Friday, October 22, 2021

தனிமை அல்லது நற்றிணையில் தனிமகனார்

தனிமையை எப்படி இவ்வாறு வரைய முடிகிறது புலவனால்?
ஓர் ஊர். பகையரசன் பெரும் சினத்துடன் விடாமல் தாக்குவதால் வாழ்வாதாரம் இழந்து ஊர்வாழ்வோர் கூட்டம் கூட்டமாக அகன்று விட்டனர். வீடுகள், ஊர்முற்றம், நதிக்கரைகள், அங்காடிகள் அனைத்தும் ஆளே இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அந்த ஊருக்கு ஊர்க்காவல் என்று ஒருவன். அவன் எங்கு அகல்வது? தன்னந்தனியனாய் ஊர் நுழைவு வாயிலை அடைத்தும் திறந்தும் ஒரு மூலையில் சுருண்டு கிடந்தும் - அவனுடைய இயக்கம் மட்டுமே அங்கு மனித மிச்சம். அவன் காப்பதோ அந்த ஊர்ப்பாழ் மட்டுமே! 

அதுபோல் இந்த நெஞ்சம். வானத்து மேகம் போன்று கிழக்கில் கடலில் நீர் முகந்து வான் ஏறி எங்கும் கருத்து கம்மியர் செம்புப் பானையைச் செய்யுங்கால் உலைக்களத்தில் சுடர்வதைப் போன்று மின்னி.. மேடு பள்ளம் பார்க்காமல் பெய்துவிட்டு எங்கோ தென் திசையில் சென்று மறைந்துவிடுவதைப் போல். . அவனோடு அவன் இருந்த போது என்ன ஆட்டம் பாட்டம் எங்கும் களி எங்கும் இன்ப மழை எந்தப் பக்கமும் பொறிபரக்க, என்று இருந்த காலம் போய் இப்பொழுது அவன் நினைவாகவே அவனுடனேயே சென்று மறைந்து விட்டது ஊரைவிட்டு அகலும் வாழ்வோரைப் போன்று. எஞ்சியிருப்பது அன்றன்றைக்குத் தூங்கி எழுந்து உண்டு பின் உறங்கி அயரும் இந்தத் தனிமை! ஊர்க்காவல் தனிமகன் போன்று ஆகிவிட்டது! 

”குணகடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
மண் திணி ஞாலம் விளங்கக் கம்மியர்
செம்புசொரி பானையின் மின்னிஎவ் வாயும்
தன்தொழில் வாய்த்த இன்குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு
நெஞ்சம் அவர்வயிற் சென்றென ஈண்டொழிந்து
உண்டல் அளித்து என் உடம்பே விறல்போர்
வெஞ்சின வேந்தன் பகையலைக் கலங்கி
வாழ்வோர்ப் போகிய பேரூர்ப்
பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே.”
(நற்றிணை) 

புலவருக்கே பெயர் தனிமகனார் என்றே வாய்த்துவிட்டது காலத்தில்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment