Friday, October 22, 2021

பொய்யில்லாத பழங்கதையாய் மெல்ல...1

பழம் சேகரங்கள், அதுவும் நமது எழுத்துகளின் கைப்பிரதிகள், அதுவும் பள்ளிப்பருவம் முடியும் தருணத்தில் எழுதப்பட்டவை என்றால் இப்பொழுது படிக்கும் பொழுது அவற்றின் முளைக்கும் எழிலாலும், முதிராக் கருத்தாலும் (அப்படித்தானா.. தெரியவில்லை) இப்பொழுது அவை நம்மை ஒரு விதத்தில் ஈர்க்காமல் போகாது. அதுவும் எழுதிய நானே அவற்றைப் பார்க்கும் பொழுது அது ஒரு வித கால ஜன்னலாகவும், அந்தப் பழைய நாட்கள், அவை எழுதப்பட்ட தருணம், அப்பொழுது யார் யார் உரையாடினார்கள் என்னும் குறிப்புகள்  - எல்லாம் ஒரு போதையே தந்துவிடுகின்றன.

1972 ஆ அல்லது 73 ஆ நினைவில்லை. எனக்கு 14 அல்லது 15 வயசு. ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹைஸ்கூலில் தந்தையாரும், ஆங்கிலப் பேராசிரியர் திரு சி எஸ் கமலபதியும் இணைந்து Merchant of Venice by Shakespeare போட்டு முடித்த தருணம். அதில் தந்தையார் டைரக்டர். அவருக்கு நான் அஸிஸ்டண்ட். மைனர் ரோல்களைப் பயிற்றுவதும், டையலாக் சொல்லச் சொல்லிக் கேட்பதும் என் பணி.

அந்த ஆங்கில நாடகம் ஷேக்ஸ்பியர் நாடகம் போட்டது திருச்சி வட்டாரங்களில் அதுதான் கடைசி என்று நினைக்கிறேன். பிறகு யாரும் போட்டதாக நினைவில்லை. வெற்றிகரமாக நாடகம் போட்ட சாதனையைக் கொண்டாட வேண்டி திரு கிருஷ்ணமூர்த்தி ராவ் அவர்களது தலைமையில் ஒரு மீட்டிங், இன்னும் சொல்லப் போனால் நடிகர்கள் (பலரும் கல்லூரி மாணவர்கள்) நண்பர்கள், ஆர்வலர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு கெட் டு கெதர். அதில் அனைவரையும் வரவேற்று நடந்து முடிந்த சாதனையை வாழ்த்திப் பாட எனக்குப் பொறுப்பு. அப்பொழுது நான் எழுதிய வரிகள், இல்லை பாடல், இல்லை கவிதை, இல்லை இல்லை பா இல்லை இல்லை வசனக் கவிதை - சரி எதற்குச் சஃண்டை -

" கலைமுறை நாடகக் குழுவினர்காள் !
நடைமுறை உளவியல் அரங்கத்தின்
இயக்குநர் கமலபதி பேராசிரிய !
தலைவராய் விளங்கும் தகைமைப் பெரிய!
இளமை மணம் மாறா இனிய முகத்தினிலே
சிரிப்புதவழ் இதழ்களலங் கரிக்கும்
குன்றாத பேரார்வம் சிலிர்த்திடுகும்
சிறந்தவரே ! கிருஷ்ணமூர்த்தி ராவவரே!
தேவவிருந்தென அருமருந்தென எம்செவிக்கு
பேராசான் உரைகளையே துவக்கியுள்ளீர் !
சிலநாளாய் அவ்விருந்து நடக்கவில்லை என்பதனால்
செயத்துணிந்தீர் போலுமிங்கே வயிற்றுக்கொரு விருந்து
வையத்துள் வாழ்வாங்கு நீர் வாழ்ந்திடவே
வற்றாத மாகருணை வாழ்வுக்கொரு புகலாம்
மாசக்தி காத்திடவே கவிபாடி துதிக்கின்றோம்.

வெனிஸ்நகர வணிகன் வந்து போட்ட பெரும் முழக்கத்தை
காவிரியாள் அலைக்கரத்தால் பல இடத்தில் முழக்குகிறாள்.
எதிரொலியாய் பலபேர்கள் எமக்கென்று கேட்கின்றார்.
வணிகனீட்டித் தந்த செல்வம் வற்றாத செல்வம்தான்
அவனடைந்த வெற்றியிலே திளைத்துள்ளோம் நாமெல்லாம்.

அந்தபெரும் வெற்றியிலே பெரும்பங்கு வகித்திடுவோர்
பாய்ஸ்ஹைஸ்கூல் ஆசிரியப் பெருமக்களே யாவார்கள்.
அவர்க்கெல்லாம் பிரதிநிதியாம் தலைமையாசிரியரைக் கேட்டால்
கலைமாமணி சி எஸ் கேயின் நிலைத்தபுக ழேயென்பார்
நன்றென்று கலைப்பதியை அணுகிநாம் வினவிட்டால்
அன்றன்றென் மறுஆத்மா வேணுசெய்த வேலையென்பார்
சரியென்று டைரக்டர் ஐயாவிடம் சென்று கேட்டால்
இல்லையில்லை நானில்லை டைரக்டர்; டிக்டேடரும் அல்லைநான்;
ஆக்குவதும் ஊக்குவதும் இயக்குவதும் எல்லாமாகி
நிற்குமுயர் கமலபதிப் பேராசான் தானென்பார்;
தானவரின் தொண்டரடிப் பொடியென்று கரங்குவிப்பார்;
கவனிக்க...
நடித்தவரின் பேரூக்கம்; ஆசிரியர் அளித்த பெரும் உழைப்பு;
இவ்விரண்டே நல்வெற்றிதனை ஆக்கியது
என்றுநமைத் திருத்திடுவார்.
நடித்தவரை நாடிப்போய் நாம் கேட்டால்
அன்றென்று டைரக்டரை நோக்கிநமை திருப்பிடுவார்.

இத்துணை பேர்களையும் விட்டுவிட்டு
வெற்றியென்று ஓருருவம் உளதென்றால்
அணுகியதை நாம் வினவ முடியுமானால்
வெற்றியென்ன பதில் சொல்லும் எண்ணிடுவீர்!

"அனைவர் தந்த காரணமும் சரியேயென வமைக!
ஆனாலும் கிருஷ்ணமூர்த்தி ராவவர்கள் அளித்தவாசி
அத்தனைக்கும் அழகுதரும் காரணமாகும்"

என்றுசொலும் நன்றுசொலும், உண்மைதானே!
குழந்தையுளம் கொண்டவர் நம் கிருஷ்ணமூர்த்தி
அவரளித்த ஆசியென பொய்த்தா போகும்?
குழந்தையுளம் கொண்டவர்கள் குவலயத்தில் பெரியவர்கள்;
ரசிப்பதற்குத் தெரிந்தவரை நசிப்பவைகள் ஏதுமில்லை;
ரசிப்பதிலும், குழந்தையுளப் பண்பினிலும்
குன்றுகளாய் திகழ்ந்திடுவோர் கமலபதிப் பேராசான்
கிருஷ்ணமூர்த்தி ராவவர்கள்.
அன்னோரின் வாழ்வினிலே அனைத்துநலன் பொலிந்திடவே
அவர் குழந்தை உளம், வாழ்வின் வளம் செழித்திடவே
வாழிசத்தி பதத்தினையே நாம் துதிப்போம்."

மேற்கண்ட வாழ்த்துப்பாவில் நடைமுறை உளவியல் அரங்கத்தின் இயக்குநர் என்று திரு சி எஸ் கமலபதி அவர்களை விளித்தும், அவருடைய உரைத்தொடர்ச்சி திரு கிருஷ்ணமூர்த்தி ராவ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுச் சின்னாள் நடந்து பின் நடுவில் நின்று மீண்டும் துவங்கியது, அந்த நடுவில் நின்ற சமயத்தில் திரு ராவ் அவர்கள் ஒரு விருந்து அளித்து அனைவரையும் கூட்டி மீண்டும் புதுப்பித்தார் என்றபடிக் குறிப்பிடிருக்கிறேன். இதை இப்பொழுது படித்ததும் அந்த உளவியல் அரங்கம் பற்றிய சிந்தனைகள் வந்து கவிந்து கொண்டன.

மேற்கத்திய உள இயல் சிந்தனைகளையும், வாழ்வை முன்னேற்ற நடைமுறை உளவியல் என்னும் நோக்கோடு பல உரைகளையும் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹைஸ்கூல் அரங்கங்களில் வாரவிடுமுறைகள் மாலைநேரங்கள் ஆகிய பொழுதுகளில் ஆங்கிலத்திலும், தமிழிலும் அள்ளி அள்ளித் தந்தவர் அந்தக் காலத்தில் பேராசிரியர் திரு சி எஸ் கமலபதி அவர்கள். மேலைக் கல்வித்துறைகள் பலவற்றையும் திருச்சி வட்டாரங்களில் இன்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னரே வள்ளலாக வாரித் தந்த பெருங் கல்வியாளர்.

எனது தந்தையார் திரு ஆர் வேணுகோபால் அவர்களும், அவரும் உயிர் சிநேகம். My Alter-ego Venu என்றுதான் அவர் என் தந்தையைக் குறிப்பிடுவது வழக்கம். 1950கள் தொடக்கமாக அவரும் என் தந்தையும் பல ஷேக்ஸ்பியர் நாடகங்களையும், தமிழ் நாடகங்களையும் அமெச்சூர் நாடக ஊக்கங்கள் என்னும் வகையில் திருச்சி, கும்பகோணம், மதுரை, சென்னை என்று பல இடங்களிலும் மேடை ஏற்றியவர்கள். ஷேக்ஸ்பியர் நாடகங்களை அவர்கள் மேடை ஏற்றியது Shakespeare Head Players என்னும் அமைப்பை வைத்துக்கொண்டு.

நான் சிறு குழந்தையாக இருக்குங்காலத்தில் அவர் மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ் நாடகத்தில் பிரின்ஸ் ஆஃப் மொராக்க்கோ சீனில் மூன்று பெட்டிகளில் ஒரு பெட்டியில் மண்டையோடு ஒன்று இருக்கும்; அதற்காக வெண்களிமண்ணில் பண்ண ஒரு மண்டையோட்டை ஒரு பெட்டியில் போட்டு எலெக்ட்ரிக் ரீடிங் ரூலில் அவர் வைத்திருக்கவும், அதை எதேச்சையாக எதையோ நோண்டும் போது (பயங்கர நோண்டிப் பண்டாரம்தான் நான் ) நான் கண்டுவிட்டு பயத்தில் 'குய்யோ முறையோ' என்று அலறியதையும், பிறகு அம்மா மிகவும் தொணப்பவே வேறெங்கோ கொண்டு போய் வைத்துக் கொண்டதும் இப்பொழுது லேசாக நினைவில் நிழலாடுகின்றன. என்ன காலங்கள் அவையெல்லாம் !

அந்த நடைமுறை உளவியல் அரங்கம் தொடக்க விழாவில் பேராசிரியர் திரு சி எஸ் கமலபதி ஒரு ஆங்கில வாழ்த்துப்பா எழுதியிருந்தார். அதுவும் கிடைத்தது. அதற்கு ஒரு மொழிபெயர்ப்பு செய்து அவருக்குப் பின்னால் அந்தத் தொடக்க விழாவில் நானும் வாசித்தேன். எவ்வளவு பெரும் சிம்மங்கள் அவர்கள்! ஒரு சிறு பையனான நான் தறுக்கு முறுக்கு என்று செய்யும் முயற்சிகளுக்கு எவ்வளவு ஆதரவும், உற்சாகமும் தந்திருக்கிறார்கள் ! இன்று நினைக்குங்கால் அடங்காக் கண்ணீர்தான் பதிலாக வடிகிறது.

பொய்யில்லாமல் பழங்கதையாய் மெல்லப் போயின நாட்கள்.!

***

No comments:

Post a Comment