Tuesday, September 8, 2020

விடியற் காலையில் எழுப்பி இப்படி ஒரு கேள்வி!

 பல வருஷங்களுக்கு முன்னர் காலை ஐந்து மணி இருக்கும். காலிங் பெல். இந்த நேரத்தில் யார் நம்மைப் பார்க்க வருவது... வாரிச் சுருட்டி எழுந்து கண்கள் துயில்கொஞ்ச, பார்த்தால் கீழ் வீட்டுப் பெரியவரும், அம்மாளும் ‘ ‘அபரோக்ஷானுபூதி’ இருக்கா?’ என்று கேட்டார்கள். ஒருகணம் கதி கலங்கிவிட்டது. எங்கோ வெம்மாயக் காட்டில் அலைந்து உலையும் ஜீவனை, காரணமற்ற பகவத் கிருபையின் காரணமாக திடீரெனா ஒரு கணத்தில் நிறுத்திக் கேட்கும் கேள்வி போல் அந்த விடிவுக்கு முன் இருட்டில், தூங்கி வழியும் என்னை நோக்கி முகத்தில் அறைந்து விழுந்த கேள்வியாக... என்னது... என்று நிலை குலைந்து... ஒரு மாதிரி சுதாரிக்கும் முன்னர் அவர்களே பாவம்... இல்லை... சுவாமி ஒருவர் இங்க பக்கத்துல இருக்கற கோயிலில் காலையில் அபரோக்ஷானுபூதி வகுப்பு எடுக்கிறார். அதுக்குப் போய்க்கொண்டு இருக்கிறோம். அதான் உங்க கிட்ட ஸ்ரீராமகிருஷ்ண மடம் போட்ட தமிழ் அல்லது ஆங்கில அபரோக்ஷானுபூதி புஸ்தகம் இருக்கான்னு... கேட்டோம். நீங்க வைத்திருப்பீர்கள் என்று எங்காத்து பாட்டி சொன்னார்.

அப்பொழுதுதான் இடம்மாற்றி வந்து இன்னும் பிரிக்காத புத்தகப் பெட்டிகளில் எந்தப் பெட்டியில் இருக்கிறது என்று... சரி இப்பொழுது எடுப்பது கடினம் என்று.. பொதுவாக இல்லையே என்று சொல்லி வைத்தேன். உண்மையும் அதுதானே! இன்றும் அவர்கள் கேட்ட அந்தக் காலைப் பொழுதும், அந்தக் கேள்வியும், அது முகத்தில் அறைந்த விதமும் இன்றும் நினைவில் அப்படியே இருக்கிறது. அந்த காலிங் பெல் ஓசையும் கூட. அமானுஷ்யமான கணம்!. ஒருவரை விழிக்கச் செய்யும் ஒருவித ட்ஸென் மோமெண்ட். முன்பின் தெரியாத ஒருவர் விடியாத காலையில் எழுப்பி துயில்கலையாத கண்கள் பிதுங்கும் படியாக கேள்வி:
‘அபரோக்ஷானுபூதி இருக்கா?’.
குரு ஓர் உருவத்தில்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. நம்மை விழிக்கச் செய்யும் உருவம் உருவமற்ற அனைத்தும் குரு தத்துவம்தான்.
குரு: ப்ரஹ்மா குரு: விஷ்ணு:
குருர் தேவோ மஹேஸ்வர:
குருர் சாக்ஷாத் பரம்ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment