ஸ்ரீமத் பாகவதத்தில் ரஸகனமான சில இடங்கள்.
ஸ்ரீமத்பாகவதத்தைச் சுகருக்குப் படிப்பித்து வைத்தார் வேத வியாசர் என்கிறது ஒரு சுலோகம்.
’நிவ்ருத்தி நிரதம் முநி ஆத்மஜம் சுகம் அத்யாபயாமாஸ’ என்னும் சொற்கோவைகள் மிகவும் ரஸகனமானவை.
பிறந்தது தொடங்கி பற்றின்மையில் நிலைத்தவர் பரமஹம்ஸராகிய ஸ்ரீசுகர். நிவ்ருத்தி நிரதம்முநி:
தமது புத்திரர் என்றாலும் வேத வியாசரும் வியக்கும் பெற்றியர் ஸ்ரீசுகர். தமக்குப் பிறந்தவர் என்பதை ஆத்மஜம் என்னும் பதம் குறிக்கிறது. ஒவ்வொரு தகப்பனுக்கும் தன் புத்திரனுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்பது கடமைதானே! வியாசர் தம் மகனைப் படிப்பித்தல் நியாயம்தானே. ஆனால் சிறுவர்கள் படிப்பதற்கு ஆரம்ப காலங்களில் மனம் நன்கு பொருந்தாமல் வேடிக்கையில் கவனம் தவறிக் கொண்டிருந்தாலும் தமப்பர் என்பவர் அதற்கெல்லாம் சலித்துக் கொள்ளாமல் குழந்தைகளை மீண்டும் மீண்டும் படிப்பில் ஒருமுகப் படுத்திக் கற்பிப்பதுதானே உலக வழக்கம். அதுபோல் வியாசரும் சுகருக்குப் பாடம் சொல்லி வைக்கச் சிரமப்படுகிறாரோ என்று ஒரு த்வனிப் பொருளை ‘அத்யாபயாமாஸ’ என்னும் பதம் காட்டுகிறது.
இல்லாவிட்டால் வெறுமனே சுகர் வியாஸரிடம் ஸ்ரீபாகவதத்தைத் தெரிந்து கொண்டார். அல்லது அவரிடமிருந்து இதைப் பெற்றார் என்று சொல்லிப் போகலாமே. என்னமோ மிகவும் குறிப்பாக ‘படிப்பித்து வைத்தார்’ என்று பட்ட சிரமத்தையெல்லாம் ஒருங்கு காட்டுவதைப் போல என்னத்துக்கு ‘அத்யாபயாமாஸ’? அப்படி என்ன கல்வியில் ஒரு தடவை சொன்னாலே கேட்டுத் தரிக்கும் ஏகசந்தக்ராஹி அல்லவா ஸ்ரீசுகர். இவர் அவருக்குக் கூடச் சொல்ல வேண்டாமே. தாமே தமக்கு இரைந்து பாடிக்கொண்டு போனாலே ஸ்ரீசுகரின் மனத்தில் டேப் ரிகார்டர் போல் அப்படியே படிந்துவிடப் போகிறது. அவ்வாறிருக்கும் பொழுது என்னத்துக்கு என்னமோ கஷ்டப்பட்டுக் கற்பிப்பது போல ‘அத்யாபயாமாஸ’ எனும் பதம்? இதில்தான் ஸ்ரீசுகரின் முழு ஆளுமையைக் காட்டிவிடுகிறது ஸ்ரீமத்பாகவதம்.
அதாவது வேத வியாஸர் ஸ்ரீசுகருக்குக் கற்பிக்கிறார் என்பது உண்மைதான். அதில் மிகவும் கஷ்டப் பட்டிருப்பார் என்பதும் உண்மைதான். ஏனென்றால் பிறந்தது முதல் வைராக்கிய பூர்ணராக விளங்குபவர் ஸ்ரீசுகர். அவருடைய மனம் முழுவதும் வியாபித்து இருப்பது பகவான். உலகத்தின் லவலேசமும் அங்கு தொடாத சைதன்யம். வேத வியாஸருக்கு முதலில் அவரை அந்த நிலையிலிருந்து கேட்கும் நிலைக்கு இறக்க வேண்டிய சிரமம். பிறகு ஏதாவது ஒரு சுலோகத்தைச் சொல்லி விட்டாலும் போதும் உடனே ஸ்ரீசுகருடைய நிலை உடனே பரவச சமாதி நிலை கூடிவிடும். பிறகு எப்படிப் பாடம் நடக்கும்? ஆனால் வேத வியாஸரும் பெரும் ஆன்மிகக் கடல் என்பதால் அதைக் கண்டு பெருமிதமும், நெகிழ்வும் ஒருங்கே அடைகிறார். ஆனால் ஸ்ரீமத்பாகவதமும் பாடம் நடக்க வேண்டுமே! ஸ்ரீமத்பாகவதத்திற்குப் பாடம் கேட்பதற்கு ஒரே அதிகாரி ஸ்ரீசுகர் ஒருவர்தாம். அத்தகைய சஹஜ சமாதி நிலை யாருக்குக் கூடியிருக்கிறதோ அவர்தாம் கற்பதற்கு உரிய மாணாக்கரே. மற்றையோராகிய நாம் வெறுமனே சிந்துகின்ற சொல் பொறுக்குபவர்கள் அவ்வளவே.
மாறனேர் நம்பியை உலகத்தவர்கள் சிலர் (யார் நாம்தான்) கேட்டார்களாம். ‘சுவாமி! எங்களுக்கு பகவானை நினைக்க ஓர் உபாயம் சொல்லுங்களென்’ என்று. அதற்கு ஸ்ரீநம்பிகள் கூறினாராம்: ‘நிச்சயம் சொல்கிறேன். அதற்கு முன்னர் நீங்கள் எனக்கு ஓர் உபகாரம் செய்ய வேண்டும். என்ன எனில் பகவானை மறப்பதற்கு ஓர் உபாயம் சொல்லிக் கொடுங்கள். அதை நீங்கள் எனக்கு உதவினால் நானும் பிரதி உபகாரமாக உங்களுக்கு மறப்பதற்கு என்ன வழி என்று சொல்கிறேன்.’ என்று சொன்னாராம். ‘நம்மையெல்லாம் உலகின் வழியிலிருந்து மாற்றி ஸ்ரீகிருஷ்ண சைதன்யத்திற்குத் திருப்புவது எவ்வளவு சிரமமோ அவ்வளவு சிரமம் ஆனது ஆழ்வார்களை பகவத் விஷயத்திலிருந்து உலக வழிக்குத் திருப்புவது என்பது’ என்று சொல்லி வியக்கிறார்கள் நம் பூர்வ ஆசாரியர்கள். இதைப் போல் வேத வியாஸர் படுகின்ற சிரமத்தைச் சுட்டுகிறது இங்கே. ஸ்ரீசுகர் தாமாகத் தரித்து நின்று கேட்க முடிந்தால்தானே தொடர்ந்து சொல்ல முடியும். பகவத் குணம் ஏதாவது ஒன்று காதில் பட்டாலும் போதும் ஸ்ரீசுகர் பரவசம். அவ்வளவுதான் வேத வியாஸர் காத்திருக்க வேண்டியதுதான். இவ்வளவு சிரமப்பட்டு ஸ்ரீசுகருக்குப் பாடம் சொல்லி வைத்ததுதான் வேத வியாஸருக்கே ஸ்ரீமத்பாகவதம் செய்ததன் அரும் பயனாகத் தெரிகிறது.
நிவ்ருத்தி நிரதம் முநி: ஆத்மஜம் சுகம் அத்யாபயாமாஸ
இந்த இடத்தில் ஓர் பொருத்தமான கேள்வியை வைக்கிறார் சௌனகர். என்ன கேட்கிறார். ‘ஐயா! சூதபௌராணிகரே! நிவ்ருத்தி நிரதம் முநி: என்று சொன்னீரே. அதுவும் பிறந்தது தொட்டு வைராக்கியமே நிரம்பியவர் என்றால் அவருக்கு பற்றின்மைதானே முற்ற முழுக்க இருக்கும். எதுவும் தேவையோ, ஈடுபாடோ இருக்காதே. அப்படி என்றால் ஸ்ரீசுகர் எப்படி ஒரு நூலைக் கற்க வேண்டும் என்று விரும்பியிருப்பார்? ஆனால் நீங்கள் த்வனிப் பொருளாகக் காட்டுவதோ என்ன தோன்றுகிறது என்றால் பற்று என்றால் வெறும் பற்று இல்லை. அதீத பற்று. அதுவும் அந்த விஷயத்தைப் பற்றி ஏதாவது காதில் விழுந்தாலும் உலக நினைவே தப்பிப் போய் பரவச நிலையில் ஆழ்ந்துவிடும் பற்றுடன் ஸ்ரீசுகர் கேட்கக் கேட்க அவருடைய பரவச நினைவாழ்தலுக்கு எல்லாம் பொறுத்துக் கொண்டு வேத வியாசர் பொறுமையாக ‘அத்யாபயாமாஸ’ படிப்பித்து வைத்தார் என்றால், பற்றின்மையே முற்றவும் நின்ற ஸ்ரீசுகர் என்னத்திற்காக அந்த சம்ஹிதையாகிய ஸ்ரீமத்பாகவதத்தில் அவ்வளவு அதீத பற்று கொண்டார்? என்பது சௌனகரின் கேள்வி. இவ்வளவு வெளிப்படையாகக் காரண காரியம் சொல்லி சௌனகர் கேட்டுவிடவில்லை. ஆனால் நாம் விடலாமா? துப்பு துலக்கும் தீவிரமாக உள்புகுந்து படிக்க வேண்டாமா? அதுதானே அவர்களுக்கும் திருப்தியாய் இருக்கும்.
சௌனகர் கேட்ட கேள்வி -
ஸ வை நிவ்ருத்தி நிரத: ஸர்வத்ர உபேக்ஷகோ முநி:|
கஸ்ய வா ப்ருஹதீம் ஏதாம் ஆத்மாராம: ஸமப்யஸத்||
ஒரு சுலோகம் சொன்னாலே பரவசம் ஆகின்ற இயல்புடையவர் என்னமா இவ்வளவு பெரிய ஸம்ஹிதையான நூலைப் பொறுமையாகப் படித்தார்? அப்படி என்றால் அவ்வளவு அதீதப் பற்றை ஏன் இந்த நூலில் வைத்தார்? தாம் நிவ்ருத்தி நிரத: என்று இருப்பினும்?
இதற்குப் பதிலளிக்கும் சுலோகம் மிக அழகு!
என்ன அந்தப் பதில்?
ஸூத பௌராணிகர் கூறுவது என்ன எனில், உலக நினைவுக்கு அடிப்படையாக இருப்பது தேக அபிமானம் என்னும் உடலின் மீதான பற்று. அஃதின்றி உடல், மனம் என்பதைக் கடந்த தம் ஆத்மா என்பதிலேயே ஆழ்ந்து, தாம் ஆத்மனே அன்றி சின்னாள் இருந்து மறையும் உடலோ மற்று மனமோ அன்று என்று நிலைத்தவர்கள் தாம் ஆத்ம ஸ்வரூபம் என்பதிலேயே திருப்தி அடைந்து நிற்கின்றனர். அவர்களுக்கு ஆத்மாராம: என்று பெயர். ஆத்மாவில் ரமிப்போர் என்று பொருள். அத்தகைய முனிவர்கள் எந்தப் பற்றும் அற்றவர்கள் ஆகையாலே அவர்களுக்கு நிர்க்ரந்த: என்று பெயர். பித்யதே ஹ்ருதய க்ரந்தி: என்றபடி இதயமுடிச்சுகள் என்னும் பற்றுகள் அற்றவர்கள். பகவான் என்று சொன்னால் ஆறு குணங்கள் பூர்ணமாக நிறைந்தவர் என்று பொருள். அந்த ஆறில் ஒன்று வைராக்கியம் என்பது. எனவே வைராக்கியம் என்பது பூர்ணமாக நிறைந்த பகவானிடம் நிர்க்ரந்த: என்னும் பற்றற்ற முனிவர்கள் ஏன் இவ்வளவு அதீத பற்று வைக்கின்றார்கள்? என்பதை எங்ஙனம் நான் அறிவேன்? அஃது ஹரியின் குணமே அல்லவா?
பற்றிலன் ஈசனும் முற்றவும் நின்றனன்.
பற்றிலையாய் அவன் முற்றில் ஒடுங்கே
என்பதன்றோ நம்மாழ்வாரின் வாக்கு.
பற்றுக பற்றறான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
என்றார் திருக்குறளில்.
இங்கு கேள்வியோ பற்று விட்டவர், பற்றே இல்லாதவர் ஏன் இவ்வளவு அதீத பற்றை பகவானின் குணங்களைப் பாடும் ஸ்ரீமத்பாகவதத்தைக் கற்பதில் காட்டுகிறார் என்பது கேள்வி. அதற்கு ஸூதரின் பதில்:
ஆத்மாராமாச்ச முநயோ நிர்க்ரந்தா அபி உருக்ரமே|
குர்வந்தி அஹைதுகீம் பக்திம் இத்தம் பூத குணோ ஹரி:||
ஆத்மாராமர்களாக இருக்கும் முநிவர் பற்றே அற்ற நிர்கிரந்தர்களாக இருப்பினும் உருக்ரமனாகிய பகவானிடத்தில் காரணமே அற்ற பக்தியை, அதீத பற்றைச் செலுத்துகிறார்கள். இது ஏன்? இப்படிப்பட்ட இயல்புடையவை ஹரியின் குணங்கள் என்றுதான் சொல்ல முடியும். - என்பது சுலோகத்தின் விளக்கம்.
பதில் சொல்ல முடியாது என்று வியந்துவிட்டு ஸூதர் பதிலுக்கான ஒரு சாவியைக் குறிப்பு காட்டுகிறார். எங்கு? உருக்ரம: என்று ஒரு பெயர் சொல்கிறார் அல்லவா? உருக்ரம: என்றால் என்ன?
உயிர்ப்பொருள், உயிரல்பொருள் என்ற வேறுபாடின்றி அனைத்தும் ஒன்றும் பிரிகதிர்ப் படாமல் அளந்த பெரிய அளவையாக உலகளந்தவன் என்ற பொருள் கொண்டது உருக்ரம: என்னும் பதம். அதுவும் புறத்தில் அளந்து தனதாக்கிக் கொள்வது சிறப்பில்லை. ஒவ்வொன்றினுள்ளும் அந்தர்யாமியாக நின்று ஒவ்வொன்றும் தான் பேசுவதும் செய்வதும் நினைப்பதும் தனது சொந்த செயலே என்று எண்ணும்படியாக உள்ளுயிராய் நின்று அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளும் அளந்ததைக் குறிப்பது உருக்ரம: அவன் அனைத்தினுள்ளும் அந்தர்யாமியாக நிற்றலைப் போன்ற பேரருள் எதுவும் இல்லை. அந்த க்ருபையும் எந்தக் காரணம் பற்றி அல்லது எந்த ஹேதுவினால் நடக்கிறது. ஒரு காரணமும் இல்லை. நிர்ஹேதுக க்ருபை என்பதற்கு நிரூபணமான லீலைதான் திரிவிக்கிரமம்.
நிர்ஹேதுக க்ருபையால் அனைத்தையும் அளந்து தன்னகப் படுத்திய ஆருயிர் அன்ன அவனையும் தம் உள்ளத்தே அகப்படுத்திப் பூட்டிக்கொண்டு விடுகிறார்கள் ஒரு சிலர். பற்றற்ற ஆத்மாராமர்களாகிய முனிவரர்கள் ஹேதுவே அற்ற பக்தி ஒன்றினாலே அவனை அகப்படுத்தி விடுகிறார்கள்.
புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீயென்
செவியின் வழிபுகுந்தென் னுள்ளாய் - அவிவின்றி
யான்பெரியன் நீபெரியை யென்பதனை யாரறிவார்
ஊன்பருகு நேமியா யுள்ளு
என்று நம்மாழ்வாரின் கேள்விக்கு விடை ஸ்ரீமத்பாகவத சுலோகத்தில் - நிர்ஹேதுக க்ருபை, ஆத்மாராமாச்ச முநயோ குர்வந்தி அஹைதுகீம் பக்திம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment