Friday, October 22, 2021

வேலை

வேலை - இந்தச் சொல்லுக்குக் கடல் என்று ஒரு பொருள். இன்னும் ஒரு பொருள், செயல், காரியம். நேரம் என்பதைக் குறிக்கும் சொல் வேலை அன்று. வேளை. நல்ல வேளை என்றால் நல்ல நேரம். நல்ல காலம். ஒரோவழி நல்ல வாய்ப்பு என்றும் சொல்லலாம். நல்ல வேளையாக என்னும் பொழுது பை குட் சான்ஸ் என்னும் பொருள் வருவதைக் கவனிக்கலாம். இந்த வேலை என்னும் சொல்லை வைத்துக்கொண்டு ஸ்ரீபிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஓர் அழகான செய்யுளைப் பாடியிருக்கிறார். அதில் வேலை என்றால் அலைகள் பொங்கும் கடல், செயல் என்னும் இரு பொருட்களையும் கையாண்டிருக்கிறார். என்ன பாட்டு அது? திருவரங்கக் கலம்பகத்தில் வரும் பாட்டு. 

வேலையுல கிற்பிறக்கும் வேலையொழிந் தோமில்லை
மாலையரங் கேசனைநா மாலையினுங் - காலையினு
முன்னிநைந் தோமில்லை யுடலெடுத்த வன்றுமுத
லென்னினைந் தோநெஞ்சே யிருந்து.

உலகு என்பதற்கு வேலை உலகு என்று அடைமொழியாக வேலை என்ற சொல்லையிட்டுக் கூறுகிறார். கடல் சூழ்ந்த உலகு என்று பொருள். இன்னும் சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் கடலைப் போன்று சதா வினையாகிய அலைகள் ஓயாமல் பொங்கும் பிறவிப் பெருங்கடலாகிய உலகம். அதுதானே சுழன்றுவரும் ஸம்ஸாரம் என்பதும்.

வினைக்கடலாகிய உலகில் பிறக்கும் செயலை நாம் ஒழிந்தோம் இல்லை. நிறுத்திக் கொள்ள வழி தேடவில்லை. நாமா செய்கிறோம்? வினையால் செயல் பிறப்பதும், செயலால் வினை சேர்வதும் ஒன்றை ஒன்று தொடரும் சுழற்சி. மாலை என்னும் நேரம் நமக்கு ஏதோ விதத்தில் வாழ்வின் கடைசிப் பகுதியை நினைவு படுத்துகிறது. நினைவுபடுத்த வேண்டும். பலருக்கு வேறு ஏதோ உலகம் ஆரம்பிக்கும் காலமாக ஆகிவிடுகிறது. ஆனால் உண்மையில் மாலை என்னும் காலம் மனிதர் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து தம் ஆன்மாவைக் குறித்து அக்கறை கொள்ள வேண்டிய காலம் ஆகும். காலை என்பதோ புதிய உலகம் தொடங்கும் முந்தைய கட்டத்தை நினைவு படுத்தக் கூடியதாக இருக்கிறது. அந்நேரத்திலும் மனிதர் ஆழ்ந்த சிந்தனையும் ஆன்ம அக்கறையும் கொள்ளத் தகுந்த காலம். இந்த இரண்டு காலக் கட்டத்திலும் அரங்கனை நினைந்து நைந்து மனம் உருகி வேண்டுதல் புரிவதே மனிதர் செய்யத் தகுந்த நல்ல காரியம். ஆனால் இந்த நல்ல காரியத்தைச் செய்ய பலருக்கு உள்ளம் செல்லாமல் மேலும் மேலும் வினைக்கடல் என்னும் உலகில் சுழலும் நாச காரியத்திலேயே ஆர்வம் செல்லுகிறது. அவர்களைச் சொன்னால் கேட்பார்களோ மாட்டார்களோ, ஸ்ரீபிள்ளைப்பெருமாள் ஐயங்கார் தமது நெஞ்சை முன்னிலையாக்கி அவர்களுக்குப் பதிலாகத் தம் நெஞ்சுக்கு உரைப்பது போன்று சொல்லுகின்றார்.

‘நெஞ்சே! உலகில், வினைக்கடல் அலையெறியும் பிறவியை ஒழிக்கும் வழிதேடினோமில்லை. மாலையும், காலையும் அரங்கனை உன்னி நைந்து உருகினோமில்லை. உடல் எடுத்த அன்று தொடங்கி என்ன நினைத்து, என்ன செய்கிறோம்? நெஞ்சே! கொஞ்சம் நில். நிதானித்து யோசி!’

இவ்வாறு சொல்லும் போது மாலை, அரங்கேசனை என்று சொல்லுகிறார். மால் என்பது பெருமை, அதீத ஈடுபாடு என்னும் பொருளில் வரும். அவனோ ஒரு விதத்தில் மால். திருமால். ஒப்பாரும் மிக்காரும் இலையாய மாமாயன். தானும் தன்பெருமை அறிவரிய மிக்க பெருமை கொண்டோன். உயர்வற உயர்ந்தவன் எனவே திருமால். இன்னும் ஒரு பொருளில் அவ்வளவு பெரியவன் ஜீவர்களாகிய நம்மிடம் அதீத அன்பும் அருளும் கொண்டோனாய் நாம் தன்னை நோக்கி வரமாட்டோமா என்று ஏங்குவோனாய் இருப்பவன். திருமால். அந்த மாலை, திருமால் ஆகிய அரங்கேசனை நினைக்காமல் இருக்கின்றாயே நெஞ்சே! - என்று தம் நெஞ்சுக்கு உரைப்பது போல் நமக்குத்தான் சொல்கிறார்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment