Tuesday, September 8, 2020

வேதங்கள் காட்டும் ஏழு யோகபூமிகள்

 யோகத்தில் ஏழு பூமிகளைக் குறிப்பிடுவதுண்டு. அந்த ஏழு பூமிகள் என்ன என்ன என்பதை மனுவானவர் வரிசைப் படுத்திக் கூறுகிறார். யோக பூமி, பூமிகை என்றால் மனப்பக்குவத்தின் ஸ்தானம் என்று பொருள் கொள்ளலாம். நன்கு முதிர்ந்த உள இயல் படிப்புகள் பழங்காலம் முதற்கொண்டே வளர்ந்திருப்பதுவே நெடிய பாரம்பரிய உத்வேகத்தைக் குறிப்பதாகும். நாம் நம் காலத்தில் சிறுசிறு கருத்துகளாகவாவது இவற்றைத் தெரிந்து கொண்டால் பின்னர் ஆர்வம் கிளரும் பொழுது நன்கு தெரிந்து கொள்ள ஏதுவாகுமே என்று தருகிறேன். முதலில் தமிழில். பிறகு சம்ஸ்க்ருத மூலம் ஆர்வம் உடையோருக்காக. ஸ்ரீராமகிருஷ்ண கதாம்ருதத்தில் குருதேவர் சொல்வதாக வரும். வேதங்கள் ரீதியிலான சப்த பூமிகள் என்று. யோக சாஸ்திரத்தில் ஆறு சக்கரங்கள், ஏழு என்று கூறுவதுண்டு. மூலாதாரம், மணிபூரகம், ஸ்வாதிஷ்டானம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம் என்று. யோக சக்கரங்களைச் சொல்லும் தருணத்தில் வேதம் சொல்லும் சப்த பூமிகள் என்று குருதேவர் சொல்லும் பொழுது சப்த பூமிகள் என்னவாக இருக்கும் என்ற எண்ணம் எழுந்ததுண்டு. மனுவின் சுலோகங்களில் அந்த சப்த பூமிகளுக்கான வரிசையும் விளக்கமும் கிடைத்தன. காயத்ரிமாதா அருள் செய்வாளாக! ‘ஆயாது வரதா தேவீ அக்ஷரம் ப்ரஹ்மஸம்ஹிதம்’.

முதல் யோக பூமி - சாஸ்த்ர அப்யாஸம், சாது சங்கம் ஆகியனவற்றில் ஈடுபாடு; இரண்டாவது யோக பூமி - விசாரணை; மூன்றாவது - அஸங்கம்; நான்காவது - விலாயனீ, வாஸனைகள் லயமாவதால் விலாயனீ என்று பெயர். ஐந்தாவது - சுத்த ஸம்வித் வடிவமாய ஆனந்த ரூபா, பாதி விழிப்பும், பாதி நித்திரையும் கொண்டது போல் உள்ள நிலையில் ஜீவன்முக்தர் நிலைபெறுகிறார்; ஆறாவது - அஸம்வேதனீ, ஆனந்தமே முழுவதுமாய் ஸுஷுப்திக்குச் சமமாக இருப்பது; ஏழாவது பூமிகை - ஸமதை, விஷயத்யாகம் நிறைந்த நிலை; முற்றிலும் ஸுக ரூபம். முக்தியே வடிவாம் நிலை.
சாஸ்த்ர ஸஜ்ஜனஸம்பர்க்கை: ப்ரஜ்ஞாம் ஆதௌ ப்ரவர்த்தயேத் ப்ரதமா பூமிகா
விசாரணா த்விதீயா ஸ்யாத் த்ருதீயாSஸங்க நாமிகா
விலாயனீ சதுர்த்தீ ஸ்யாத் வாஸநாவிலயாத்மிகா
சுத்தசம்விந்மய ஆநந்தரூபா பவதிபஞ்சமீ அர்த்தஸுப்த ப்ரபுத்தாபோ ஜீவந்முக்தோSத்ர திஷ்டதி
அஸம்வேதநரூபா ச ஷஷ்டீ பவதி பூமிகா ஆநந்தைக கநாகாரா ஸுஷுப்திஸத்ருசீ ஸ்திதி:
துர்யாவஸ்தோபசாந்தா ச முக்திரேவ ஹி கேவலம்
ஸமதா ஸ்வச்சதா சௌம்யா ஸப்தமீ பூமிகா பவேத்.
(மநுவின் சுலோகம்: ஸ்ம்ருதிமுக்தாபலம், ப்ரஹ்மஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்த்ரிகள்)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment