Thursday, October 21, 2021

ரவீந்திரர் கவிதையைப் படித்த பின்பு

(ரவீந்திரநாத தாகூரின் Flying Man என்னும் கவிதையைப் படித்த பின்பு)

பறவையின் கீதம் இயற்கையின் ஆத்ம நாதம்
பறக்கும் மனிதனோ இயற்கையின் நாச ஓதம்
சூரியனும் சந்திரனும் வானும் மண்ணும்
பறவைகளை வாழ்த்தும்
பறக்கும் மனிதனை வெறுக்கும்
என்றீர் ரவீந்திரரே!
இயற்கையின் புறம்பாகவோ
மனிதனும் அவன் அறிவும்
அவன் ஆலாய்ப் பறந்து பின்
அண்டம் பறக்கக் கற்றதுவும்...?
நீர் சொன்னதைத் தானே
சொன்னார்கள் அந்த ஆதி மனிதக் கூட்டம்
சிக்கி முக்கிக் கல்லில்
நெருப்புண்டாக்கிச்
சுட்டு உண்ணக் கற்றுக் கொடுத்த
அந்த ஆதி விஞ்ஞானியிடம்?
இயற்கைக்கு எதிர்க்கடை இயற்கையில் இயலுமா?
இயலும் மொத்தமும் இயற்கையில்
அடக்கம் எனில்
மனிதரை உண்டாக்கிய இயற்கை
அவன் அறிவுக்கும் அதன் வாழ்ச்சிக்கும்
வழிவகை செய்யாமலா இருக்கும்?
கவிதையென்றாலே
மனிதரைத் தவிர மற்றவற்றைப் பாடுவதோ?
இயற்கையில் படுபொருள் அனைத்தும்
பாடுபொருள் ஆகாதோ?
இயற்கையை வாழ்த்துங்கள்
பறந்துண்ணும் பறவையை வாழ்த்துங்கள்
மேய்ந்துண்ணும் மிருகத்தை வாழ்த்துங்கள்
நீரில் நீந்தும் இனங்களை வாழ்த்துங்கள்
எல்லாமே ஒரு முகத்தில் ஆக்கமும்
மறுமுகத்தில் அழிவும் கொண்டுதான்
இயங்கும் என விஞ்ஞானம் அறியீரோ?
மனிதரை வசை பாடாதீர் ரவீந்திரரே!
மனிதரைப் பாடுவோம் வாருங்கள்.
மனிதர்தாம் ரவீந்திரர் ஆகின்றார்
மனிதர்தாம் இயற்கையை வெல்கின்றார்
அக இயற்கையும் வெல்கின்றார்
அகம் உள உண்மையும் ஆகின்றார்
பறவைகள் ரொபீந்த்ர சொங்கீத் பாடுவதில்லை
அவை உணவுக்கு, இணை விழைச்சுக்கு
ஆலாய்ப் பறந்து, அவலாய்ப் பொடிந்து
கூவுகின்றன
ஆத்ம நாதம் பாடவில்லை ரவீந்திரரே!

***

No comments:

Post a Comment