1929 ஆம் ஆண்டு ஒரு நல்ல காரியம் நடந்தது. ஹிந்து பத்திரிகாசிரியராய் இருந்த ஸ்ரீமான் ஏ ரங்கசாமி அய்யங்கார், ஸ்ரீ என் கோபால்சாமி அய்யங்கார் ஆகியோர் தமது சகோதரியான ஸ்ரீ ருக்மணி அம்மாளுக்கு ஞாபகமார்த்தமாக ஒரு சொற்பொழிவுத் தொடர் ஏற்படுத்தினார்கள். அந்த வருஷாந்திர வரிசை எற்பாட்டில் முதன்முதல் 1929ல் வித்யாரத்னாகரம் பண்டிட் வி ஆர் நரஸிம்ஹாசாரியரைக் கொண்டு ஒரு சொற்பொழிவுக் கோவையைச் செய்ய ஏற்பாடாயிற்று. ஸ்ரீ நரஸிம்ஹாசாரியர் செய்த பிரசங்கத் தொடரின் பொருள் என்னவென்றால் பாரத மண்ணில் பெரும்பான்மையாக வழங்கிவரும் வைதிக மதங்களை மட்டும் விளக்கிப் பேசாமல், சார்வாகம், தார்க்கிகம், பௌத்தம், ஜைனம் என்று அனைத்து தர்சனங்களைப் பற்றியும் விளக்கமாகப் பேசியிருப்பது ஒரு விசேஷம். அதைவிடச் சிறப்பு என்னவென்றால் தாம் விசிஷ்டாத்வைத மதத்தில் ஈடுபாடு கொண்டிருந்தும் அந்த தத்வத்தின் ரீதியாகவே மற்ற மதங்களையும், தத்வங்களையும் பார்த்துக் கண்டனம் தெரிவித்துப் போகாமல் பொதுவாக அனைத்து மதங்களுமே மக்களுக்கு ஒவ்வொரு விதத்தில் நல்ல அம்சங்களைப் போதிக்க வந்தவையேயாம்; எனவே ஒவ்வொரு மத்தினரும் தம்தம் மதத்தில் ஈடுபாடு கொண்டுள்ள போதும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களை வண்டு தேன் சேகரித்துக் கொள்வதைப் போல அல்லாதவற்றைக் கண்டுகொள்ளாமல் அவ்வவற்றில் உள்ள நல்ல அம்சங்களை மாத்திரம் தாம் கொண்டு அவற்றின் பால் கௌரவ புத்தியோடு அணுகுவது சரியான வழி என்று நல்ல நிதானம் பேசுகிறார். அதையே தமது சொற்பொழிவின் அணுகுமுறையாகவும் கைக்கொண்டு பேசியுள்ளார்.
உதாரணமாக பௌத்த மதத்தைப் பற்றிக் கூறும்பொழுது வைதிகர்கள் பொதுவாக புத்தாவதாரம் அசுரர்களை மயக்குவதற்காக ஸ்ரீமந் நாராயணன் எடுத்த அவதாரம் என்று சொல்வதை மறுக்கிறார் ஆசிரியர். ஏன் அவ்வாறு கூற வேண்டும்? அது ஸ்ரீமந் நாராயணனுக்கே பெருமைதரும் விஷயம் அல்லவே என்கிறார். எல்லாவற்றிலும் சாரமான அம்சங்களைப் போற்ற வேண்டும்; வேண்டாத அம்சங்கள் இருந்தால் தூற்றாமல் விலக்கிவிட வேண்டும் என்பது உதயணாசாரியரிடமிருந்து ஆசிரியர் தாம் பெற்ற வழிநடத்தும் கருத்து என்றும், அதையே அனைவரும் கொள்ளத்தகும் என்றும் கூறுகிறார். பழைய சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வளவு நடுநிலையோடு பொதுவாக மதம் என்ன என்பதையும், பிறமதங்களையும் நன்கு நிதானத்துடனும், அமைதியான புரிந்துணர்வுடனும் நன்கு விளக்கமாகவும் எளிமையாகவும் பேசியிருப்பது அருமை. அதுமட்டுமின்றிப் பல தர்சனங்களையும் பற்றிப் பேசுமிடத்து மிக நுணுக்கமாகச் சில விஷயங்களை ஆசிரியர் அலசும் விதம் அறிஞர்களுக்கும், பொது மக்களுக்கும் ஒரு சேர விருந்தாகும்.
அந்தச் சொற்பொழிவுகளை அப்படியே 'நவநீதம்' என்னும் நூல்வடிவில் The Rukmini Lectures 1929 என்னும் உபதலைப்புடன் 1930ல் வெளியிட்டுள்ளார்கள்.
அப்படியே நூலைச் சிறிது தற்காலத் தமிழுக்குத் தக்கவாறு சீர்படுத்தி மீண்டும் வெளியிட்டால் எவ்வளவோ உபகாரமாய் இருக்கும். 283 பக்க நூலுக்குக் குறிப்புகள் தனியாக 68 பக்கங்களுக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
***
🙏
ReplyDelete