Friday, October 22, 2021

ஸ்ரீதேவீ பஞ்சஸ்தவீ

தாந்த்ரிகம், சாக்தம் சார்ந்த கருத்துகளை விளக்குவது கொஞ்சம் கடினம். காரணம் யோகம், ஸூக்ஷ்மம் என்ற தளங்களில் கண்ணுக்குப் புலப்படாத ஸம்ஸ்தானம், ஸ்திதிகளைக் குறித்துப் புலப்படும் பொருள் சார்ந்த சொற்களையிட்டுத்தான் சொல்ல வேண்டும். அப்பொழுது கேட்பவர்கள் ஓரளவு மன உலகில் பயிற்சியில்லாமல் போனால் ஏதோ அடிப்படையற்ற சொல்லாடல் போல் தோன்றும். தாந்த்ரிகம் என்று இல்லாமல், வேதாந்தம் என்பதிலும் புழங்கும் ஒரு கருத்து வாக் இன் சதுஸ் ஸ்திதிகள். சதுர்விபாகங்கள் என்றும் கொள்ளலாம். பரா, பச்யந்தி, மத்யமா, வைகரி என்பவை அந்நான்கு. இவற்றில் வைகரி நாம் கேட்கும், பேசும் வெளிப்பட்ட வாக் இன் நிலை. ஆனால் மத்யமா? பச்யந்தி? பரா? இவற்றை விளக்க நினைத்துப் பின் நச்சினார்க்கினியரே கடினம் என்று விட்டுவிட்டார் என்றால் இதன் கருத்தாழம் என்ன என்று உணரலாம். ஆனால் ஒரு நூலில் ஸ்ரீதேவீ பஞ்சஸ்தவீ என்னும் நூலில், தமிழுரை எழுதவந்த வாதூல வே ராமசந்த்ர சர்மா என்பவர் மிக நளினமாக இதற்கான விளக்கத்தைக் கொடுத்துள்ளதைப் பார்க்கும் போது மிகவும் மனம் உவக்கிறது. 

முதலில் ஸ்ரீதேவீ பஞ்சஸ்தவீ என்னும் இந்த நூலாவது யாது? லகுஸ்தவம், சர்ச்சாஸ்தவம், கடஸ்தவம், அம்பாஸ்தவம், ஸகல ஜனனீஸ்தவம் என்னும் ஐந்தே இந்த ஸ்ரீதேவீ பஞ்சஸ்தவீ என்பதில் காணும் பஞ்ச ஸ்தவங்கள். இந்த ஸ்ரீதேவீ பஞ்சஸ்தவீ என்பதன் மகிமை தந்த்ர சாஸ்த்ரங்களில் மிகவும் அறியப்பட்டதும், மேற்கோளாகக் காட்டப் படுவதும் ஆன ஒரு நூல் இஃது. ஸ்ரீபரமேச்வரர், ஸ்ரீஸிம்ஹராஜர், ஸ்ரீஸோமதிலகஸூரி, ஸ்ரீராகவாநந்தர், ஸ்ரீமஹாகவி மகுடமணி, ஸ்ரீஸதாசிவர், ஸ்ரீகாமேச்வரஸூரி, ஸ்ரீகைவல்யாச்ரமயதி, ஸ்ரீலக்ஷ்மிதராசார்யர், ஸ்ரீகச்சபேச்வரஸூரி போன்றோர்களால் உரைவரைந்தும், எடுத்தாளப்படுவதும் ஆனது இந்நூல். இந்த நூலை எழுதியது யார்? மேற்கோளாக ஆளுவோர் பலவிதமாகக் குறித்துள்ளனர் - லகுபட்டாரகர், தர்மாசார்யர், ஸ்ரீகாளிதாஸ பகவத்பாதர் என்று. இதை மஹாகவி காளிதாசன் தான் செய்தது என்றும் கொள்ள இடம் இருக்கிறது என்பதை வைத்து நூல் முகப்பில் ஸ்ரீமஹாகவி காளிதாஸன் இயற்றியது என்று போட்டிருக்கிறார்.
இந்நூலில் பக்கம் 22ல் உதாரண சுலோகமாக ஒரு சுலோகம் தந்துள்ளார் - 

கலா ப்ரதம பீஜஸ்தா பச்யந்தீத்ய வதாரய |
இயமேவ பராசக்திர் வாசோயோநி: ஸநாதநீ ||
இந்த சுலோகத்திற்குப் பொருள் வரையும் பொழுது பரா, பச்யந்தீ, மத்யமா, வைகரீ என்னும் நான்கு வாக்கின் நிலைகளுக்கும் அற்புதமான தமிழுரை செய்துள்ளார். 

உதாரணத்திற்கு, பசயந்தீ என்பதற்கும் மத்யமா என்பதற்கும் வேறுபாடு குறித்து எழுதும் போது இவ்வண்ணம் எழுதுகிறார். - 

“பச்யந்தீ என்பது எங்கே வாச்யவாசகமானது வரிசையாகத் தோன்றாது பிரிவானது தெளிவுற்று இருக்கின்றதோ அவ்விடம் பராசக்தி சித்தின் முக்யத்தால் காணப்பெறுவள். 

மத்யமா என்பது வாச்யவாசகத்தின் வரிசைகள் பிரிந்திருந்தாலும், தெளிவுற்றும் தெளீவற்றதுமாயிருந்து கொண்டு புத்திக்கு மாத்திரம் விளக்கமாயுள்ளதாம்...” 

ஆனால் இதையெல்லாம் படித்துப் புரிந்துகொள்ளும் ஆட்கள் எங்கே? அந்த பராசக்திதான் கடைக்கண் பார்க்கவேண்டும். 

நூல் விவரம் - ஸ்ரீதேவீ பஞ்சஸ்தவீ, வாதூல வே ராமசந்த்ர சர்மா இயற்றிய ஸரளா என்ற தமிழுரையுடன் கூடியது, முதற் பதிப்பு 1969, ஸ்ரீபக்த ஸமாஜம், சென்னை. வேறு ஒன்றும் முகவரி விவரம் இல்லை. போன் நம்பரும் இல்லை. ஆனால் பக்திப் புத்தகக் கடைகளில் கிடைக்கக் கூடியதுதான் போலும். 1969ல் தானே வந்திருக்கிறது.
Srirangam Mohanarangan
***

No comments:

Post a Comment