ஒரு வள்ளலிடம் மோசிகீரனார் பரிசில் கேட்கச் செல்கிறார். கொண்கானங்கிழான் என்னும் வள்ளல். அவர் தனது சிக்கலான அவத்தையை வெளிப்படுத்தும் கௌரவம் நம்மை உலுக்குகிறது. இந்த மிக நுட்பமான வாழ்வியல் கணத்தை அப்படியே காட்சிப் படுத்தியிருக்கிறது புறநானூறு.
மோசிகீரனார் கூறுகிறார்.
‘கடற்கரையிலேயேதான் வாசம் ஒருவருக்கு. ஆனாலும் தாகம் என்றால் ஓடிப்போய் கடல்நீரைக் குடிக்க முடிவதில்லை. குடிப்பதற்கென்று சிறிய ஊற்றுநீர்க் குழி அமைத்து அதில் பெறும் நன்னீரைத்தான் குடிக்க முடிகிறது. நாம் வேண்டுவதன் பெருக்கம் மட்டும் ஓரிடத்தில் இருந்துவிட்டால் பயனாவதில்லை. பயன் கொள்ளத்தக்க வகையில் பக்குவம் உற்ற நிலையில் இருக்கும் சிறிய அளவும் பெரும் பயனாகிறது. அதுபோல் ஒருவர் அரசனுக்கு அருகிலேயே இருக்கிறார் என்றாலும் அவருக்கு உதவி என்றால் அங்கே பயன்கொள்ள முடிவதில்லை. உரிமையோடு, தம் மானத்திற்கு கேடில்லாதவாறு யாரிடம் ஏமாற்றமின்றிக் கேட்டுப் பெற முடியுமோ அந்த வள்ளல் எத்தனை தூரத்தில் இருந்தாலும் அங்குதான் நாடிப்போய்ப் பெற முடிகிறது. இதனையெல்லாம் நினைத்துத்தான் நின்பால் வந்தேன். ஆனால் ஒன்று. நீ அளிப்பாய் என்றாலும் சரி, இல்லையென்றாலும் சரி ஒன்று எளிது. ஒன்று அரிது என்னும் வேறுபாடு உறுதியாகத் தெரிகிறது. உன்னுடைய தன்மை, உயர்ந்த குணம், ஆண்மை முதலியவற்றையும், யாரும் கேட்காமலே வரையாது ஈயும் பெருவள்ளலாய்ப் பூத்துக் குலுங்கி, துகிலாய் விரிந்து இழியும் அருவியின் பேரழகு பொலிவு பொங்கும் இந்தக் கானம் இதன் அழகையும் பாடுதல் எனக்கு எளிது. எனக்குத் தேவை இருக்கிறது. ஈவாய் என இரத்தல் எனக்கு மிகவும் அரிது.’
”திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்
அரசர் உழையர் ஆகவும் புரைதபு
வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்
யானும் பெற்றது ஊதியம் பேறுயாது என்னேன்
உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே
ஈயென இரத்தலோ அரிதே நீயது
நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
எறிபடைக் கோடா ஆண்மை அறுவைத்
தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண்பல இழிதரும் அருவிநின்
கொண்பெருங் கானம் பாடலெனக் கெளிதே.”
(புறநானூறு)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்.
***
No comments:
Post a Comment