Friday, October 22, 2021

குறுந்தொகையின் சிறுதேர்

 என்ன ஒரு கணம், உணர்ச்சிகள் பிணங்கும் கணத்தில் அதை எத்தனை நயமாகத் தலைவியின் பக்கத்திலிருந்து தலைவனுக்குத் தெரியவரும் படியாகக் கூறுகிறது குறுந்தொகை! தலைவன் அவ்வப்பொழுது வந்து பார்த்து பிறர் அறியும் முன்னர் விரைந்து மீண்டு, பார்த்த சிறு நேரத்திற்குள் பேசாத பேச்சும், முடிவுறா உள்ள நெகிழ்வுமாய்.. இப்படியே போய்க் கொண்டிருந்தால் என்ன ஆவது என்று கவலை கொள்ளும் பெண் அவனுக்கு உணர்த்த வேண்டிச் சொல்லுகிறாள்.

பெரிய தேரில் அமர்ந்து ஓட்டிச் சென்று மகிழத்தான் ஆசை. ஆனால் சிறுவர்களுக்கோ அந்த ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டித் தச்சன் செய்த சிறிய ஆனால் பெரிய தேரைப் போன்றே வேலைப்பாடமைந்த தேரினைக் கையால் இழுத்துச் சென்று அங்கும் இங்கும் ஓடி இன்புறுவார்கள். அதுபோல் நன்கு மணம் முடித்து இல்லறத்தைச் சீரும் சிறப்புமாக வேளாண்மை சிறக்கப் பெருவாழ்வு வாழாமல் இப்படிக் களவொழுக்கமாய்க் காண்பது, சொல்லாடுவது, இல்லத்தில் உள்ளார் விழிக்கக் கேட்டால் விரைந்து மறைவது என்று எத்தனை நாள், சிறுவர்கள் சிறுமா வையம், தச்சன் வனைந்து கொடுத்ததை இழுத்து இன்புறுவதைப் போல மகிழ்ந்து காலம் போக்குவது? விரைவில் இந்தச் சிறுபிள்ளைகளின் விளையாட்டு போன்ற களவொழுக்கத்தை முடித்து மணம் என்ற பெருந்தேரில் அமர்ந்து ஓட்டி மகிழும் உண்மை வாழ்க்கை அன்றோ நாம் செயற்பாலது?

‘தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்தின் புறாஅ ராயினும் கையின்
ஈர்த்தின் புறூஉம் இளையோர் போல
உற்றின் புறேஎ மாயினும் நல்தேர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்தின் புற்றனெம் செறிந்தன வளையே.’
(குறுந்தொகை)
நேரடியாகச் சொல்லாமல் கடைசியில் ஒரு சொடுக்கு வைக்கிறாள். ஆகா! இந்த சிறுதெர் இழுத்து விளையாடுவது போன்ற இந்த நட்பிலேயே (உறவாக மலராது போனாலும்) எமக்கு இறும்பூது மிகுந்து கை வளைகள் எல்லாம் அந்த மகிழ்ச்சியில் உடல் பெருக்க இறுக்குகின்றன அல்லவா! ஆறு வரிகளில் என்ன ஒரு நாடகம், காதலின் இனிமைக்கும் வாழ்வின் பொறுப்பிற்கும் இடையிலான பரிணாமம்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment