Friday, October 22, 2021

திருக்குறளில் தோய்ந்தால்

 படிப்பு உலகம் பார்க்கும் உலகத்தைவிடப் பரந்தது. பல வியப்புகள் செறிந்தது. எந்தக் காலத்திலோ இருந்ததை, எந்தக் காலத்திலோ இருக்கப் போவதை இந்தக் கணத்தில் அண்மையாக்கும் நனிமிகு ஆற்றல் நூல்களுக்கு உண்டு. நானிலம் வாழ நூல்கள் அருளிய நல்லோர் உறவை விட இனியதும் நல்லதும் நிலைத்ததுமான உறவு வேறு எதுவும் இல்லை. படிப்பு உலகத்தில் இருவரிடம் எனக்குச் சிறிதே அச்சம் உண்டு. ஒன்று அரிஸ்டாடில். இரண்டாவது திருவள்ளுவர். இவர்களிடம் போய்விட்டால் பிறகு மிக நெடுங்காலம் பயணம் நின்று போகும்; பயணம் என்பதை விட திரிதரல் நின்று போகும் என்ற அச்சம். அச்சம் என்று சொல்வதை விட, .. பெருவியப்பு, விம்மு பெருமித ஈடுபாடு, போதுமய்யா என்ற நிறைவு எண்ணம், கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டுண்ணப் பண்ணுவது போல் போக்கு காட்டி நம்மைக் கட்டிவிடும் பெருமாயம் - இதையெல்லாம் சேர்த்துத்தான் வசதிக்காக ‘அச்சம்’ என்று சொல்லி வைத்தேன். ஆனால் விதி வலியது மகனே என்பது போல் இந்த இருபேர் ஆழியில்தான் இப்பொழுது மாட்டிக் கொண்டு இருக்கிறேன். நிறைவும் சுகமும் கணத்திற்குக் கணம் புது வியப்பும் குறைவே இல்லை. வாழி.!

சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன். தமிழில் தேருதல் என்று ஒரு சொல். தேறுதல் என்று ஒரு சொல். ர ஆ, ற ஆ என்ற குழப்பம் தரும் சொற்களில் இவையும் உண்டு. ஆராய்ந்து ஒன்றை முடிவு செய்து எடுப்பது தேருதல். நம்பி ஒன்றில் சார்ந்து மனம் ஆறுதலும் அமைதியும் கொள்வது தேறுதல். கிட்டத்தட்ட பக்கத்து ஒலி. ஆனால் பொருளில் எவ்வளவு வேறுபாடு! இந்த இரண்டு சொற்களையும் ஒரே குறளில் பயன்படுத்தித் தெளிவுபடுத்துகிறார் திருவள்ளுவர்.
ஆராய்ந்து பின் ஒன்றை முடிவு செய்து கைக்கொள். ஒன்றையோ ஒருவரையோ. மனம் எளிதாக ஆறுதல் கொள்கிறது என்பதற்காக ஒன்றையோ ஒருவரையோ நம்பிச் சார்ந்து அமைதி கொண்டு விடாதே. நன்கு ஆராய்ந்து தெளிந்து ஒன்றைக் கைக்கொண்ட பின் அதில் உறுதியாக நம்பிச் சார்ந்து நில்.
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
(திருக்குறள்)
தேறுவது, தேர்வது - பொருளில் எத்தனை வேறுபாடு!

*
ஒன்றே முக்கால் அடியில் என்ன கவிதை, என்ன அல்லூஷன், என்ன கருத்து! சோம்பலின் வசமானவனிடத்தில் மூதேவி விரும்பி உறைகின்றாள். முயற்சி திகழ்பவனிடத்தில் திரு நீங்காமல் நிலைபெறுகிறாள். மடி என்றால் சோம்பல் ஒரு பொருள். ஒருவர் அமர்ந்து அவரது தொடையும் காலும் சேர்ந்து அமையும் இயல்பான இடத்தில் மிக நெருக்கமானவர்களை அமர்த்திக் கொள்ளும் இடத்திற்கும் மடி என்று பெயர். அதேபோல் ஒருவரது காலுக்கும் தாள் என்று பெயர். முயற்சிக்கும் ‘தாள்’ என்ற பெயர். திருமாலின் தாளிணையில் திரு அமர்ந்துறைகிறாள் என்பது புராணம். திரு ஆகிய ஸ்ரீதேவி இளையவள் என்றும், சோம்பல் என்னும் ஜ்யேஷ்டா ஆகிய சேட்டை மூத்தவள் என்னும் பொருளில் மூதேவி என்றும் புராணக் கதை வழங்கும். இவை அத்தனையையும் இணைத்து ஒரு சொல்லுக்கு இரு பொருள்பட ஒன்றே முக்கால் அடியில் திருவள்ளுவர் செய்திருக்கும் வியப்புதான் இந்தக் குறள்!
’மடியுளான் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.’
மாமுகடி என்னும் மூதேவி அவன் மடிமீதே அவ்வளவு நெருக்கமாக அமர்ந்திருக்கிறாள் என்ப, யாருக்கு? மடியுள்ளவனுக்கு. அதாவது சோம்பல் உள்ளவனுக்கு.
மடியில்லாதவனிடத்திலோ தாமரையினாள் அவனுடைய தாளில் நீங்காது இருக்கின்றாள். தாளில் நீங்காது என்றால்? தாள் என்றால் முயற்சி. திரு நீங்காமல் உறைவது அவனுடைய முயற்சியில் என்ப. புராணக் குறிப்பின் சாயலில் பார்த்தால் திருமாலின் தாளிணையில் உறைபவள் திரு.
மூத்தவளான மூதேவி எங்கு உறைகின்றாள், இளையவளான தாமரையினாள் எனப்படும் திருமகள் எங்கு உறைகின்றாள் என்று சொல்ல வருவது போல் தோற்றமளிக்கிறது குறள். ஆனால் பொருளில் பார்க்கும் பொழுது, முயற்சியற்ற சோம்பேறி மூதேவியை நெருக்கமாகப் பேணுகிறான் என்றும், முயற்சியுள்ளவனின் முயற்சியில் திருமகள் நீங்காமல் உறைகின்றாள் என்றும் புலப்படக் குறள் பேசுகிறது.
மடி, தாள் என்ற சொற்களின் பொருள் வாய்ப்புகளை வைத்துக் கவிதை படைக்கிறது. மூதேவியே விலகலாம் என்று பார்த்தாலும் விடமாட்டேன் என்று சோம்பேறி விரும்பிப் பற்றிக் கொள்வது போன்ற காட்சியையும், முயற்சி உடையவன் தன்னைக் குறிப்பாகக் கருதவில்லையானாலும் தான் அவனை விட்டு நீங்காது விரும்பி அவன் முயற்சியிலேயே உறைகின்றாள் திருமகள் என்ற செறிவான காட்சியையும் தொனிக்கும்படியாக வைக்கிறது குறள்.

*
அவ்வளவு காலத்திற்கு முன்னரே இவ்வளவு தெளிவுபடச் சொல்லியும் கூட மயங்கி முரண்பட்டுப் பிழைபடச் செய்தால் அதற்கு யாரை நோவது செய்பவர்களை அன்றி? வழிவழியாக வரும் நூல்களில் சொல்லியிருக்கிறது. அப்படியேதான் செய்வோம். பொருத்தமா, இயற்கைக்கு ஒவ்வுமா, அதில் ஏதேனும் பொருள் இருக்கிறதா அதெல்லாம் கவலையில்லை. நூல் கருத்துகளுக்குத் தக மற்றவைதான் மாறிக்கொள்ள வேண்டும் - என்று அடம் பிடிப்போர் மத்தியில், இப்படி நெத்தியில் அடித்தது போல், இடித்து உரைப்பது போல் பொய்யாமொழியார் திருவள்ளுவர் கூறுவாரேயானால், ‘விட்ராதீங்க... விட்ராதீங்கப்பு..’
அதாவது பல வித நூல்களைப் படிக்கலாம். வழிவழி நூல்களின் கனமே தனி. அந்த நூல்களில் சொன்ன கருத்துகளை நாம் நன்கு புரிந்து கொள்ளலாம். ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து நூல் நுவலும் நுட்பங்களை உணரலாம். ஆனால் நூலில் சொல்லியிருக்கிறது என்பதற்காக அப்படியே நடைமுறைப் படுத்த வேண்டும் என்று துடிக்காதே. அவ்வப்பொழுது என்ன மாதிரி இயற்கையில் அமைந்து இருக்கிறதோ இயல்பு எப்படி இருக்கிறதோ அதனை முதலில் நன்கு உணர்ந்து அதற்கு வேண்டியதை வேண்டியவாறு பயன்கொள்ள வேண்டுமே அன்றி நூலின் கருத்துகளை அப்படியே நடைமுறை ஆக்க நினைப்பது சரியன்று என்கிறார் திருவள்ளுவர்.
’செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.’
இங்கு செயற்கை என்பது நூலில் கற்கும் கருத்துகள். எப்பொழுதும் உலகத்து இயற்கை அறிந்து செய்வதுதான் செயலின் நெறி. கண்மூடித் தனமாக நூலை வாழ்வாக்க, நடைமுறையாக்க முனைவது அன்று.

*
’சொல்’ என்பதற்கான ஆராய்ச்சிகள் பல மொழிகளிலும் வந்து கொண்டிருக்கின்றன. இன்றைய ஆய்வுலகம், இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகள், மொழித் திறன் ஆய்வுகள், தத்துவ ஆய்வியல் என்று பல்துறை கெழுமிய கவனம் ‘சொல்’ இன் பால் சிறந்து விளங்குகின்றன. இதன் நடுவே திருவள்ளுவர் ‘சொல்’ என்பதற்குத் தரும் விளக்கமும், நுட்பமும் நம் ஆழ்ந்த சிந்தனைக்கு உரியன. ஆனால் பல இடங்களில் பேருதவியாய் இருக்கும் பண்டைய உரைகள் ஏனோ பல இடங்களிலும் பனுவலின் போக்கையும் நோக்கையும் திசையையும் தவற விடுகின்றன. அல்லது தாம் முன்னமே வரைந்து கொண்ட கட்டுமான வடிவங்களுக்கு ஒப்பவே பொருள் உரைக்கும் கடப்பாட்டைக் கைக்கொள்கின்றன. திருக்குறளுக்கு முதல் முக்கியமான உரையாசிரியரே திருவள்ளுவர்தாம் என்பதைப் பலரும் ஏனோ நெகிழ விடுகின்றனர்.
திருவள்ளுவர் ஒரு கருத்தைச் சொல்கிறார் என்றால் அந்தக் கருத்துக்கு ஒரு மாற்றுப் பக்கமும் உண்டு என்பதை அவருடைய ஓர்மையில் நன்கு கொண்டுதான் அவ்வாறு சொல்கின்றார். உதாரணத்திற்கு
‘கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.’
என்ற குறளில் கற்றவற்றின் வழியே பிசகாது அந்த நூல்களுள் சொல்லியவண்ணமே நிற்க வேண்டும் என்று சொல்கின்றவர், அதன் மாற்றுப் பக்கம் என்ன என்பதைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். அவ்வாறு சிந்திக்கும் போது படித்ததையெல்லாம் நடைமுறை ஆக்க முடியுமா, ஏட்டில் உள்ளவை அவ்வக்கணம் இயன்று செல்லும் வாழ்க்கைக்கு இயந்திரச் செயல் முறைக் கையேடு போல் ஆக விடுவது அறிவுடைமையா என்ற கேள்விகள் நமக்கு எழ வேண்டும். அப்பொழுதுதான் அவர் அடுத்து ஓரிடத்தில் அதற்கான விளக்கத்தைப் பொதிந்து வைக்கும் திறனை நாம் உணர்ந்து மகிழ முடியும். அந்த மாற்றுப் பக்கத்தை எடுத்துரைக்கும் குறளான
’செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்’
என்னும் குறளின் சிறப்பை நாம் உணர முடியும். நாம் ஏதோ படித்துவிட்டுப் போய்விட வேண்டும் என்பது திருவள்ளுவரின் எதிர்பார்ப்பன்று. நாம் அந்தக் கருத்துகளைக் குறித்துத் தியானம் கொள்ள வேண்டும் என்பதே அவருடைய விழைவு. அந்த ஆழ்ந்த சிந்தனை நுண் விசாரம் இதில்தான் அவருடைய சொல்முறை முழுமை அடைகிறது. அந்த முழுமையின் ஓர்மைப் பகுதியை நாம் தான் செய்ய வேண்டும். இத்தகைய பார்டிஸிபேடரி ரீடிங், கலந்தும் ஆழ்ந்தும் வினவியும் படித்தல் என்பதை நாம் செய்யும் பொழுது திருக்குறளுக்கான வாசகர் ஆகிறோம்.
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.
சொல் என்பதன் திறனறிந்து சொல்லுக என்கிறார் திருவள்ளுவர். அதைக் காட்டிலும் சிறந்த அறமோ, பொருளோ இல்லை என்று அவர் வலியுறுத்திச் சொல்லுவதைப் புரிந்து கொள்ள நாம்தான் நம்மோடு ஒத்துழைக்க வேண்டும்.

*
ஒருவர் திருக்குறளை நன்கு கற்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஸ்ரீரமணரின் உள்ளது நாற்பது, நானார், உரையாடல்கள் ஆகியவற்றை நன்கு கற்று ஓரளவிற்காவது புரிந்து கொள்கிறார் என்றால் பிறகு அவர் கற்க வேண்டிய இன்றியமையா கருத்துகள் உலகில் என்ன உண்டு என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் உலகத்து வாழ்க்கை, உள்ளத்து உணர்வில் ஊன்றும் அக வாழ்க்கை என்ற அனைத்தில் அடிப்படைகளை அவர் தம் சிந்தனைக்குப் பொருளாக்கிக் கொண்டுள்ளார் என்று சொல்லலாம்.
ஸ்ரீரமணரின் உள்ளது நாற்பது என்னும் நூலில் ஒரு பாடல் :
’தன்மைஉண்டேல் முன்னிலைப டர்க்கைகள் தாமுளவாம்
தன்மையின் உண்மையைத் தானாய்ந்து - தன்மைஅறின்
முன்னிலைப டர்க்கை முடிவுற்றுஒன் றாயொளிரும்
தன்மையே தன்னிலைமை தான்.’
தன்மை முன்னிலை படர்க்கை என்னும் இலக்கணக் கருத்தை வைத்தே தத்துவத்தைச் சொல்லி முடித்து விட்டார்.

*
’தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.’
நாடு என்பதற்குத் திருவள்ளுவர் தரும் அரிய வரையறைகளுள் ஒன்று இஃது. குறைவே அற்ற விளைச்சல் அடிப்படை. விளைச்சல் குறைவற்று இருக்கலாம். ஆனால் உழவருக்குக் குறை இருந்தால் என்ன செய்வது? எனவே விளையுள் என்று விளைச்சல் பயனாகிய அஃறிணையை மட்டும் குறிக்காது அதனை உண்டாக்கும் உழவரையும் சுட்டி எவ்விதக் குறையும் அற்ற உழவர் என்றும் பொருள் காண வேண்டும். இந்த இடத்தில் சில உரையாசிரியர்கள் விளைச்சலை மட்டும் விளையுளுக்குப் பொருளாய்க் கொண்டிருக்க பரிமேலழகர் விளையுள் அதனை உண்டாக்கும் உழவரைக் குறித்ததாய்க் காட்டியிருப்பது நன்று.
தக்கார் என்று வரும்போது சில உரையாசிரியர்கள் துறந்தார் என்பது போன்று பல பொருள் உரைப்பது ஏனோ தெரியவில்லை. தக்கார் என்று திருவள்ளுவரே மேலும் இரண்டு குறள்களில் பயன்படுத்தியுள்ளார். அங்கெல்லாம் அறிவும் ஒழுக்கமும் வாய்ந்த நடுநிலை தவறாத சான்றோர் என்று பொருள் கூறுகின்றனர் பரிமேலழகர் உட்பட. ஆனால் இங்கு மட்டும் தக்கார் என்பதற்குத் துறந்தார் அறவோர் ஏன் பொருளாக வருகின்றன?
தக்கார் தகவிலர் என்பது அவரவர்தம்
எச்சத்தாற் காணப் படும்.
அறிவும் ஒழுக்கமும் வாய்ந்த நடுநிலை தவறாத சான்றோர் என்றால் அவர்களுக்குத் தோன்றும் புகழே அதனைப் பகரும்.
தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
இந்தக் குறளிலும் ‘தக்கார்’ அறிவும் ஒழுக்கமும் வாய்ந்த நடுநிலை தவறாத சான்றோர். ஆனால்
தள்ளா விளையுளும் தக்காரும் - என்ற இடத்தில் ஏன் தக்காருக்கு அறவோர், துறந்தோர் என்று பொருள் வருகிறது? திருக்குறளுக்குத் திருவள்ளுவரே சிறந்த விளக்கம் என்றுதான் தோன்றுகிறது. பல இடத்திலும் அவரே ஓரிடத்தில் எழும் ஐயத்தைப் பிறிதோரிடத்தில் தீர்த்து வைப்பவராகவும் இருக்கின்றார்.
அது என்ன தாழ்விலாச் செல்வர்? செல்வருக்கு எது தாழ்வு? ‘செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்’. செழுங்கிளை தாங்காமை, வேளாண்மை என்னும் உதவி புரிவதில் பெருமிதம் என்னும் குணமின்மை செல்வர்க்குத் தாழ்வு. திருவள்ளுவரின் Political Economics ன் ஒரு பகுதியோ இது?

*
நம் காலத்தில் ‘வெள்ளைப் பணம்’ ‘கருப்புப் பணம்’ என்று பேசுகிறோம். அதில் ஒன்றும் பெரிதாக அறநெறிச் சார்பு எதுவும் இருக்கிறதா தெரியவில்லை. அதாவது கணக்கில் காட்டி விட்டால், அதற்கு உரிய வரி முதலியவை கட்டிவிட்டால் ‘வெள்ளைப் பணம்’ என்று சொல்லலாமா? கணக்கில் காட்டாமல் இருப்பது ‘கருப்பு’ ஆ? சரி அது எப்படியோ இருக்கட்டும். ஒருவர் ஒரு பொருளை வியாபாரம் பண்ணுகிறார். அந்தப் பொருள் இத்தன்மையது, இத்தனை நாள் வரும், இந்தப் பயன்பாடு உடையது என்று விளம்பல் வாக்கியமும் அச்சடித்துத்தான் பொருள் விற்கப் படுகிறது. ஆனால் விலை கொடுத்து வாங்கியபின் சொல்லப்பட்டதில் ஏதோ சதவிகிதம்தான் பயனுக்குக் கிடைக்கிறது. அப்படி என்றால் கொடுத்த விலையில் பயனாக மாறாத பங்கு அவருக்கு ஓசிப் பணம். ஆனால் எல்லாம் கணக்கு காட்டி வரி செலுத்தி ‘வெள்ளை’ தான். வாங்கிய பலரும் ‘இந்தப் பணம் இவருக்குச் செரிக்குமா?’ என்று நொந்து இட்ட சாபமும் அவர் கணக்கில்தான் ஏறுகிறது. ஆனாலும் அவர் கணக்கு காட்டிவிட்ட ஒரே காரணம் கண்ணியமானவராக விரைப்பாக நடக்கிறார். இதெல்லாம் நம் எகனாமிக்ஸின், ஃபினான்ஸின் விசித்திரம்.
ஆனால் திருவள்ளுவரும் ஒரு பொருளாதாரம் பேசுகிறார். அவரும் இரண்டு பொருள் இருப்பதாகக் கூறுகிறார். ‘ஒண்பொருள்’ என்பது ஒன்று. ’அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்’ என்பது ஒன்று. அங்கு கணக்கு காட்ட வேண்டியது மனசாட்சியிடமும், கண் உறங்காமல் கணக்கு வைக்கும் அறத்திடமும் ஆக இருப்பதால் தூசி தட்டிக் காட்டுகிற வேலை அங்கு நடக்காது. ஒண்பொருள் என்பது என்ன? அதற்கு எதிர்மறையான ஒரு பொருளாக்கம் என்பது என்ன? இதற்கு நடுவில் ‘பொருள்’ என்பதை வைத்து இரட்டை அர்த்தத்தில் ஒரு நகைச்சுவையோடு தொடங்குகிறார்.
‘அப்பா! பொருள் படுத்தவே தேவையில்லாத ஆட்களையும் பொருள்படுத்தித் தீரவேண்டியதாய் ஆக்குவது ’பொருள்’ அப்பா! அதனால் ‘செய்க பொருள்’!’
என்ன செய்வியோ எப்படிச் செய்வியோ சம்பாதி! - என்று சொல்லவில்லை. ’ஒண்பொருள் காழ்ப்ப இயற்று!’ காழ்ப்ப - மிக அதிகமாக. அத்தகைய ஒண்பொருள் அறன் ஈனும், இன்பமும் ஈனும். எது? தீதின்றி வந்த பொருள். ஒண்பொருள். அதுதான் என்ன?
இதற்கு விடையை நேர்முகமாகச் சொல்லாமல் எதிர்நடையாகச் சொல்கிறார். ‘அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்’ என்பது ஒண்பொருளுக்கு எதிர். எனவே அருளொடும் அன்பொடும் வந்த பொருளே ஒண்பொருள். பொதுவாக மனித குலத்தின் மீது காட்டுகின்ற அக்கறையை அருள் என்றும், நேரடியாகப் பழகும் உயிர்கள் மீது கொள்ளும் அக்கறையை ‘அன்பு’ என்றும் பொருள் செய்க.

*
’நட்பு’ என்பதைப் பற்றித் திருவள்ளுவரின் பாக்களைக் கண்டு நம்மால் செய்யக் கூடியது பெருவியப்பு மட்டுமே. நட்பைக் குறித்து ஏதேனும் மிச்சம் வைத்திருக்கிறாரா சொல்வதற்கு? பக்கத்தில் வைத்துப் படிக்க வேண்டும் என்றால் அரிஸ்டாடிலின் நிகோமெகியன் எதிக்ஸ் ஒன்றைத்தான் சொல்ல முடியும். அதுவும் ‘நட்பு’ என்பதைப் படிக்கப் படிக்கப் புதிய பொருள் சுரக்கும் நூலை உவமையாக்கிச் சொன்னாரே... ! இந்தக் காலத்தில் மிக இயல்பாக நூலை அச்சுக் காப்பி எடுத்துப் படிக்கக் கிடைப்பது போன்று அந்தக் காலத்தில் கேட்டுப் படிப்பது இயல்பாக இருக்கப் போய்தானே அதனை வேறொரு நுட்பமான கருத்தை விளக்க உவமையாகப் பயன்படுத்துகிறார்? ‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு.’ இந்தக் காலத்தில், முகநூல் நட்பை நட்பு என்று நினைக்கும் நிலையில் அத்தகைய நட்பும், அதைவிட அத்தகைய நூலுமே காணற்கு அரியதோ? என்னவோ நாம் என்னத்தைக் கண்டோம்?

*
ஒரு மலையாளப் படம். என்னும் எப்போழும். அதில் மோகன்லால் ரிப்போர்டர் பாத்திரம். தொழில்முனைவராக வரும் மஞ்ஜு வாரியரின் இண்டர்வ்யூ கிடைப்பதற்கு அவ்வளவு கஷ்டப் படுவார். மஞ்ஜு அவர்கள் போகும் வழி வரும் வழியெல்லாம் காத்திருந்து இண்டர்வ்யூ செய்ய ஒரு வாய்ப்பு கேட்பார். இண்டர்வ்யூ என்பதற்கு செவ்வி என்பது நல்ல நேர்ச்சொல்லாகத்தான் இருக்கிறது. செவ்வி என்பதற்குப் பொருளாகப் பரிமேலழகர் சொல்வது - ‘தன்குறை கூறுதற்கு மனம் மொழி மெய்கள் இனியனாம் காலம்.’
அறமே ஒருவரது செவ்வி கிடைக்காதா என்று அவர் வழியில் சென்று காத்துக் கிடக்கிறது என்கிறார் திருவள்ளுவர். யார் வழியில்? சினத்தை அடக்கி, நன்கு கற்று, கற்றதிலும் அடக்கம் மிக்கு நன்கு பக்குவப்பட்ட ஒருவரது வழியில் சென்று நின்று செவ்விக்காக அறம் காத்து நிற்குமாம். அவர் தம்முடைய குறைகள் ஏதேனும் இருந்தால் மனம் விட்டுச் சொல்லும் சந்தர்ப்பம் கிடைக்காதா என்று. ‘கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.’

*
’ஊதியம்’ என்பது என்ன? இன்றைய புரிதலில் சம்பளமா? ஆனால் திருக்குறளின்படி பார்த்தால், உரைகள் சொல்வது, ஊதியம் என்றால் இலாபம். நமது எகனமிக்ஸில் இந்தக் கருத்தை வைத்துப் பார்த்தால், இப்பொழுது ஓர் உழைப்பாளர் தமது உழைப்பிற்கு வாங்கும் கூலி ஊதியம் என்றால் இலாபமா? இல்லையே. உழைப்பாளர் தாம் உழைப்பாளராகத் தொடர்வதற்கும் நிலைப்பதற்கும் தொடர்ந்து உழைக்க வேண்டிய உடல் வலிமையை தக்க வைத்துக் கொள்ளவும் ஆன பகுதியைக் கூலி என்று வைத்துக் கொண்டால் அதில் என்ன இலாபம் இருக்கிறது? அது வெறுமனே மெயிண்டனன்ஸ் செலவு அவ்வளவுதானே? இயந்திரம் என்றால் அஃது பராமரிப்புச் செலவு தாண்டி எதையும் தேவைப் படப் போவதில்லை. ஆனால் உழைப்பாளர் மனித உயிர் என்னும் போது அவர் தம்மை மனித வாழ்வு என்ற ரீதியில் வளர்த்துக் கொள்ளவும், தமது வாழ்வின் விடுதலை அம்சத்தைத் துய்க்கவும் வேண்டிய விழைவும் தேவையும் உடையவராக இருக்கிறார். அதற்கு எவ்வளவு கிடைக்கிறதோ அதைத்தான் ஊதியம் என்று சொல்ல முடியும். செய்த வேலைக்கு உண்டு உறங்கி உடுத்து மறுபடியும் வேலையைத் தொடர மட்டும் தேவைப்படும் பகுதி கூலி என்றால், உழைப்பாளர் என்னும் மனிதர் தாம் வாழ, வளர, வாழ்வை அனுபவிக்கத் தேவைப்படும் பகுதி ஊதியம் என்று சொல்லலாமா? கூலி கொடுத்தே ஆக வேண்டும். ஊதியத்தை ஊடாடிப் பெற வேண்டுமோ? விலையேற்றத்திற்குத் தக்கவாறு விகிதச் சமன்பாட்டை நிதானப்படுத்தும் அனுமதிப் பணம் ஊதியப் பங்கில் சேராது. கூலியின் மதிப்பு வறண்டு போகாமல் காப்பாற்றும் நியாய நடவடிக்கை மாத்திரமே அஃது.
இந்தச் சிந்தனை ஏன் வந்தது? ஊதியம் என்ற சொல்லைத் திருக்குறள் பயன்படுத்துகிறது. அதற்கு ‘இலாபம்’ என்று பொருள் வரைகின்றன உரைகள். அதன் தொடர்ச்சியாக இந்தச் சிந்தனை. இப்பொழுது குறளுக்கு வருவோம்.
ஊதியம் என்பது ஒருவற்கு என்ன? என்று கேட்கிறார் திருவள்ளுவர். அவரே அதற்குப் பதிலும் சொல்கிறார். வாழ்க்கையில் பழக நேரும் போது சில சமயம், என்ன கருமமோ, அறிவு கேடர் என்பாரோடு தொடர்பு ஏற்பட்டு விடக் கூடும். அவர்கள் அறிவு இல்லாதவர்கள், வளராதவர்கள் என்பதை விட அறிவு புரண்டு போனவர்கள். பர்வர்ட் என்று நம் காலத்தில் சொல்வோம். முதலில் இப்படிப் பட்டவர்களோடு உள்ள தொடர்பைத் தொலைத்துத் தலைமுழுகி விடு. அப்புறம் பார்க்கலாம் என்றெல்லாம் சொல்லாதே. சுத்தமாக அறுத்து எறி. அதுதான் உனக்கு வாழ்க்கையில் உண்மையான இலாபம், ஊதியம் என்கிறார்.
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
ஊதியம் என்பது வருமானத்தில் கூலி அம்சம் போக வாழ்க்கைக்கான அம்சம் என்றால் நியாயம். ஆனால் தப்பான சகவாசம், அதைக் கழட்டிவிடு என்றைக்குமாக, அதுதான் ஊதியம் என்று தனிப்படுத்திக் காட்டுகிறார். ஏனெனில் ஒருவரின் கூலி, வாழ்வு வளம், வளர்ச்சி எல்லாவற்றையும் அழித்து விடவல்லது பேதையார் கேண்மை. அறிவுகேடர்களின் கேண்மை. எனவே அதனை ஒரீஇ விடலே ஊதியம்.

*
ஒரு காட்சியில் உங்களை நீங்களே கற்பனை செய்து பார்க்க வேண்டும். அதாவது, உங்களுக்கு ஓர் ஆசை. என்ன என்றால் உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது நன்கு பழுதறக் கற்றுத் துறைபோயவர்களும், ஒரு காலும் நடுநிலை தவறாத சான்றோர்கள் (கிடைப்பது மிக அரிதாகிப் போன காலம்தான்; பரவாயில்லை கற்பனையில் காண்க) அத்தகைய சான்றோர்கள் சிலர் (கற்பனையிலேயே அவ்வளவுதான் தேரும் என்ன செய்வது) குழுமியிருக்கும் ஓர் அவை. இல்லை என்றால் ஓர் அறை என்று வைத்துக் கொள்ளுங்கள். வேறு யாரும் ரிஃப் ரேஃப் பேர்வழிகளுக்கு அங்கு அனுமதியே இல்லை என்பதை நீங்களே நன்கு உறுதிப்படுத்தி வைத்திருக்கிறீர்கள். அதனாலேயே அப்படி ஒரு சந்திப்பு பற்றி யாருக்கும் விளம்பரமும் செய்யவில்லை. ஆனாலும் போதாத வேளை திடுதிப்பென்று ஒரு பேர்வழி அங்கே உள்ளே புகுந்து, சும்மா இராமல் உளறத் தொடங்கி, ‘ஓ நீங்க எல்லாம்தான் பெரிய ஆட்கள் ஆ சொன்னாங்களே. ஆனால் உங்களை எங்கயும் பப்ளிக்க்ல பார்த்தா மாதிரி தெரியல்லியே. பரவாயில்லை. நம்ம கைவசம் அதுக்கெல்லாம் ஆள் இருக்கு. சொல்லுங்க. என்ன கொஞ்சம் செலவாகும். நீங்க கூட ஒன்னும் எழுத வேணாம். அதஎல்லாம் அவங்களே எழுதி உங்க பேருல வந்துடும். பெரிய கிராண்ட் ஃபங்ஷனா வெளுத்துடுவோம். நாளைக்கே இப்படி மூலைல நாலு பேர்கிட்ட பேசிகிட்டு இருக்க மாட்டீங்க. சும்மா அள்ளு அள்ளுதான். என்ன நான் சொல்றது...’
எப்படி இருக்கும் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் அந்தக் கணம் அந்தச் சூழல்? இந்த ஆள் என்று கூட உங்களுக்குச் சொல்லத் தோன்றாது. இந்தத் தற்குறி எங்க இருந்து வந்துச்சு? ஒரு வழியா ஏதோ காரணம் சொல்லி அவசரம் அவசரமா அந்தப் பேர்வழியைத் தள்ளாத குறையாக நகர்த்தி வெளியில் துரத்திவிட்டு வந்தால் ஒரே மௌனம். உங்கள் மனத்தில் ஓரமாக ஒரு காட்சி ஒப்புமையாக ஓடுகிறது. --
‘அழகான வெண்மையான பூம்படுக்கை. பூம்பள்ளி. அந்த அறையில் அழுக்கு என்று எதுவும் இல்லை. தூய்மையான வெண் பூம்பள்ளி என்றால் அதுதான். அப்பொழுது ஏதோ ஒரு நபர் திடீரென்று அந்த அறையில் கழுவாத காலுடன் நுழைந்து விட. நடக்கும் தடயம் எல்லாம் அசிங்கம். அந்தக் காலைக் கொண்டு போய் அந்தப் பூம்பள்ளியிலும் வைக்கப் போகும் தருணத்தில் குண்டு கட்டாகப் பிடித்து வெளியேற்றியாகி விட்டது. இருந்தாலும் அந்த அறையை மீண்டும் பழையபடித் தூய நிலைக்குக் கொண்டுவர.. கடும் உழைப்புதான்...’
இந்தக் காட்சியை அப்படியே வடித்திருக்கிறார் திருக்குறளில் செந்நாப்போதார்.
’கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.’
கழாஅக்கால் - கழுவாத கால்.
ஒன்றே முக்கால் அடி. என்ன என்ன மாயம்!

*
ஓரிடத்தில் தாம் சொல்லும் கருத்திற்கான மாற்றுக் கோணத்தையும் பிறிதோர் இடத்தில் காட்டிக் கருத்திற்கான சிந்தனையை விரிவாக்கும் தன்மையைத் திருவள்ளுவரிடத்தே காணலாம். ஆனாலும் சில இடங்களில் அவர் கடுமையாகச் சொல்லும் கருத்துகளுக்கான மாற்றுக் கோணம் வலுவாக அமையுமிடத்தே அந்தக் கோணத்திற்கான நிதானத்தைத் திருவள்ளுவர் நமது சிந்தனைக்கே விட்டுவிட்டாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது. உலகத்தாரோடு ஒட்ட ஒழுகல் என்பதைக் கல்லாதவர் எவ்வளவு படித்திருந்தாலும் அவர்கள் அறிவில்லாதவர்களே என்பார். உலகத்தார் என்பார் உயர்ந்தார் என்பதைக் குறிக்குமா, உலக மக்கள் என்பதைக் குறிக்குமா? உயர்ந்தார் எனில் அவர்தம் நடை உலக மக்கள் நடையினின்றும் வேறுபட்டு அமையுமா? அல்லது உலக மக்கள் நடையோடு ஒத்தே அமையுமா? ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்பது எல்லாவிடத்தும் பொருந்துமா? மேலும் உள்ளத்தால் பொய்யாதொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் என்றால், ஒருவர் தம் உள்ளத்திற்குப் பொய்யாமல் ஒழுகுவது என்பதுதானே வலியுறுத்தப் படுகிறது. பல கற்று ஒருவர் தம் உள்ளத்திற்குப் பொய்யாமல் ஒழுகும் பொழுது அஃது உலகத்தாரோடு ஒட்ட ஒழுகலாய்த்தான் அமையும் என்று சொல்ல முடியாதே. மேலும் ஒரு குறளில் ‘உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் உலகத்து அலகையா வைக்கப் படும்’ - உலகத்தாரால் (மக்களா? உயர்ந்தோரா? எப்படிப் பொருள் சொன்னாலும்) ‘உண்டு’ என்று சொல்லப்பட்ட பொருளை ‘இல்லை’ என்று ஒருவன் மறுப்பானேயாகில் அவன் உலகத்தில் பேய் போன்று கருதப்படும் என்கிறார். அப்படிப் பார்த்தால் உலகத்தின் மாபெரும் ஆசிரியர்கள், அறிஞர்கள், ஞானிகள் பலரும் அவர் காலத்தில் மக்களால் ‘உண்டு’ என்று சொல்லப்பட்ட கருத்தையோ அல்லது உயர்ந்தோர்களால் ஐயமின்றி வழிவழியாக ஏற்றுக்கொண்ட கருத்தையோதானே மறுத்துப் புதிய கருத்து சொன்னவர்களாகப் பார்க்கிறோம். இந்த மாற்றுக் கோணத்திற்கு இசைந்ததாக விளக்கம் வேண்டி திருவள்ளுவர் நம்மைச் சிந்தனை செய்யத் தூண்டுகிறாரோ?

*
திருக்குறளா, அப்படியென்றால் அதிகாரம் அந்தத் தலைப்பின் கீழ் உரியபடிக் கருத்துகள் வரும் என்று நினைப்பது சரியான அணுகுமுறையில்லை. அதாவது அமைச்சு என்றால் நாம் நினைப்பது போல் அமைச்சர்களுக்கு உரிய குறிப்புகளைச் சொல்வார், அரண் என்றால் உடனே மதிள் பற்றிய கருத்துகள், பகைத்திறம் தெரிதல் என்றால் உடனே பகைவர்களை எப்படிக் கவனிப்பது, பொதுவாக தனிமனிதருக்கு உரிய குறிப்புகள் அறத்துப்பாலில் வரும் - இவ்வாறெல்லாம் நினைப்பது திருக்குறளைப் படிக்கும் பக்குவத்திற்குச் சேராது. திருவள்ளுவர் தனிமனிதருக்குள்ளும் நாடு என்பதைப் பார்க்கிறவர். ஊர் என்பதனுள்ளும் தனிமனிதரைக் காண்பவர். உலகம் என்பதனுள் உள்ளமும், உள்ளத்துள் உலகமும் அவர் காட்சியில் தென்படும். அவர் அடிப்படையில் ‘அண்டத்துள் பிண்டம் பிண்டத்துள் அண்டம்’ என்னும் யோக திருட்டி வாய்ந்தவர் என்பதை நாம் மறக்கக் கூடாது என்று நினைவு படுத்தும் குறட்பாக்கள் அவ்வப்பொழுது வந்தவண்ணம் இருக்கும்.
உதாரணத்திற்கு, ‘இகல்’ என்றால் நிச்சயம் அரசன், போர், பகை என்ற தொடர்பிலான கருத்துகள்தாம் தோன்றுவது நியாயம். ஆனால் அவருடைய ‘இகல்’ என்னும் அதிகாரம் பெரிதும் தனி மனித உள இயலைப் பேசுகிறது. சுற்றுப் புறச் சூழலுடன், கூடியுள்ள மனிதருடன் ஒத்திசைந்து போக இயலாத (disjointed mentality) என்னும் உள்ளத்து நோயைக் குறித்து அலசுகிறது. அவர் போரின் அடிவேர் எங்கு கிளர்கிறது என்று தோண்டிப் பார்க்கிறார். இந்தத் தெளிவு நம்மிடத்தில் இல்லையெனில் கீழ்வரும் திருக்குறள் நமக்குப் புரிய வாய்ப்பில்லை.
’இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.’
மனிதர்களோடு இயல்பாக இருக்க முடியாத எப்பொழுதும் அடியுள்ளத்தில் பிணங்கியவாறே இருக்கும் மனநிலைக்குப் ‘பகல்’ என்னும் சொல்லாட்சி அநேகமாகத் திருவள்ளுவருடையதே. ஏனெனில் ‘பகல்’ என்பதற்கு இலக்கிய ஆட்சிக்கு மேற்கோள் வேறு எதுவும் இலக்கிய அகராதியால் காட்ட முடியவில்லை.
இத்தகைய கூடாமை இயல்பான பிணங்கும் மனநிலை என்னும் நோய்க்கூறு உடைய மனிதர்களைப் பலருக்கும் பார்த்த அனுபவம் உண்டாயிருக்கும். ‘அந்த ஆளுக்கு யாரோடயும் ஒத்துப் போகாது. எரிஞ்சு எரிஞ்சு விழுந்தா யாரு கிட்டப் போறது?’ அத்தகைய பண்பின்மை பாரிக்கும் நோயான ‘பகல்’ என்பதன் அடிமனநிலையே ‘இகல்’ என்று கூறப்படுவது. bickering, quarrelsome என்று சொல்லக் கூடிய மனநிலை. இந்த மனநிலை சிலசமயம் யாருக்கும் ஏற்படக் கூடும். யாரைப் பார்த்தாலும் கடித்துக் குதறும் மனநிலை. அப்பொழுது என்ன செய்வது என்பதற்கும் வழி சொல்கிறார் பொய்யாமொழியார். அந்த மாதிரி ‘இகல்’ என்னும் மனநிலை தலை தூக்கினால் வலுக்கட்டாயமாக அதற்கு நேர் எதிர் மனநிலையான சாய்ந்து ஒழுகுதல் என்பதைக் கைக்கொண்டு விடு என்கிறார். ‘இகல் எதிர் சாய்ந்தொழுக வல்லாரை’ வெல்லுதல் அரிது.

*
பெண் என்பதையும் ஆண் என்பதையும் மரபுகள் உலகெங்கணும் ஏற்றத்தாழ்வோடுதான் அணுகி வந்துள்ளன. பெண் என்பதும் ஆண் என்பதும் வாழ்விற்கான அனைத்து உரிமையும் இயல்பிலேயே அமைந்த மனிதத்தின் இருவழிகள்தாம் என்ற புரிதல் அநேகமாக நமது காலத்தின் மிகப்பெரிய எண்ணப் புரட்சி என்பது நமக்குப் பெருமிதம் ஆகும். எனவே ஆண் பெண் என்பதைச் சம மனிதம் என்ற இயல்பான மனநிலையைப் பழம் நூல்களில் தேடுவது அவ்வளவாகப் பயன் தராது என்பதும் சரியே. இருந்தாலும் திருவள்ளுவரின் திருக்குறள் என்றால் அவருடைய பார்வை வித்யாசமானது அல்லவா என்றெல்லாம் மற்ற பல விஷயங்களில் நினைத்து அணுகுவது பலன் தருவது போன்று ஆண் பெண் சமத்துவம் என்னும் நவீன தர்சனத்திற்கு ஊக்கம் தரும் விதத்தில் என்று தேடும் போது ஏமாற்றம்தான். பெண்வழிச் சேறல் என்னும் பகுதியில் பொதுவாகப் பண்பாடுகளில் காணக் கிடைக்கும் ‘மனைவி பேச்சைக் கேட்கும் கணவன் சரியில்லை’, ‘வீட்டில் அல்லி அரசா?’ ‘வெளியிலே புலி வீட்டிலே எலி’ என்ற அபிப்ராயங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில்தான் கருத்துகளைத் தெரிவிக்கிறார். நம் காலத்தின் பிரத்யேகமான பார்வையை அவர் காலத்தில் அவர் தெரிவிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது சரியா என்ற கேள்வி சரியே. ஆயினும் கொஞ்சம் ஏமாற்றம்தான் என்பதும் அவ்வளவு சுலபமாகத் தள்ளிவிட முடியவில்லை.

*
’நாணம்’, சரியில்லாதவற்றைச் சிந்திப்பதிலோ, சொல்வதிலோ, செய்வதிலோ ஒருவரை ஈடுபடவொட்டாமல் தடுக்கும் வெட்க உணர்ச்சி - இதைத்தான் நல்லவர் ஒருவர்க்கு ஆன உயிர்நிலையாகச் சொல்கிறார் திருவள்ளுவர். இந்த ‘நாணம்’ என்ற உணர்ச்சி இல்லாதவர், அல்லன குறித்து இந்த வெட்கம் இல்லை என்றால் அவர் எவ்வளவு படித்திருந்தாலும், மற்றவற்றில் உயர்ந்து விளங்கினாலும் அவருக்கும் பொம்மலாட்டத்தில் ஆடும் பொம்மைக்கும் ஒன்றும் வேறுபாடு இல்லை என்று கடுமையாக வலியுறுத்துகிறார் ‘நாணம்’ என்பதை. நாணம் என்றால் ஒருவர் தமக்குத் தெரிந்ததைச் சொல்லத் தயங்குவது அன்று, சபைக் கூச்சம் அன்று. தீயனவற்றைக் குறித்து, சிறப்பில்லாதவற்றைக் குறித்து நல்லவர் ஒருவருக்கு இயல்பாக எழ வேண்டிய உணர்ச்சி. அதை எப்படிச் சொல்கிறார் என்றால், இரண்டு நாண்கள் இருக்கின்றன. ஒன்று நல்லவரின் உள்ளத்தில் இருக்க வேண்டியது. அஃது இல்லையென்றால் அவர்தம் வாழ்க்கை உயிர் வாழ்க்கை என்று சொல்ல முடியாது. நாண் என்னும் கயிற்றால் ஆட்டுவிக்கப்படும் பொம்மை இயக்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.
‘நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று.’
உயிர் போன்ற மருள்தான் மிஞ்சும் என்றபடி நாணம் என்பதன் சிறப்பை வலியுறுத்துகிறார்.

*
திருக்குறளில் மிக அழகான அதிகாரங்களில் ஒன்று உழவு என்பது. உழவைக் குறித்துப் பெரும் கவன ஈர்ப்பை மக்களிடையே ஏற்படுத்தவல்லது. அதில் உழவுக்கான சில குறிப்புகள் போல் அவர் காட்டுகின்ற குறள்கள் மிகவும் சிந்தனைக்குரியன.
‘தொடி’ என்ற சொல் அளவு எடை சார்ந்த சொல். ஒரு பலம் எடையைக் குறிப்பதாகச் சில உரைகள் குறிக்கின்றன. ‘தொடி’ என்றால் எண்கழஞ்சு அளவினது என்று ஓருரை காட்டுகிறது. ‘கஃசு’ என்பது காற்பலம் அல்லது எண்கழஞ்சில் கால்பகுதியான இரண்டு கழஞ்சு அளவு. தொடிப் புழுதியை கஃசு அளவிற்குச் செறியுமாறு உணக்கினால் பிடித்து எரு கூட இட வேண்டாதபடி விளைச்சல் பணைத்துப் பெருகும் என்கிறார். ஏர் உழுவதற்கான ஓர் அளவுமானி போல் இதனைக் கூறுகிறார்.
‘தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.’
ஏர் பிடித்து உழும் நிலையைப் பற்றிக் குறிப்பு சொன்னவர், உழுத பின்னர் நிலையைக் குறித்துச் சொல்கிறார். ஏர் உழுவதைக் காட்டிலும் நன்று எது என்றால் எரு இடுதல். களைகட்ட பின்னர் அதனைக் காப்பது நீரிடுதலைக் காட்டினும் நன்றாகும் என்கிறார்.
‘ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு’
உழவு என்பதைக் குறித்து யாவரும் மேம்போக்காக அன்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் என்பது திருவள்ளுவரின் கருத்து. ஒரு நாடு என்பதே எப்படி உருவாகிறது என்று சொல்லும் போது ‘தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு’ அமோக விளைச்சலை ஏற்படுத்தித் தாமும் மகிழ்ச்சியில் திளைக்கும் உழவர், அறிவும் ஒழுக்கமும் நிறைந்து நடுநிலை தவறாமல் நிற்கும் சான்றோர், செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் என்னும் மொழிக்கேற்ப வேளாண்மை என்னும் உபகாரச் சிந்தையில் தாழ்ச்சியில்லாத செல்வர் ஆகிய மூவரும் விரும்பிச் சேரும் இடம் நாடு என்றுதான் வரையறுக்கிறார் என்னும் போது உழவுக்கு முதன்முன்னம் தலையாய இடம் தருவது திருவள்ளுவரின் கருத்து.

***
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

No comments:

Post a Comment