ஏம்பா.. எங்கயோ காட்டில் போய் வசித்துப் பார்த்தேன் என்று சொன்னாயே? எங்கு தங்கியிருந்தாய்?
அங்கயே ஒரு குடிசையைக் கட்டிக்கொண்டு, நடுவில் சிறிது திறந்த வெளிபோல் இருக்கும் இடத்தில் கொஞ்சம் மேடான பகுதியில். அது ஒரு மகிழ்ச்சியான காலம்.
அப்படியா? அந்தக் குடிசையை உன்னால் விவரிக்க இயலுமா?
குடிசையா? குடிசை. நல்ல தென்னம் ஓலைகள். இல்லை கொஞ்சம் பனை ஓலைகளும் உண்டு என நினைக்கிறேன். நினைவில்லை. மற்ற இலைகளும் உண்டு. கொடிகளைக் கொண்டு நன்கு கட்டி, கயிறுகளும் கிடைத்தன. நல்ல மண் கிடைத்தது. பூசி வைக்கிறதுக்கு. கொஞ்சம் நடந்தாலே ஒரு சின்ன நீரோட்டம் ஒன்று. எப்பவும் பந்தம் கொளுத்த தயாரா.. ஒரு பாதுகாப்பு... குடிசையில் கொஞ்சம் மேல உயரத்துல ஒரு சன்னல் மாதிரி, குறுக்க மூங்கில் எல்லாம் கொடுத்து.. ஏன் கேட்கற?
இல்லை. இப்பொழுது நீ சொன்னவை அனைத்தும் நம்மைக் கடந்து போகும் சொற்கள். நாமும் அவை சொல்லும் செய்தியை வாங்கிக்கொண்டு பின் கடந்து வந்து விட்டோம். ஆனால் குடிசை என்றதும் நம்மை அங்கு சிறிது நேரமாகவாவது உள்ளே குடியமர்த்திவிடும் சொற்கள் கொண்டு சொல்ல முடியுமா என்று பார்த்தேன்.
அப்பவே நான் உஷார் ஆகியிருக்கணும். ஏதோ குடிசையைப் பற்றிக் கேட்டயே என்று சொன்னேன். சொல்லு என்ன சொல்ல வர?
இல்லை. இதுதான் ரிப்போர்ட்டிங் என்பதற்கும் இலக்கியம் என்பதற்கும் உள்ள வேறுபாடு. நம்மைக் கடந்து போகும் சொற்கள், நாமும் கடந்து வந்துவிடும் சொற்கள் இவற்றால் ஆனது ரிப்போர்ட்டிங். ஆனால் இலக்கியமோ நம்முள் கிடந்து, நாமும் அதனுள் கிடந்து மறுகச் செய்யும் சொற்கள் இவற்றால் ஆனது இலக்கியம். குடிசையைப் பற்றிச் சொன்னாய். மிக அருமைதான். பல விவரங்கள். ஆனால் அந்தக் குடிசைக்குள் என்னால் நுழைய முடியவில்லை. அது நீ இருந்ததாகக் கிடைக்கும் தகவல் குடிசை. அவ்வளவே. ஆனால் ஜப்பானியக் கவிஞர் பாஷோ ஒரு குடிசையை விவரிக்கிறார். இன்றும் அதனுள் போய் உட்கார்ந்து கொள்ள முடிகிறது. அதனுள் இருந்து உலகையும், உலகிலிருந்து அதற்குள்ளும் போய்வர முடிகிறது. இததனையும் வெறும் ஆறு ஏழு சொற்களால் மட்டுமே அவர் வனைந்த குடிசை.
“ஒளியின் சதுரம்
சன்னல் நிலா
அதிலிருந்து”
இருட்டு. வானில் நிலா. சன்னல். அதன் வழியே வரும் நிலவம். அதனால் ஏற்பட்ட ஒளியின் சதுரம். இதை மிக முக்கியமான காட்சியாகக் கவனம் கொள்ளும் அளவிற்கு வாழ்க்கை, காலம், மனம், சூழல். ஏதேதோ நினைவுகள், ஏதேதோ பேச்சுகள், சுற்றும் முற்றும் என்ன என்னமோ நடப்புகள் அத்தனைக்கும் சுழல் அச்சு அந்த சதுரமான ஒளி நிழல். அதுவே. அது இன்னும் பேசிக் கொண்டுதான் இருக்கிறது. நமக்கு வெளியிலிருந்து இல்லாமல் நமக்குள் இருந்து, நம்மின் ஒரு குரலாக. நாம் எந்த நகரத்தில் எந்தச் சூழலில் விரைந்து கொண்டிருந்தாலும் நம் நினைவால் ஒரே கணம் அந்தக் குடிசைக்குள் போய் சாய்ந்து விட முடிகிறது.
அந்தப் பழமையே ஆகாத என்றும் புதுமையான இருளில், அந்த...
நண்பர் எதுவும் பேச்சு காணும். நான் மட்டும் ஏன் பேச வேண்டும்? அந்தச் சன்னல்....
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment