Thursday, October 21, 2021

கிகடோகிரி

வெட்ட வெளியைப் பார்க்காதே என்று பாட்டி ஒருவர் சொல்லிக் கொண்டே இருப்பார். ஏன் என்று அப்பொழுது புரியவில்லை. ஆனால் சரிதான் என்பதை கிகடோகிரி நிரூபித்தது. பார்க்கக் கூடாது என்றுதான் இருந்தேன். ஆனால் கொஞ்சம் சிந்தனை ஆழமாகப் போய், பார்வை நெட்டுக் குத்து நிற்கும் போது இந்த உஷார் மறந்து போய்விட்டது. இரண்டு கண்கள் மட்டும் நட்ட நடு ஆகாயத்தில் எப்படி எழுந்தது? ஆனால் அந்தக் கண்களை எங்கேயோ பார்த்திருக்கிறேன். மிகவும் பழகிய நோக்கு கொண்டுதான் இருந்தது. ஆனாலும்..... அப்புறம் திடீரென ஏதாவது அமானுஷ்ய வேலையோ என்று கொஞ்சம் உதறல் !

ஏய் யாரது? என்றதும் அந்த இரண்டு கண்களே சிரிக்கும், சாரி சியாங்ங்கிக்கும் வாயாகி, சத்தமே இல்லாமல் சிரித்தது.

யோசித்துப் பாருங்கள். யாருமில்லை. தனிமை. திடீரென்று வெட்ட வெளியில் இரண்டு கண்கள் பூக்கின்றன. கேட்டால் வாயாகி ஓசையில்லாச் சிரிப்... சியாங்

சரி என்னத்துக்கு வம்பு... கண்டுக்காத மாதிரி வாக்கிங் போய் விடலாம் என்று கிளம்பினேன். ஒற்றைச் சின்ன மணித் தாளத்தைக் காற்றில் கிலுகிலுத்தால் போல் குரலில் 'இவ்வளவுதான் உன் தைரியமா? கொஞ்சம் வழக்கத்திற்கு மாறு என்றதும் ஜகா வாங்குகிறாயே?'

சரி என்ன ஆனாலும் இந்தக் கிறுக்கு குறக்களியை என்னன்னு ஒரு கை பார்த்துட்டுத்தான் புறப்பட்றதுன்னு உட்கார்ந்து விட்டேன்.

'இதோ பார்! நீ யாராக வேண்டுமானாலும் இரு. இந்த மாதிரி மாடர்ன் ஆர்ட் கணக்கா சொதப்பல் கோலங்கள் கொண்டு தோன்றுவது என்பதை விடு. சின்ன சைஸோ பெரிஸோ, முழு உருவத்தோடு வா. வந்து என்ன வேண்டுமானாலும் சொல்லு.

இல்லையே என் உருவமே இதுதான். அதுவும் மாறிண்டே இருக்கும்.

ஏய்... நீ அந்தக் கொசுகுட்ஸுதானே?

இல்லை. என் பெயர் கிகடோகிரி. ஒரு விண்ணப்பம். ஏய் நீ வா போ என்று எல்லாம் விளிக்காதே. மரியாதை தவறாமல் பேசப் பழகிக் கொள்.

பளேர் பளேர் என்று இரு கன்னங்களிலும் மாறி மாறி அறை.....கையில்லாக் கையால் ஒலியெழாமல். வலி ஊமை வலி.

சரி சாரி. ஆனால் அடிக்கடி தவறிப் போய்விழும். கண்டுக்காத. வேண்டுமென்றால் நீயும் என்னை அப்படியே அழை. அது போகட்டும் என்னது கிகடோகிரியா? சரிதான் சதுரகிரி, மதுராபுரி, நிசுளாபுரி, கிரிகிரிபெக், நீயோ கிகடோகிரி. எல்லாம் என் நேரம்!

நீ சரியான ஓட்ற மாடு ஒத்தையடிப் பாதை ஆளு.

என்ன... என்னைப் போய்... இதப் பாரு/.... சும்மா/';'' கண்ணுக்குத் தெரியாம பூச்சாண்டி காட்டிக்கிட்டு சும்மா அளக்காத... சரி என்ன விஷயம் சொல்லு.

பொருள் இருக்கா இல்லையா?

என்னது?

காது செவிடா? பொருள் இருக்கா இல்லையா?

போப்பா புரியலை.

பொருள் என்றால் என்ன?

எந்த அர்த்த்தில் சொல்கிறாய்?

சாதாரண அர்த்தத்தில்தான் சொல்கிறேன். பொ ரு ள் - புரியுதா? - இரு க் கா இல்லை யா?

இதோ இந்தக் கண்ணுக்குத் தெரிஞ்சு, கைக்குப் பட்டு இருக்கிறதே இதுவா?

மௌனம்.

இருக்கு. ஏன் அதுக்கு என்ன இப்போ?

நீ என்ன சுத்த மண்ணாங்கட்டியா? யோசிக்க மாட்டியா?

வந்த கோபத்தில்.... இதப் பாரு....

அலட்டல் எல்லாம் வேண்டாம் பதில் சொல்லு.

அதான் இருக்கு என்று சொன்னேனே....

அதான் கேட்கிறேன். ஏதோ பதில்னு சொல்றியே.... விஞ்ஞானம் படிச்ச ஆளுதானே நீ? எங்க விஞ்ஞான ரீதியா பொருள் எங்க காட்டு..... அன்னிக்கு என்னமோ யூட்யூப்ல பார்த்து அப்படி வியந்து கொண்டிருந்தாய்? எல்லாம் கூத்து பார்க்கறதுதானா?

ச... ச.. டர்ட்டி நான்சென்ஸ்... எது என்னன்னே தெரியாம ஓர் அசரீரிக்கிட்ட எல்லாம் வாங்கி கட்டிக்க வேண்டியிருக்கு.... என்ன இது இப்படி திரும்பத் திரும்ப இப்படி மாட்டிக்கிறேன்

நீ நொந்து நூலானதெல்லாம் போதும். சொல்லு பதில்.

விஞ்ஞான ரீதியா.... பார்த்தா எல்லாம்.... வெறுமன துகள் பெரிய வட்டங்கள், அதுக்கும் உள்ளப் போனா... எல்லாம் ஆற்றல் அலைக்கற்றைகள்.... சராசரிப் புழக்கப் பார்வை தளத்துல பொருள் போல் பார்க்கப் பழகக் கிடைக்குது அவ்வளவுதான்.

நீ இருக்கியா?

கையில் கிடைத்ததை எடுத்து விட்டெறிந்தேன்.....

கூல் மாமு கூல்... பதில் கேட்டா ஏன் இப்படி மிரள்கிறாய்? நீ இருக்கிறாயா?

இதோ பார். போட்டுக் குழஃப்பாத....

யார் குழப்பினா? பொருள் இருக்கான்னா விஞ்ஞான ரீதியா சொன்னாயே.. சாதாரண தளத்துல பார்க்கப் பழகக் கிடைக்குதுன்னு.. அப்படின்னா யாருக்குக் கிடைக்குது, பழக? பழகறது யாரு? அப்ப்டி ஒன்று இருக்கா? இருக்குன்னா அது நீயா? அப்படின்னா எங்க இருக்கே நீ? நீ இருக்க என்றால் யாருக்குப் பழகக் கிடைத்துக் கொண்டு இருக்கிறாய் நீ?

யூ...யூ...யூ....

கிகடோகிரி.
வருவேன் மறுபடியும்.
விகடாசிரி
தகரடப்பாகரி.

மும்முரமாக க்=ஹெல்ப்லைன்னுக்கு நம்பர் தேடிக் கொண்டிஉருக்கிறேன்.... ச ச.....ககடோகிரி..

***
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

No comments:

Post a Comment