Friday, October 22, 2021

குறுந்தொகையில் உள்ளமும் நெஞ்சமும்

 தமிழ் மொழி அநாதியானது. இந்தக் காலத்தில் தோன்றியது என்று அறுதியிட முடியாத அளவிற்குப் பழமையானது - என்ற கொள்கையை உடையவர் ஸ்ரீ மணவாள மாமுனிகளும், அவருக்கு முந்தை ஆசிரியரான ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனாரும். ‘என்றுமுள தென் தமிழ்’ என்பது ஏதோ வெறும் சொற்சேர்க்கை அன்று.

சங்கத் தமிழை நாம் கவனத்துடன் கற்றோம் என்றால் பல நுட்பங்கள் புலப்படுகின்றன. பண்டைத் தமிழர் உள இயலில் எங்ஙனம் நுட்பமும் செறிவும் மிக்க சொல்லாடலைப் பயன்படுத்தினார்கள் என்பதை உணர முடியும். உள இயல் சார்ந்து செறிவான சொல்லாடல்கள் உடைய பண்பாடு அகவயமான பார்வை மிக்கது என்பது தன்னடையே போதரும். மனம் என்றால் அதன் பொருள் வேறு, உள்ளம் என்றால் அதன் பொருள் வேறு என்பது மட்டுமன்று. நெஞ்சம் என்றால் பொருள் வேறு, உள்ளம் என்றால் பொருள் வேறு என்று பயன்படுத்தியிருக்கிறார்கள். நம்மைக் கேட்டால் மனம், நெஞ்சம், உள்ளம் எல்லாம் ஒன்றுபோல் காட்சியளிக்கும். ஆனால் சங்க காலப் புலவோர்க்கு அவ்விதம் அன்று.
குறுந்தொகையில் ஒரு பாடல். காதலியை இரவுநேரத்தில் காணவரும் தலைவனை மறுத்துத் திருப்பியனுப்புகிறாள் தோழி. தலைவன் தன்னையே நொந்தவாறு செல்கிறான். அப்பொழுது அந்த மனநிலையில் அவன் எண்ணங்களைப் படம் பிடிப்பதாகப் பாடல் அமைகிறது.
‘நல்ல உரைகளைக் கேளாமல் வெற்று ஆசைப் பேச்சுகளை நம்பிக் கிளம்பினாய். இப்பொழுது பார் உன் உள்ளமோ சுடப்படாத மட்கலத்தில் வைத்த நீர் போல் கலத்தையும் கரைத்து ஓடிப் பயனற்றுப் போகும் நிலைக்குத் தள்ளுகிறது. உள்ளம் தாங்கா ஆசை வெள்ளம் நீந்தி அரிது என்பதை அடைய அவாவுற்றாய். ஏ நெஞ்சே! உன்னுடைய மனப்பூசல் இருக்கிறதே மிகவும் பெரிது. உன் புலம்பலை யார் கேட்பார்கள்? புலம்பினால்தான் நீ இந்த உளச்சிக்கலிலிருந்து மீள முடியும். யாராவது கேட்பதற்குக் கிடைத்தால்தான் புலம்பலுக்குத் தோதுப்படும். பாவம் உன் நிலைமை! மரத்தில் ஒரு கிளையினின்றும் ஒரு கிளையினுக்குத் தாவும் மந்தி தன் மகவை ஒரு கையால் அணைத்து நழுவவிடாமல் தாவுவது போல உன் உள்ளம் நழுவிவிடாமல் இருப்பதற்கு வாய்த்த கொம்பாகப் புலம்பலைக் கேட்க ஆள் கிடைக்குமா என்று பார்! புலம்புவதிலும் ஒரு கௌரவம் வேண்டும் அல்லவா!’
‘நல்லுரை இகந்து புல்லுரை தாஅய்ப்
பெயல்நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிதுஅவா வுற்றனை நெஞ்சே! நன்றும்
பெரிதா லம்மநின் பூசல் உயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.’
(குறுந்தொகை)
உள்ளம் வேறு நெஞ்சம் வேறு. உள்ளத்தை உடைமை போன்றும், நெஞ்சம் உள்ளத்தை உடையது போன்றும் வேறுபட மொழிதல் அகநானூற்றிலும் வருகிறது.
அகநானூறு, 19 ஆம் பாடலில் நெஞ்சை விளித்து நின் உள்ளம் என்றே சார்த்தி உரைக்கப்படுகிறது.
‘நெஞ்சே! ...
செல்லினிச் சிறக்க நின்உள்ளம் வல்லே’
நெஞ்சம் பொருள்வயின் பிரியும் நடைமுறையில் கவனம் கொண்ட கவலைகளை உடையதென்றும், நெஞ்சத்தின் தெருட்டலில் அடங்கித் தளும்பும் உணர்ச்சிப் பிழம்பாகவோ அல்லது நீர்ப்பண்டமாகவோ உள்ளமும் கருதப் படுகிறது. நெஞ்சம் போதிய அளவு தெருட்டல் செய்யவில்லையெனிலோ அல்லது எத்தனை தெருட்டினும் அடங்காது உள்ளம் புறம்பொசியும் நிலை வந்திடிலோ அஃது சுடப்படாத பசும் மட்கலத்தில் பெய்த நீரின் நிலையை ஒத்துக் கலமும் கரைய, கொள்நீரும் கசியும் நிலையே எஞ்சுவது போன்றது என்ற உவமை நன்கு உணர்த்துகிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment