Tuesday, September 1, 2020

ஆழ்வார்களின் பெருமை

 ஆழ்வார்களின் பெருமை அளவிடற்கரியது. ஆழ்வார்கள் என்ற சொல்லின் பொருள் யாது? என்பதை திருமழிசை கோயில் கந்தாடை அண்ணாவப்பங்கார் ஸ்வாமி விளக்குகிறார் தமது பழநடை விளக்கம் என்னும் நூலில் :

“நாராயணனுடைய மகிமைகளைக் கரைகண்டு அதிலே முழுகிக் கீழேகீழே ஆழ்ந்து போருகிறார் ஆகையாலே இவர்களுக்கு ஆழ்வார்கள் என்று பெயர்.”
‘தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை” என்று தெருளுற்று இருக்கையே ஆழ்வார்களின் சீர்மை என்று ஸ்ரீஉபதேச ரத்தின மாலை பேசுகிறது. உலக விஷயங்களில், உலகக் கடல்களில் ஆழ்ந்து போகப் போக மயக்கமே மிஞ்சும். ஆனால் பகவத் விஷயத்தில் ஆழ்ந்து போகப் போகத் தெளிவே கூடும். அந்தத் தெளிவே ஒரு வடிவு எடுத்தால் எப்படி இருக்குமோ அந்தச் சீர்மை ஆழ்வார்களுடையது என்றால் அவர்கள்தாம் ‘ஆழ்வார்கள்’.
‘ஆழ்வார்கள் ஏற்றம்’ என்று சொல்லும் பாட்டில் ஸ்ரீஉபதேச ரத்தின மாலையின் வியாக்கியானமான ஸ்ரீபிள்ளை லோகம் ஜீயரின் உரை அந்த ஏற்றமாவது யாது என்று கூறும் பொழுது ஸ்வயத்ந சாத்ய ஜ்ஞாநரான ருஷிகளைப் போலன்றிக்கே அவனுடைய ஆகஸ்மிக க்ருபையாலே ‘மயர்வற மதிநலம் அருளப்பெற்ற மாஹாத்ம்யத்தை உடையராய் இருக்கை என்றும், ப்ராப்ய ஸித்தியைப் பெற்றபோது பெறுகிறோம் என்று ஆறியிருந்து லோக யாத்ரையிலும் கண்வைத்திருக்கை அன்றிக்கே அவனைப் பெற்றல்லது தரியாத பரமபக்தியை உடையராய் இருக்கை என்றும் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
என்னைப் போன்று குறைகளும், தோஷங்களுமே நிறைந்திருக்கும் அல்ப ஜீவர்களுக்கு இதைப் பார்த்து அயர்வும், மனத்தொய்வுமே ஏற்படுகிறது. காரணமற்ற அவன் அருளே கதி.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
*
நம்மாழ்வாரின் சொற்கள் எப்படிப் பட்டன?
“நிரம்பின எரி நெளிக்குமாபோலே
நிமிகிற வாய்கரை
மிடைந்து புறப்பட்ட சொற்கள்”
(ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள்)
தமிழ் நடம் பயிலும்.

நம்மாழ்வார் யார்? யார் என்று சொல்வது! அவருடைய திருவாய்மொழியின் தன்மை என்ன? என்ன என்று சொல்வது!
’சொல் என்கேனோ?
முழுவேதச் சுருக்கு என்கேனோ?
எவர்க்கும் நெல் என்கேனோ?
உண்ணும் நீர் என்கேனோ?
மறை நேர் நிறுக்கும் கல் என்கேனோ?
முதிர்ஞானக் கனி என்கேனோ?
புகல வல் என்கேனோ?
குருகூர் எம்பிரான் சொன்ன மாலையையே?’
(கம்பர்)
*
நம்மாழ்வாரின் தமிழ் எத்தகையது? அஃது..
‘உயிருருக்கும்
புக்கு உணர்வுருக்கும்
உடலத்தில் உள்ள செயிர் உருக்கும்
கொண்ட நம் தீங்கு உருக்கும்
திருடித் திருடித் தயிருருக்கும்
நெய்யொடு உண்டான் அடிச் சடகோபன்
சந்தோடு அயிருருக்கும்
பொருநல் குருகூர் எந்தை அம் தமிழே.’
(கம்பர்)
*
நம்மாழ்வாராகிய சடகோபன் மொழித்தொகை என்பது அமுதம். யாருக்கு அமுதம்? கம்பர் பட்டியலிடுகிறார்:
‘சித்தர்க்கும்
வேதச்சிரம் தெரிந்தோர்கட்கும்
செய் தவர்க்கும்
சுத்தர்க்கும்
மற்றைத் துறை துறந்தோர்கட்கும்
தொண்டு செய்யும் பத்தர்க்கும்
ஞானப் பகவர்க்கும்’
அவ்வளவுதானா?
அவசரப் படாதே கேள்.
‘ஞானப் பகவர்க்குமேயன்றிப்
பண்டு சென்ற முத்தர்க்கும் இன்னமுதம்
சடகோபன் மொழித் தொகையே.’
*
திருவாய்மொழி பயின்றால் என்ன ஆகிறது? பயிலும் வைணவர்பால் அஃது செய்யும் குணங்கள்?
‘உயிர்த்தாரையில் புக்குறு குறும்பாம்
ஒருமூன்றனையும் செயிர்த்தார்
குருகைவந்தார் திருவாய்மொழி
செப்பலுற்றால்...
மயிர்த்தாரைகள் பொடிக்கும்
கண்கணீர் மல்கும்
மாமறையுள் அயிர்த்தார்
அயிர்த்த பொருள் வெளியாம்’
(கம்பர்)
*
மகிழ்மாறன் செய்யுள் செய்தார் திருவாய்மொழி.
அந்தச் செய்யுளாகிய திருவாய்மொழியைத் தியானிக்கும் தகைமை கொண்டோரான மெய் யோகிகளுக்கோ அவர்களுடைய ஞானமேதான் அவர்களுடைய கண், மனம், செவி எல்லாம். அவ்வாறு ஞானமே கண்ணாக, மனமாக, செவியாக் கொண்டு அந்த மெய்யோகிகள் திருவாய்மொழியைத் தியானிப்பதாகிய தவத்தைச் செய்யும் பொழுது என்ன நடந்தது?
’பண்ணும் தமிழும் தவம் செய்தன
பழநான்மறையும் மண்ணும் விசும்பும்
தவம் செய்தன
மகிழ்மாறன் செய்யுள் எண்ணும் தகைமைக்குரிய
மெய்யோகியர் ஞானமென்னும் கண்ணும்
மனமும் செவியும் தவம் செய்த காலத்திலே.’
(கம்பர்)
*
’பழநடை விளக்கம்’ என்பது ஸ்ரீ உ வே திருமழிசை கோயில் கந்தாடை அண்ணா அப்பங்கார் ஸ்வாமி செய்தருளியது. ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகளின் காலத்தைத் தொடர்ந்து ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் சூழல், பெருமை ஆகியவைகளைச் சொல்லும் சில நூல்களில் ஒன்று இந்த பழநடை விளக்கம்.

’ஆண்டாள்’ என்றால் என்ன பொருள்? எக்காரணம் பற்றி ‘ஆண்டாள்’ ‘ஆழ்வார்’ என்ற பெயர்கள் அமைந்தன என்பது பற்றியும் இந்த ஸ்வாமியே பட்டு கத்தரித்தால் போல் தெளிவாகச் சொல்கிறார்.
“நாராயணனுடைய மகிமைகளைக் கரைகண்டு அதிலே முழுகிக் கீழேகீழே ஆழ்ந்துபோருகிறார் ஆகையாலே இவர்களுக்கு ஆழ்வார்கள் என்று பெயர்.
”இவர்களிலே இனி சொல்லப் போகிற கோதையும் நாயகனான நாராயணனுடைய கல்யாண குணங்களாகிய அம்ருதக்கடலிலே முழுகிக் கீழேகீழே ஆழ்ந்து போருமவள் ஆகையாலே இவளுக்கு ஆண்டாள் என்று பெயர். ஆழ்வார் என்று ஆண்களைச் சொல்லும் சொல்லு. ஆண்டாள் என்று பெண்ணைச் சொல்லும் சொல்லு...”
ஆழ்வார், ஆழ்ந்தாள் என்று இயல்புறக் காட்டிய பின்னும் இனியும் குழப்பமுண்டோ?
*

No comments:

Post a Comment