Wednesday, October 16, 2024

மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும் 04

’ஒரு சந்தை. அங்குப் பலர். ஒரு மனிதன் அங்கு வந்து நிற்கிறான். வேலை தேடி நிற்கிறான். பெரும் வணிகன் ஒருவன் ஆடம்பர வாகனத்தில் அங்கு வருவதைக் கண்டு பிறர் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். வந்த வணிகன் ஓடாமல் நிற்கும் மனிதனை வேலை வேண்டுமா என்று கேட்கிறான். மனிதன் ஆம் என்று சொல்கிறான். ஆனால் அவன் கேட்கும் கூலி அதிகம். வணிகன் கட்டாது என்று யோசிக்கிறான். அப்படி என்றால் கட்டிவரும் எத்தனையோ பேர்களில் ஒருவரைத் தேடிக்கொள் என்று மனிதன் சொல்கிறான். ஓடி ஒளியும் இத்தனை பேர்களில் ஓடாமல் நின்று தான் விரும்பும் கூலி கேட்கும் மனிதனே மேல் என்று வணிகன் அவனை அழைத்துச் செல்கிறான். காடு, மலை, கடல் தாண்டி அவன் தீவு. ஓங்கி எரியும் நெருப்பு போல் சுடர்விடும் அவன் மாளிகை. அங்கு அவனுடைய மனைவி, மகள். அழகான மகள் வந்த மனிதனின் வலிமை, துணிச்சல் ஆகியன கண்டு காதல் கொள்கிறாள். அவனை இரகசியத்தில் சந்தித்து ஆபத்துக் காலத்தில் உதவும் மாயப் பொருட்களைத் தருகிறாள். வணிகன் மனிதனை எங்கோ ஆபத்தான மலைக் குன்று ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறான். அங்கு கடப்பாரையைக் குத்தியதுமே ஏகப்பட்ட தங்கப் பாளங்கள் காத்துக் கிடக்கின்றன. மனிதன் உழைப்பில் பல தங்க மூட்டைகளை வண்டியேற்றிய வணிகன் மனிதனை அங்கேயே நிராதரவாய் விட்டுச் செல்கிறான். இதற்கு முன்னர் பலரும் வந்து மீளாத எலும்புகள் நடந்த கதைக்குச் சாட்சிகளாய்ச் சிதறிக் கிடக்கின்றன. ஏன் வணிகனைக் கண்டதும் சந்தையில் பலரும் ஓடி ஒளிந்தனர் என்று புரிகிறது. ராட்சத காகங்கள் தாக்க வரும் போது அவற்றினின்றும் தற்காத்து மீள்கிறான். ஆனால் தப்பும் வழி என்ன என்று திகைக்கும் போது காதல் வயப்பட்ட பெண் தந்த மாயப் பொருட்கள் நினைவிற்கு வரவே அதைப் பயன்படுத்துகிறான். வீரர் இருவர் ‘கட்டளை இடுங்கள்’ என்று சொல்லியவாறு திடீரெனெத் தோன்றுகின்றனர். தன்னை அவ்விடம் விட்டு அகல்விக்குமாறு மனிதன் சொல்ல அவ்வாறே அவனை அகற்றி கடற்கரையில் சேர்க்கின்றனர். பிறகு மீண்டுவந்து அதே சந்தையில் அதே மனிதன் வேலை தேடி வந்து நிற்கிறான். அதே பெரும் வணிகன் அங்கு மீண்டும் வர, அவனிடமே மீண்டும் வேலைக்குச் சேர்ந்து தங்கமலைக்குச் சென்று வணிகனை மாட்டிவிட்டுத் தான் தங்கக் கட்டிகளை மூட்டைகட்டி, காதலித்த பெண்ணுடன் கூடிக் குடும்பம் நடத்துகிறான்.’ 

-- இது ருஷ்ய நாட்டு வாய்மொழிக் கதைகளில் ஒன்று. இந்தக் கதையை ஆராய்ந்தால் பல சூட்சுமங்கள் உட்குறிப்புகளாகக் காணக் கூடும். உழைப்பைச் சுரண்டும் பெரும் வணிகன், கூலியில் சமரசம் செய்து கொள்ளாத சந்தை மனிதன், தோண்டினால் வளம் கொழிக்கும் தங்க வயல், உரிய நேரத்தில் தப்பிக்கவில்லையென்றால் குத்திக் கிழிக்கும் பெருத்த காக்கைகள், தற்காப்புக்குக் காதலி தந்த மாயப் பொருள், மீண்டும் சந்தையில் உழைப்புக்குப் பேரம் படியும் போது வழியை மாற்றிக் கெலித்த மனிதன் - என்று பல குறிப்புகளும் அடங்கிய கதை ஒன்று வாய்மொழிக் கதையாக ருஷ்யாவில் வழிவழியாக வந்திருக்கிறது. 

இப்பொழுது நாம் பாரதியாருக்கு வருவோம். தம் வாழ்க்கையையும் பாரதியார் ஒரு சந்தையாக உருவகப்படுத்திப் பார்க்கிறார். தாம் வணிகன் இல்லை. ஆனால் வாழ வழிகாட்டும் ஒரு துணை என்னவோ தேவை. ஆயினும் வந்து நிற்பதோ ஒரு சேவகன். தன்னைக் கண்ணன் என்று அழைப்பார்கள் என்று சொல்கிறான். ‘கூலி மிகக் கேட்பார். கொடுத்ததெல்லாம் தாம் மறப்பார்.’ஆனால் வேலை மட்டும் நடக்காது என்று இருக்கும் சூழ்நிலையில் கூறி முடிக்கும் முன்னர் வேலையை முடித்து நிற்கும் இப்படி ஒரு சேவகன் அதிசயம்தானே! ஆனால் ஒரே  ஒரு கஷ்டம். இந்தச் சேவகனிடம் அதிகாரம் செய்தால் ஒன்றும் நடவாது. தன்னிடம் நாம் தோற்க வேண்டும். அந்தத் தோல்வியையும் மனம் உவந்து கைகளைத் தூக்கி ஒப்புக் கொண்டுவிட வேண்டும் என்று எதிர்பார்க்கும் அதிசயச் சேவகன் இந்தக் கண்ணன். இந்தச் சூட்சுமத்தைக் கண்டுபிடித்து விடுகிறார் பாரதியார். ஆனால் கண்டுபிடித்த பின்னர் கண்ணன் அங்கு நிற்பதில்லை. வாழ்க்கையின் இரகசியமே கண்ணன் ஆகிய தன்னிடம் உவந்து தோற்பதும், அந்தத் தோல்வியை உண்மையுடனும், உள்ளம் ஒப்பியும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திலும்தான் இருக்கிறது என்பதை உணர்த்தவே வந்தவன் போல் சென்றுவிடும் சேவகன் கண்ணன் என்று காட்டுகிறார். இது பாரதியாரின் கற்பனைக் கதை என்றோ அல்லது அவர் வாழ்வின் மீநிஜக் கதை என்றோ சொல்லலாம். 

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்; 

ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;
சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ செய்கை நடக்கவில்லை. 

 
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்;
''மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்;
இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;
கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர்
நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்''
என்றுபல சொல்லி நின்றான் 

''ஏது பெயர்? சொல்'' என்றேன் 

 
''ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை'' என்றான். 

 
கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -ஈங்கிவற்றால்;
தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
''மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறுக'' என்றேன். 

''ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும்
ஆன வயதிற் களவில்லை; தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை'' யென்றான். 

 
பண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு, மிகவும் களிப்புடனே நானவனை
ஆளாகக் கொண்டு விட்டேன். அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது. 

 
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப்
பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான்.
இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்! 

 
கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம்,
தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்!” 

இவ்வாறு பாரதியார் கண்ணனைச் சேவகனாய் அடைந்து பெற்ற நன்மையைக் கூறியவர், அவனை அதிகாரம் செலுத்தி ஆளத் தொடங்கும் போது தாம் தோற்றதையும், அந்தத் தோல்வியைத் தாம் உவந்து உண்மையாய் ஒப்புக்கொண்ட பொழுது அதே கண்ணன் தமக்குத் தந்த வாழ்க்கைச் செய்தியையும் கண்ணன் என் சீடன் என்ற பகுதியில் கூறுகிறார். 

“மகனே, ஒன்றை ஆக்குதல் மாற்றுதல், 

அழித்திடல் எல்லாம் நின்செயல் அன்று காண். 

தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே 

வென்றாய், உலகினில் வேண்டிய தொழில் எலாம் 

ஆசையும், தாபமும் அகற்றியே புரிந்து 

வாழ்க நீ’ என்றான்” 

வணிகனும், மனிதனும் சந்தையில் நின்று உரைக்கும் செய்தியைச் சுமந்து ருஷ்ய நாட்டு வாய்மொழிக் கதை கூறும் குறிப்பும், பாரதியார் கண்ணனைச் சேவகனாய், தம் சீடனாய்க் கருதி அடைந்த வாழ்க்கை உபதேசமும், நன்மைகளும் ஒரே நேர்க்கோட்டில் நிற்கின்றன என்றால் இலக்கியம் ஆதிமனிதக் குரலைச் சுமந்து வரும் சரடு என்பதில் என்ன சந்தேகம்? 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, October 15, 2024

மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும் 03

3000 பொது யு. மு. என்ன அது பொது யு மு? கி மு, கி பி என்று காலக் கணக்கைச் சொல்வதுண்டு. கி பி என்பதைப் பொதுயுகம் என்றும் குறிப்பிடுகிறார்கள். கி மு என்பதைப் பொதுயுகத்திற்கு முன்னர் என்றும் குறிப்பிடுகிறார்கள். 3000 கி மு என்றும் சொல்லலாம். அதாவது நமக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் அஸிரியா, பாபிலோனியா என்ற பகுதிகளில் வாழ்ந்த ஒரு பக்தர் தாம் வணங்கும் தாய்த் தெய்வத்தை, தெய்வங்களுக்கெல்லாம் தலைமையான தேவியாக விளங்கும் அன்னைத் தெய்வத்தை வேண்டுகிறார். 

களிமண்ணைச் சுட்டுப் பலகையாக ஆக்கி அதில் பொறிக்கப்பட்ட எழுத்துகளில் இருந்து, அந்தப் புரியாத எழுத்துகளை ஒருவாறு கண்டுபிடித்து, அந்த எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்த பலப்பல விஷயங்களில் ஒன்றாக இந்தத் துதி வருகிறது. நிச்சயம் இந்தத் துதியைப் பாடியவரைப் பற்றிய தகவல் இல்லை. இவை அச்சுக்கு வருவதற்குள் பலபேர்கள் கடலைக் கடந்து, மலையைப் புரட்டி என்னன்னவோ செய்து பின்னர்தான் நூலாக ஆகியிருக்கிறது. இன்று சர்வ சாதாரணமாக நானும் எடுத்துக் காட்டி எழுதுகிறேன். நீங்களும் படிக்கிறீர்கள். ஆனால் இவையெல்லாம் முதல் வெளிச்சம் காண்பதற்குள் எத்தனை இருட்டைக் கடந்து வந்துள்ளன! ஆனாலும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்ப் பிரார்த்தித்த அந்தப் பக்த இதயம் இன்று நம்மோடு பக்கம் நின்று பேசுவதைக் காணலாம். 

“O mother of the gods, who fulfills their commands, O lady of mankind, who makes the green herb to spring up, who created all things, who guides the whole of creation, O mother Ishtar, whose side no god can approach, O exalted lady, whose command is mighty, a prayer will I utter. That which appears good unto her, may she do unto me. O my lady, from the days of my youth I have been much yoked to misfortune. Food have I not eaten, weeping was my nourishment. Water have I not drunk, tears were  my drink. My heart never rejoices, my spirit is never glad. 

“ I, thy servant, full of sighs, cry unto thee. Whosoever has sinned, thou acceptest his fervent prayer. The man on whom thou lookest in pity, that man lives, O ruler of all things, lady of mankind, O merciful one, whose turning is propitious,, who acceptest supplication. 

“Beside thee, there is no deity that guides aright. In justice look on me with pity and accept my supplication. Declare my forgiveness and let thy spirit be appeased. When, O my lady, will thy countenance be turned? I moan like the doves, I satiate myself with sighs.” 

யார் வேண்டுதல் பாடுவது? “That which appears good unto her, may she do unto me.” என்ற குரல் யாருடையது? பாரதியார் எப்பொழுது அங்குப் போனார்? 

யாது மாகி நின்றய் - காளீ! எங்கும் நீ நிறைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் - நின்றன் செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர் - வாழும் - பொய்மை வாழ்க்கை யெல்லாம்!
ஆதி சக்தி, தாயே! - என்மீது - அருள் புரிந்து காப்பாய்.” 

”நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி 

நலத்தை நமக் கிழைப்பாள் 

அல்லது நீங்கும்..” 

என்று பாடும் பாரதிக்கும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அஸிரிய பாபிலோனியப் பிராந்தியத்தில் இருந்த பக்தருக்கும் என்ன தொடர்பு? 

சண்டீ என்னும் துர்க்கா ஸப்தசதீ பாடுகிறது: “துர்க்கையே! நின்னைச் சரணடைந்த பேர்களை விபத்து அண்டுவதில்லை. நின்னை அண்டியவர்கள் பிறரால் அண்டி அடையப்பட்டு ஆதரவாக விளங்குகிறார்கள்” 

“த்வாம் ஆச்ரிதாநாம் ந விபந் நராணாம் 

த்வாம் ஆச்ரிதா ஹி ஆச்ரயதாம் ப்ரயாந்தி”

பாபிலோனிய பக்தர் பாடுகிறார்: 

“O MY GOD, whom I know and whom I know not, my sins are many,
great are my transgressions.
O my goddess, whom I know and whom I know not, my sins are
many, great are my transgressions” 

“தனக்கும் தன் தன்மை அறிவரியானை” என்கிறார் நம்மாழ்வார்.

பாரதியின் குரல்: 

“சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்கு 

சொல்லும் அவர்தமையே 

அல்லல் கெடுத்து அமரர்க்கு இணை ஆக்கிடும்..” 

O my lady, from the days of my youth I have been much yoked to misfortune. Food have I not eaten, weeping was my nourishment. Water have I not drunk, tears were  my drink. My heart never rejoices, my spirit is never glad. I, thy servant, full of sighs, cry unto thee. ” என்ற பாபிலோனிய இதயத்தின் தாபம் 

“ஊரிலேன் காணி இல்லை; உறவு மற்றொருவர் இல்லை 

பாரில் நின் பாதமூலம் பற்றிலேன், பரமமூர்த்தி.. 

“மனத்தில் ஓர் தூய்மை இல்லை, வாயில் ஓர் இன்சொல் இல்லை 

சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா. 

புனத்துழாய் மாலையானே ! பொன்னிசூழ் திருவரங்கா! 

எனக்கு இனி கதி என் சொல்லாய்!..” (திருமாலை)

என்று கதறும் திருவரங்கத்தாரின் குரலோடு ஒத்திசை எழுகிறதே எப்படி? ஒற்றை மானிடம்தான் ஓராயிரம் கோடி குரல்கள் மூலம் ஒலித்துக் கொண்டே இருக்கிறதோ? எல்லாக் குரல்களும், எக்காலத்தும் லௌட்ஸ்பீக்கர்களாக அந்த ஆதிக் குரலைக் கடத்தியும், பரப்பியும் செய்வனவோ! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


Monday, October 14, 2024

மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும் 02

’அவர் யோகத்தில் அமர்ந்தார் என்றால் உடலையே மறந்து விடுவார்’. ‘ஆன்ம உணர்வில் அப்படியே இலயமாகிப் பல நாட்கள் அன்னம், நினைவு எதுவும் இன்றி இருந்தார்’. ‘ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சமாதிப் பரவச நிலை இருக்கிறதே!’ - இப்படிப் பலவிதமான விவரணைகள் நிறைந்ததுதான் நம் பண்பாடு. இருந்தாலும் நோய், உடலுக்கு உபாதை என்று வந்ததும் ஆன்ம உணர்வாவது, ஒன்றாவது! யார் கண்டார்கள்? எல்லாம் படிக்க நன்றாக இருக்கிறதே அன்றி, நாம் அனுபவிப்பதோ வெறும் குத்து வலி, குடைச்சல் வலி, பிடிப்பு, மூச்சு வாங்கறது, ஒரே அசதி, உடல் எல்லாம் யாரோ அடித்துத் துவைத்தாற்போல் வலி. டாக்டரிடம் போனால் வலி தெரியாமல் இருக்க ஏதாவது தருகிறார். தீர்ப்பதற்கு வழி சொல்லய்யா என்றால் பொறுத்துக் கொள், பழகிவிடும் என்கிறார். இது நம் நிலை. 

உண்மையில் யோசித்தால், அப்படியெல்லாம் உடலை மறந்து ஆன்மிக நிலை என்றெல்லாம் உண்டா என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது. அப்படி ஒரு நிலை உண்டு என்று நினைக்கக் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது என்றாலும் ... எல்லாம் யாரோ எதற்கோ எதையோ எழுதிப் பரப்பி விட்டுவிட்டார்கள். டாக்டர் கொடுக்கிறாரே.. வலி தெரியாமல் இருக்க மாத்திரை, மருந்து, அது மாதிரிதான் வாழ்க்கையின் கொடிய யதார்த்தம் மறக்கடிக்க யாரோ எழுதி வைத்திருப்பது. படிக்கும் போது கொஞ்சம் எம்பினா மாதிரி இருக்கு. அவ்வளவுதான். - இதுதானே நம்மில் பலரும் தேற்றிக் கொள்வது.! 

 இல்லையேல், புத்தம் புதிதாக யாரோ ஆன்மிகம், சாதனை என்று கிளம்பியவர் என்றால், நமக்கும் நாலு திட்டு விடுவார். எல்லாம் கிரமமாக, ஒரு குரு மூலம் தெரிந்து கொண்டு அப்யாசம் செய்தால் குரு கடாட்சத்தால் கிடைக்கும். இந்த மாதிரி தாந்தோணியா முயன்றால் இப்படித்தான் என்று நம் மூக்கில் ஒரு குத்து விட்டுப் பெருமிதம் அடைவார். அவரும் சில காலம் சென்று, கேட்டுப் பாருங்கள். அது ... நம்பிக்கை வேணும் சார். நம்பிக்கைதான் வாழ்க்கை. என்று சொல்லியபடியே நழுவுவதைப் பார்க்கலாம். 

ஆனால் 204 CE ல், எகிப்தில் பிறந்த கிரேக்க ஞானியான ப்ளோடினஸ் (Plotinus) என்பவர் சொல்லும் பொழுது பொளேர் என்று தலையில் யாரோ தட்டியது போல் உணர்வு வரத்தான் செய்கிறது. என்ன சொல்கிறார் என்று நீங்களே பாருங்கள், தமது என்னியட்ஸ் என்னும் நூலில். 

“ Many times it has happened: Lifted out of the body into myself; becoming external to all other things and self-encentered; beholding a marvellous beauty; then, more than ever, assured of community with the loftiest order; enacting the noblest life, acquiring identity with the divine; stationing within It by having attained that activity; poised above whatsoever within the Intellectual is less than the Supreme: yet, there comes the moment of descent from intellection to reasoning, and after that sojourn in the divine, I ask myself how it happens that I can now be descending, and how did the soul ever enter into my body, the soul which, even within the body, is the high thing it has shown itself to be.” (Enneads, Fourth Ennead, VIII 1) 

ஒரு தடவை இல்லை. பல தடவைகள் தமக்கு அத்தகைய அனுபூதி நிலை வாய்த்திருக்கிறது என்றும், அந்த நிலையை விட்டு மீண்டும் தேகத்தைப் பற்றிய நினைவுக்கு வருவதற்கே தமக்கு மிகவும் அயர்ச்சியாக இருந்தது என்றும் சொல்கிறார். அவர் கிரேக்க பாஷையில் பேசி, அது யாரோ பதிவு செய்து, பின்னர் அந்தப் பதியப்பட்ட சுருள்களை யாரோ கண்டு பிடித்து, 1800 ஆண்டுகளுக்கும் மேலாக உருண்டு உருண்டு வந்து, ஆங்கிலத்தில் ஏறி இன்று நம் கையில் வந்த பதிவு இது. ஆனால் நமக்கு விழுகின்ற அடி இன்றைக்கு, இப்பொழுது விழுவது போல் உறைக்கிறது. இவருக்கும், எனக்கும் என்ன தொடர்பு? நான் படிப்பேன் என்று அவர் கண்டாரா? அவர் இப்படிச் சொல்லியிருப்பார் என்று நான் தான் எதிர்பார்த்தேனா? ஆனால் என்னைச் சுற்றியுள்ள பலரைக் காட்டிலும் அவர் எனக்கு மிகவும் நெருங்கிய உறவாக ஆகிவிடுவது எதனால்? அவர் மட்டுமா உறவாக ஆகிறார்! 

’ஊனக் குரம்பையின் உள் புக்கு, இருள் நீக்கி,

 ஞானச் சுடர் கொளீஇ,..” 

என்று கூறுகிற பொய்கையார் புதிய நெருக்கத்தில் பக்கத்தில் நிற்க வில்லையா? 

“எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு, என் உள்ளம்! 

தெளிய, தெளிந்தொழியும் செவ்வே!..” 

என்று அவர் சொல்லும் போது பேசுவது பொய்கையாரா அல்லது ப்ளோடினஸா .. குரல் ஒத்திசைந்து ஒலிக்கிறதே! 

”பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி 

மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே! 

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே! 

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே!” (திருவாசகம்)

என்று பேசும் குரல் மணிவாசகமா அல்லது ப்ளோடினஸா? ஆனால் குரல் ஒன்றுதானே? எங்கோ, எந்தக் காலத்திலோ பிறந்த நம் ஆன்ம உறவுகள் ஒருவருக்கொருவர் தீப்பந்தம் கொளுத்திக் காட்டும் காட்சியில் காணாதிருக்க நாம் என்ன மடையரா?  

உடலில் எப்படி ஆத்மா உள் புகுந்து நிலவுகிறது என்று ப்ளோடினஸ் கேட்கும் கேள்விக்குக் காலத்தால் தள்ளி நின்றாலும் பக்கத்தில் ஒலிக்கும் குரலாய் ஸ்ரீஆதிசங்கரரின் ப்ரபோத ஸுதாகரம் சொல்கிறது: 

’சுத்தமான சைதன்யம் புத்தியில் பிரதிபலித்து ஜீவன் என்னும் தன்மையை அடைந்து, கண் முதலிய இந்திரியங்களின் வழியாக உலகப் பொருட்களைக் காட்டி நிற்கிறது’ 

சித்ப்ரதி பிம்ப: தத்வத் புத்திஷு யோ ஜீவதாம் ப்ராப்த:| 

நேத்ராதீந்த்ரிய மார்கை: பஹிரர்த்தாந் ஸோSவபாஸதி|| 

காலத்தால், தேசத்தால், பண்பாட்டால், மொழியால், சூழல்களால் வேறுபட்ட, தூரமான இவர்கள் எல்லாம் நமக்கு அந்யோந்யம் ஆக நெருக்கம் ஆனது எப்படி! 

‘அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய், 

ஆனந்த பூர்த்தியாகி, அருளொடு நிறைந்தது எது? 

தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாம் 

தங்கும் படிக்கு இச்சை வைத்து, உயிர்க்கு உயிராய்த் 

தழைத்தது எது? மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது?’ 

என்று எங்கள் ஊர்க்காரர், மலைக்கோட்டை ஞானதீபம், ஸ்ரீதாயுமானவர் எப்பொழுது ப்ளாடினஸோடு உறவாடினார்! 

அங்கிங்கெனாதபடி எங்கும் நிலவும் சரடில், நம் உறவுகள் உண்மையில் வலுக்கின்றன என்றுதானே அர்த்தம்!

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***