Friday, October 22, 2021

குறுந்தொகையில் முகை நாறும் முல்லை

 வாழ்க்கையில் மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருப்பது. சில மாற்றங்களை நாம் கருதுவதில்லை. அப்பொழுது நிலைத்தன்மை என்று தோன்றுகிறது. சில மாற்றங்கள் நாம் விரும்புவன. அப்பொழுது அதை மாற்றமாய் நாம் கணக்கிடுவதில்லை. காதலித்து நெடுக முயற்சிகளுக்குப் பின்னர் திருமணம் நடக்கிறது. அதுவரையில் நிலைப்பேறு கொண்டிருந்த காதல் திருமணத்திற்குப் பின் மாறிப் போய்விடுகிறது. கைத்துப் போன வாழ்வும், பொய்த்துப் போன கனவும் என்று அன்றாடத்தின் கூலியாளாய் இருவரும் உறைந்து போன முகத்துடன் ஏதோ வண்டி ஓடுது என்றபடி வாழ்க்கை.

ஆனால் சங்க இலக்கியம் இந்த அன்றாடத்தை அவ்வளவாக மதிப்பதில்லை. சங்கப் புலவர்கள் சொல்ல வருவது அன்பின் ஐந்திணையில் பொருந்திய இலட்சியக் காதல் வாழ்க்கையைப் பற்றியே. இந்த அன்றாடம் அவர்களுக்குத் தெரியாதா என்றால், தெரியும் ஆனால் இதனைப் பெருந்திணை என்ற ஒன்றில் போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். உலகத்தில் நடைமுறைச் சிக்கல்கள் வாழ்வின் உள்ளது உள்ளபடிகள் சங்க காலத்திலும் உண்டுதானே. ஆனால் சங்கப் புலவர்களுக்கு நோக்கு நடைமுறையாகித் தேய்ந்து போகும் அன்றாடத்தில் இல்லை. காதல் நெஞ்சங்களின் கனவாகிய இலட்சியக் காதலில்தான் அவர்களின் கவனம் செல்கிறது. அது நியாயமும் கூட. ஏனெனில் இலட்சியக் காதலின் எத்தனைக் கூறு வாழ்வில் அமைகிறதோ அத்தனையே வாழ்க்கையைப் பொருளுள்ளதாய் ஆக்குகிறது. வெறும் அன்றாடம் வாழ்க்கையை ஓட்டுவது. அஃது வாழ்வதாக ஆகாது. அப்படியென்றால் அன்றாடம் என்பதில் மீட்டும் காதலின் தூய நறுமணத்தை வென்றெடுக்க முடியாதா என்றால் முடியும். ஆனால் அதற்கும் இலட்சியக் காதலின் சித்திரம் இலக்கிய ஆக்கங்களாகவாவது இருக்க வேண்டும். அன்றாடம் என்ற கன்வேயர் பெல்டிலிருந்து எதையாவது மேலிருப்பதைப் பிடித்துக் கொண்டு எம்பிக் கொள்வதற்கு கொழுகொம்பு கைக்கெட்டும் தூரத்தில் இருக்க வேண்டும் அல்லவா? அப்படிப்பட்ட இலட்சியச் சித்திரம் ஒன்றை அரிசில் கிழார் குறுந்தொகையில் தருகிறார்.
அன்றாடத்திற்கு என்று ஒரு கேக்கஃபொனி ஓசை உண்டல்லவா? அந்தப் பின்னணி ஓசையை குளத்தில் தேரை எழுப்பும் ஓசையில் வைக்கிறார். குளம் எப்படி இருக்கிறது? மதுவைப் பெய்து வைக்கும் குடுவையின் வடிவம் ஒத்து இருக்கிறது. உடல் அகண்டு, வாய் சிறுத்து. தேரை எப்படிக் கத்துகிறது? புனங்களில் கிளிகளை ஓட்டத் தட்டை என்னும் ஒலிக்கருவி வைத்திருப்பார்கள். மூங்கில் கழியில் ஒரே சீராக அடுக்கு நிரலாகச் சீவி வைத்திருப்பார்கள். சீவாத முனையைப் பிடித்துக்கொண்டு தட்டும் போது அடுத்தடுத்து அடுக்குகள் மோதி தொடர் ஒலியை உண்டாக்கும். அந்த ஒலி போன்று தேரை கத்துகிறது குளங்களில். அந்த நிலத்தைச் சேர்ந்த தலைவன்; அவனைத்தான் மணந்து இவ்வளவு காலம் வாழ்ந்து வந்திருக்கிறாள் தலைவி. நெடுங்காலத்திற்குப் பின்னர் தோழி அவளைப் பார்க்க வருகிறாள். தோழிக்கு ஆர்வம். இவளுடைய வாழ்க்கை எப்படி ஆகியிருக்கும்? அன்று காதல் இன்றோ அன்றாடம், கவலை, ஏதோ ஓடுது என்று சொல்வாளா? அல்லது... கேட்டால் தலைவியின் பதில் வினோதமாக இருக்கிறது.
‘நெடுங்காலத்திற்கு முன்னம் நிலவொளியில் என்னை மணந்தான் தலைவன். அன்று எனக்கு மணம் வீசிய அவன் உடம்பின் முல்லைப் பூமுகையின் நாற்றம் இன்றும் இன்றுபோல் மணம் வீசுகிறது. எந்த மாற்றமும் இல்லை.’
’மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன
இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை
தட்டைப் பறையிற் கறங்கு நாடன்
தொல்லைத் திங்கள் நெடுவெண் நிலவின்
மணந்தனன் மன்நெடுந் தோளே
இன்று முல்லை முகைநா றும்மே.’
(குறுந்தொகை)
சங்கப் பாடல் என்பது சந்தனக் கட்டை. இழைக்க இழைக்கவே அதன் அற்புத மணத்தை உணரலாகும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment