September 1, 2020

பக்தி யோகம் என்றால் என்ன?

 நாம் ‘பக்தி யோகம்’ என்றால் ஒரு கருத்தை மனத்தில் கொண்டிருக்கிறோம். விக்ரஹ ஆராதனை என்றால் ஒரு கருத்தை மனத்தில் வைத்திருக்கிறோம். இந்தக் கருத்துகள் எல்லாம் பெரும்பாலும் போகிற வாக்கில் பலர் பலவிதமாகச் சொல்ல முயற்சிப்பதன் இடையில் பல அபிப்ராயங்களின் சராசரிக் கருத்தாய் ஒரு வடிவில் நம் மனத்தில் படிந்தவை. அவசர அடி உலகில் இஃது இயல்புதான் என்றாலும் நாம் பல கருத்துகளை வாழ்க்கையின் எப்பகுதியிலேனும் மீண்டும் எடுத்து நாம் கொண்ட கருத்து மிகச் சரியானதுதானா என்று சரிபார்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு என்றுமே உண்டு. தெளிவற்ற மேம்போக்கான கருத்துகளே ஏற்படக் கூடாது என்று சொல்ல முடியாது. ஆனால் அந்தத் தெளிவின்மையே அசைக்க முடியாத தீர்மானமான கருத்து என்ற அடம் நம்மிடம் ஏற்படாமல் இருக்க நாம் தொடர்ந்து இந்த வீட்டுப் பாடம் செய்தே தீர வேண்டும். சொல்லப் போனால் இன்றைய சூழலில் நம்மால் இயன்ற தார்மிக வழி இதுவாகும். ஞானத் தெளிவு பெறுவதற்கான உச்சக் கட்ட சாத்தியங்களைச் சூழவும் வைத்துக் கொண்டு நாம் சாக்கு போக்கு சொல்ல முடியாத ஒரு விஷயம் என்னவென்றால் கருத்துத் தெளிவின்மை என்பதாகும். இவ்வாறு எனக்குத் தோன்றுவதற்குக் காரணம் கபிலர் தம் தாயான தேவஹூதியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய தாய் எத்தனையோ ஆத்மிக விஷங்களைத் தம் மகனிடமிருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறார். தம் தாய்க்கு கபிலர் அளிக்கும் விளக்கமாக ஸ்ரீமத் பாகவதத்தில் வருவது இந்தப் பகுதி:

”பிறர் உடலில் உறையும் என்னைப் பகைப்பவனாய், தன்னையே போற்றிக் கொள்பவனாய், பேதபாவனை உள்ளவனாய் உள்ளவனுடைய மனது ஒரு போதும் சாந்தியை அடையாது.
“.. பலவகையான திரவியங்களைக் கொண்டு பல கிரியைகளின் மூலம் விக்கிரகத்தில் என்னை அர்ச்சித்த போதிலும் ஜீவ சமுதாயத்தை அவமதிப்பவர்களாயின் அவர்கள் பூஜையால் நான் சந்தோஷமடையமாட்டேன்.
“எல்லாப் பிராணிகளிடத்தும் உறையும் என்னைத் தனது உள்ளத்தில் எதுவரை கண்டுகொள்ளவில்லையோ அதுவரை (அப்படிக் காண்பதற்குச் சாதனமாக) விக்கிரங்கள் முதலியவற்றில் ஈசுவரனாகிய என்னைத் தனது கடமையைச் செய்துகொண்டு ஒருவன் பூஜிக்க வேண்டும்.”
த்விஷத: பரகாயே மாம்
மாநிநோ பிந்ந தர்சின: |
பூதேஷு பத்தவைரஸ்ய
ந மந: சாந்திம் ருச்சதி ||
அஹம் உச்சாவசைர் த்ரவ்யை:
க்ரியயோத்பந்நயாநகே |
நைவ துஷ்யேSர்ச்சிதோSர்ச்சாயாம்
பூதக்ராம அவமாநிந: ||
அர்ச்சாதாவர்ச்சயேத் தாவத்
ஈச்வரம் மாம் ஸ்வகர்ம க்ருத் |
யாவந்ந வேத ஸ்வஹ்ருதி
ஸர்வபூதேஷு அவஸ்திதம் ||
(ஸ்ரீமத் பாகவத ஸாரம் வால்யூம் 1, ஸ்ரீஅண்ணா, ஸ்ரீராமகிருஷ்ண மடம், 3.29.23 - 25 )
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment