Tuesday, September 1, 2020

ஸாதுக்களின் உலகம்

 ஸாதுக்களின் உலகம் அலாதியானது. சிறுவயதிலேயே தந்தை, பெரியப்பா, தந்தையின் நண்பர்கள் இவர்கள் பேசும் பெரும் விஷயங்களையே வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பதே இன்பமாக இருந்தவனுக்கு சாதுக்களோடு ஓர் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு அவர்களுக்குள் நடக்கும் பரஸ்பரம் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டும், பின்னர் அவற்றை மனத்தில் நினைத்த படியும் இருப்பது மிகவும் இன்பமாக இருப்பது என்றால் எவ்வளவு பட்டிக்காடு என்பதுதான் என்னைப் பற்றிய அறிய வேண்டிய செய்தி. ஆனால் நவநாகரிக உலகில் பட்டிக் காட்டிற்கு என்ன வேலை? தெரியவில்லை. ஏதோ நடுவாந்தரத்தில் வைத்து அவன் நடத்தும் நாடகம். அல்லது ஒரு ஸ்ட்ரீட் தமாஷா. ஆனால் நாம் நினைப்பதுதான் நம் தகுதி ஆகிவிடுமா? நம் யோக்கியதை என்ன என்பதை அவளல்லவோ அறிவாள்! என்னைப் பற்றி ஓவராக நான் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் எங்கோ பார்த்தால் பழைய சாக்ஸை எடுத்துச் சுருட்டி ஒளித்து வைத்துக் கொண்டிருப்பேன். அது நாறுகிற நாற்றம் எனக்கு உறைக்காது. வைத்த இடத்தில் நன்றி என்று இருப்பது உத்தமம் என்பது புரிகிறது. ஆயினும் யூட்யூபில் ஸ்ரீராமகிருஷ்ண மட சாதுக்களின் பரஸ்பர பழைய நினைவுகளைக் காணவும் கேட்கவும் செய்யும் போது ஓர் ஏக்கம், கண்ணீர் பூசத்தான் செய்கிறது. யார் யாருக்கு எந்த வழி எங்கு கிளம்பி எங்கே போகிறது என்று யாரே அறிவார் ஆனந்தமயி அவளை அன்றி!

*
மனித நிலை என்ன? என்ன ஆர்ப்பாட்டம்! ஆனால் சிறுமை, நொய்ந்த தன்மை, தெரிந்த சோழிகளை உருட்டிக் கொண்டு பெரும் சத்தம் எழுப்பும் மூளை, தன் நிலை உணராத தடுமாட்டம். ஆனாலும் என்ன நினைப்பு! யம்மாடி...
“This faint and fluid sketch of soul called man
Shall stand out on the background of long Time
A glowing epitome of eternity,
A little point reveal the infinitudes. “
(சாவித்ரி, பக் 100)
ஏதோ அன்னையினுடைய காரணமற்ற தயவு ஒன்றுமே காக்க முடியும். காக்க வேண்டும் அன்னையே !
*
ஆரம்பத்திலேயே சொன்னார். எங்க புத்தி இருந்தது கேட்பதற்கு? அடிபட்டு, நொந்து, சுருண்டப்புறம்தான் தெரியுது. ஏன் சொன்னாருன்னு? அப்ப என்னடான்னா ஆங் அதைப் படிக்கணும், இதைப் படிக்கணும், மண்ணாங்கட்டி..
“What will you achieve by mere reasoning? Be restless for God and learn to love Him. Reason, mere intellectual knowledge, is like a man who can go only as far as the outer court of the house. But bhakti is like a woman who goes into the inner court.”
(The Gospel of Sri Ramakrishna, 1942 )
ஊரிலேன், காணியில்லை, உறவு மற்று ஒருவர் இல்லை; பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி !
ஐயோ பாவம் என்று நீயாக இரங்குவது ஒன்றுதான் கதி ஐயா! இரங்கு கண்டாய்.
*
’பாண்டித்ய கீ ஆச்சே? ப்3யாகுலொ ஹொயே தா3க்கொலே தாம்கே பாவோயா யாயொ. நாநா பி3ஷொயொ ஜானொபா3ரொ தொ3ரொகாரொ நாய்.’
‘பாண்டித்யத்தால் என்ன பயன்? வியாகுலம் உற்று அவனைப் பரிந்தழைப்பதால் அன்றோ அடையமுடியும். நாநாவிஷயங்களைப் பற்றிய ஞானம் உதவாது.’
(ஸ்ரீஸ்ரீராமகிருஷ்ண கதாம்ருதம்)
வெறிதே கழிந்தன நாட்கள் விழலுக்கிறைத்த நீராய். வறியனாய் வந்தேன் வரதா! நீ அளித்தால் வாழ்வு !
*
’உலகத்தில் ஓரிருவர் சமாதிநிலையில் இருந்துகொண்டு தங்கள் ‘அஹம்’ நீங்கப் பெறக் கூடும். ஆனால் பொதுவாகப் பார்த்தால் இந்த ‘அஹம்’ என்பது ஏதோ போய்விடக் கூடியது அன்று. ஆயிரந்தான் விசாரம் செய்தாலும் அப்படியும் பார்த்தால் இந்த ‘அஹம்’ மீண்டும் நிலைபெற்றுவிடும். அஸ்வத்தமரத்தை இன்று வெட்டினால் மறுநாள் காலையில் துளிர் விட்டுவிடும். இந்த ‘நான்’ என்பது போகமாட்டேன் என்றால் இந்த ’சாலா (ராஸ்கல்)’ ’தாச நான்’ ஆக இருந்துவிட்டுப் போகட்டும். ‘ஹே ஈஸ்வரா! நீர் பிரபு. நான் தாசன்’. இந்த பா4வத்துடன் வாழுங்கள். ‘நான் தாசன்’ ‘நான் பக்தன்’ இந்த உருவத்தில் ‘நான்’ என்பதில் தோஷம் இல்லை. தித்திப்புப் பண்டம் வயிற்றில் தொந்தரவு ஏற்படுத்தும். ஆனால் கற்கண்டு தித்திப்புப் பண்டத்தில் ஒன்றாகக் கருதப் படுவதில்லை அன்றோ !’
(ஸ்ரீஸ்ரீராமகிருஷ்ண கதாம்ருதம்)
கூடியமட்டும் வங்காள மூலத்தை ஒட்டித் தமிழில் சொல்லிப் பார்த்தால் அதில் ஒரு தனி ரஸம் தென்படுகிறது.
*

No comments:

Post a Comment