Tuesday, September 1, 2020

திருவாய்மொழியும் வேதக் கணக்கும்

 பிரபந்ந குல திலகராகிய நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் சதுர்வேத துல்யமான எண்ணிக்கை அழகு ஒன்றை அமைத்து வைத்திருக்கிறார் என்பதை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறார் ஸ்வாமி வேதாந்த தேசிகன். ரிக்வேத சாகைகள் 21. சாமவேத சாகைகளோ 1000. யஜுர் வேத சாகைகள் 100. அதர்வ வேத சாகைகள் 9. அதர்வ வேத சாகைகள் 9 என்றாலும் பிப்பலாத சாகையில் ப்ரச்ந உபநிஷத் மட்டுமே கிடைப்பதால், நடைமுறையில் 8 என்றும் கொள்ளலாம். இப்பொழுது ஒரே சுலோகத்தில் எப்படி இந்தக் கணக்குக்குள் பெரும் அர்த்தங்களைச் சூசகமாகத் தெரிவிக்கிறார் கவி தார்க்கிக சிம்ஹம் என்று பார்ப்போம்.

திருவாய்மொழியில் முதல் 21 பாட்டுகளில் சகல வேதாந்த அர்த்தங்களையும் அடக்கிச் சொல்லி விடுகிறார். இஃது 21 சாகைகள் கொண்ட ரிக்வேதத்தை ஒப்பு உடையதாய் இருக்கிறது. 1000 சாகைகளாக வழங்கும் இசைகொள் வேதம் ஆன சாம வேதம் போலே 1000 பாக்களால் பகவானின் பெருமையைப் பாடிப் பரவுகிறது திருவாய்மொழி. ஒவ்வொரு பத்து பாசுரங்களும் ஓரொரு அர்த்தத்தை ப்ரகாசப் படுத்துதாய் 100 திருவாய்மொழிகள் என்ற அமைப்புடன் பொருள் விளக்கம் செய்கிறது நம்மாழ்வாரின் திவ்ய ப்ரபந்தம். இஃது 100 சாகைகளுடன் வழங்கும் யஜுர் வேதத்தோடு ஒப்புமை கொண்டதாய் இருக்கிறது. இப்பொழுது அதர்வ வேதம் வரும்பொழுதுதான் கவி தார்க்கிக சிம்ஹத்தின் மேதைமை மிகப் பொலிந்து அழகூட்டுகிறது. காவிய சாஸ்திரத்தில் 9 ரஸங்கள் என்பார்கள். இல்லை இல்லை 8 ரஸங்கள்தாம் என்று சொல்வோரும் உண்டு. சாந்த ரஸம் என்பதை ஒரு தனி ரஸமாகக் கொள்ளலாம், கொள்ளக் கூடாது என்பதால் இந்தக் கணக்கு வித்யாசம். எப்படிக் கொண்டாலும் சாந்த ரஸத்தில் அனைத்து ரஸங்களும் அடக்கம் என்பது காவிய சாஸ்திரக்காரர்களுக்கு உடன்பாடு. (எட்டா ஒன்பதா என்ற கணக்கு வேறுபாடு ரஸங்கள் விஷயத்திலும், அதர்வ வேத சாகைகள் விஷயத்திலும் துல்யம்) அதுபோல் ’பற்றிலையாய் அவன் முற்றில் அடங்கே’ என்று சாந்த ரஸமே பிரதானமாகப் பாடும் நம்மாழ்வாரின் திவ்ய ப்ரபந்தத்தில், உள்ளே அனைத்து ரஸங்களும் அடங்கிப் பொலிவதைக் காணலாம். இந்த விதத்தில் திருவாய்மொழி அதர்வ வேதத்தோடு ஒப்புமை கொண்டதுவாய்த் திகழ்கிறது என்று தாமும் ரஸித்து நம்மையும் ரஸனைக் கடலில் ஆழ்த்துகிறார் ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகர் தமது த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியில்.
’ஆதௌ சாரீரகார்த்தக்ரமமிஹ விசதம் விம்சதி: வக்தி ஸாக்ரா
ஸங்க்ஷேபோSஸௌ விபாகம் ப்ரதயதி ச ருசாம் சாரு பாடோபபந்நம் |
ஸம்யக்கீதாநுபத்தம் ஸகலமநுகதம் ஸாமசாகாஸஹஸ்ரம்
ஸம்லக்ஷ்யம் ஸாபிதேயை: யஜுரபி சதகை: பாத்யதர்வா ரஸைச்ச ||’
***

No comments:

Post a Comment