Friday, October 22, 2021

முத்தைய பாவலர் ஸ்ரீஷண்முக ப்ரபந்தம்

சமய வழிபாட்டு விஷயங்களில் பண்டைக் காலம் தொட்டே மக்கள் எந்த மொழியாயினும், எந்த ஊராயினும் எவ்வளவு தத்துவப் பார்வையுடன் இருந்திருக்கிறார்கள் என்பது நம் நாட்டைப் பொறுத்தவரையில் நாம் நன்கு உணர வேண்டிய ஒன்று. 1913 ஆம் ஆண்டு ஸ்ரீமயூரகிரி ஷண்முகப்பிரபந்தம் என்ற ஒரு நூல் வந்திருக்கிறது. சிவகெங்கை ஸமஸ்தானம் சஞ்சீவிமலை என்னும் ஏரிமாநகரத்தைச் சேர்ந்த திரு மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்பவர் சென்னை ஜீவகாருண்ய விலாச அச்சுக்கூடத்தில் போட்டிருக்கிறார். நூல் முகப்பில் நூல் எழுதியவரைப் பற்றிய தரவுகள் விவரமாக இருக்கின்றன. 

’சிவகெங்கை ஸமஸ்தானம் வேப்பங்குளம் தேவேந்திரகுல திலகரான ஸ்ரீலஸ்ரீ சின்மய தேசிகர் அவர்களின் பௌத்திரனும், ஸ்ரீசோணை முத்தம்பலக்காரர் அவர்கள் புத்திரனுமாகி மதுரகவி ஆண்டவன் என்று விழங்கிய முத்தையப் பாவலர் அவர்கள்..’ இந்தப் பிரபந்தத்தைப் பாடினார் என்று தெரிவிக்கிறது நூல். பாட்டுகள் அருமை. அதற்கு முன் ’வேலுமயிலுந் துணை’ என்று மகுடமிட்டு முகவுரை எழுதும் திரு மீனாட்சிசுந்தரம் பிள்ளை எழுதுகின்ற ஒரு குறிப்பு நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று.

“... குன்றாக்குடியின் கண் இச்சா சக்தி என்ற வள்ளியம்மையாரொடும் கிரியா சத்தி என்ற தெய்வயானை அம்மையாரொடும் ஞான சத்தி என்ற வேற்படையைக் கரத்தில் தரித்து வாசி என்ற மயில் மீதில் ஆரோகணித்து உலகினுள்ளோர்கள் உய்யும்பொருட்டுத் திருக்கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் லோகநாதனாகிய சாட்சாது சிவசுப்பிரமணியக் கடவுள்...”

என்று எழுதிச் செல்கிறார் திரு மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள். அப்படியென்றால் உலகின் ஆதிகாரணமாக விளங்கும் மூலப்பரம்பொருளைத்தாம் சுப்பிரமணியன், ஷண்முகன், முருகன் என்று அழைத்து, அவருடைய இச்சா சக்தி, கிரியா சத்தி, ஞான சத்திகளையும், யோக ரீதியான பிராணன் என்பதையும் பல உருவங்கள் மூலமாக பக்தர்கள் புரிந்துகொள்ள வழங்கப் படுகிறது என்ற தெளிவு அனைத்துப் பிரதேச, மொழி மக்களிடையேயும் இருந்திருக்கிறது என்பதன்றோ தெளிவாகிறது.
நூலின் பாக்களுக்கு ஓர் உதாரணம்

“முருகோடு குழையாட முத்துவட மணியாட
முடிகளோ ராறுமாட
முன்கையி னிற்கடக கங்கணங் களுமாட
மோதிரந் தானுமாட
இருபுரமு மீராறு கரமாட வயிலாட
இருமயிலு மயிலுமாட
ஏர்கொண்ட நூபுரம் பாதகிண் கிணியாட
எழில்வீர கண்டையாட
ஒருமையொடு வந்தடி பணிந்தமுனி வருமாட
வுன்னடியர் கூட்டமாட
உயரவிண் தாவிவரு குக்குடக் கொடியாட
வோங்குபா மாலையாடக்
கிருபையொடு வந்தெனது வல்வினை தவிர்த்தடிமை
கேட்கும்வர மீவைநித்தங்
கிளிகாடை குயில்மருவு பொழில்சூழு திருமயுர
கிரிமேவு குமரேசனே.”

இன்றும் வல்லினம் மெல்லினம் ஒற்று முதலிய சில அச்சுத் திருத்தங்கள் செய்து யாராவது பதிப்பித்தால் அரிய ஒரு பிரபந்தம் தமிழுக்கு வரவாக இருக்கும்.

முருகனருள் பெற்றுக் கனவில் முருகனின் கட்டளையினால் பாடினார் இந்தப் பிரபந்தத்தை திரு முத்தைய்யப் பாவலராகிய மதுரகவி ஆண்டவன் என்பதை, பாவலரின் ஆசிரியர் மதுரகவி பெ பெருமாளாசாரியார் சாற்றுக் கவியிலேயே கூறுகிறார்.
”.....
நித்திரை செயுங்கால் நின்மலன் கனவில்
புத்திர நமதருள் புரிந்தனம் உனக்கு
நம்பராக்கிரம நயமதை விமரிசை
சம்பிரமத்துடன் சண்முகப்பிரபந்
தம்மொன்று பாடுக தனயாவென்றுறைத்து..”
எங்கெங்கு, எம்மொழியில், எந்நிலத்தில் எல்லாம் அருளாளர்கள் உண்டோ அவர்கள் அனைவரும் நமக்கு அருள் புரிக!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment