Friday, October 22, 2021

ஆன்மிகம் என்றால்

 மருத்துவத் துறை என்று எடுத்துக் கொள்வோம். நிறைய ஒருவர் படித்திருக்கிறார். விஞ்ஞானம். ஆராய்ச்சி, படிப்பு என்று எக்கச்சக்கம். அது போல் பல துறைகளிலும் படிப்பு என்பது ஒருவர்தம் சிறப்பு, உயர்வு என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. அதுபோல் ஆன்மிகத்தில் ஒருவர் எக்கச்சக்கமா படித்திருக்கிறார். அவர் கல்லாத நூல்களே இல்லை என்னும் அளவிற்குப் பல மொழிகளிலும் கூட ஆன்மிக நூல்களை ஒருவர் கற்றிருக்கிறார் என்றால் அதுவும் சிறப்புதானே? என்றால் அப்படிச் சொல்ல முடியாது. ஆன்மிகம் என்றால் என்ன என்பதை விளங்கிக் கொண்டால் நமக்கும் இந்த மயக்கம் ஏற்படாது.

ஒருவரைப் பார்த்து நீங்கள் யார் என்று கேட்கிறீர்கள். அவர் உடனே என்ன சொல்வார். தாம் யார் என்று அவர் தமக்குள் சுயபோதம் உடையவராக இருக்கிறாரோ அதன்படிப் பதில் சொல்வார். சுயபோதம் என்றால் தன்னைக் குறித்த விவரம். அவருக்குத் தாம் உடலாகிய அவர் உருவத்தைக் குறித்த விவரங்கள்தாம் பெரும்பாலும் இருக்கும். எங்கு பிறந்தார், யாருக்குப் பிறந்தார், என்ன படித்தார், என்ன வேலை, அகவை என்ன, அவரின் சுற்றம் இதுபோன்றுதான் விவரங்கள் அமையும். மேலும் சொன்னால் இனி அவர் என்ன செய்ய விரும்புகிறார், தற்சமயம் என்ன காரியமாக இருக்கிறார் இப்படித்தான் விவரங்கள். அவருக்கு வாழ்க்கையில் பல ஆசைகள். சிலவற்றை அடைந்திருக்கிறார். சிலவற்றை அடைய முயன்றவண்ணம் இருக்கிறார். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாகச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தாம் இந்த உடல் அதில் தம்முடைய மனம், அறிவு, உணர்ச்சிகள் இதுதான் அவருடைய சுயபோதம். இந்த அடிப்படையில்தான் அவருடைய வாழ்க்கை, செயல்பாடுகள் போய்க்கொண்டிருக்கின்றன. அவருடைய இந்தப் பெரிய யந்திரத்திற்கான மின்சாரமே அவருடைய ஆசைதான்.
இப்படியே போய்க் கொண்டிருக்கும் உங்கள் வாழ்க்கையில் பட்டுப் பட்டு உங்களுக்கே ஒரு மனநிலை அல்லது ஏதோ ஆர்வக் கோளாறினால் ஓர் எண்ணம் ஏற்பட்டு அதைத் தொடர்ந்து நீங்களும் ஆழ்ந்து சிந்திக்கப் போய் ஒரு மனநிலை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதாவது உங்களுடைய இந்த யந்திர அமைப்பைக் குறித்தே ஓர் ஓர்மை, துப்பு துலக்குவது போன்ற ஓர் சிந்தனை ஈர்ப்பு. இது என்னது? இந்த அமைப்பில் நான் என்று எனக்கு அர்த்தம் ஆவதும், பிறவற்றை எனக்குப் பொருளாக்குவதும் என்னது இது? நான் இந்த உடல்தான். சந்தேகமில்லை. ஆனால் தூங்கினால் நான் இந்த உடலாக இல்லை. மறுபடியும் முழிப்பு வந்த போதுதான். அதுவரையில் நான் என்று சில காட்சிகள் அனுபவங்கள் தூக்கத்தில். அப்ப அந்த நான் எங்க போச்சு முழித்த பின்பு? சின்ன வயசில் ஒரு சிறுவன் இருந்தான். அவனை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தேன் நான் நான் என்று. இப்பொழுது அவன் போய்விட்டான். இந்த மனிதன் இருக்கிறான் இவனை அதேபோல் விடாமல் நான் நான் என்று பிடித்துக் கொண்டு அலைகிறேன் முழிப்பில்மட்டுமாவது. இவனும் மாறிக் கொண்டு இருக்கிறான். நாளை ஒரு வயதானவர் வருவார் அவர் தலையிலும் வேதாளக் கிழவன் போல் ஏறி அமர்ந்து கொண்டு நான் நான் என்று அலையப் போகிறேன். இப்படி மாறிக் கொண்டிருக்கும் மாற்றங்கள் மீது கிடைத்தவரை தொற்றிக்கொண்டு அலைந்தவாறே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும் ‘நான்’ உண்மையில் யார்? - இப்படிச் சிந்தனைகள் உங்களை உள்ளத்தில் வாட்டத் தொடங்கிவிட்டன. அவ்வப்பொழுது வழக்கப்படி மாமூல் அவசரத்தில் வாழ்க்கை பழைய கவலைகள், தேவைகள் அர்ஜண்ட் என்று ஆனாலும், சற்று ஓய்ந்தால் பழையபடி கேள்விகள் குடையத் தொடங்கிவிடுகின்றன. இப்பொழுதும் உங்களை யாரேனும் ‘நீங்கள் யார்?’ என்று கேட்டால் உடனே தயங்காமல் பழைய பயோடேட்டாவைச் சொல்வீர்கள். பெயர், பெற்றோர் பிறந்த தேதி, படிப்பு பார்க்கும் வேலை, உற்றம் சுற்றம் என்றபடி. ஆடமாடிக்கா பதில் உங்களிடமிருந்து வந்துவிடும்.
ஒரு நிலையைக் கற்பனை செய்து பாருங்கள். உங்களுக்குள் குடைந்து கொண்டிருந்த கேள்விகள் என்று சொன்னோமே, மாறுகின்ற இவை நடுவே மாறாமல் நான் நான் என்று உள்ளுக்குள் அர்த்தம் ஆகியும் பிற அனைத்தையும் அர்த்தப் படுத்தியும் இருக்கும் அந்த ‘நான்’ யார் உண்மையில்? என்று. அந்தச் சிந்தனை தீவிரம் அடைந்து உங்களுடைய சுயபோதமே ஆட்டம் கண்டு மாறிப் போய் இந்த உடல் மனம் இதெல்லாஅம் நான் இல்லை. அனைத்தையும் எப்பொழுதும் அறிந்தவண்ணம் இருக்கின்ற இந்த உணர்வே உண்மையில் ‘நான்’ என்ற சுயபோதம் நிலைக்கத் தொடங்கிவிட்டது என்று கொள்வோம். அப்பொழுது உங்களை யாரேனும் ‘நீங்கள் யார்?’ என்று கேட்டால் உங்களுக்குள் தோன்றும் சுயபோதம் என்ன சொல்லும். என்றும் மாறாது நிலவுகின்ற இந்த உணர்வுமயமே நான் என்று இயல்பாகத் தோன்றத் தொடங்கிவிட்டால் அப்பொழுதுதான் அது ஆன்மிகம். சும்மா வார்த்தையால் அளந்து விடுவது அன்று. உடல் என்னும் சுயபோதம் எப்படி இந்த நம் நிலையில் இயல்பாகத் தோன்றுகிறதோ அதுபோல் உணர்வுமயமான, அறிந்தவண்ணமே இருந்து கொண்டிருக்கும் ஒன்றே நான். உடல் மனம் என்ற இந்த யந்திர அமைப்பு எதுவும் இல்லை என்பது இயல்பான சுயபோதமாகத் தோன்றும் நிலை. இந்த நிலையில் ஒன்றைக் கவனிக்கலாம். ஆசை என்பது இருக்காது. யந்திர அமைப்பை இயக்க இன்றியமையாமல் தேவைப்பட்ட மின்சாரம் போன்று இருந்த ஆசைக்கு இப்பொழுது தேவையில்லாமல் போய்விட்டதை உணரலாம். இதுதான் ஆன்மிகம். இந்த நிலையே வராமல் எத்தனை புத்தகம் ஆராய்ச்சி சொற்பொழிவு எல்லாம் இருந்தாலும் பழைய யந்திர அமைப்பினுள் செய்கின்ற ஜால வித்தைதான். ஆன்மிகம் என்பதனுள் நுழையாது. தான் உண்மையில் உணர்வுமயமான ஒன்றே என்னும் சுயபோதம்தான் ஆன்மபோதம் என்பது. ஆன்மபோதம்தான் ஆன்மிகத்தின் நுழைவாயிலே ஆகும். அந்த உணர்வுமயமான சுயபோதம் எழப்பெறாத எவருமே மெத்தக் கற்றவரா கல்லாதவரா என்ற வித்யாசமே இன்றி வெளியில் பழைய உடலே தான் எனும் சுயபோதத்துள் உலவுகின்ற பேர்வழிதான்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment