வேதாந்தம் என்பது பல பொருள் கொண்டது. நேரடியான சொற்பொருளுக்கு வருவோம். வேதத்தின் அறுதிப்பாடான அர்த்தங்களைக் கொண்ட நூல்கள் உபநிஷதங்கள். அவற்றைத்தான் முதலில் இந்த வேதாந்தம், வேதம்+அந்தம், என்னும் சொல் குறிக்கும். வேதங்களின் தலையாய பொருள்களைக் கொண்டவை என்பதால் வேத சிரங்கள், மறைமுடிகள் என்றெல்லாம் சொல்வதும் உபநிஷதங்களையே. அந்த உபநிஷதங்களைக் கற்க வேண்டித்தான் துணை நூல்களாக எழுந்தவை ஸ்ரீப்ருஹ்ம சூத்திரங்களும், ஸ்ரீமத் பகவத் கீதையும்.
உபநிஷதங்களாகிய மறைமுடிகளுக்கு தெளிவான அனைத்தையும் உள்ளடக்கிய விளக்கத்தை சுலோக ரூபமாக 700 சொச்சம் சுலோகங்களில் அளித்தார் ஸ்ரீகிருஷ்ணர். ஆனால் வேதாந்தம் கற்க என்று அதன் முன்னேற்பாடு கல்விகளாய் இவ்வாறு, வியாகரணம், நியாயம், மீமாம்சை என்றெல்லாம் சொல்லும் போது இந்தச் சொற்கள் நமக்குப் புழக்கத்தில் இல்லாத காரணத்தால் பெரும் மருட்சியை ஏற்படுத்தக் கூடும். வியாகரணமா, நியாயமா, மீமாசையா என்று அயிர்க்கவும் கூடும்.
ஆனால் இவற்றை இன்றைய நிலையில் சிறிதும் எண்ணிப் பார்த்தால் என்ன தோன்றும்? வேதாந்தம் என்பது பண்டைய வேதங்களில் தத்துவப் பகுதிகளைப் பயின்று அதன் முரண்பாடற்ற ஒட்டுமொத்த அர்த்தம் என்ன என்று புரிந்து கொள்வதற்கு நிச்சயம் இலக்கணம், அளவை இயல் என்னும் நியாயம், வாக்கியங்களும் அதனால் எழும் செயல்களுக்கும் உள்ள தொடர்புகளைப் படிக்கும் இயல் ஆன மீமாம்சை இவை வேண்டப் படுகின்றன.
ஆனால் இன்று ஒருவர் வேதாந்தம் கற்க வேண்டும் என்றால் நிச்சயம் ஓர் அடிப்படையான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அது என்னவெனில் யாரோ ஒரு குருவை அண்டி அவரிடம் வருஷக்கணக்கில் பகுதி பகுதியாகக் கற்றுத் தேர்வது என்பது இன்றைய முறை கிடையாது. அப்படி நீங்கள் யாரையேனும் அண்டிக் கற்பது என்றாலும் அவர் பயன்படுத்தும் நூல்களும் நீங்களே கடையில் வாங்கக் கூடிய நூல்கள்தாம். அவர்கள் தரும் விளக்கங்களும் இன்று ஆடியோ வீடியோ கோப்புகளாய் விருப்பமுள்ளவர் நுகர்வுக்கு என்று வந்து விடுகின்றன. கடைசியில் வித்யாசம் எங்கு வருகிறது எனில் கிடைக்கும் துணை நூல்கள், கல்வி உதவிகள் ஆகியவற்றை நீங்கள் நேரே பயன்படுத்தி உங்கள் சொந்த முனைப்பில் தெரிந்து கொள்ளாமல், அவற்றைப் படித்துச் சொல்ல ஆட்களை வைத்துத் தெரிந்து கொள்வது போல் ஆகிவிடுகிறது. இந்த முறை சிலருக்கு சௌகரியமாக அமைகிறது என்றாலும், இது அந்தக் காலத்திய காலக்ஷேப முறை அன்று. ஆனால் இவற்றை இன்றைய நிலையில் சிறிதும் எண்ணிப் பார்த்தால் என்ன தோன்றும்? வேதாந்தம் என்பது பண்டைய வேதங்களில் தத்துவப் பகுதிகளைப் பயின்று அதன் முரண்பாடற்ற ஒட்டுமொத்த அர்த்தம் என்ன என்று புரிந்து கொள்வதற்கு நிச்சயம் இலக்கணம், அளவை இயல் என்னும் நியாயம், வாக்கியங்களும் அதனால் எழும் செயல்களுக்கும் உள்ள தொடர்புகளைப் படிக்கும் இயல் ஆன மீமாம்சை இவை வேண்டப் படுகின்றன.
அன்று ஞானம் சம்பாதிக்கும் வழிகள், துணைகள் மிகவும் அரியவை. எங்கோ ஓர் ஏடு, எங்கோ அதை நன்கு கற்றவர் என்று இருந்த காலம். ஞானத்தைச் சம்பாதிப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம். ஆனால் அனுஷ்டானம் என்பதை அந்தக் காலத்தில் அவசரம் ஏதுமின்றி செய்ய முடியும். வாழ்க்கை முறைகள் வழிவழியானவை. எதிலும் மாறாத உலகம். ஆனால் இன்று அனுஷ்டானம் என்பது மிகவும் கஷ்டம். ஆனால் ஞானம் என்பதைச் சம்பாதிப்பது மிகவும் சுலபம். நீங்கள் விலக்காமல் இருந்தாலே போதும் ஞானம் என்பது உங்களை அடையும். இது ஒரு விதத்தில் மிகச் சிறந்த காலம். ஆனால் என்றுமே கடந்து போன காலங்களையே மிகவும் புனிதமானவை, சிறந்தவை என்று சொல்லிக் கொண்டாடும் பழக்கம் உள்ளவர்கள் ஆகையாலே நாம் நம் காலத்தின் சிறப்புகளை அலட்சியம் செய்வோம். எனவேதான் இன்று நூல்களைப் படித்து வேதாந்தம் கற்போரைப் பார்த்துப் பழையோர் பலர் எள்ளி நகையாடுவதுண்டு. வெறும் நூல் கல்வி. ஏட்டுச் சுரைக்காய். கறிக்குதவுமா?
என்றுமே தத்துவக் கல்வியே ஏட்டுச் சுரைக்காய்தான். கறிக்கு உதவுமா என்பது இல்லை கவலை. கருத்துக்கு உதவுவது அந்த ஏட்டுச் சுரைக்காய்தான். என்றுமே மதமோ வேதாந்தமோ கருத்தளவில் இருக்கும்வரைதான் உதவும். ஆனால் அதுவே அனுஷ்டானம் என்று ஆகிவிட்டால் அது கருத்து நிலையிலிருந்து பெயர்ந்து நம்பிக்கைகள் என்ற நிலைக்கு வந்தடைந்து மனிதருக்கு மனிதர் நுண் அரசியல்களில்தான் நிற்கும். பழங்காலங்களில் ஞானம், பின்னர் அந்த ஞானத்தால் பெற்ற கருத்துகளை நம்பிக்கையாக்கிக் கொண்டு அனுஷ்டானம் என்றார்கள். இன்று ஞானமேதான் அனுஷ்டானம். ஒருவன் தொடர்ந்து ஞான முயற்சி உடையவனாக இருப்பது. அவன் உண்மையில் ஜீவன், அதாவது சித் ஸ்வரூபன் என்றால் பின்னர் அவன் இயல்புக்கு ஒவ்விய நடைமுறை வாழ்க்கை என்ன? அறிவது, அறிவது, அறிந்து கொண்டே இருப்பது என்பதுதானே? ஜீவன் என்றும் அறிபவனாகத் தொடர்ந்து இருக்கும்வரைதான் அவன் தன் இயல்புக்குச் சரியாக நடப்பவன் ஆகிறான்.
***
No comments:
Post a Comment