Saturday, October 23, 2021

நினைவின் நிரல்கள்

நான் நான்காவது வகுப்பு எலிமன்ட்ரி ஸ்கூல் படிக்கும் போது முன்னாள் எம்பி ஸ்ரீ வி சுப்பிரமணியம் அவர்களிடம், பாரதியைப் பற்றிய பேச்சிற்காக பாரதியார் கவிதைகள் நூல் பரிசு வாங்கினேன். இந்தத் தொடக்கத்தால் எல்லாம் ... நாமக்கல்லில் இலக்கிய மன்றம் ஆண்டு தோறும் விழா நடத்துவார்கள். அதில் 1971களில் பாரதி, திருவள்ளுவர் பற்றி வெவ்வேறு நாட்களில் பேச்சு. திருவள்ளுவர் பற்றிய பேச்சிற்கு அப்போது குமரி அனந்தன் தலைமை. திருக்குறள் பரிமேலழகர் உரையுடன், அவர் பரிசளித்தார். 73ல் அந்த மன்ற விழா மலரில் நான் எழுதிய கவிதை வந்தது. பாரதி பற்றிய பேச்சிற்கு திருலோக சீதாராம் தலைமை. சத்தியசீலன்,புத்தனாம்பட்டி ராஜகோபாலன், காசிராஜன் ஆகியோருடன் மாஸ்டர் மோகனரங்கன் பேச்சு. என்ன நாட்கள் அவை!! 

ஆனால் என் நூல், படிப்பு சம்பந்தமான வாழ்க்கையில் மறக்க முடியாத சிலர் உண்டு. தந்தை சொல்லவே வேண்டாம். அவரைத் தவிர எனக்கு நூல்கள் கொடுத்து உதவியவர் என்ற வரிசையில் என் சின்ன பாட்டி. நாமக்கல். வைகுண்ட ஏகாதசி வந்து விட்டால் அவர் வருவார். எப்படியோ வாங்க வேண்டும் என்று ஏங்கிய புத்தகங்கள் வாங்கிவிடுவேன். இல்லை. விடுவோம். ஆம். எட்டாம் கிலாஸிற்கு பின் திலீப் உம் சேர்ந்து கொண்டான். அவன் வீட்டில் தாத்தா. என் வீட்டில் சின்ன பாட்டி. இருவருக்கும் நாங்கள் வைத்த பெயர் கற்பகமரம். (காமதேனுவோ) . நடையாய் நடந்து மலைக்கோட்டையில் இருந்த தபோவனம் புக்ஸ்டாலில் போய் விவேகானந்த இலக்கியம். 

பிறகு சம்பத் வாத்யார். பாய்ஸ் ஹைஸ்கூல் நூலகத்துப் பெரும்பாலான நூல்களை அப்பொழுதே படித்தவன் என்றால் அது நான். அதற்குக் காரணம் சம்பத் வாத்யார். சீனிவாசன் முதலில் மறுத்துப் பார்த்தார். பிறகு சம்பத் வாத்யாரிடம் போய் சொன்னதும் உடனே வந்து டோஸ் மேல டோஸ். பாவம். 'ஏன்..எங்கிட்டயே கேட்ருக்கக் கூடாதா? அவரிடம் ஏன் சொன்னே? ' என்று சீனிவாசன் சொன்னதும் எனக்கே அசிங்கமாகிவிட்டது. என்ன செய்வது.. முதலில் கேட்டால் விரட்டினார். சில நூல்கள் எடுத்தால் ' ஐயய்யோ.. இதெல்லாம் அட்வான்ஸ்டு. ஆசிரியர்களுக்குத்தான்.' என்பார். அடம் பிடித்ததும் சம்பத் சாரிடம் போய் சொன்னார். 'இந்த புத்தகங்கள் எல்லாம் கேட்கிறான். கொடுக்கலாமா?' சம்பத் சாரின் கிரேட்னஸ் -- ' அவன் என்ன கேட்கிறானோ எத்தனை கேட்கிறானோ கொடுத்து விடு. நான் சொல்லிக்கிறேன்.' அது மாதிரி யார் இருப்பா? 

அடுத்து எனக்கு புத்தகம் உதவி பெருநன்மை செய்தவர் என்றால்... ஏன் எனில் அப்போது எல்லாம் நினைத்த புத்தகத்தை வாங்க முடியாது. ரொம்ப யோசிக்க வேண்டும். நிதி நிலைமை அப்படி. கல்லூரியிலும் எழுதிக் கொடுத்து ஒன்றோ இரண்டோதான் தருவார்கள். அதிலும் பல கெடுபிடிகள். அப்படி இருக்கும் போது தாமாக எனக்கு முன்வந்து நூல் தந்து உதவியவர் திலீப்புடைய தந்தையார். அடுத்தது பேராசிரியர் திரு சி எஸ் கமலபதி. அவருடைய வீடு நூலகமாகவே காட்சி அளிக்கும். அதிலும் பல நூல்கள் நான் பார்த்தவை. அவர் வெளிநாட்டில் இருந்து வரவழைத்துக்கொண்டே இருப்பார். 

வயதுக்கு மீறிய படிப்பு, பல்துறை நூல்களையும் படிப்பது என்பது நமது கல்வி நடைமுறையில் தேர்வு என்று பார்க்கும் பொழுது பெரிதும் பாதிக்கக் கூடியது. பொது நூல்களில் ஈர்ப்பு என்பது பரிட்சையில் வேலையைத் காட்டிவிடும். அத்தகைய விலையை நான் தரவேண்டியிருந்தது. ஆனாலும் புத்தக உலகம் எனக்கு எப்போதும் ஒரு தனி ஈர்ப்பான விஷயம்தான். 

இலட்சியார்த்தமான கல்வி படிப்பு ஒரு வகை. பரிட்சை, மதிப்பெண், மேல்டிகிரி, வேலை, சம்பாத்யம், சவுகரியம் இந்த மாதிரி படிப்பு ஒரு வகை. இரண்டும் ஒன்று சேருவதில்லை. சிறுவயதில் லட்சியங்கள் சார்ந்த படிப்பு என்பது உற்சாகம் ஆக இருக்கலாம். ஆனால் நடைமுறை வாழ்க்கை என்பது யாரையும் அடிக்கும். நடைமுறைக் கவலையில்லாத புண்யாத்மாக்கள் பெரும்பாலும் படிப்பு என்ற கவலையிலேயே சிக்குவதில்லை. வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் நடைமுறைத் தேர்வு வழியின் தெளிவுகளை நன்கு உணர்ந்து முன்னேறியவர்கள் இலட்சியார்த்தமான படிப்பில் மூழ்கிப் போனவர்களைப் பார்த்து வாழ்க்கையில் நிரூபிக்கும் வகையில் அடைந்த சாதனைகளைக் காட்டி ஒப்பிட்டால் இலட்சியார்த்தமான படிப்புகளில் முழுகிப் போனவர்கள் பேசாமல் இருப்பது தான் செய்ய முடியும். நடைமுறை அளவுகோல்களில் தோல்வியான வாழ்க்கையாகத்தான் இலட்சியார்த்தக் கல்வியாளர்களின் நிலைமை கணிக்கப் படுகிறது. இது சரியா தவறா என்பதைவிட இதுதான் யதார்த்தம் என்பது அன்றாட வாழ்க்கை. 


கோபுரம் கட்டின ஜீயர் என்றால் பலரும் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆம். முக்கூர் அழகியசிங்கர் என்று சொல்வார்கள். அவரோடு ஒரு சின்ன சண்டை எனக்கு ஏற்பட்டது. சண்டை என்றால் அவர் திட்ட நான் வாங்கிக் கட்டிக் கொண்டது. கல்லூரி நாட்களில். மணிவண்டி அவ்வப்பொழுது தெருவில் போகும் வரும். அப்பொழுதெல்லாம் சொல்வார்கள் 'ஜீயர் கோபுரத்துக்கு ஏள்றார். கோபுரத்திலிருந்து வருகிறார்' என்பது சகஜமாகக் கேட்கும் பேச்சு அப்போது. வடக்கு அடையவளைந்தானில் திரு ஸ்ரீநிவாசராகவன் என்று ஒருவர் இருந்தார். அவர் அடிக்கடி ஜீயர் பற்றியும், குறிப்பாக கோபுரத்தின் மீது ஜீயர் மேற்பார்வை இடுவது பற்றியும் சொல்லிக் கொண்டிருப்பார். உழைக்கும் மக்களிடம் அவர் காட்டும் அன்பும், தாராளமும் அவர் சொல்வதில் விளங்கும். அது எனக்கு மிகவும் பிடித்துப் போன காரணத்தால் ஜீயர், அவர் கோபுரம் கட்டுவது, போன்றவற்றை வைத்து கற்பனை, பக்தி எல்லாம் கலந்து ஒரு நீள் கவிதை எழுதினேன். அதை அவருடைய திருநக்ஷத்திரத்தின் அன்று சாயந்திரம் கிளம்பிப் போய் (6மணி இருக்கும்) அவரை சேவிக்க வேண்டும் என்று காரியஸ்தர் வெளித் திண்ணையில் அமர்ந்திருந்தார், தசாவதார சந்நிதியில், கேட்டேன். ' உள்ளதான் இருக்கார். யாரும் இல்லை. போங்கோ' என்றார். உள்நுழைந்து ஸேவித்துவிட்டு, 'அழகியசிங்கர் மீது கவிதை ஒன்று செய்திருக்கிறேன். அழகியசிங்கர் கேட்க வேண்டும்' என்றேன். 'அப்படியா! ஏண்டா! காலையில் வந்திருக்கக் கூடாதோ? எல்லாரும் இருந்தாளே! அத்தனைபேரும் கேட்டிருப்பார்களே! கொடு. அப்பறமா படிச்சுப் பார்க்கிறேன். ' என்று சொல்லிவிட்டு, காரியஸ்தரைக் கூப்பிட்டு சம்பாவனை எடுத்து வரச் சொன்னார். அவரும் பணம் சகிதமாகக் கொண்டு வந்தார். 'இந்தா!' என்றதும் நான், ' இல்லை. அழகியசிங்கர் கேட்க வேண்டும். நான் வாசிக்க வேண்டும். அதுதான் விருப்பம்.' என்றேன். 'சரி. காலையில் வந்திருந்தால் எல்லாரும் இருந்தா. அத்தனைபேரும் கேட்டிருப்போம். அப்பறமா படிக்கிறேன்.' என்றார். மீண்டும் 'இந்தா' என்று சொல்லவும் நான், ' இல்லை. வாங்க மனசு ஒப்பவில்லை. அங்க கேட்கப் படிக்கவேண்டும் என்பதுதான் ஆசை.' என்று சொன்னேன். உடனே அவர், 'அப்படியா! எனக்கும் இதைப் படிக்க மனசு ஒப்பவில்லை. இந்தா' என்று விட்டெறிந்தார் நான் கொடுத்த காகிதங்களை. அனைத்தையும் பொறுக்கி எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். திரும்பும் பொழுது அவர் சொல்லிக் கொண்டிருந்தது 'போய் நீயே படிச்சுக்கோ. உன் சுவத்துல போய் ஒட்டி வைச்சுக்கோ. பெரிய ப்ராக்ஞனாப் போயிட்டியோ? மனசு ஒப்பலையாம்..'. வெளியே வந்த காரியஸ்தர் 'ஜீயர் ஆசீர்வாதமாக தருவது ப்ரஸாதம். மறுக்கக் கூடாது.' என்றார். நான் அவரிடம், 'ஸ்வாமி! நானோ ப்ரம்மச்சாரி. அவரோ சந்நியாசி. இரண்டு பேருக்கும் நடுவுல பணம் எங்கேந்து வந்துது? என் விருப்பம் அவருடன் பழகணும் என்ற சத்சங்கம்.' என்று காரியஸ்தரிடம் சொல்லி விட்டு வந்து விட்டேன். அவர் என்ன செய்வார் பாவம். பிழைக்கச் தெரியாத பிள்ளையாக இருக்கிறதே என்று பரிதாபப் பட்டிருப்பார். 

வரும் வழியில் வடக்குப் சித்திரை வீதி மணி சைக்கிள் கடையை ஒட்டி ஓட்டலுக்கு அடுத்த பால்கனிவீடு. அங்கு எழுத்தாளர் ஏ எஸ் ராகவன் குடியிருந்தார். அவரிடம் சென்று இப்படி ஆகி விட்டது என்றும், ஜீயரிடம் படிக்க இருந்த கவிதையை நீங்கள் கேளுங்கள் என்று அவரிடம் படித்துக் காண்பித்தேன். கேட்டுவிட்டு 'நீ ஒரு கொடாக்கண்டன் என்றால் அவர் ஒரு விடாக்கண்டர். பார்! ஓரிரு நாட்களிலேயே அவர் ஆள் அனுப்பிவிடுவார். பார்க்க, பேச்சு அப்படி இருந்தாலும் குழந்தை மனம். அவருக்குத் தாங்காது. பாரேன்' என்றார். எனக்கு நம்பிக்கை இல்லை. அவ்வளவு பெரிய மடாதிபதி. நான் யாரோ சின்ன பையன். அதெல்லாம் ஒன்றும் நடக்காது என்று நினைத்தேன். 

ஆம் அப்படித்தான் நடந்தது. சொல்லி வைத்தால் போல். இரண்டு நாள் ஆகியிருக்கும். மடத்து சிஷ்யர்கள் இரண்டு பேர் தேடி வந்தார்கள். எனக்கு முதலில் ஸ்ட்ரைக் ஆகவில்லை. யாரோ அட்ரஸ் தேடி வந்திருப்பதாக நினைத்தேன். 'நீங்கள்தான் இரண்டு நாள் முன்னாடி ஜீயரைப் பார்க்க வந்திருந்தீர்களா?' என்றதும் நான் 'ஓ மேட்டர் முடியலையா?' என்று தோன்றியது. 'அவர் உண்மையிலேயே மிகவும் அன்பானவர். ஏதோ சூழ்நிலை...' என்று அவர்கள் தொடங்கியதுமே சொன்னேன். 'அது பரவாயில்லை. அவர் பெரியவர். திட்டினாலும் ஆசிகள் தான். ஆனால் நான் எதிர்பார்த்தது நல்ல சத்சங்கம் கிட்டும் என்று. அவர் ஏதோ பணத்தை எடுத்துக் கொடுத்ததும்... அவர்கள் மறித்துக் கூறினார்கள். 'இல்லை. சம்பாவனை ஆசீர்வாதமாக அவர் யாருக்கும் தருவது இதுபோல் கத்ய பத்யங்கள் செய்வோருக்கு. ' 'சரி. பரவாயில்லை. இப்போது நீங்க வந்த காரணம்?' 'ஜீயர்தான் சொல்லிக் கொண்டிருந்தார். யாரோ சின்ன பையன் வந்தாண்டா. ஆசையா கவிதை எழுதிண்டு வந்தான். சம்பாவனை தந்தா வாங்க மாட்டேனுட்டான். மனசு ஒப்பலைங்கறான். படிக்கணும். அழகியசிங்கர் கேட்கணும் என்கிறான். அப்பறம் படிச்சுப் பார்க்கிறேன். இந்தா கஷ்டப்பட்டு எழுதியிருக்க. வைச்சுக்கோ என்றால் அப்பவும் மனசு ஒப்பலன்னா .. அப்படியா உன் கவிதையையும் படிக்க எனக்கு மனசு ஒப்பலைன்னு கவிதையைக் கொடுத்தா கோவிச்சுண்டுப் போயிட்டான். நான் என்ன தப்பா சொல்லிட்டேன். ஒரு கிருதின்னு பண்ணிட்டு வந்தா சம்பாவனை பண்றதில்லையா..' என்று சொல்லி ரொம்ப வருத்தப் பட்டார். அப்பறம் நாங்க விசாரிச்சுப் பார்த்ததுல நீங்கன்னு தெரியவந்தது. கவிதையை எடுத்துண்டு நீங்களும் வாங்கோ.' என்றார்கள். நான், 'இந்தாருங்கள் கவிதையின் நகல். அதற்கு முன்னுரை இது. இப்படிப் படிக்க வேண்டும். இதைப் படித்த பின்னர் என்னைக் கூப்பிட்டால் வருகிறேன்.' என்று கொடுத்து அனுப்பி விட்டேன். தலைப்பு 'அரங்கனின் துயரம்' என்று வைத்திருந்தேன். அதைப் பார்த்துச் சொன்னாராம். 'ஏண்டா துயரம் னு வைச்சிருக்கான். அரங்கனின் சந்தோஷம் என்று வைக்கக் கூடாதோ.. என்றாராம். ஆனால் கூப்பிடவில்லை. நானும் பிறகு போய் பார்க்கவும் இல்லை. முன்னுரையில் ஒரு வரி எழுதியிருந்தேன். 'கோபுரம் கட்டி முடித்தத் திருநாளில் கோபுரத்தையும் ஜீயரையும் ஒரு சேரக் காணும் புண்ணிய மனிதர்கள் நிச்சயம் கோபுரத்தின் புற ஆக்ருதியைவிட ஜீயரின் மன ஆக்ருதி மிக்கப் பெரிதென்றே உணர்வர். 'செயற்கரிய செய்வர் பெரியர்' என்பது தமிழ்வேதம் ஆகலின்.' என்று. அந்த வரி மிகவும் பிடித்துப் போயிற்று ஜீயருக்கு என்றார்கள் பின்னர் நான் அந்த இருவரை சந்தித்தபோது. இப்படியும் ஒரு காலம்! அந்த நாள்! 


வாழ்க்கையில் சில கணங்கள் மறக்க முடியாதவை. 1984 அல்லது 85 இருக்கும். திநகரில் ரூம் வாசம். அப்பொழுது அரிஸ்டாடிலின் முழுநூல் தொகுதி வாங்கிவிட வேண்டும் என்று பெரும் வேட்கை. எங்கும் இல்லை. அமேசான், கணினி எல்லாம் அப்பொழுது கிடையாது. பழைய யுகம். நூலகங்களும், நடைபாதை புக் ஷாப்புகளும் ராஜரீகமாகக் கோலோச்சிய காலம். அப்பொழுது மவுண்ட் ரோட்டில் சாந்தி தியேட்டர் நுழைவில் ஒரு சாலையோர புக் ஷாப் இருக்கும். அங்கு எதேச்சையாக நின்று நூல்களைப் பார்த்தால் 'என்ன வேண்டும்?' என்று கேட்கிறார் கடைக்காரர். வெறுப்பு. அதோடு சொன்னேன் 'அரிஸ்டாடில்' நூல் இருக்கிறதா? நான் எதிர்பார்த்தது அவரிடமிருந்து நக்கல், சிரிப்பு, நான் இருந்த மூடில் கொஞ்சம் சண்டை, பதிலுக்கு அவரிடமிருந்து மெட்ராஸ் பாஷையில் திட்டு. ஆனால்..... அதிசயம்... நீங்கள் வருவீங்கன்னுதான் இத்தினி நாள் இந்த புத்தகம் இங்க கீதுபோல... பார்த்தால் ரிச்சர்ட் மெக்கியான் தொகுப்பில் Basic Works of Aristotle. வாவ்வ்வ்வ்ஈஈஈ... ஆனாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் (விலையை எக்கச்சக்கமா ஏத்தி சொல்லிட்டா) கெத்தா 'என்ன ப்ரைஸ்?' நூறு. நூறா? 'இந்த புத்தகம் எங்கியுங் கெடயாது... விசாரிச்சுப் பாரு... அப்படியே கெடக்குதேன்னு இந்த வெல சொல்றேன்...' என்று திரும்பவும் வைக்கப் போன ஆளை மடக்கி நூறளித்து திரும்பியே பார்க்காம... எக்ஸ்ப்ரஸ் எஸ்டேட்ஸ் வரைக்கும் சோல்ஜர் வாக் போட்டு அங்கதான் பிரேக் போட்டு நின்னேன். பஸ் ஸ்டாண்டு கிராதில சாய்ந்து ஒரு ஓட்டு ஓட்டி அப்பறமா பக்கத்துல ஒரு ஆபீஸ்ல வேலை செய்த என் நண்பனிடம் குட் ந்யூஸ் ஷேரிங்... அவனையும் கூட்டிப் போய் கேக் பிஸ்கட்டோட ஸ்பெஷல் டீ. 
 

19 வருஷத்து முந்தைய நிகழ்வு. தசதினே ஸம்ஸ்க்ருதம் என்ற அமைப்பில் பத்து நாள் வகுப்பு நடத்தினார்கள். எங்களுக்கு மனோரமா என்ற டீச்சர் வகுப்பு எடுத்தார். கடைசி நாள் ஏதாவது கலைநிகழ்ச்சியாகப் பண்ண வேண்டும் என்று முடிவாகியது. நான் அதற்கு ஒரு தீம் செய்தேன். மானோ ஆக்டிங். திருவிளையாடல் படத்தில் தருமி காட்சியை வைத்து மாற்றி ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு நாடகம் ஸ்கிட்டாக எழுதினேன். அதாவது மன்னன் சந்தேகத்தைத் தீர்க்கும் பாடலை எழுதிக் கொண்டு தருமி உள்ளே நுழைவார். 'கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ...' என்னும் பாடலை 'சாகே சாகே சஞ்சரதிஸ்ம ஸுபக்ஷவாந் மா வதது தவ ப்ரியமதம்...' என்று மொழிபெயர்த்த நினைவு. முழு ஸ்கிட்டும் ஸம்ஸ்க்ருதத்தில் இருந்தாலும் ஆக்டிங்கோடு செய்ததால் மக்களுக்குப் புரிந்தது என்று சொன்னார்கள். அதில் மன்னன் தருமியைப் பார்த்துக் கேட்பான். இவ்வாறு நல்ல ஸம்ஸ்க்ருதம் எழுத எங்கு கற்றாய்? என்று. அதற்குத் தருமியின் பதில் 'மனோரமா உபாத்யாயாத் சிக்ஷிதம் மம பாஷாஞானம். தசதினே ஸம்ஸ்க்ருத போதாவஸரே லப்தம் மம வாணீ..' அதாவது தசதின ஸம்ஸ்க்ருத வகுப்பில் மனோரமா உபாத்யாயா அவர்களால் புகட்டப்பட்ட மொழியறிவால் நான் எழுதியது - என்று வரும். அதற்கு மன்னன் வியந்து ஆயிரம் பொற்காசுகளும் மனோரமா உபாத்யாயாவிற்கே என்று கொடுப்பதாக மாற்றி அமைத்தேன் டீச்சரை கௌரவிக்கும் விதத்தில். ஒரே க்ளாப்ஸ். மக்களிடம். அவ்வளவு என்ஜாய் பண்ணுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதற்கு சகடபுரம் சங்கராச்சாரியார் வந்திருந்ததாக நினைவு. அனைவரும் அந்த ட்விஸ்டை மிகவும் பாராட்டினார்கள். மனோரமா டீச்சர் நான் மேடையிலிருந்து இறங்கி வரும் போது கூறிய வார்த்தை இன்றும் காதில் ஒலிக்கிறது. 'பவாந் காளிதாஸோ வா?' - ' தாங்கள் காளிதாசரா?' . என்ன நாட்கள்! என்ன நினைவுகள்!
Srirangam Mohanarangan
***

No comments:

Post a Comment