Friday, October 22, 2021

பகர்வர் பக்கு - ஐங்குறுநூறு

 பண்டைத் தமிழ்ச் சொற்றொடர்கள் சில்வற்றைக் காணும் போது ஏன் இவை தொடர்ந்து நிலவாமல் போயின என்று எண்ணத் தோன்றுகிறது.

தெருவில் விற்றுக்கொண்டு வருவோரைப் பார்க்கிறோம். அவர்கள் எடுத்துக் காண்பிக்கும் ஓரிரண்டு பொருள்தவிர மற்றவற்றை ஒரு பையில் இட்டு வைக்கின்றனர். அந்தப் பை கூடச் செல்லும் ஒரு கிடங்கு போன்று அவர்களுக்குப் பயன்படுகிறது. மறந்து தவறி எதையேனும் தொலைத்து விடாமல் இருக்கவும் உதவுகிறது. அந்தப் பை எப்படி இருக்கும்? அகண்டு பருத்து... அந்தப் பை அதற்கு ஏதேனும் பெயர் உண்டா? ஐந்குறுநூறு காலத்தில் அதற்கு ஒரு பெயர் இருந்திருக்கிறது. ‘பகர்வர் பக்கு’
தலைவன் மணம் பேச வேண்டி ஆள் விட்டிருக்கிறான். தலைவியின் உறவினரோ மறுப்பது போல் பேசுகின்றனர். அப்பொழுது தோழி தலைவன் ஏதோ இல்லாதபட்டவன் இல்லை. அவன் நாட்டு மந்தி கூட அவரையைக் கணக்கின்றித் தின்று அதனால் அதன் உடலைப் பார்த்தால் ‘பகர்வர் பக்கு’ போல் தோற்றமளிக்கும். (அவரை அவ்வாறு உயர் உண்டியாகக் கருதப்பட்டிருக்கிறது). அவன் விரும்பினால் பசுப்போல் பெண்டிர் அவன் நாட்டிலேயே அவனுக்கு ஏராளம் கிடைப்பார்கள். அவன் நம் தலைவி மேல் தீராத காதல் கொண்டமையால் மணம் கேட்டு ஆள் விட்டிருக்கிறான். அவன் அங்கு வழிவழியாகப் பண்டை உறவுகள் மிக்க குடியில் பிறந்தவன். ‘தொல்கேள்’ உடையவன். என்று தோழி செவிலித் தாய்க்குச் சொல்கிறாள்.
‘அவரை அருந்த மந்தி பகர்வர்
பக்கில் தோன்றும் நாடன் வேண்டில்
பசுப்போல் பெண்டிரும் பெறுகுவன்
தொல்கேள் ஆகலின் நல்குமால் இவட்கே.’
(ஐங்குறுநூறு)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment