Sunday, December 29, 2024

ஒரு ரசிகனின் திருப்பாவை (திருப்பாவையை ரசித்துச் செய்தது)

திருப்பாவை மாதம் மார்கழி மாதம். ‘மார்கழித் திங்கள்ள்ள்..’ என்ற இனிய பாடலைக் கேட்டு விழித்துதான் வாழ்வின் இளங்காலைப் பொழுது. அந்தத் திருப்பாவையைத் தந்தவள் ஆண்டாள். ஆம் திருப்பாவையைத் தந்து அவள் ஆண்டாள். நம்மை, அரங்கனை, தமிழை, மிஸ்டிக் உலகத்தை. ‘எல்லாரும் போந்தாரோ.. போந்தார்.. போந்தெண்ணிக் கொள்’ என்று அனைவரையும், ஒருவர் விடுபடாமல், அழைக்கும் உள்ளம் அவளுடையது. அவளைக் கொண்டாடும் அளவிற்கு மனிதர்கள் உயர வேண்டும் என்பதைத்தான் பல நிகழ்வுகள் காட்டுகின்றன. திருப்பாவையை ஒரு ரசிகனாய் நான் ரசித்த விதத்தில் திருப்பாவையைப் போன்றே தொனிக்கும் படியாக ஒரு விதத்தில் பாடியிருக்கிறேன். நீங்கள் ரசிப்பீர்களோ தெரியாது. ஆண்டாள் ரசிப்பாள் அது தெரியும். அது போதும் என்று சொல்லி உங்களை விலக்கினால் பின்பு நான் எப்படி ஆண்டாளின் திருப்பாவையை உள்ளபடியே புரிந்துகொண்டவன் ஆவேன்? எனவேதான் இந்த வழங்கல். (நான் வழக்கமாகச் செய்வது போல், முதல் சொல் தொடர்கள் ஹைபர்லிங்க். அதைக் கிளிக் செய்தால் அந்தப் பாட்டின் பக்கம் விரியும். கூடவே பொருளும் அந்த அந்தப் பாட்டிற்கு. பொருளுள்ள பாட்டு என்பதை நீங்கள் மறுக்க முடியாதல்லவா!)

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

01) மார்கழித் திங்கள் 

02) வையத்து வாழாது 

03) ஓங்கியுலகளந்த 

04) ஆழிசுழற்றிடும் 

05) மாயனைப் பாடியே 

06) புள்ளும் சிலம்பிற்றால் 

07) கீசுகீசென்றுநம் 

08) கீழ்வானம் வெள்வரைக்க 

09) தூமணி மாடத்துக் 

10) நோற்றுச் சுவர்க்கம் 

11) கற்றுக் குரவர் 

12) கனைத்திளம் கற்றவர் 

13) புள்ளின்வாய்க் கூற்றினில் 

14) உங்கள் புழக்கத்தால் 

15) எல்லே இளம்நெஞ்சே 

16) நாயகன் நாரணன் 

17) அம்பரமும் தண்ணீரும் 

18) உந்துமதகளிறாய் 

19) குத்து விளக்காகிக் 

20) முப்பத்துப் பாட்டிற்குள் 

21) ஏற்ற நலங்கள் 

22) அங்கண்மா கர்வத்து 

23) மாரிபெயல் நெஞ்சில் 

24) அன்றிவ் வுளமெலாம் 

25) ஒருத்தி மொழியாய்ப் 

26) மாலாய் மனவண்ணம் 

27) கூடாரைக் கோவிந்தன் 

28) கறவைகள் புன்சிரிக்கும் 

29) சிற்றஞ் சிறுகாலே 

30) வங்கக் கடல்கிளர்ந்த 

 

படிப்பவர்கள் உங்கள் ரசனையை மட்டுமின்றி விமரிசனத்தையும் எழுதுங்கள் தயங்காமல்.

(ஏனோ இந்த வேளையில் அமரராகிப் போன என் அம்மாவின் நினைவு வருகிறது. அந்தத் தள்ளாத வயதில் முப்பது திருப்பாவையையும் ஞாபகம் கொண்டு சொல்கிறேன் சரி பார் என்று சொன்னவள், சென்னையில், நான் மீண்டு வந்து ஆண்டாள் சந்நிதிக்குள் போனால் அங்கிருப்பவர் (எனக்கு முன்பின் தெரியாது) ‘வாருங்கள். கொஞ்சம் காத்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போய் ஆண்டாளின் காக்கும் கரத்தின் சந்தனம் திரட்டிக் குளிகையாய்க் கொடுத்தவுடன் எனக்குப் புரியவில்லை, வெளியில் வந்து தாய்க்குத் தொலைபேசித் தெரிவித்துவிட்டு அவளுக்குச் சென்று கொடுத்துவிட்டேன். அவர்களுக்குள் ஏதோ பரிமாற்றமோ, யார் கண்டார். ஒரு வேளை எதேச்சையோ. அப்படித்தான் இருக்க வேண்டும் என்று என் அறிவு விரும்புகிறது.)

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, December 16, 2024

நிலைப்பாடு 17

மரணம் என்பது பயம் தரும் ஒரு புதிராக இருக்கிறது. மரணத்திற்குப் பிற்றைய நிலையில் ஜீவனுக்கான உதவி என்பது பழம் மத நூல்கள் தரும் உபதேசங்கள்தாமே! நீங்கள் சாதாரண மனிதராகப் பொது புத்தி, அறிவியல், சமுதாய நல்வாழ்வு, அனைவரையும் சமமாய் மதித்துப் போற்றும் மனிதாபிமானம், புத்தகங்களைக் கற்று அறிவைப் பெருக்கிக் கொள்ளுதல் என்ற மாதிரியான சாதாரண மனித வாழ்க்கையைச் செவ்வனே வாழ்ந்தாலே போதும் என்றால் மரணம் நெருங்க நெருங்க உண்டாகும் அச்சத்திற்கு நீங்கள் சொல்லும் இந்தக் கைவைத்தியம் எல்லாம் போதுமானதாய் இருக்குமா? 

இது வெறும் கைவைத்தியம் என்று உங்களுக்கு யார் சொன்னார்? மனித அறிவின் வளர்ச்சி என்பதற்கான உலக வரலாற்றைப் பார்த்தால் என்ன தெரிய வருகிறது? விஞ்ஞானம் ஒரு துறையில் முனைந்து தெளிவான, துல்லியமான முடிவுகளைக் கண்டெடுக்கும் வரையில் அந்தத் துறையில் பயங்களும், பண்டைய அபிப்ராயங்களும், அமானுஷிகங்களோடு தொடர்புடைய மந்திரக்காரர்களின் அதிநிச்சயமான ஆக்ரோஷமான பிரகடனங்களும்தான் ஆட்சி புரிகின்றன. மக்களுக்கும் அதை விட்டால் வேறு கதி இல்லை என்று இருக்கிறது. இன்று நாம் சர்வ சாதாரணமாகத் தீர்த்துக் கொள்ளும் வியாதிகள் கூட ஒரு காலத்தில் எத்தகைய பீதி, மாயமந்திரம், அமானுஷம் என்பதற்கெல்லாம் ஆடுகளமாய் இருந்தன என்பதை நாம் அறிவோம்தானே! அங்கெல்லாம் சாதாரண மனிதரைக் குறித்து என்ன எதிர்பார்க்கப்பட்டது? ‘நடுங்கு.. கீழே குனிந்து வணங்கு... நீ ஒரு அற்பப் பதர். பெரும் பெரும் சக்திகள் எல்லாம் உன் மேல் கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் இதோ அதீத நிலையில் ஆடுகின்ற இந்த மந்திரவாதி என்ன சொல்கிறாரோ அதை அப்படியே ஏன் எதற்கு என்று கேளாமல் கீழ்ப்படிவாய்! ஜாக்கிரதை!’ - இது போன்ற மனநிலைகள்தாமே எந்தத் துறையிலும் ஆண்டு கொண்டிருந்தன? அங்கெல்லாம் அறிவியல் முன்னேற முன்னேற, தெளிவான கருத்துகள், விழிப்பான சுய உணர்வுகள் ஏற்பட்டு, அறிவு விரிவடைந்தது. விளைவு என்ன? சாதாரண மனிதர்க்கான சுதந்திர வெளி நன்கு காப்பாற்றப் பட்டது. அன்றாட வாழ்வைச் சாதாரண மனிதர் எளிய முறையிலும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்து நிறைவு பெறும் சாத்தியம் மிகுந்தது. அதுதானே முன்னேற்றம்? அதைப் போல மரணம் என்ற வாழ்வு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியும் வெற்று பயங்கள், அதீத மந்திரவாதங்கள், பண்டைய நூல்களின் அபிப்ராயங்கள், அமானுஷிகம் என்னும் மிரட்டுச் சூழ்நிலைகள் எல்லாம் மாறி, அறிவியல் ரீதியான ஆய்வுகள், அனைவருக்கும் பொதுவான அனுபவங்களுக்குப் பொருந்திய கருத்துகள் என்று உருவாகிக் கொண்டிருக்கின்றனவே நம் காலத்தில். OBE, (Out of Body Experiences), NDE (Near Death Experiences) என்றெல்லாம் பல்லாயிரக் கணக்கான ஆய்வுகள் இன்று உலகில் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. வாழ்க்கையையே முற்றிலும் இந்த ஆய்வுகளுக்கு என்று செலவிடும் நிபுணர்கள், டாக்டர்கள் உலகெங்கும் பலர் இருக்கின்றனர். மருத்துவ ரீதியாக ஒருவர் இறந்து விட்டார் என்று சொல்லப்படும் நிலையிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலம் கடந்து மீண்டும் உயிர் இயங்கி வரப்பெற்றவர்களின் அனுபவங்களை உடனேயே பதிவுகள் செய்து அவற்றை வைத்துப் பொதுவான தன்மைகள் என்ன? அந்தத் தன்மைகள் நாம் வாழ வேண்டிய வாழ்க்கையைக் குறித்துப் புகட்டுவது என்ன? என்றெல்லாம் பல காரணிகளை வைத்து ஆய்வுகள் நடக்கின்றன. அவையெல்லாம் புகட்டுகின்ற பெரும் பாடமே சாதாரண மனிதர்களின் அறிவும், அன்பும் மிக்க, மனிதாபிமானம் நிறைந்த கனிவான வாழ்க்கையும், ஒற்றுமை உணர்வும்தானே! எனவே எதிர்கால மனிதர் மட்டுமல்ல, இன்றைய மனிதரே கூட மரணத்தையும், மரணத்தின் பிந்தைய நிலையையும் பற்றி அறிவியல் பூர்வமான அனுமானங்களைப் பெறுவதற்கு வாய்ப்புகள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, December 15, 2024

நிலைப்பாடு 16

என்ன சார் .. உலகத்தில் எவ்வளவு மதங்கள், எவ்வளவு பண்பாடுகள், எவ்வளவு இனங்கள்... அங்கங்க எவ்வளவு பழம் காலத்து நூல்கள், ! நீங்க என்னவென்றால் திருக்குறள் ஒன்று போதும் உலகில் இருக்கும் சாதாரண மனிதர்களுக்குப் போதிய அறத்தைப் போதிக்க என்கிறீர்களே? 

ஆமாம் ஐயா.. திருக்குறளின் சிறப்பு அத்தகையது. உலகில் எவ்வளவோ மிஸ்டிக் நெறிகள், மிஸ்டிக் தத்துவ நூல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ‘கபலா’, ஸென், கிரேக்க மிஸ்டிக் பள்ளி, எகிப்திய மிஸ்டிக் பள்ளி, இன்னும் பல. அது எல்லாம் அந்தந்த தத்துவப் பார்வையில் ஆர்வம் கொண்டு முனைவோருக்கு. 

அது போல்தானே நமது சாத்திரங்களில், யோக சாத்திரங்களில் எத்தனையோ மிஸ்டிக் மார்க்கங்கள் சொல்லப் படுகின்றனவே... 

நிச்சயம்... பலப்பல மிஸ்டிக் வழிகள் நமது சாத்திரங்களில் சொல்லப் படுகின்றன. ஆனால் அதில் ஒரு பிரச்சனை என்ன என்றால் சம்பந்தமே இல்லாமல் அங்கங்கே பலப்பல நூல்களில், பக்தி மார்க்கமா, மிஸ்டிக் நெறிகளா, ஞானப் பாதைகளா எது என்று கணக்கு இல்லை, அங்கங்கே வர்ணதர்மத்தை வலியுறுத்தி அல்லது போதித்துக் கருத்துகள். அதாவது என்ன தோற்றம் தருகிறது? எந்த வழியானாலும் சரி, வர்ணதர்மம்தான் முதன்முதலில் முக்கியமானது. ஐயா.. ஏதாவது தர்ம சாத்திரங்களை எழுதுகிறீர்கள் என்றால் அதில் எழுதுகிறீர்கள் என்றால், சரி சமுதாய வழக்கங்கள் குறித்து எழுதும் நூல், அதில் வருகிறது, காலம் மாற மக்கள் சமுதாயமும் மாறி அதற்கு ஏற்ப சமுதாய வழக்கங்களும் மாறிப் போகும் என்று சொல்லலாம். ஆனால் பக்தியா, கடவுளா, யோகமா, ஞான மார்க்கமா, என்ன மிஸ்டிக் கருத்தாய் இருந்தாலும் கூடவே வர்ணதர்மம் முக்கியம் என்றும் கூடவே வந்து கொண்டிருந்தால்.. படிக்கின்ற நமக்கே.. நமக்கே என்றால் என்னைப் போன்ற சாதாரண மனிதருக்கு என்ன தோன்றும்?.. இது என்னடா இது தேவையே இல்லாமல்.... எதற்குச் சம்பந்தமே இல்லாமல் இந்த இடத்தில் இந்தக் கருத்துகள்? இது என்ன சமுதாய வழக்கங்கள் குறித்த நூலா? என்றுதான் மனம் விட்டுப் போகிறது. இப்படி ஒரு வலுக்கட்டாயச் சூழல் இருந்திருக்கும் போலும். ஆதிசங்கரர் உலகம் மாயை, பிரம்மம் ஒன்றே சத்யம் என்று போதிக்கிறாரா, ஆனால் வர்ணதர்மம் பற்றிப் போதிக்கிறார், பிரபத்திதான் உன்னத நெறி, அதுவும் நம்மாழ்வார் காட்டிய பிரபத்தி நெறியே உன்னதம், அதைக் கண்டு பிடித்த நாதமுனிகளே அந்தப் பிரபத்தி மார்க்கத்தை, நம்மாழ்வாரின் நலம் திகழ் வழியை நிலைநாட்ட ஒருவரை எதிர்நோக்கி இருந்தார் என்றால் அவரே ராமானுஜர் என்று சொல்லப்படக் கூடிய ஸ்ரீராமானுஜரும் தாம் எழுதிய வடமொழி நூல்களில் வர்ணதர்மம் குறித்துப் போதிக்கிறார். தமது காலத்தில் இருந்த சைவம் வர்ணதர்மத்தை ஏற்கவில்லை என்று ஸ்ரீராமானுஜரின் குருவான ஸ்ரீஆளவந்தார் தமது ஆகம ப்ராமாண்யத்தில் எழுதுகிறார். ஆனால் காலம் மாறி, 18 ஆம் நூற்.ல் சிவஞான போதத்திற்கு மாபாடியம் எழுதும் ஸ்ரீமாதவ சிவஞான முனிவர் வர்ணதர்மம் குறித்துப் போதித்து எழுதுகிறார். பிரபன்ன குலம் சமத்துவம் திகழும் பிரபன்ன தர்மத்தைக் கைக்கொண்டது, வர்ணதர்மத்தோடு தொடர்பில்லை என்று வாழ்ந்து காட்டிய ஸ்ரீவில்லிபுத்தூர் பகவரின் செய்கையையும், சுலோகத்தையும் மேற்கோள் காட்டி, அதுவே ஆசார்யர் என்று சிறப்பித்துக் கூறப்படும் ஸ்ரீராமானுஜரும், பொதுவாக அனைத்து வைணவ ஆசார்யர்களுக்கும் உட்கருத்து என்று நிலைநாட்டி அதையே பெயராக வைத்து ஸ்ரீஆசார்ய ஹ்ருதயம் என்று எழுதுகிறார் ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனார். ஆனால் அவர் காலத்தையொட்டி இருந்த ஸ்ரீவேதாந்த தேசிகர் தமது ரஹஸ்யத்ரய ஸாரம் என்னும் நூலில் பிரபன்னர்களும் வர்ணதர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்களே என்று கூறுகிறார். சாத்திரங்களில் மிகவும் அற்புதமான மிஸ்டிக் கருத்துகள் நிறையவே இருக்கின்றன. சாதாரண மனிதருக்கு அவற்றில் ஆர்வம் இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆர்வம் இருப்போருக்கு உலகெங்கும் இருக்கும் மிஸ்டிக் கருத்து வளங்கள் போல நமது பழம் நூல்களிலும், தொடர்ச்சியாகக் காலம் நெடுகவும், மிஸ்டிக் ஈடுபாட்டிற்கான கருத்துகள் இருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் வர்ணதர்மம் சார்ந்த சொல்லாடல்களிலிருந்து தனியே பிரித்துப் பார்ப்பது பெரும் அலுப்பு தரும் வேலையாக ஆகிவிடுகிறது. நம் காலத்தில் வந்த மகான்களான கேசவ் சந்திர ஸேன், சுவாமி விவேகாநந்தர், ஸ்ரீஅரவிந்தர், யோகாநந்தர், ஸ்ரீரமணர் போன்றவர்கள் இவ்வாறு மிஸ்டிக் கருத்துகளைப் பிரித்துக் காட்டி உதவ வந்தாலும் அவர்களை இன்று புதிதாகப் பழைமையை வழிபடத் தொடங்கிவிட்ட தலைமுறைகள் அவர்களைக் கேலி பேசுகின்றனர். அவர்கள் என்ன.. ஏதோ.. நியோ வேதாந்திகள் என்று. அதாவது புதிதாக முளைத்த வேதாந்திகள் என்று அர்த்தம் போலும். 

க்ரிப்டோ கிறித்தவர்கள்... 

அது எங்களை மாதிரி சாதாரண இந்துக்களை, அதாவது பொது புத்தி, விஞ்ஞானம், மனித நேயம், ஆண்பெண் சமத்துவம், சமுதாயத்தின் சமத்துவ நோக்கு என்றெல்லாம் பேசுவோரை என்று நினைக்கிறேன். என் நண்பர் ஒருவர் எனக்கு என்ன முத்திரை குத்துவது என்று ஒரு சமயம் அலைந்து கொண்டிருந்தார்.. அதனால் இந்த விஷயம் தெரிய வந்தது. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Saturday, December 14, 2024

நிலைப்பாடு 15

என்ன சார் .. திருக்குறளையும் சிறப்பாகச் சொல்றீங்க. அப்புறம் வர்ணதர்மம், சநாதனம் இதில் குழப்பம் என்று சொல்றீங்க.. 

திருக்குறளில் குழப்பம் என்று சொல்லவில்லை. அதுதான் வாழ்க்கைக்கு வேண்டிய அறவழி என்பதற்குத் தெளிவைத் தருகிறது. குழப்பம் எதிலென்றால், ஒரு சமயம் வர்ணதர்மம் என்று சொல்றீங்க, அப்பறமா சநாதனம் என்று சொல்றீங்க. அப்ப வர்ணதர்மம்தான் சநாதனமா என்று கேட்டால் இல்லை இல்லை வர்ணதர்மம் வெறுமனே மனிதர்கள் கூடி ஏற்பாடு செய்துகொண்ட, அது என்ன பௌருஷேயி வ்யவஸ்தை என்று ஹரதத்தர் வியாக்கியானம், ஆபஸ்தம்ப தர்ம சாத்திரம், அதில் இருக்கிறது என்று பார்த்தால், அப்படீன்னா, வர்ணதர்மம் காலத்திற்குக் காலம் மாறக் கூடியதுதானே, மாறாத நற்குணங்கள், சமுதாய நலன்கள், இவைமட்டும்தான் சநாதனமா என்று கேட்டால், இல்லை இல்லை அப்படியில்லை, ஸ்ரீகிருஷ்ணரே சொல்லியிருக்கிறார், தாமே நான்கு வர்ணங்களையும் படைத்ததாக என்றும் சொல்கிறீர்கள். அவரே படைத்தார் என்றால் எப்படி ஆபஸ்தம்பரும், அவருக்கு உரையெழுதிய ஹரதத்தரும் வர்ணதர்மம் என்பது பௌருஷேயி வ்யவஸ்தை (மனிதர்களால் கூடி ஏற்படுத்தப்படும் ஏற்பாடு) என்று சொல்வார்? கேட்டால் என்ன சொல்கிறீர்கள் ... ஆஹா... கீதைக்கு உரையெழுதிய ஆசார்யர்கள் எல்லாம் என்ன சொல்கிறார்கள் பார்! அதற்கு விரோதமாகச் சொல்ல நாம் யார் என்று சொல்கிறீர்கள். சரியப்பா.. ஆசார்யர்கள் சொல்கிறபடிப் பார்த்தால் வர்ணதர்மம் என்பதும் சநாதனம்தானா? அதுவும் சநாதனம் என்றால் 13ஆம் நூற் ஸ்ரீஅழகியமணவாளப்பெருமாள் நாயனார் தமது ஸ்ரீஆசார்ய ஹ்ருதயம் என்னும் நூலில் எழுதுகின்ற கருத்துக்கு என்ன பதில் சொல்வீர்கள்? 

என்ன எழுதறார்? 

பிரபத்தி என்னும் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட பிரபன்னர்கள், பாகவதர்கள் என்போர் விஷயத்தில் வர்ணதர்மம் பொருந்தாது, விசேஷ தர்மம் ஆகிய பிரபன்ன தர்மமே பொருந்தும். அதற்கு அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பகவர் வார்த்தை என்று ஒரு சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் பகவர் என்பவர் குளத்தில் குளிக்கச் செல்லும் போது அவரைப் பிராம்மணர்கள் தமது துறையில் வந்து குளிக்குமாறு கூப்பிட்டார்களாம். அவர் அதற்குப் பதிலாகச் சொன்னாராம். ‘நீங்கள் பிராம்மணர்கள்; நாங்களோ விஷ்ணுதாசர்கள் எனப்படும் பிரபன்னர்கள். நீங்கள் வர்ணதர்மிகள்; நாங்களோ தொண்டு என்பதையே கைக்கொண்ட தாசவிருத்திகள்; ஒரு நாளும் நமக்குள் தொடர்பு இல்லை’ என்றாராம். இதன் சுலோகம் -- ‘விஷ்ணுதாஸா வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ணதர்மிண:, அஸ்மாகம் தாஸவ்ருத்தீனாம் யுஷ்மாகம் நாஸ்தி ஸங்கதி:’ (ஸ்ரீஆசார்ய ஹ்ருதயம், ஸ்ரீமணவாள மாமுனிகள் வியாக்கியானம், சூர்ணை 32). ஸ்ரீவில்லிபுத்தூர் பகவர் என்னும் பெரியவர் திடமாகக் கருதிச் செய்த செய்கையும், அதை நன்கு நினைவில் கொண்டு மூலநூலில் குறிப்பாகச் சொன்னதை நன்கு விரிவுபடுத்தி அந்தச் சுலோகத்தையும் தந்து வியாக்கியானம் செய்திருப்பதையும் வைத்துப் பார்த்தால் வர்ணதர்மம் சநாதனம் என்பதோடு சேராது என்றுதானே தெரிய வருகிறது? 

இல்லையே... ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர் மற்றும் உள்ள பழம் ஆசாரியர்கள் யாருமே வர்ணதர்மம் மாற்றக் கூடியது என்று எழுதவே இல்லையே. பார்க்கப் போனால் வலியுறுத்தித்தானே எழுதியிருக்கிறார்கள்? 

பாருங்கள். என்னைக் கேட்கிறீர்களே... அவர்கள் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் இப்படி எழுதியிருக்கிறார்கள். சரி. நீங்கள்தாம் ஒரு முடிவு பண்ணுங்களேன். ப்ழைய காலத்தில் எழுதியதையெல்லாம் விடுங்கள். ஸ்ரீஆசார்ய ஹ்ருதயமே சொல்கிறதே. ஸ்ரீமணவாள மாமுனிகளே ஸ்ரீவில்லிபுத்தூர் பகவர் என்பவர் தம் வாழ்க்கையிலேயே எப்படி அன்றாடம் வர்ணதர்மத்திற்கும் தமக்கும் சிறிதும் தொடர்பில்லை; தாம் ஒரு பிரபன்னர் என்ற முடிவோடு வாழ்ந்தார் என்பதைத் தம் உரையில் வெளிப்படையாகச் சந்தேகமே இல்லாமல் எழுதி வைத்திருக்கிறாரே! அதைப் போல் நீங்களும் முடிவாகச் சொல்லி விடுங்களேன். வர்ணதர்மம் வேண்டாம் என்று.... ஏன் தயங்குறீங்க... இதான் சொல்கிறேன் ... குழப்பம் என்று. இந்தக் குழப்பம் எல்லாம் திருக்குறளைக் கற்கும் சாதாரண மனிதர்க்கு இல்லை. இந்த மதம் அந்த மதம் என்று இல்லை. உலகில் எந்தச் சாதாரண மனிதருக்கும் பயன்படும் அறநெறியைத் திருக்குறள் தருகிறதா இல்லையா? சாதாரண இந்து என்ற விதத்தில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. தெளிவான அறவழியை நான் திருக்குறளில் பெறுகிறேன். ஆசார்ய ஹ்ருதயம் ஆவது வைணவர்கள், பிரபன்னர்களுக்கு மட்டும்தான் பேசுகிறது. ஆனால் திருக்குறள் உலகில் மனிதர் யாவரேயாயினும் அவர்கள் சாதாரண மனிதர்களாய் இருந்தாலே போதும், அவர்களுக்கு வேண்டிய அறக் கருத்துக்களைத் திருக்குறள் தந்துவிடுகிறது. இதில் எதற்காக நான் தேவையில்லாத குழப்பத்தில் சிக்கிக் கொள்ள வேண்டும்? இப்படிச் சொன்னா அப்படிச் சொல்றீங்க, அப்படிச் சொன்னா இப்படிச் சொல்றீங்க, ஆஹா பக்தி என்று சொல்றீங்க. சரி நல்லது என்றால் ஊடால வர்ணதர்மம் வருது. இது ஏன் நடுவில் என்றால் இல்லை இல்லை சநாதனம் என்றும் சொல்றீங்க. வர்ணதர்மம் சநாதனமா? என்றால் இல்லை இல்லை ஆபஸ்தம்பர் சொல்றாரு ஹரதத்தர் சொல்றாரு மனிதர்களால் ஆன ஏற்பாடு. சரி மாறக் கூடியதுதானே என்றால் இல்லை இல்லை கிருஷ்ணர் சொல்லியிருக்காரு பாரு கீதையில் என்கிறீர்கள். சரி கீதையில் சொன்னது மாறாது என்றால் ஸ்ரீஆசார்ய ஹ்ருதயத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகவர் சொன்னது என்ன? என்றால் .. உங்களுக்கு எப்படியோ.. எனக்குக் குழப்பம். ஆனால் பொய்யாமொழியார், செந்நாப்போதார், திருவள்ளுவரின் திருக்குறள் ஒரே வார்த்தையில் ’தெளிவு’. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, December 12, 2024

நிலைப்பாடு 14

ஏன் நீங்கள் சாதாரண இந்து என்று இவ்வளவு விளக்கிச் சொல்வதைக் காட்டிலும் சநாதன இந்து என்று சொல்லிக் கொள்ளலாமே? 

சாதாரண இந்துவாக இருப்பது என் நிலைப்பாட்டிற்கு, என் மனப்பான்மைக்குப் போதும் என்று படுகிறது. அதிலும் சாதாரண மனிதன் என்பதுதான் எனக்கு மிகவும் பிடித்த அடையாளம் பார்க்கப் போனால். சாதாரண மனிதர் என்று சொன்னால் உடனே வழிவழியாக வந்த இதற்கு எதிரா? அதற்கு முரணா? மதங்களோடு பிணக்கமா? நாத்திகரா? என்று பலவித கேள்விகள் எழும். ஒன்றை ஆதரிப்பதும், அதனோடு பிணங்கி முரண்படுவதும் ஏதோ ஒரு விதத்தில் அந்த வட்டத்திற்குள்ளேயே முடங்குவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. விஞ்ஞானமும், உலகமும் விரிந்து போகும் போது ஏன் பழைய அடையாளங்களில் மனிதர் முடங்க வேண்டும் என்று தோன்றுகிறது. பரவாயில்லை. சாதாரண இந்து என்பவர் பழமைப் பிடிப்பு மிக்கவர்களிடத்திலும், சித்தாந்தம், சம்பிரதாயம் என்று அர்ப்பணித்துக் கொண்ட தீவிரமானவர்களிடத்திலும் பொதுவாகத் திட்டு வாங்கிக்கொண்டு, கண்டிக்கப்படும் போக்கு உள்ளவராக அறியப்பட்டாலும் இன்றைய அறிவுப் பெருக்கம் நிறைந்த உலகில் மதம், பழமை என்பதற்கெல்லாம் ஒரு பண்பாடு என்ற மதிப்பை மட்டும் தந்துவிட்டு, தன் முன்னேற்றம், அறிவின் வழி, பல துறை அறிவுகளை உள்வாங்கிச் சிந்தித்தல், தவறு எனப்படுவதை விட்டு முன்னேறுதல் என்று பொதுபுத்தியுடன் நடந்து கொள்பவராகத் தெரிகிறார். இல்லை. அதுவும் இல்லை என்று மறுப்பீர்கள் என்றால் சாதாரண மனிதர் என்பதே போதும் என்பேன். 

இல்லை. அதற்குச் சொல்லவில்லை. சநாதனம், சநாதனி என்பதெல்லாம் அநாதிகாலமாக,.. பார்க்கப் போனால் சநாதனம் என்றாலே என்றும் இருப்பது என்றுதானே பொருள். 

அதிலெல்லாம் குழப்பம் இருக்கிறது ஐயா... நானும் பல நூல்களை நோண்டிப் பார்த்தேன். சநாதன தர்மம் என்றால் சமுதாயத்தில் மனிதருக்கு மனிதர், மனிதருக்குத் தனிப்பட இருக்க வேண்டிய, எந்த மனிதச் சமுதாயத்திற்கும் நன்கு நடைபெற நிலவ வேண்டிய நற்குணங்களின் பட்டியல் என்று எட்டு, பத்து, பன்னிரண்டு என்று குணநலன்களைப் பட்டியலிட்டு அதைச் சநாதன தர்மம் என்று சில ரிஷிகளும், சில புராணங்களும் குறிப்பிடுகின்றன. அப்படியென்றால் அதில் வர்ணதர்மம் சேராதுதானே என்று நாம் யோசிப்போம். அதற்கு ஏற்றாற்போல் சில பழைய தர்ம சாத்திரங்களில், உதாரணத்திற்கு ஆபஸ்தம்பர் எழுதியதில், அதற்கு உரையெழும் ஹரதத்தர் என்பவர் வர்ணதர்மம் என்பது சமயாசாரம் என்று வகைபடுத்துகிறார். சமயம் என்றால் மதம்தானே என்று நினைத்தால் அப்படி இல்லையாம். சமுதாயத்தில் பொதுவான நடைமுறைகளைப் பல மனிதர் ஒன்று கூடி விவஸ்தை ஏற்படுத்துதல், அதுதான் சமய ஆசாரமாம். இதற்குப் பெயர் ’பௌருஷேய வ்யவஸ்தை - மனிதர்களால் இயற்றப்பட்ட ஏற்பாடு’ என்று சொல்கிறார் ஹரதத்தர். அதாவது காலத்திற்குக் காலம் மாறக் கூடியது என்று பொருள் படுகிறது. ஓ அப்படியென்றால் இந்த மாதிரி மாறக் கூடிய சமுதாய வழக்கங்கள் இல்லாமல் என்றும் சமுதாயத்தில், தனிமனிதரிடத்தில் நல்வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படும் நற்குணங்கள், அது உலகில் எந்த இடத்தில் மனித சமுதாயம் என்றாலும் அங்கு நிலவ வேண்டிய நற்குணங்கள் இன்ன இன்ன என்று பட்டியலிட்டு அதுதான் சநாதன தர்மம் என்னும் வார்த்தையால் குறிக்கப்படுகிறதோ என்று நினைத்தால், அதனால்தான் அதை என்றும் இருக்கும் ஒழுக்கம் என்று பொருள்பட சொன்னார்களோ என்று நினைத்தால் ஒரு கேள்வி எழுகிறது. மாறிக்கொண்டே இருப்பது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட சமுதாய வழக்கங்கள் என்று சொல்கிறார்கள். மாறாமல் என்றும் இருக்க வேண்டிய நற்குணங்கள் என்றும் சொல்கிறார்கள். பின் ஏன் வர்ணதர்மத்திற்கு இவ்வளவு நூல்கள், அதற்கு இவ்வளவு உரைகள், அந்த உரைகளுக்கு இவ்வளவு விளக்கங்கள்? ஆனால் மாறாமல் இருக்க வேண்டிய நற்குணங்களுக்கு வெறுமனே அங்கங்கே ஓரிரு சுலோகங்கள் அவ்வளவுதான். ஒரு முழு கிரந்தம், சாத்திரம் என்று எதுவும் எழுதப்படவில்லையே? இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் வர்ணதர்மம் முக்கியப்படுத்தப் பட்டதேயன்றி சமுதாய நற்குணங்களுக்கு என்று ஒரு முழு நூல் எங்கும் காணவில்லையே? 

இங்கு மட்டும் இல்லை. உலக அளவில்கூட சமுதாயம் சிறக்க வேண்டிப் பொதுவாக மனிதரிடையேயும், தனிப்பட ஒவ்வொரு மனிதரிடத்தும் திகழ வேண்டிய நற்குணங்கள், நீக்க வேண்டிய குற்றங்கள் என்று தனிப்பட கவனம் தந்து எழுதப்பட்ட நூல் எந்தப் பண்பாட்டிலாவது உண்டா? கிரேக்கத்தில் அரிஸ்டாடில் அறநூல் என்று எழுதியதில் இவ்வாறு குணநலன்களை எடுத்து ஆராய்கிறார். அதைத் தவிர எதையும் எங்கும் கண்ணுக்குப் படவில்லை. ஆனால் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளோ இத்தகைய சமுதாய, தனிமனித நற்குணங்களையும், நீக்க வேண்டிய குற்றங்களையும், ஐயம் திரிபற ஒவ்வொன்றுக்கும் பத்து பத்துக் குறட்பாக்கள் பெய்து பெரும் சாதனையாக அன்றோ உலகப் பொதுமறையாகத் திகழ்கிறது! அதற்கு உரைப்பெருக்கம் என்று தமிழில் அன்றோ பெரும் சாதனை, உலகத்தில் நடந்திருக்கிறது! 

ஏன் அவ்வளவு வியாக்கியானங்கள் எழுந்த வடமொழி இலக்கிய உலகில் இதுபோன்று இல்லையா? 

இருந்தால் காட்டுங்கள். ஒரு நூல் முழுதும் மனிதர்க்குப் பொதுவான நற்குணங்களைப் பகுத்தும், தொகுத்தும், விரித்தும் யாக்கப்பட்ட ஒரு நூல். இல்லை. எல்லாம் வர்ணதர்மத்திற்கு வியாக்கியானங்களாக அமைந்திருக்கின்றன. 

ஏன் புராணங்கள் எவ்வளவு இருக்கின்றன. அவற்றில்..? 

அதுதான் சொல்கிறேனே. வாயு புராணம், பிரம்ம புராணம், எல்லாவற்றிலும் ஓரிரு சுலோகங்கள் இந்த நற்குணங்களைப் பட்டியலிட்டு ‘இதம் தர்மம் சநாதனம்’ என்று சொல்லிச் செல்கிறதே அன்றி, அதற்கு மேல் இல்லையே. ஆனால் வர்ண தர்மம் என்று வந்தால் என்ன விரிவு, என்ன விளக்கம்... அதுவே திருக்குறளை எடுத்தால் என்ன அழகாக, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, வாய்மை, ஒப்புரவறிதல், அன்புடைமை, ஆள்வினையுடைமை, இடுக்கணழியாமை, இனியவை கூறல், ஈகை, ஊக்கமுடைமை, கண்ணோட்டம், கல்வி, கேள்வி, சான்றாண்மை, செங்கோன்மை, செய்ந்நன்றியறிதல், நடுவுநிலைமை, நட்பு, நாணுடைமை, பண்புடைமை, பெருமை, மானம், வினைசெயல்வகை, வினைத்திட்பம், வினைத்தூய்மை, அருளுடைமை இப்படி நற்குணப் பட்டியல். இதுவே நீக்க வேண்டியவை குறித்து அழுக்காறாமை, இன்னாசெய்யாமை, உட்பகை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, சிற்றினம் சேராமை, தீவினையச்சம் - எத்தனை நுணுக்கம், என்ன விரிவு உலக மனிதப் பொதுவான நன்மைகளில்! புராணங்கள் என்று குறிப்பிட்டதற்காகச் சொல்கிறேன். இருக்கின்ற புராணங்களிலேயே பக்தி என்னும் கருத்தை நன்கு அழகாகப் பேசும் புராணம் என்று சொல்லப் படுவது பாகவத புராணம். அதில் 7ஆவது ஸ்கந்தம், 11 ஆவது அத்யாயத்தில் யுதிஷ்டிரர் நாரதரிடத்தில் ஒரு கேள்வி கேட்பதாக வருகிறது. என்ன கேள்வி? ‘மனிதருக்கான சநாதனமான தர்மம் குறித்துச் சொல்லுங்கள். கூடவே வர்ணாச்ரம ஆசாரத்தையும் பற்றிச் சொல்லுங்கள், எதனால் மனிதர் உயர்ந்த நிலையை அடைவார்களோ.’ இதில் சநாதனமான தர்மத்தைக் குறித்துச் சொல்லுங்கள் என்று முதல் பகுதியாகவும், கூடவே வர்ணாச்ரம ஆசாரம் குறித்து இரண்டாவது பகுதியாகவும் கேள்வி அமைந்திருக்கிறது. கடைசியில் எதனால் மனிதர் உயர்ந்த நிலையை அடைவார்களோ என்று அடைமொழியாகச் சொல்கிறார். மூல சுலோகத்தையும் பாருங்கள். 

‘பகவந் ச்ரோதும் இச்சாமி ந்ருணாம் தர்மம் ஸநாதனம் | 

வர்ணாச்ரம ஆசாரயுதம் யத் புமான் விந்ததே பரம் ||’ 

இப்பொழுது எனக்கு என்ன குழப்பம் என்றால், மனிதர் உயர்ந்த நிலை அடைவார் என்று அடைமொழி சொன்னது எந்தப் பகுதிக்கு? முதலில் சொன்ன ‘மனிதர்க்கான சநாதனமான தர்மம்’ என்பதற்கா? அல்லது அடுத்துக் கூடவே சொல்லச் சொன்ன ‘வர்ணாச்ரம ஆசாரம்’ என்பதற்கா? ஏன் குழப்பம் என்றால் இருபத்தியோரு நற்குணங்கள், நற்செய்கைகள் என்று பட்டியலிட்டுப் பின்பு ஒன்பது சாதனைகள் பக்திக்கென்று சொல்லிவிட்டு இந்த முப்பதும் நாராயணர் தமக்குச் சொன்ன உயர்ந்த தர்மம் என்று சொல்கிறார் நாரதர். அதில் வர்ணாச்ரமம் வரவில்லை. ஆனால் அடுத்த சுலோகமே வர்ணதர்மம், ஆச்ரம தர்மம் என்று ஆரம்பித்து விடுகிறார் அதே நாரதர் அதே யுதிஷ்டிரரிடம். சொல்லிவிட்டுப் போகட்டும். அதைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் இரண்டாவது பகுதியான வர்ண தர்மம் தான் விரிவாக முழு அத்யாயத்திலும் விளக்கப்ப்டுகிறதே அன்றி முதலில் சொன்ன 21 நற்குணங்கள், அடுத்த 9 பக்தி சாதனைகள், இந்த முப்பது வெறுமனே சுலோகத்தில் சொன்னதுதான். விளக்கம் எதுவுமில்லை. முதல் 21ல் கூட ஸ்வாத்யாயம் என்று வருகிறது. அவரவருக்கான படிப்பு என்று பொருள் சொல்லலாமா? இல்லை அதையும் பழமைப் பற்றாளர்கள் வேதப் படிப்பு, அதற்கான தகுதி வர்ணம் என்று சொல்வார்களா தெரியவில்லை. எதற்குச் சொல்கிறேன் என்றால் சநாதனம் என்றால் எதைக் குறிப்பிடுகிறது என்பது படிக்கும் நமக்கே, அல்லது எனக்கே என்று வைத்துக் கொள்ளுங்கள் குழப்பம் தருகிறது. திருக்குறளோ ஐயத்திற்கே இடமின்றி மனித சமுதாயப் பொதுவிற்கு வேண்டிய நற்குணங்கள் அனைத்தையும் ஐயம் திரிபற விளக்குகிறது. நான் சாதாரண மனிதர் என்பதால், சாதாரண இந்து என்ற நிலையில் திருக்குறளே வாழ்க்கைக்குப் போதுமான அறத்தை நன்கு விளக்கி உரைக்கும் விழுமிய நூலாக உதவுகிறது. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, December 11, 2024

நிலைப்பாடு 13

பொதுவான அடிப்படை மனிதாபிமானம், பரிவு, சாதாரண மனித நிலைமை என்றெல்லாம் சொல்லும் போது அதுவே எல்லாவித சூழல்களிலும் போதுமான அளவுகோல் ஆகிவிடுமா? சிலசமயம் பொதுவான நன்மைக்கு வேண்டித் தனிப்பட்ட மனிதருக்கான அக்கறை கைவிடப் படவேண்டிய தேவை வராதா? 

பொதுவான நன்மை என்று சொல்லும் போது அது மனிதருக்குப் பொதுவானதுதானே? தனிமனிதர் எல்லாம் சேராமல் பொது எங்கிருந்து வரும்? உதாரணத்திற்குத் தொற்றுநோய் போன்ற காலங்களிலும் தனிமனிதருக்கான நன்மையை உத்தேசித்துத்தானே பொதுவான நன்மை என்ற நடவடிக்கைகளும் எடுக்கப் படுகின்றன. அதைப் போலத்தான் சித்தாந்தங்கள் என்று சொல்லிவிட முடியாது. சித்தாந்தங்கள், அது மத சித்தாந்தங்களோ, சமுதாய அரசியல் சித்தாந்தங்களோ மனிதருக்கான நன்மை என்றுதான் சொல்லித் தொடங்குகின்றன. ஆனால் நடைமுறையில், கால மாற்றங்களில், சூழல் மாற்றங்களில் அறிவுதான் நடுவண் தீர்ப்பாளராகச் செயல்பட வேண்டும் என்பது அமையாத காரணத்தால், பண்டைப் பழமை, பெரும்பான்மையான ஏற்பு, நிறுவன பலம் போன்ற பல காரணங்களால் பெரும்பாலும் சித்தாந்தங்கள் பாதுகாக்கப் படவேண்டும் என்ற அக்கறைதான் மிஞ்சுகிறதே அன்றி தனிமனிதர், சாதாரண மனிதப் பரிவு என்பன கழண்டு போகின்றன. இது Ideology Vs Practical human concern என்ற முரணாக அமைந்து விடுகிறது. பார்க்கப் போனால் எந்த ஐடியாலஜியும், சித்தாந்தமும், மதமும் ஹ்யூமன் கன்ஸேர்ன், மனிதரைப் பற்றிய கரிசனம் என்ற நியாயத்தின் பலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் ஆரம்பிக்கின்றன. பிறகு ஐடியாலஜி என்பதே, சித்தாந்தம் என்பதே பெரும் நியாயப்படுத்தலாக ஆகிவிடுகிறது. இந்தத் தடப்புரளைத் தப்பித்த எந்த ஐடியாலஜியும் உண்டா தெரியவில்லை. தனிமனிதர், தனிமனிதர் என்றாலும் அவர்களுக்கும் நன்மை கொண்டு சேர்க்க அமைப்பு என்று ஒன்றும், அதற்கான நெறிமுறை ஒன்றும், அந்த நெறிமுறையில் அமைப்பைச் செலுத்தும் இயக்கம் ஒன்றும் இல்லாமல் நடவாதே என்ற வாதமும் கருத வேண்டியதே. ஆனாலும் தன்னுடைய தோற்றம் மற்று இருப்பின் அடிப்படை நியாயமே தனிமனிதர் ஒவ்வொருக்குமான நன்மை என்பதே என்ற பொறுப்புடைமை அமைப்பின் பக்கத்திலும், தன்னைப் போல்தான் மற்றவர்களும் தனிமனிதர், அவர்களுக்குமான நன்மையைக் கொண்டு செலுத்தும் அமைப்பு நன்கு இயங்க வேண்டும் என்ற அக்கறை தனிமனிதர் பக்கத்திலும் கெடாமல் பொருந்தியிருக்கிறதா என்பது இன்னும் முக்கியமான விஷயம். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, December 3, 2024

நிலைப்பாடு 12

அப்ப.. நீங்க என்ன இப்படித்தான் எல்லாரும் இருக்கணும் என்று நினைக்கிறீங்களா? சாதாரண மனப்பான்மையோட... மதத்தில் ஆழ்ந்து தீவிரமாப் போகாம இருப்பதுதான் சரியா? 

பாருங்க.. நைஸா என்னை நகர்த்தி வேற எங்கயோ கொண்டு போக முயற்சி செய்யறீங்க பார்த்தீங்களா... நான் என்னுடைய நிலைப்பாடு என்ன என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.. பிறரெல்லாம் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லையே.. 

அப்படிச் சொன்னா என்ன தப்பு? ஒரு வழி காட்டறதுதானே.. 

அவரவர் வாழ்க்கையை அவரவரேதான் வாழணும். தன்னளவில் தானேதான் சிந்தித்துத் தெளியணும். என்னளவில் நான் எது சரியான கருத்து, செயல் என்று படுகிறதோ சிந்தனையில், அதைக் கைக்கொள்கிறேன். பின்னொரு காலத்தில் அதுவே பொருந்தவில்லை என்று உணர்ந்தால் கவலையே படாமல் அதை விட்டுவிட்டுச் சரியானது எதுவோ அதை மேற்கொண்டு செல்கிறேன். இந்த மனநிலையை விவரிப்பது என்றால் சாதாரண மனிதரின் மனநிலைமை என்று சொல்லலாம். இதை நான் யாருக்கும் போதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எல்லாருடைய அனுபவத்திலும் உணரப்படக் கூடிய விஷயம்தான் இது. என்ன இந்த இயல்பான நிலைமையை விட்டுவிட்டு, ஏதோ, யாரோ, எந்த நூலிலோ, வழிவழியாக வந்தது, பெரிய நிலையை அடையலாம், ஸ்பெஷல் கிருபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவராக ஆகலாம், அவரைக் குருவாய் அடைந்து விட்டால், இவரை ரக்ஷகராய் அடைந்து விட்டால், அவர் கடைக்கண் பட்டுவிட்டால், இவர் கடாக்ஷம் மட்டும் கிடைத்து விட்டால் - இப்படி ஏதேதோ காரணங்கள் சொல்லி நாம்தான் நம் இயல்பிலிருந்து நழுவி ஓடுகிறோம். நம் மீது ஏதோ பாப மூட்டை அழுத்துகிறது; கர்மா லோடு துரத்துகிறது என்று நமக்கு நாமே வெருண்டு, இங்குப் போனால், அங்குப் போனால் விடிவு என்று ஓடுகிறோம். உண்மையில் சாதாரண மனிதத் தன்மையுடன் இருப்பதே, இயல்பான நம் மனிதத் தன்மையை விடாமல் நின்று நிதானமாக வாழ்ந்தாலே அதுவே உத்தமம் என்று எப்பொழுதாவது இந்த ஓட்டம் அலுத்து ஒரு வேளை உணர்வோமோ.. உணர்வோம்.. உணர்ந்துதானே ஆகவேண்டும். 

அப்ப.. எங்கயும் போகாத.. மதங்களே வேண்டாம் என்று சொல்ல வரீங்களா... 

நான் எதுவுமே சொல்ல வரவில்லை. நான் என் வாழ்க்கையை எப்படிப் புரிந்து கொள்கிறேன் என்பதைத்தான் சொல்கிறேன். மதமா, மார்க்கமா, ஆன்மிக வழியா, அருள்நெறியா.. அதெல்லாம் அவரவர் ஈடுபாடு. ஆனால் எந்த வழியானாலும், எந்த ஆன்மிகப் பாதையானாலும், சாதாரண மனித மனநிலைக்கு இயல்பான பொது அறிவும், பரிவு உணர்வும், மனிதாபிமானமும் - இவற்றுக்கு மிஞ்சிய ஆன்மிகம் எங்கும் இல்லை என்பதை உணர்கிறேன். இந்த உணர்வு மங்காமல் மேலும் ஒளிரும் விதத்தில் எதையும் இரசிக்க மனம் விரும்புகிறது. இந்த உணர்வுக்கு எதிராகும் போது, ஒவ்வாத போது அதை மனமே புறம்தள்ளி விடுகிறது, அது யார் சொன்னதாய் இருந்தாலும், எங்கிருந்து வந்தாலும் சரி. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***