அதாவது காட்சி என்னவென்றால், நீர்த்துறை ஒன்றில் யானை குளிக்கிறது. ஒரே ஆரவாரம்! குழந்தைகள் சூழ்ந்துகொண்டு அதன் மீது ஏறி அமர்வதும், சிறு சிறு தழைகளை எடுத்துக்கொண்டு பாகரோடு சேர்ந்து அதனைத் தேய்த்துக் குளிப்பாட்டும் செயலில் ஈடுபடுவதும், சிறிதும் பயமே இல்லாமல் அதன் நீண்ட கோடுகளை நன்கு அழுத்தித் தேய்த்து நீர்வார்த்துத் துலக்குவதும் நீர்த்துறையே அமளிதுமளி படுகிறது. இத்தனைக்கும் நடுவில் யானையோ மகிழ்ந்து நிறைந்த அமைதியுடன் நீராட்டைத் துய்க்கிறது. ஆனால் போர் என்றாலோ இதே யானைதான் மதநீர் ஒழுக மாற்றார் படைகளைச் சின்னபின்னம் ஆக்குகிறது. இதை வைத்து அதியமான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடுகிறார்.
“ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்” என்று தொடங்கும் பாடல்.
ஊர்க்குறு மாக்கள் என்ற பயன்பாடு குழந்தைகளைக் குறிக்கும் விதத்தில் அமைவது மிகவும் சிறப்பு. யங் சிடிஸன்ஸ்.
“ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும வெமக்கே மற்றதன்
துன்னரும் கடாஅம் போல
இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே.”
(புறநானூறு)
இதன் நீட்சியாய்த் திருமால் காதலில் ஸ்ரீஆண்டாள் பாடுகிறார்:
’மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து...’
’அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்’
(திருப்பாவை)
அன்பின் பிணைப்பாலே அவன் கெஞ்ச, இவர்கள் மிஞ்ச இருக்க வேண்டியவர்கள், பகைவர் தோற்று அச்சத்தால் வாயில் முற்றத்தில் வந்து தலைவணங்கி நிற்பதைப் போல் நிற்கின்றோம் என்று சொல்லும் போது அஃது அவன் நெஞ்சில் சிவிட்கென்று நாணத்தையும், தன்மீதே கடிந்துகொள்வதையும் ஒருசேர உருவாக்கும் நயம் கருதி இவ்வாறு கையாள்கிறார் ஸ்ரீஆண்டாள். அதற்கு அடித்தளமாகத் திகழ்கின்ற இலக்கிய நயத்தை ஔவையார் வழியே பெற்றிருக்கிறார் என்பது எத்தனை இனிய செய்தி!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment