Friday, October 22, 2021

யாராவது இருக்கீங்களா உள்ள?

 புலன்களின் இயல்பான ஓட்டம் புறத்தை நோக்கி அமைகிறது. மனிதரின் தேட்டமும் பெரும்பாலும் புறவுலகில்தான் நடை பெறுகிறது. புற உலகம் என்று இருப்பது தெரிகிறது. அது போல் அக உலகம் என்று சொல்லலாமே அன்றி அக உலகம் என்று ஒன்று உண்டா? புற உலகில் தேடுவோன் உண்டு. தேடப் படும் பொருள் உண்டு. அக உலகம் என்னும் போது அங்கு என்ன தேடுவது யார்? தேடப் படுவது யாது? உண்மையில் அக உலகம் என்னும் போது இது எதையும் குறிப்பதில்லை. தேடுகின்றவரும், தேடப்படும் பொருளும், தேடப்படும் இடமும் ஒன்றே என்பதுதான் அங்கு பொருள். புற உலகப் பழக்கம் நெடிது உடைய மனத்திற்கு திடும் என்று கொலாப்ஸ் ஆனது போன்ற திகில் வாராமைக்காக அகத்தில் ஓர் உலகம், அங்கு தேடுவோன் தேடப்படும் பொருள் என்றெல்லாம் அமைப்புறச் சொற்கள் வழங்கப் படுகின்றன. இந்தச் சௌகரியத்தைக் கழட்டிவிட்டு நேருக்கு நேர் பட்டவர்த்தனமாய் விசாரத்தின் உண்மையை உரைத்தவர் ஸ்ரீரமணர். அதே பாணியில் பேசும் சில கண்ணிகள் சொரூபாநுபவ சுவாமிகள் செய்த சொரூப உந்தியார் என்னும் நூலில் --

தன்னுரு கண்டு தனிப்பட்ட ஞானிக்குப்
பின்னுரு வில்லையென் றுந்தீபற
பேதம் இறந்ததென் றுந்தீபற
நான் என்றிருந்தான் இந் நான் என்றறிந்த பின்
தான் என்று கண்டார் என்று உந்தீபற
சந்தேகம் தீர்ந்தார் என்று உந்தீபற
உன்னாதிருந்த இடம் பொருளாம் எனச்
சொன்னான் அருங்குருவும் உந்தீபற
சும்மா இருக்க என்று உந்தீபற
நீ நான் என்னும் சடபேதம் இறந்த பின்
தானாய் இருந்தது என்று உந்தீபற
தாரகம் ஆனோம் என்று உந்தீபற
ஆகாசமென்ன அசையா வடிவொன்றே
சாகாதிருந்தது என்றுந்தீபற
சத்தியமே ஈதென்று உந்தீபற
*
தத்துவ விசாரமாகப் பல நூல்கள் தமிழில் இருந்திருக்கின்றன என்பதைச் சிவப்பிரகாசப் பெருந்திரட்டு என்னும் நூல் காட்டுகிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment