Friday, October 22, 2021

ஸ்ரீதேவராஜ பாரதி

 நம்மாழ்வாரின் திருமால் காதல் நெறி என்பதுதான் உண்மையில் வைணவத்தின் ஊற்றுக்கண்ணாய்த் திகழ்வது. நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீராமானுஜர் ஸ்ரீமணவாள மாமுனிகள் என்று நம்மாழ்வாரின் தமிழ் மறைக்கே தம்மை ஈடுகொடுத்தவர்கள்தாம். இத்தகைய தமிழ்க் காதல், தமிழ் மொழியின்பால் தெய்விக உணர்வு, தம் தெய்வத்தையே தமிழ் பின் சென்ற பெருமாள் என்று கொண்டாட்டம் பாடுவது, ஆழ்வார்கள் வாழி, அருளிச்செயல் வாழி என்று போற்றிப் பேணும் தமிழ் உணர்வின் செழுமை - இது புரிந்தால்தான் வைணவம் புரிந்ததாக ஆகும்.

ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த ஸ்ரீதேவராஜ பாரதி என்பார் எழுதிய ஸ்ரீசடகோப திவ்ய சரித்திரத்தில் எழுதுகிறார்.
’கண்ணிநுண் சிறுத்தாம்போதிக் காரிசேய் அருள்பெற்றுய்ந்த அண்ணன் மெய்ப்போத நாதமுனி திருவடியும்..’
ஸ்ரீராமானுஜரைக் குறித்து
‘நறைத்துள வலங்கல் மார்பன்
நாண்மலர் அடியின் நான்கு
மறைத்தமிழ் உதவுஞான வகுளபூ
டணனை வாழ்த்தக்
கறைத்தலை பணிமன்னேயிக்
காசினி அதனின் முக்கோல்
இறைத் தவன் ஆகிவந்த எதிபதி
கழல் உள்கொள்வாம்.’
ஸ்ரீமணவாள மாமுனிகளைக் குறித்து ஸ்ரீதேவராஜ பாரதிகள்
‘தேனினம் முரன்று பாடும்
மகிழ்மலர்த் தெரியல் வேய்ந்த
ஞானதேசிகன் உரைத்த
நான்மறைத் தமிழ்ச்சுடர்க்கு
மேனியைத் தகழியாக்கி
மெய்யறிவு இடுநெய்யாக்கி
மானிலம் விளங்கச் செய்த
வரவரமுனி தாள் கொள்வாம்.’
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment