Friday, October 22, 2021

பிகாஸோவிற்கே டஃப்

 நம் நாட்டு பிகாஸோ இவர்! இக்காலத்து ரவிவர்மா என்றும் சொல்லலாம்.

என்னது! பிகாஸோ என்கிறீர்கள்! ரவிவர்மா என்றும் சொன்னால் கூட்டு சேரவில்லையே!
இல்லை. ஒரு கான்ஸப்ட், ஒரு கருத்தை அற்புதமாக நிறமொழியில் ஓடவிட்டுக் காட்டுவதில் வல்லவர்.
ஓ! அப்படியா! ஒரு கருத்து இருக்கிறது. அதை எப்படி ஓவியம் ஆக்குவீர்கள் என்று காண ஆசை.
என்னது?
ஓர் அழகியின் வடிவம். மேனி, நிறம் பார்த்தால் மாந்தளிர்.
தொடக்கமே கிளர்வாய் இருக்கிறதே !
அவளுடைய புன்முறுவல் முத்துக்கள். ம்.. உடலின் ஸ்மெல்ல் உடல் நாற்றமே சுகந்தமான நறுமணம்தான். கண்ணுக்கு நீங்கள் போர்ப்படையில் புதிதாகத் தீட்டப்பட்ட கூரிய வேல் நுனி. அதைத் தான் போட வேண்டும்.
என்னது... காம்பினேஷனே ஒரு மாதிரி இருக்கே...
அந்த அழகியின் தோளை வரைய வேண்டிய இடத்தில் நீங்கள் இள மூங்கில் அதைத்தான் காட்ட வேண்டும். இவளை நீங்கள் ஓவியம் ஆக்க வேண்டும். நீங்கள் பிகாஸோ பாணியில் செய்தாலும் சரி. அன்றி ரவிவர்மா பாணியில் செய்தாலும் சரி.
இல்லை. இதற்கு ரவிவர்மா பாணி சரிப்படாது. ஏனெனில் சேராத பல பொருட்களைப் போன்மையாகக் காட்டுவது என்றால்.. அது பிரதிபலிப்புப் பாணியில் மிகவும் கடினம். இதற்கு பிகாஸோதான் சரி. அதில்தான் .. இப்பொழுது மூங்கில் என்றால் அதன் மிகச் சாரமான கூறு அதைப் பிடித்தால் போதும். அதாவது பிளத்தோவிய சித்தாந்தப்படி உருவம் என்பதைக் கழித்து அதன் உட்சாரம், எஸன்ஸ் அதைப் பிடிக்க வேண்டும். அதை நிறத் தீற்றின் ஓட்டத்திலும், வண்ண உக்கிரத்திலும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். அதே போல்தான் வேல், மாந்தளிர் போன்றவற்றிற்கும்.
சரி. சுகந்தமான நறுமணம். அதை என்ன செய்வீர்கள்?
அதற்கு... அதைக் காட்டுவது என்றால்...
முடியாதோ....
அப்படியில்லை. நறுமணம் என்பதின் உச்சம் என்னவோ அதை நுகரும் போது பலமுறையும் நம் மனத்திரையில் என்ன வண்ணம் மீண்டும் மீண்டும் வருகிறதோ அதை ஒருவாறு நெரிப்புறக் காட்டினால்... செய்ய முடியும்.
விளக்கங்கள் நன்றாக இருந்தன. அநேகமாகச் செய்து விடுவார் என்றே நம்பினேன். ஆனால் உருவப் போலியாக இல்லாமல் உட்கருவின் புலர்ச்சியாக வண்ணத் தீற்றுகளின் மெய்ப்பாட்டில் வடிப்பது என்பது ஒரு திரில்லான ஒன்றுதான் என்ற குறுகுறுப்பு... கொண்டு வந்தார். ம்.. பரவாயில்லை. கண்விழிக்கு ஊடாக வேல் நுனி பாய்கிறது சட்டென்று பார்த்தால் பூவிழுந்ததோ என்னும் போல்... இளம் வெளிர் நீலத் தொட்டுடன் கூடிய சிறு வெண்மணிகள் இழையோடின. ஓ முத்தா? அதாவது புன்முறுவல். ஓகே... அவர் அப்படியே விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டு விட்டார்.
இதைப் போன்ற வரைவுகளுக்கு எதுவும் சொல்லலாமா? பேசாமல் வெறுமனே கருத்துகளை மனத்திலேயே மென்றுகொள்வதுதானே எழுதாத ஒப்புக் கொள்ளப்ப்பட்ட வழமை?
அதையெல்லாம் விடுங்கள். உங்கள் கருத்து என்ன? அதைச் சொல்லுங்கள் என்றார்.
நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா? என்றேன்.
புரியவில்லை.
இல்லை. எனி ஏர்லி லவ் அல்லது முதல் லவ்?
முதல் லவ்.... எனக்கு ஸிம்ப்ளி அன்ஃபர்கட்டெபிள். மறக்கவே முடியாத அந்த முதல் காதல். அவள்!
அவளைத்தான் நீங்கள் வரைந்திருக்க வேண்டும். அவள் என்பதை விட... அந்த முதல் காதல் கணத்தில். அந்த ஏக்கத்தில் உங்கள் உணர்ச்சிகளுக்குப் புலனாகி நின்ற அந்த நெகிழ்ந்து மறைந்து மீண்டும் துல்லியமாகப் புலனாகிப் போக்கு காட்டி உங்களைக் கொல்லாமல் வதைத்து அணங்காடிய அந்த அப்பாவிப் பதுமையை அன்றோ நீங்கள் வரைய வேண்டும்?
இல்லை. நீண்ட நாள் கழித்து அவளையே பார்த்தேன். நான் கண்ட அந்த முதல் கணத்துக் காட்சியை ஒப்பிட்டால் ஏமாற்றமாக இருந்தது.
புறத்தில் இருந்த அவள் இல்லை சார் கருத்து. விவரிக்கப் பட்ட அழகி என்றபடி யாருமே புறத்தில் இல்லை. இருக்க வேண்டியதும் இல்லை. காதலர் கண்களில், முதல் காதலின் அந்தக் கூரிய கணத்தில் உள்ளத்தின் ஏக்கத்தில் உருவாகி மறையும் அந்த அணங்கைப் பற்றிய நினைவைப் புறத்தில் மாட்டி வைக்கும் கொக்கிதான் வெளியே தெரிகின்ற நபர். ஒருவரோடு ஒருவர் இதயம் மாறிப் புக்க நிலையில் தோன்றும் தோற்றரவுதானே! அது உங்களுக்கு அனுபவப் பட்டிருக்கும் போது உள்ளத்தின் மொழியில் சொல்லாமல் அறிவின் மொழியில் முயன்று விட்டீர்கள்.
நான் இதைப் பற்றி யோசிக்க வேண்டும். ஆனால் உங்கள் கருத்து அந்த விவரம் அருமை!
என் கருத்தோ அல்லது விவரமோ இல்லை இது. திருக்குறள் காமத்துப்பாலில் திருவள்ளுவர் முதல் காதலின் அகக் கண்ணில் தோன்றும் காட்சியைக் குறாளாக வடிக்கிறார்.
‘முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு.’
ஓவியர் கிளம்புவதாக இல்லை. ஆனாலும் அடுத்த அன்றாட வேலைகள் இருக்கின்றனவே...
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment