Tuesday, September 1, 2020

அஞ்சர்த்தமும் உபநிஷதமும்

 அறிய வேண்டியது அஞ்சர்த்தம் என்று ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் போதிக்கிறது. என்ன என்ன? மிக்க இறைநிலை, மெய்யாம் உயிர்நிலை, தக்க நெறி, தடை செய்யும் வினை, பெரும்பேறு என்னும் இலட்சியத்தை அடைவிக்கும் வாழ்வினை என்னும் ஐந்தே அறிய வேண்டிய விஷயங்கள் என்பது போதனை.

ஸ்ரீவித்யாரண்ய ஸ்வாமிகள் உபநிஷத் என்னும் வார்த்தையே ப்ரஹ்ம வித்யை என்பதைத்தான் குறிக்கும் என்கிறார். அதை அவர் விளக்குமிடத்து உபநிஷத் என்னும் சொல்லின் உருவாக்கத்தில் மோக்ஷ சாஸ்த்ர பொருள் அனைத்தும் பொதிந்துள்ளதாகக் கூறுகிறார். உப + நி + ஷத் என்று பிரிக்கிறார். மோக்ஷம் அடைய வேண்டும் என்ற வேட்கை உடையவர் முமுக்ஷு. அவருக்குத்தான் மோக்ஷ சாஸ்த்ரம். ப்ரஹ்மம் என்பதை அடைவதே இலட்சியம். இப்பொழுது ஐந்து விஷயங்களில் முமுக்ஷு, ப்ரஹ்மம் என்னும் இரண்டு போக மிச்சம் இருக்கும் உபாயம், தடையாய் இருக்கும் கர்மம், அடைவிக்கும் ஞானம் ஆகிய மூன்றையும் உபநிஷத் என்ற வார்த்தையே உணர்த்திவிடுகிறது. முமுக்ஷுவை ப்ரஹ்மத்துக்குச் சமீபத்தில் கொண்டு சேர்க்கிறது உபநிஷதம். இதை உப என்பது உணர்த்துகிறது. நி என்பது நிச்சயம் என்னும் பொருள் உடையது. அடுத்து ஷத் என்னும் பகுதி இலக்கண ரீதியாக மூன்று பொருள்களை உடையது. என்ன என்ன? ஷத் என்றால் தளரச் செய்தல், கதி ஆகி அடைவித்தல், நாசம் செய்தல் என்னும் மூன்று. அதற்கான குறிப்பு - ஷத்ல் விசரண கதி அவஸாதநேஷு - என்பது. விசரண - தளர்த்தல், கதி - அடைவித்தல், அவஸாதநம் - நாசம் செய்தல். உபநிஷத் தம்மை வேட்கையுடன் கற்பாருக்கு நிச்சயமாகத் தடைகளைத் தளர்த்தி, நிச்சயமாகப் பேற்றை அடைவித்து, பேற்றுக்கு ஊறுசெய்யும் கர்மபலன்களை நிச்சயமாக நாசம் செய்து விடும் ஞானமயமான ப்ரஹ்ம வித்யை என்பதை உபநிஷத் என்னும் சொல்லே குறிக்கிறது என்கிறார் ஸ்ரீவித்யாரண்யர்.

‘உடமை நான் என்றும்
உடையான் உயிரை
வடமதுரை வந்துதித்தான் என்றும்
திடமாக அறிந்து
அவன் தாளில் அடைந்தவர்க்கும் உண்டோ
பிறந்துபடு நீள் துயரம் பின்.’
(ஞானஸாரம் 22, ஸ்ரீஅருளாளப்பெருமாள் எம்பெருமானார்)
***

No comments:

Post a Comment