Friday, October 22, 2021

மனித வளமும் மன வளமும்

 மனிதவளம் என்பது பெரும்பாலும் மனவளம் சம்பந்தப்பட்டது. மனவளம் என்பது மனத்தை நன்கு திறமையாக அதன் இயல் அறிந்து பயன்படுத்தக் கற்பதின் அடிப்படையில் ஏற்படுவது. மனத்தின் இயல் என்பதை நாம் கற்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைவதுதான் நியாயம் அல்லது அளவையியல் அல்லது ஏரணம் என்று சொல்லப்படும் துறை. ஆங்கிலத்தில் லாஜிக். இன்றைய பாடத்திட்டத்தில் இந்த முக்கியமான அடிப்படைக் கல்வி இருக்கிறதா தெரியவில்லை. ஆனால் முன்னர் ஆரம்பக் கல்வி வகுப்புகளிலேயே இருந்திருக்கிறது. முன்னர் என்றால் எப்பொழுது? 1841ல் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இராமகிருஷ்ண சாஸ்திரியார் ஒரு சின்ன புத்தகம் 30 பக்கத்திற்கு எழுதியிருக்கிறார். தர்க்கசங்கிரகம். இந்து வித்தியாசபைக்கு உதவியாகிய புரசபாக்கம் பாலபோதக வித்தியாசாலைச் சபையாரால் வித்தியாவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. அதாவது ஆரம்பக் கல்வி வகுப்புகளுக்கு எடுப்பதற்காக எழுதப்பட்ட 30 பக்க நூல். நியாயத்தின், தருக்கத்தின் அடிப்படைகளை நிரல்படக் கொடுத்து எளிமையான விளக்கத்துடன் வந்த நூல். இதை மாணவர்கள் படித்திருக்கிறார்கள். 1841ல் நிலைமை.

1851 ஆம் வண்டு வருவோம். அதாவது பத்து ஆண்டுகள் கழித்து நாம் பார்க்கப் போகும் காட்சி வாராணஸி, பெங்கால் முதலிய இடங்களில் ஐரோப்பிய விஞ்ஞானம், அதன் அடிப்படையாக ஐரோப்பிய லாஜிக், அளவையியல் குறித்து அறிமுகம் செய்ய வேண்டும் ஹிந்து மாணவர்களுக்கு என்று பேலண்டைன் என்னும் கல்வியாளர் எடுத்த முயற்சி. அதற்கு முன்னால் அத்தகைய முயற்சி எடுத்தவர்கள் எல்லாம் ஒரு தவறான அணுகுமுறை கொண்டவர்களாய் இருந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் பேலண்டைன். இங்கு ஏற்கனவே இருந்த கல்வி முறைகளில் அளவையியல் குறித்த பயிற்சியும், கருத்துகளும், அதற்கான சொற்களும் ஏதும் இல்லாதது போன்ற பாவனையில், எல்லாம் ஐரோப்பிய இறக்குமதி போன்ற பாவனையில் கல்வியாளர்கள் முயன்றது எல்லாம் தோல்வி; நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அதை மதிப்புடனே கருதவில்லை, அதில் ஒரு கௌரவ புத்தியும் அவர்களுக்குத் தோன்றவில்லை. மேலும் அதைக் கண்டு அயிர்த்து ஒதுக்கிவிட்டார்கள் என்று அனுபவங்களைப் பதிகிறார் பேலண்டைன் 1851ல். பிறகு இவர் முன்னெடுத்து சிஸ்டத்தை மாற்றி ஏற்கனவே இருந்த நியாயம் தர்க்கம் முதலிய துறைகளின் துல்லியமான முடிவுகள் அதுவரை எந்த அளவு இருக்கின்றன, இந்தச் சூழலில் ஐரோப்பிய அளவையியல் என்ன பங்கு அளிக்கக் கூடும் என்று வெற்று உசத்தி பாவனைகளையெல்லாம் விட்டுவிட்டு யதார்த்தமாக ஆங்கிலம் சம்ஸ்க்ருதம் இரண்டிலும் வரைவுகள் எழுதி அளித்தபின்னர் நாட்டு மாணவர்களின் ஈடுபாடும், ஒப்புநோக்கி அலசுவதும் அதிகப்பட்டது என்கிறார் பேலண்டைன்.
1841ல் வந்த ஆரம்பப்பள்ளி மாணவர்களின் நூலும், 1851 ஆங்கில ஆட்சியின் கல்வியாளர்களின் அனுபவங்களின் பதிவும் ஒரு சேரக் காணும் போது உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா? ஆங்.. மனிதவளம், மனவளம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம் அல்லவா.. சரிதான்.

நியாயம், தர்க்கம், அளவையியல் அதன் காரணமாக உண்டாகும் மனப்பயிற்சி என்றெல்லாம் சொன்னாலும் ஒரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தப் பாடத் திட்டமெல்லாம் யாரோ வேண்டுமென்றே அகற்றி விட்டார்கள் என்று நினைப்பதை விடச் சமுதாயம் எதை உள்ளூர விரும்புகிறதோ அதுதான் நாளாவட்டத்தில் அமைந்து விடுகிறது என்பதும் ஒரு காரணம். ஒரு காட்சியை நினைத்துப் பாருங்கள். தருக்கசங்கிரகம் நன்கு வாசித்த மாணவர் வீட்டில் பெரியவர்கள் ஏதேனும் சொல்லப் போய், ‘மன்னிக்கவும். தாங்கள் சொல்வதில் ஹேது ஆபாஸம் இருக்கிறது. தர்க்க ரீதியாக ஏற்க இயலாது’ என்று பதில் சொல்ல நேர்ந்தால் எப்படி இருக்கும்? யங் ஷெல்டன் சீரீஸ் அப்பொழுதே ஓடத் தொடங்கியிருக்கும். எனவே இளம் தலைமுறை மனத்தைத் திறம்படப் பயன்படுத்தக் கற்பதற்கும் முழு சமுதாயமும் ஏற்பு நிலையில் இருக்கிறதா என்பதும் ஒரு கேள்வி. இல்லையேல் பெரியவர்கள் தமக்குள் நொந்துகொண்டு ‘வர வர எதற்கெடுத்தாலும், ‘நீங்கள் சொல்வது ஒரு பிரதிக்ஞை மாத்திரமே. அவயவத்தின் ஐந்து பகுதிகளும் பொருந்திவரத் தங்களால் அதை தர்க்கித்துக் காட்ட முடியவில்லை அதனால் எப்படி அதைச் சரி என்று ஏற்பது?’ என்று கேட்கிறான் சார் என் பையன். வீடே வாத மண்டபம் ஆகிவிடும் போல் இருக்கு!’ என்று கவலையாகி அதைவிட ஏதேனும் நல்ல கதைகளை போதித்து அதன் மூலமாக நல்ல வழக்கங்களை உணர்ச்சி ரீதியாக மனத்தில் ஏற்றுவதே சிறந்தது என்ற முடிவுக்கும் பெரியவர்கள் வரக் கூடுமே! இல்லையென்று உங்களால் சொல்ல முடியுமா? எனவே மனித வளத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கும் சமுதாயம் தானும் மாறியே ஆக வேண்டும் என்பதையும் ஓர்மை கொள்ள வேண்டும்.

இளம் தலைமுறைக்குக் கதைகள் சொல்வதே சிறந்தது என்று முடிவுக்கு வரும் போதுதான் ஒரு சிக்கலும் கூடவே வந்து விடுகிறது. கதைகள் தாமே! அதை யார் வேண்டுமானாலும் எழுதலாம். அப்பா சின்ன பசங்களுக்கு ஆன கதைகளாம். ஸ்வாரஸியமா இருக்கும்படிப் பார்த்துக்க என்ன..! என்று யாரிடமாவது கொடுத்து விட்டால் தொல்லை ஓய்ந்தது. என்ன பெரியவங்க சொல் பேச்சைக் கேட்கணும். கீழ்ப்படிதல் முக்கியம். அது மட்டும் கண்டிப்பாக வலியுறுத்தப் படணும். அவ்வளவுதானே? பின்னர் என்ன இளம் தலைமுறைகள் தலையில் கதைகதையாம் காரணம் இல்லையாம் என்று சிரிப்புக்கு, நல்ல பிள்ளையாகக் கீழ்ப்படிதல் மிக்க சிறாராக ஆவதற்கு... ஆனாஅல் சிந்திப்பதற்கு... ? அதற்கு மேல் வகுப்புகளில் போய்ப் பார்த்துக் கொள்ளட்டும். கதைகள், கதைகள் மனித மனத்தை ஆட்சி செய்யத் தொடங்கி விடுகின்றன. ஏதோ சில வித்வான்களுக்கு மட்டும் என்று அளவையியல் சுருங்கிப் போய் விடுகிறது. பொதுமக்கள் குழுமும் கதைப் பிரசங்கியார் தொடர்கதையா... கதையின் உணர்ச்சி உலகம் தொடர ஆரம்பித்து விடுகிறது.
நீ என்ன? கதைகளே கூடாது என்கிறாயா? சின்ன வயது முதல் எல்லாரும் லாஜிக் பேசும் யங் ஷெல்டன்களாக ஆக வேண்டும் என்கிறாயா? என்று கோபிக்காதீர்கள். லாஜிக்கே வாழ்க்கை முழுதும் இல்லை என்பதை நன்கு அறிவேன். ஆனால் கதைகளை, அதுவும் இளம் தலைமுறைக்குச் சொல்ல வேண்டிய கதைகளை யார் எழுத வேண்டும் தெரியுமா? சமுதாயத்தின் தலை சிறந்த, பொறுப்பான சிந்தனையாளர்கள் ஒன்று கூடி எழுத வேண்டும். மிகவும் கஷ்டமான வேலையே சிறுவர்களுக்குக் கதை எழுதுவதுதான். ஏனெனில் படிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற கேவியட்டு டிஸ்கியெல்லாம் சிறுவர்கள் விஷயத்தில் உதவாது. படிப்பவர்களுக்காகக் கதையெழுதுபவர்கள்தாம் ஜாக்கிரதையாக அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் சிறுவர்களின் உணர்ச்சிகளுக்குக் கொடுக்கப்படும் விஷயங்கள் அவர்கள் வயதான பின்னர், சிந்தனை எழுந்த பின்னர், லாஜிக் வேலை செய்ய ஆரம்பித்த பின்னர் தங்களின் இளமைக்காலக் கதைப் பொழுதுகளை மறுதலிக்கக் கூடியதாக இருக்கக் கூடாது கொடுக்கப் படும் கதைகள். பின்னால் வளரப் போகும் சிந்தனைப் பயிற்சிக்கு முரணாகாமல் கூடுதல் பரிமாணங்களாய் அமையும்படிக் கதைகளைத் தர வேண்டியது பெரியவர்களின் பங்கு.
மூளையின் இடப்பக்கம் மட்டும் வளர்ந்தால் போதுமா? உணர்ச்சிகள் கலைகள் கதைகளுக்கான வலப்பக்கம் வளர வேண்டாமா என்று உயிரியல் ரீதியாகப் பேசுவதால் பயனில்லை. வலப்பக்கத்தின் தீனிகளாய் ஊட்டப்படுபவை இடப்பக்கத்தின் செயல்களுக்கும் விதிகளுக்கும் மறுப்பதாகவும், வெறுப்பதாகவும் அமையாமல் இருக்க வேண்டியது யார் பொறுப்பு? எனவே மனவளத்தை வளர்த்தெடுத்தல் என்பதில் முழு சமுதாயமும், குறிப்பாக அறிவு, பண்பாடுகளில் அக்கறை மிக்க வளர்ந்த தலைமுறைகள் மிகக் கவனத்துடன் கையாள வேண்டிய அவசியம் இருக்கிறது.

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment