Friday, October 22, 2021

விரிச்சி வாய்ப்புள்

சில வார்த்தைகளை ஆழமாக யோசித்தால் என்ன என்ன சித்திரம் புலப்படுகிறது! தமிழ் இலக்கியங்களில் ‘விரிச்சி கேட்டல்’ என்னும் ஒன்று சொல்லப் படுகிறது. இந்த விரிச்சி என்னும் சொல் என்ன? உரைகளும் சரி, நிகண்டுகளும் சரி விரிச்சி என்பதை நிமித்தம் என்னும் பொருள்படச் சொல்லுகின்றன. விரிச்சி, வாய்ப்புள் என்பன ஒருவகைப் படுத்தப் படுகின்றன. இதில் வாய்ப்புள் ஆவது யாது? அது ஏதாவது பறவையா? இல்லை. நமது புலவர்களின் ஆழ்ந்த சிந்தனை நயம் இனிமையானது. ஒருவர் ஏதோ ஒரு பேச்சு மற்ற ஒருவரோடு பேசுகிறார். அது வேறு இடம். அவர் பேசுவதற்கும் இங்கு சிலர் பேசிக் கொண்டிருப்பதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் அவர் அங்கு பேசும் பேச்சின் பகுதியான ஒரு சொல் அல்லது ஒரு வரி இங்கு இவர் பேசிக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சனைக்குள் வந்து விழுந்து பொருத்தமாக ஏதோ விடையைக் குறிப்பு காட்டுவது போல் தொனிக்கிறது. இவருக்கு அவரைத் தெரியாது. அல்லது தெரிந்தாலும் இந்தப் பேச்சில் அவருக்குத் தொடர்பில்லாமல் அவர் பாட்டுக்கு யாருடனோ வேறு ஏதோ பேசப்போய், இவர் இங்கே ஏதோ பிரச்சனையைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருக்குங்கால் அதற்கே ஒரு குறிப்பு சொல்வது போல் அமைந்து கவனத்தில் பதிவது என்பதை இங்கே ஓர்மை கொள்கிறார்கள். இதை ஒரு புள்ளின் ஒலிக்கு ஒப்புமை ஆக்கி வாய்ப்புள் என்று உரைக்கிறார்கள். வாய்ப்புள் என்பதற்கு இங்கே பொருள் யதேச்சையாக வேறு எங்கோ பேசப்படும் ஒரு சொல் அல்லது ஒரு வரி பொருத்தமாக பிறிதொரு இடத்தில் பேசப்படும் ஒரு விஷயத்தின் நடுவே ஒலித்துக் குறிப்புணர்த்துவது போல் அமைவது என்று சொல்ல வேண்டும். விரிச் என்னும் பகுதியே கூட கழிப்பு என்னும் பொருளில் வேத நூல்களில் வருகிறது. விரிச்சிகன் என்பது சூரியனுக்கும் பெயராக நிகண்டு கூறுகிறது. ‘விருச’ என்பது படைக்கலங்களைக் கையாளுங்கால் உச்சரிக்கப்படும் உச்சாடனத்தைச் சுட்டுவதாக வருகிறது. விரிச்சி, வாய்ப்புள் என்பன நிமித்தம் என்னும் ஒரு பொருளவாக வகைப்படுத்தப் படுகின்றன. நிமித்தம் என்றாலே தன்னடையே நிகழும் வாய்ப்பு. நோக்கம் சார்ந்து ஒருவரைக் குறிப்பாக வினவுதல் என்னும் பொருளிலன்றி விரிச்சி கேட்டல் என்பதிலும் கேட்டல் என்பதற்கு யாரையோ கேட்பது என்பது பொருளாக இல்லாமல் நிமித்தத்தை ஓர்மை கொள்வது என்னும் மட்டே பொருளாக வருகிறது.
Srirangam Mohanarangan
***

No comments:

Post a Comment