Friday, October 22, 2021

புத்தகப் பட்டியல் காட்டும் வரலாறு !

புத்தகப் பட்டியலில் என்ன வரலாறு தெரியப் போகிறது? புத்தகப் பட்டியல் என்ன என்ன புத்தகம் என்ன விலை என்றுதான் சொல்லும். அதில் என்ன வரலாறு? ஆனால் பரோடா சமஸ்தானத்து ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட் ஏதோ புத்தகத்தின் கடைசி பத்து பக்கங்களில் போட்டிருந்த 1940 பட்டியலைப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரே அதிசயமாகப் போய்விட்டது. நூல்களும், அதன் ஆசிரியர்களும், அவர்களின் காலங்களும் பற்றிய குறிப்பைப் பார்த்தால், எவ்வளவு செய்திகள்!

காவிய மீமாஸை என்று ஒரு நூல். கவிதை இயல் பற்றிப் பேசுவது. எழுதியது ராஜசேகரப் பண்டிதர். காலம் 880 - 920 கிபி. உபய கவி என்று ஒரு பட்டம் பண்டைய நாளில் சிலருக்குக் கொடுத்து அவர்கள் பெயர்களுடன் அது வந்து பார்த்திருக்கிறேன். ஸ்ரீவைணவ ஆசார்யர்களில், ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகள் காலத்திற்குப் பிற்பட்டு ஒருவர் உபயகவி அப்பா என்று இருந்தார். அவருக்கு ஏன் உபயகவி என்ற பட்டம் என்று விவரம் தெரியாமல் இருந்தது. பார்த்தால் விளக்கம் இந்த காவிய மீமாஸையில் இருக்கிறது. கற்பனையை முதலாக வைத்து காவியங்கள், சாத்திரக் கருத்துகளைப் பொதிந்து செய்யுள் பிரபந்தங்கள் இவ்வாறு இரண்டிலும் தேர்ந்ந்த கவிஞர்களுக்கு உபயகவி என்று பட்டம் தருவார்கள் என்று ராஜசேகரப் பண்டிதர் சொல்கிறார்.

*
நரநாராயணானந்த என்னும் ஒரு நூல். அர்ஜுனனும், ஸ்ரீகிருஷ்ணனும் கிர்நார் மலைகளில் திரிந்ததைப் பற்றிய செய்யுள் பிரபந்தம். வஸ்துபாலர் என்பவர் எழுதியது. தோல்காவை ஆண்ட வீரதவளன் என்னும் அரசனிடம் மந்திரியாக இருந்தவர். நூல் செய்த காலம் 1221 - 1231 கி பி.

* தர்க்கசங்க்ரஹம் என்னும் ஒரு நூல். வைசேஷிகத்தின் கருத்துகளைக் கண்டிப்பது. ஆனந்தஞானர் அல்லது ஆனந்தகிரி என்பவர் செய்தது. சங்கரரின் நூல்களுக்கு விரிவுரைகள் எழுதிய அதே ஆனந்தகிரிதான். காலம் 13ஆம் நூற் இன் பிற்பகுதி.

* பார்த்தபராக்கிரம என்னும் நூல். எழுதியவர் ப்ரஹ்லாதன தேவர். இவர் பாலனபுரி என்னும் இடத்தை ஸ்தாபித்தவர். குஜராத் அரசர்களுக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருந்த குறுவேந்தர். மார்வாரில் ஒரு நகரமான சந்திராவதீ என்பதை ஆண்ட பரமார ராஜாவின் தம்பி. 1164 கிபி ஆண்டில் இவர் யுவராஜாவாக இருந்திருக்கிறார். விராட அரசனின் ஆநிரைகளை மீட்ட அர்ஜுனனின் பராக்கிரமங்களைப் பேசும் செய்யுள் நூல்.

* ராஷ்ட்ரௌடவம்ச என்பது வரலாற்றுச் செய்யுள் நூல். மயூரகிரியின் பாகுலர்களைப் பற்றிய சரித்திரம். பாகுல வம்சத்து ஆதியான கன்னோஜின் அரசனான ராஷ்ட்ரௌடனில் தொடங்கி, மயூரகிரியின் நாராயண ஷா வரை கூறுகின்ற நூல். ருத்ரகவி என்பவர் செய்தது. நூலின் காலம் 1596 கி பி. 

லிங்கானுசாஸனம் - வியாகரணம் பற்றிய நூல். 8ஆம் நூற் பிற்பகுதி - 9ஆம் நூற் முற்பகுதி இல் இருந்த வாமனர் எழுதியது.

வசந்தவிலாஸம் என்னும் நூல். மஹாகாவியம். வஸ்துபாலருடைய வாழ்க்கையையும், குஜராத் பற்றிய வரலாற்றையும் வைத்து வஸ்துபாலரின் சமகாலத்தவரான பாலசந்திரசூரி என்பவர் எழுதியது. (வஸ்துபாலர் நரநாராயணானந்த என்பதை எழுதினார் என்று முன்னர் பார்த்தோம்) பரோடா தேசத்து கடி ப்ராந்தியத்தைச் சேர்ந்த மொதேரா இனத்தைச் சேர்ந்தவர் பாலசந்திர சூரி. வஸ்துபாலர் காலம் ஆன பின்பு, அவரது மகனுக்காக இதை எழுதினார். எழுதிய காலம் 1240 கி பி.

12 ஆம் நூற் இன் பிற்பகுதியிலிருந்து 13 ஆம் நூற் முதல் கால்பகுதிவரை இருந்த கலிஞ்ஜர நாட்டு பரமார்த்தி தேவனின் மந்திரியாக இருந்தவர் வத்ஸராஜர். அவர் ஆறு நாடகங்களை எழுதினார். அது ரூபகஷட்கம் என்னும் நூல்.

மோஹபராஜயம் என்னும் நூல். நாடகம். தத்வார்த்த நாடகம். மோகம் என்பதை ஜயிப்பது பற்றிய கருத்து கொண்டது. விஷயம் குஜராத்தை ஆண்ட குமாரபாலர் என்னும் அரசனை ஜைன மதத்திற்கு மாற்றும் முகாந்தரமாக யசஸ்பாலர் என்பவரால் இயற்றப்பட்டது. யசஸ்பாலர் குமாரபாலரின் மகனான மன்னன் அஜயதேவன் என்பவனிடம் அதிகாரியாக பணியாற்றியவர். அஜயதேவன் ஆண்ட காலம் 1229 - 1232 கி பி.

ஹம்மீரமதமர்தனம் என்னும் நூல். நாடகம். தோல்காவின் அரசனான வீரதவளனையும், வஸ்துபாலர், தேஜஸ்பாலர் என்னும் சகோதரர்கள் இருவரையும் போற்றி எழுதப்பட்டது. எழுதியவர் ஜயசிம்ஹ ஸூரி, வீரஸூரியின் மாணவர். முனிஸுவ்ரதம் என்று ப்ரோச்சில் இருந்த ஆலயத்தின் ஆசாரியர் வீரஸூரி. காலம் 1220 - 1239 கி பி. 

உதய சுந்தரி கதை - உரையிடையிட்ட பாட்டுடை செய்யுள் என்னும் வகையான சம்பு நடையில் எழுதப்பட்ட காதல் புதினம். சொத்தல அல்லது சொட்டல என்பவர் எழுதியது. கொங்கணத்தை அடுத்து அடுத்து ஆண்ட சிட்டிராஜ, நாகார்ஜுன, மும்முனிராஜா ஆகியோர் ஆதரவில் இருந்தவர். எழுதிய காலம் 1026 - 1050 கிபி.

மஹாவித்யாவிடம்பனம் - நியாய சாத்திரம் பற்றிய நூல். எழுதியவர் பட்ட வாதீந்த்ரர். காலம் 1210 - 1274 கிபி

ப்ராசீனகூர்ஜரகாவ்யசங்கரஹம் - 12 ஆம் நூற் தொடங்கி 15ஆம் நூற் வரையிலான பழைய குஜராத்திய பாடல்களின் தொகுப்பு.

குமாரபாலப்ரதிபோதம் - சோமப்ரபாசாரியர் என்பவர் இயற்றிய ப்ராக்ருத மொழியில் அமைந்த வாழ்க்கைச்சரித நூல். எழுதிய காலம் 1195 கிபி

கணகாரிகை - பாசுபத மதத்தின் ஒரு தத்துவ நூல். பத்தாம் நூற் கிபி இன் பிற்பகுதியில் வாழ்ந்த பாசர்வக்ஞர் எழுதியது.

கவீந்த்ராசாரிய க்ரந்த சூசி - கவீந்த்ராசாரியர் என்னும் பண்டிதரிடம் இருந்த வடமொழி நூல்களின் பட்டிகை. வாரணாஸியில் இருந்தவர். காலம் 1656 கிபி. (இது எப்படி இருக்கிறது..! பட்டியலில் காணும் வரலாறு என்று பார்த்தால் அதில் ஒரு புத்தகப்பட்டியல் அந்தக் காலத்து 17ஆம் நூற் வடமொழி நூல்கள் ஒருவரிடம் இருந்தவை அது ஒரு நூலாக ஆகியிருக்கிறது.) 

லேகபத்ததி என்றொரு நூல். இப்பொழுது எல்லாம் பள்ளிக்கூட மாணவர்களுக்கு லெட்டர் ரைட்டர் - கடிதம் எழுதுவது எப்படி? என்பது போன்ற மாடல் லெட்டர்கள் அடங்கிய நூல்கள் வருவதைப் பார்க்கிறோம். அது போல் அரசாங்க ரீதியான கடிதங்கள் என்ன என்ன மாதிரியாக எழுத வேண்டும் என்று மாடல் ராஜாங்க கடித மாதிரிகள் அடங்கிய ந்நூல் இதுவாகும். 8ஆம் நூற் தொடங்கி 15ஆம் நூற் வரையிலான கால கட்டத்திய மாதிரிக் கடிதத் தொகுப்பு இந்த நூல்.

பவிஷ்யத்தகஹா அல்லது பஞ்சமீகஹா என்பது ஒரு காதல் கதை. அபப்ரம்சம் என்னும் மொழியில் எழுதப்பட்டது. காலம் 12 ஆம் நூற்

ஸமராங்கண - இது நகரக் கட்டிடக் கலை, ஊர் அமைப்புக் கலை பற்றிய நூல். எழுதியவர் தரா என்பதன் ராஜாவாகிய போஜன். காலம் 11 ஆம் நூற்.

ஸாதநமாலா - பெரிய நூல். இரு தொகுதிகளாக வந்துள்ளது. பௌத்த தந்த்ர ரீதியான சடங்கு சாத்திர நூல். 312 சிறு நூல்கள் உள்ளடங்கியது. எழுதியவர்கள் பெரும் பௌத்தமத வல்லுநர்கள். காலம் 1165 கிபி 

மானஸோல்லாஸ அல்லது அபிலஷிதார்த்தசிந்தாமணி - ராஜ க்ருஹ கார்யங்கள், ராஜ சபையின் நடவடிகைகள் எல்லாம் குறித்த நூறு தலைப்புகள் அடங்கிய என்சைக்ளோபேடியா போன்ற நூல். எழுதியவர் சோமேஸ்வரதேவர். சாளுக்கிய மன்னர். காலம் 12ஆம் நூற்.

தத்வஸங்க்ரஹ - எட்டாம் நூற். நாலந்தா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சாந்தரக்ஷிதர் எழுதிய பௌத்த தத்துவ நூல். அதற்கு அவருடைய மாணாக்கரும் நாலந்தா பல்கலைக்கழக பேராசிரியருமான கமலசீலர் என்பவர் எழுதிய பஞ்ஜிகா என்னும் உரையும் சேர்ந்தது.

அபப்ரம்சகாவ்யத்ரயீ - சர்சரீ, உபதேசரஸாயன, காலஸ்வரூபகுளக என்னும் மூன்று நூல்கள் அடங்கியது. ஜினதத்தஸூரி என்பார் 12ஆம் நூற் இல் எழுதியது. வியாக்கியானங்களும் அடங்கியது.

அத்வயவஜ்ரஸங்க்ரஹ - இருபது சிறு நூல்கள், அத்வயவஜ்ரர் என்னும் பௌத்த அறிஞரின் தத்துவத்தைப் போதிப்பவை அடங்கியது. காலம் 11 ஆம் நூற். 

வரலாற்றுப் புத்தகங்களைப் படிப்பதும் அதில் ஒரு வரலாற்றாசிரியர் சொல்லும் விவரணைகளைப் புரிந்து கொள்வதும் ஒரு வகை. ஆனால் இது போன்ற வரலாற்றுத் தரவுகள், விவரங்கள் போன்றவற்றைப் படிக்கும் போது யாரும் நமக்கு வரலாறு இப்படி நடந்தது என்று எடுத்துச் சொல்வதில்லை. நாமேதான் நம் முன் இருக்கும் தகவல்களைப் பற்றி யோசித்து இது இப்படி என்றால் அன்று எப்படி இருந்திருக்கும் என்றபடி வரலாற்றை சொந்த யூகத்தில் செய்ய வேண்டும். இந்த மாதிரியான பயிற்சி முறையெல்லாம் வரலாறு என்பதை ஓரளவு நாமே அனுமானித்துப் புரிந்து கொள்ளும் திறனை வளர்க்கும். உதாரணத்திற்கு, மானஸோல்லாஸ என்னும் நூலை ஏன் சாளுக்கிய மன்னர் எழுதியிருக்க வேண்டும்? ராஜ கிருஹங்களில் நடைமுறைகள், ராஜ சபைகள் குறித்த நடைமுறைகளை ஏன் நூலாக வடிக்க வேண்டும்? அப்பொழுது ஒரு மன்னருக்கு என்னதான் கிரீடம் வைத்துக் கொண்டு சினிமா சிவாஜி கணேசன் மாதிரி வசனம் பேசுவார் என்று நாம் கற்பனை செய்தாலும் அவரும் சாதாரண ஒரு வீட்டை நடத்துபவருக்கு உள்ள கஷ்டம், முறையாக அன்றாட நடவடிக்கைகள் அந்த மாபெரும் வீட்டில் நடக்க வேண்டிய நிர்பந்தங்கள் எவ்வளவு சிரமம் இருந்திருக்கும்.! அதன் விளைவுதானே அடுத்து அடுத்து வேலையில் சேர்வோருக்கு வசதியாக, தனக்கும் சௌகரியமாக இப்படி ஒரு நூல். அப்படி என்றால் அந்தக் காலத்தில் ராஜா வீட்டில் வேலை என்றால் முதலில் இந்த மாதிரி நூலைக் கற்க வேண்டும், அதில் பரிட்சை கொடுக்க வேண்டும், அதில் பாஸாக வேண்டும் என்றெல்லாம் தெரிய வருகிறதல்லவா? இந்த விஷயமெல்லாம் பொதுவாக சரித்திர நூல்கள் தருவதில்லை. குளம் வெட்டினார், மரத்தை நட்டார், சாலைகள் போட்டார், போரெடுத்தார் இந்த சமாசாரம்தான். ஆனால் ஒரு பட்டியலை நாம் கொஞ்சம் கவனம் செலுத்திப் படித்தால் எத்தனை உள் சரித்திரம் புலனாகிறது! 

***

No comments:

Post a Comment