Tuesday, September 1, 2020

மாறன் கோவை

 சுமார் 334 வருஷங்களுக்கு முன்னர் ஒரு மகான் இருந்தார். அவரின் பெயர் ஸ்ரீமான் வாலப்பிரமசரிய இராமவிரதர் என்பதாகும். இஃது அவருக்குச் சிறப்புப் பெயாராக அமைந்தது. அவரது இயற்பெயர் ஸ்ரீவேங்கடத்துறைவான் கவிராயர் என்பதாகும். வேளாளர் குலத்தில் உதித்தவராய் வாழ்க்கை முழுவதும் பிரமசரிய விரதமே பூண்டு, கல்விக் கடலாய், இலக்கண இலக்கியங்களை நல்லாசிரியர்பால் ஐயந்திரிபறக் கற்று, ஸ்ரீராமபிரான் மீது அசஞ்சல பக்தி பூண்டவராய், ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீ உ வே ஆத்தான் ஆசாரியர் என்பவரிடத்தில் ஆச்ரயித்துப் பஞ்ச ஸம்ஸ்காரமும் பெற்று, திவ்யப் பிரபந்தங்களும், அவற்றின் வியாக்கியானங்களும், ஸ்ரீவைஷ்ணவ ஸத்சம்பிரதாய கிரந்தங்களையும் ஆசாரிய ஸந்நிதியில் கேட்டுத் தெளிந்து, பிரபந்ந அனுஷ்டானத்தில் மிக்கவராய், வாலபிரமசரிய ராமவிரதர் என்னும் சிறப்பு பெயரும் பெற்று விளங்கினார். ஆழ்வார் திருநகரியில் ஆழ்வாருக்குத் திருமஞ்சன கைங்கரியத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவராய் இருந்தார்.

‘தேரீர் என்னுள்ளம் குருகூர்ச் சொல் வீறன் திருமஞ்சன
நீரீர வாடை உண்டார் நாவுக்கே மற்ற நீரினிதோ’
என்று இவர்தாமே பாடுகின்றார்.
இவர் மாறன் சடகோபன் மேல் கோவை பிரபந்தம் பாடியுள்ளார். 526 செய்யுட்கள் அடங்கிய நூல். 1906 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் பூளைமேடு ஸ்ரீ மு வேணுகோபாலசாமி நாயுடு என்பவாரால் பதிப்பித்துக் கொண்டுவரப் பட்டிருக்கிறது.
கோவை என்னும் பிரபந்த வகை அகத்துறையின்பாற் பட்டது. தலைவனும் தலைவியும் ஒருவருக்கொருவர் சந்தித்து இதயம் மாறிப் புக்கு இல்லறம் புகும் நிலைவரையில் மனத்தின் நிகழ்வுகளைப் பல துறைகளாக ஆக்கி, காட்சி, ஐயம் என்றபடி நாடகப் பண்போடு அமைத்துக் காட்டுவது. நம்மாழ்வாரின் முதல் பிரபந்தமே திருவிருத்தம் என்னும் கோவை பிரபந்தமாகும். ஆனால் அஃது நூறு பாட்டுகள் மட்டுமே கொண்டது. மாறன் கோவையில் ஸ்ரீமான் வாலப்பிரமசரிய ராமவிரதர் நம்மாழ்வாரையே தமது தலைவனாகவும், தாம் அவரிடத்தும், அவரது திருவாய்மொழியிடத்தும் ஈடுபடும் தலைவியாகவும் வைத்துப் பாடுகிறார். தமக்கு உள்ள ஆழ்வார் பக்தி, திருவாய்மொழியில் ஆழங்கால்பட்ட தோய்வு அனைத்தையும் அழகான அகத்துறைப் பாடல்களின் மூலம் வெளியிடுகிறார். உதாரணத்திற்கு ஐயம் என்னும் துறையின் கீழ் இவர் பாடும் பாடல்:
’பூமேவு வாச மகிழலங் காரப் புயப்புனிதர்
தாமேவு தென்குரு கூர்நில மோ சங் கணித்துறைசூழ்
கோமேவு சங்கத் திரைக்கட லோ தமிழ்க் கோலவெற்போ
மாமேவும் ஆசனப் போதோ பதியிம் மதிநுதற்கே.’
அதுபோல் ‘தெய்வத்திறம்பேசல்’ என்னும் துறையில் இவர் அருளும் பாட்டு அமுதமே ஆகும்.
‘வானில் கலந்தொளிர் மின்னையும்
பூவின் மணத்தையும் பைந்
தேனில் கலந்த சுவையையும்போல்
தெய்வம் சேர்த்ததெம்மைக்
கானில் கலந்த வகுளாபரணன் கவின்குருகூர்
யானில் கலந்த நலம்பிரிப்பார் எவர் ஏந்திழையே.’
தலைவனோடு கானில் கலந்த தலைவியின் நினைவு அகத்துறை. ஆனால் இவர் நம்மாழ்வாரோடு ஒன்றறக் கலந்த ’கான்’ என்பது தமிழாரணம் என்னும் திருவாய்மொழி. திருவாய்மொழியில் தோயுங்கால் நம்மாழ்வாரோடு, அவருடைய கிருஷ்ண திருஷ்ணா தத்துவத்தோடு ஒன்றறக் கலக்கும் பேறுடையாரின் இறும்பூதை அப்படியே பாட்டாகி இருப்பது மிகவும் இனியது.
***

No comments:

Post a Comment